Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

சமூக நோக்கில் கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ புதினம்

-முனைவர் ச. அருள் 

முன்னுரை

arulஎழுத்தாளர் என்பவர் கதை, கவிதை, புதினம் உள்ளிட்ட எழுத்துப் படைப்புக்களைப் படைப்பவர். அவரது படைப்புக்கள் இதழ்கள், நூல்கள் மூலமாக வெளியாகும். இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களைத் தொழில்முறை எழுத்தாளர்கள் என்றும், சுதந்தர எழுத்தாளர்கள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு சமூகத்தில் சிந்திக்கும் எழுத்தாளன் நேர்மையான எழுத்தைப் பதிவு செய்பவனாகவும் சமரசங்களை ஒதுக்கித் தள்ளுபவனாகவும் வளைந்து கொடுக்காதவனாகவும் இருக்க வேண்டும். ஒரு சாதாரண சமூகத்தில் இருந்து எல்லாரையும் போல வெளியில் வருபவன்தான் எழுத்தாளன். எழுத்தாளன் என்பவன் கொம்பு முளைத்தவன் அல்லன். எழுத்தாளன் என்பவன் தான் வாழும் சமூகம் குறித்துச் சிந்தித்துத் தன் எழுத்துக்களால் சமூகத்தில் மாற்றத்தை மலரச் செய்பவன். அவ்வகையில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ என்னும் புதினம் குறித்தது இக்கட்டுரை.

சமூகப் புதினம்

முதிர்ச்சி அடைந்த சமுதாயத்திலிருந்து காலப்போக்கில் இலக்கியம் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றும்  இலக்கியம் தான் தோன்றிய சமுதாயத்தின் நிறை, குறைகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். இத்தகைய தன்மையுடைய புதினங்கள் சமூகப் புதினங்கள் எனப்படுகின்றன. கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ என்னும் புதினமும் இந்த வகையைச் (சமூக நாவல்) சார்ந்ததாகும்.

“ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக, பொருளாதாரச் சூழ்நிலையினை வெளியிடுவதில் தீவிரம் காட்டுகிறது சமூக நாவல்”1 என்று உலக இலக்கியச் சொல்லகராதி உரைக்கிறது.“ ‘சமூக நாவல்’ என்று நாம் மேலெழுந்தவாரியாகக் கூறும் நாவல் வகையானது உண்மையில் சமகால வரலாற்று நாவலாகத்தான் இருத்தல் வேண்டும். ஏனெனில் சமூக நாவலை ஆக்குகிறவன். சமகால வரலாற்றின் தன்மைகள் சிலவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கிறான்”2 என்பது க.கைலாபதி கருத்து.

சமூகப் புதினங்கள், சமகாலச் சமுதாய நிலைமைகளைக் காட்டுவதோடு, சமுதாயத்தில் நிகழும் மாற்றங்களையும் காட்டுகின்றன. இதனை,“சமூகம் மாறுகிறது என்றால் மாறுகின்ற சமூகத்தால் படைக்கப்பெறும் இலக்கிய வகைகளுள் ஒன்றான நாவல்கள் தம்மை வெளிப்படுத்திய சமூகத்தையும், அது அவ்வப்போது அடைந்துவரும் மாற்றங்களையும் காட்டத் தவறுவதில்லை. எனவே, தமிழ்ச் சமூக நாவல்கள், தமிழ்ச் சமூகத்தையும் தமிழ் மக்களிடையே காணும் மாற்றங்களையும் அறிவிக்கும் ‘காலைச் சங்குகள்’”3 என்று தா.வே.வீராசாமி குறிப்பிடுகின்றார்.

திருமணம்

சமூக நடப்பியலில் முதன்மையானது திருமணம். “மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சடங்கின் மூலம் ஆணும் பெண்ணும் புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள நிறுவப்பட்ட ஒரு வினையே மணம் ஆகும். எனவே, அதுவும் ஒரு நிறுவனம் ஆகும். மணத்திற்குப் பிறகு கணவன் – மனைவி உறவு நிலைபெற்றதாகிறது.”4 என்பர். இவ்வுறவினை நீடித்து நிலைக்கச் செய்வது மக்கட்பேறாகும். நம் தமிழ்ச் சமூகத்தில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பான பொருள் ஈட்டலையும் காத்தலையும் ஆடவன் ஏற்றுக் கொண்டாலும், குழந்தை வளர்ப்பும், குடும்பத்தைக் காக்கும் கடமையும், குலப்பெருமையைக் காப்பாற்றும் பொறுப்பும் இன்றும் பெண்கள் கையில்தான் இருக்கின்றன. எனவே, குடும்பத்தின் அடிக்கல்லாக இருப்பவள் பெண்.

மரபுத் திருமணம்

பெற்றோர் அல்லது உறவினர் உறுதிசெய்த ஏற்பாட்டுத் திருமணங்களே (மரபுத் திருமணம்) மிகுதி. இன்று திருமணம் என்பது நம் தமிழ்ச் சமூகத்தில் மிகுதியும் வணிக நெறியில் நடைபெற்று வருவதைக் காணமுடிகிறது. எழுத்தாளன் புதினத்தில் ஜெயந்தி என்னும் 21 வயது பெண்ணுக்கும் சகாதேவன் என்னும் எழுத்தாளனுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப் பெற்ற மரபுத் திருமணம் நடைபெறுகிறது. “அப்போது ஜெயந்திக்கு 21 வயதுதான் யார் கையிலாவது தன் பெண்ணைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் தன் கடமை முடிந்துவிடும் என்று உறுதியாக நம்பினார் ராகவன். அம்மா இல்லாத ஜெயந்தியை காலேஜ் வரையில் வளர்த்ததே தன் வாழ்நாளில் பெரிய சாதனையாய் நினைத்தார். அவருக்கு மிகப்பெரிய ஓய்வு தேவைப்பட்டது. பெண் பார்க்க வந்த சகாதேவன் ஜெயந்தியுடன் தனியாய்ப் பேசினான்” – (எழுத்தாளன், ப.18). ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் கணக்கு எழுதும் வேலை பார்த்துக் கொண்டே எழுத்தாளனாகவும் உருமாறிக் கொண்டிருந்த சகாதேவனை ஜெயந்தி மணம்செய்து கொள்கிறாள்.

திருமணத்திற்குப் பிறகு ஜெயந்தியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் சோகமே இழையோடுகிறது. அவள் நினைத்த வாழ்க்கை வேறு அவளுக்கு அமைந்த வாழ்க்கை வேறாக இருக்கிறது. “ஜெயந்தி ஒன்றும் தெரியாத பெண் அல்லள். ஆனால், அவளுக்கென்று சில எல்லைகள் இருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவள் தனக்கென ஒரு வட்டமிட்டு அதில் சுற்றி வந்தாள். வட்டம் தாண்டிய வானம் குறித்து அவள் பெரிதாய்க் கவலைப்படவில்லை. அப்படித்தான் அவள் சகாதேவனுக்கு மனைவியானாள். ஒரு மனைவி கணவனிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று அவளுக்கு சொல்லப்பட்ட, அவள் கண்டுணர்ந்த வாழ்க்கையில் வாழ்ந்து சாக முடிவெடுத்தாள். ஆனால், அவளின் பகலும் இரவும் இடம் மாறியதைப் போல் ஆகிற்று திருமணத்திற்குப் பிறகான அவளது உலகத்தில் இன்னொரு கிரகத்தில் வாழ்வதைப் போன்ற உணர்வினை சகாதேவன் அவளுக்குத் தந்தான்” (எழுத்தாளன், ப.18).  ஜெயந்திக்கு தான் வாழ நினைத்த வாழ்க்கையும் அமையவில்லை. அவளுக்குப் பிறரால் சொல்லப்பட்ட வாழ்க்கையும் அமையவில்லை.

இரவில் தன்னுடன் கூடும் தன் கணவன் எப்போது தன்னை விட்டு விலகிப் போகிறான். எப்போது உறங்குகிறான் என்பது புரியாமலே ஜெயந்தி உறங்கினாள், விழித்தாள், களைத்தாள். ஒருநாள் வழக்கமான கூடலுக்குப் பின் சகாதேவன் தன்னை விட்டு விலகுவதைப் பார்த்து ‘எங்கே போறீங்க’ என்று கேட்கிறாள். ‘ஒனக்கு சொன்னாப் புரியாது ஜெயந்தி. எனக்கு எழுதுறதுக்கான மூடு வர்றதே ஒனக்கும் எனக்குமான இது முடிஞ்சதுக்கப்புறம்தான்”  – (எழுத்தாளன், ப.19).  என்று பதில் உரைக்கிறான் சகாதேவன். “கட்டிலைவிட்டு இறங்கி லைட்டைப் போட்டுவிட்டு தன்னைப் பார்த்து சிரித்தவாறே சொன்ன கணவனையே இமைக்காமல் பார்த்தாள் ஜெயந்தி, அவளுக்கு இருள் தேவைப்பட்டது. சகாதேவனோ பெரும் வெளிச்சத்தில் நின்றிருந்தான். இனி ஒவ்வொரு முறை தன்னைத் தொடும்போதும் எப்போது இவன் முடித்து விலகுவான் என்ற எண்ணம்தானே தன்னை ஆக்ரமித்திருக்கும் என்று நினைக்கும்போது ஜெயந்திக்கு உடம்பெல்லாம் கூசியது. கணவன் முன்பான தன் நிர்வாணம் கைகொட்டிச் சிரிப்பதைக் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்” – (எழுத்தாளன், ப.19).  இந்தப் புதினத்தில் ஜெயந்தி என்பவள் சகாதேவனின் உடல் பசியைத் தீர்ப்பவளாகவும் குழந்தைகள் பெற்றெடுக்கும் எந்திரமாகவும் படைக்கப்பட்டிருகிறாள். அவளுக்கான எந்த ஒரு விருப்பத்தையும் நிறைவேற்றத் தவறியவனாகவே சகாதேவன் சித்திரிக்கப்பட்டிருக்கிறான்.

காதல் திருமணம்

ஆணும் பெண்ணும் பருவ வயதில் உடலில் ஏற்படும் ஓர் இயற்கை உந்துதலால் தூண்டப்பட்டு உடல் இச்சை கொண்டு இன்பம் பெறவிரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும் ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பெற்றோரின் சம்மதம் பெற்றோ பெறாமலோ திருமணம் செய்து கொண்டால் அதற்குக் காதல் மணம் என்று பெயர். களவு வழிவந்த திருமணத்தை,

யாமே, பிரிவின் றியைந்த துவராநட்பின்
இருதலைப்
புள்ளி னோருயி ரம்மே”5
என்று அகநானூறு சுட்டுகிறது.

எழுத்தாளன் புதினத்தில் வரும் மதிபாரதி என்கிற ஜெயலெட்சுமி தீபக் என்பவனைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். இவர்களுக்கு வயதுக்கு வந்த இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். இந்நிலையில் தீபக் ஒருநாள் சனிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த மதிபாரதி அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்குகிறாள். பின்பு அவளே அழக்கூடாது எனத் தீர்மானித்து அழுகையை நிறுத்துகிறாள். இது குறித்து தீபக்கிடம் கேட்கிறாள். அவன் தான் செய்தது சரி என நியாயம் கற்பிக்கிறான். ஆனால், மதிபாரதி அவன் சொன்ன நியாயங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தீபக் தான் ஓர் ஆணாதிக்கவாதி என்பதை நிரூபிக்கும் வகையில் பேசுகிறான்.

“நீ மட்டும் இலக்கியக் கூட்டம், கவிதைத் தொகுப்பு வெளியீடுன்னு கௌம்பி வெளியூர் போயிட்டு வர்றே…. நான் எதுவும் உன்னைக் கேக்குறேனா… கும்பலா நின்று போட்டோவுக்கு போஸ் வேற குடுக்குறீங்க, என் பொண்டாட்டி கவிஞர்னு சொல்லிக்கிறதில் எனக்கென்ன பெருமை… கல்யாணப் பத்திரிகையில் ஜெயலட்சுமிதான். மதிபாரதிங்கறது நான் குடுத்த பர்மிசன்தானே” – (எழுத்தாளன், ப.11).  என்று தீபக்கின் குரல் ஒலிப்பதைக் கேட்ட மதிபாரதிக்கு, யாரோ ஓர் அந்நிய பெண்ணுடன் கணவன் தன் பெட்ரூம் குளியல் அறையில் இருப்பதைப் பார்த்த நினைவு அடிக்கடி வந்து போவதால் சுய நினைவு இல்லாமல் தலையில் கை வைத்தபடி சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மீண்டும் அவளிடம் ‘அந்தச் சகாதேவனுக்கும் ஒனக்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்கிறான். மதிபாரதி சகாதேவனைப் பற்றி தன் மனத்தில் நினைத்து அசைபோடுகிறாள். சகாதேவன் ஓர் எழுத்தாளன். தான் ஒரு கவிஞர். அவ்வளவுதான் இலக்கியம் என்று வரும்போது கருத்துக்கள் ஒத்துப் போதலோ மாற்றுக் கருத்துக்கள் தோன்றுதலோ இயல்பு என்ற அளவில்தான் மதிபாரதி நினைத்துக் கொண்டிருக்கிறாள். சகாதேவனின் பார்வையிலும் அவ்வாறே இருக்கிறது. ஆனால், அவளைச் சுற்றியுள்ள மனிதர்களின் பார்வையில் நிறைந்த களங்கம் மதிபாரதியை யோசிக்க வைக்கிறது. மதிபாரதியின் எழுத்துக்கான முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கிறான் சகாதேவன். யதார்த்தமாக சகாதேவனும் மதிபாரதியும் பேசிக் கொள்வதற்கே சந்தேகப்படுகிறான் தீபக். ஆனால், அவன் செய்த துரோகத்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் இரகசியமாக உறவைத் தொடர்கிறான். அந்தச் சனிக்கிழமைக்குப் பிறகு தீபக் மதிபாரதியை தொடவே இல்லை. அவளது வாழ்க்கை வேறு நிறத்துக்கு மாறுகிறது. மதிபாரதியின் கவிதைகள் இதழ்களில் தொடர்ந்து வெளியாக தீபக்கின் கோபமும் அதிகமாகிறது.

“ஒனக்கு எழுதணும் நெறைய புகழ் கிடைக்கணும் உன் பேரும் போட்டோவும் எல்லா புக்குலையும் வரணும் ஏகப்பட்ட ஆம்பளைங்களோடு பேசணும், பழகணும் குறிப்பாக, உன் எழுத்து வாழ்க்கைக்கு எல்லாமுமா இருக்கிற அந்த சகாதேவன் இல்லாம உன்னால இருக்க முடியாதுல்ல” -(எழுத்தாளன்,ப.17).  என்று கூர்மையான சொற்களால் முள்போல் மதிபாரதியின் மனத்தில் குத்துகிறான் தீபக்.

மதிபாரதி சகாதேவனிடம் பேசுவதற்காக கைப்பேசியில் அவனை அழைக்கிறாள். எதிர் முனையில் பேசிய சகாதேவன் தான் பேருந்தில் சொந்த ஊரான வேலூருக்குச் செல்வதாகக் கூறுகிறான். மதிபாரதி சத்தம் இல்லாமல் அழுது கொண்டே அவனிடம் பேசுகிறாள். “நான் லவ் மேரேஜ்தான் சார். தீபக் என் கணவர். ஆர்க்கிடெக்ட், மேரேஜ் ஆன அடுத்த வருசமே ட்வின்ஸ் பொறந்தாங்க. ரெண்டு பொண்ணுங்க. பெரியவங்களாகிட்டாங்க” -(எழுத்தாளன், ப.21).  என்று கூறுகிறாள். நீண்ட நாள்களாக தான் எழுதி வைத்திருந்த கவிதைகள் எல்லாம் சென்ற ஆண்டு தொகுப்பாக வந்ததாகவும், அப்போது எல்லாம் தீபக் தன்னை ஊக்கப்படுத்தியதாவும் கூறுகிறாள். ஆனால், கவிதை பேசப்பட்டதும் இலக்கியக் கூட்டங்களுக்கு தான் போகத் தொடங்கியதும் அவருக்குப் பிடிக்கவில்லை என சகாதேவனிடம் புலம்புகிறாள்.

சகாதேவன் மதிபாரதிக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் பேசுகிறான். ஆனால், அவள் தன் அழுகையையும் வலிகளையும் தாங்கிக் கொண்டு, “நான் அழாம இருக்க கஷ்டப்பட்டுதான் இப்போ உங்ககிட்ட பேசிட்டிருக்கேன். படிச்சவர், காதலிச்சிக் கல்யாணம் பண்ணின புருஷன் இப்போ மொத்தமா மாறிப் போயிருக்கார். அன்னிக்கி உங்க புக்ஃபங்ஷனுக்கு வந்தேனே ஞாபகம் இருக்கா?” -(எழுத்தாளன், ப.21).  என்று சகாதேவனிடம் பேசுகிறாள். தன் கணவர் தீபக் இன்னொருத்தியுடன் தன் வீட்டில் ஒன்றாக இருந்ததையும் அது குறித்துக் கேட்டதற்கு தன்னையும் சகாதேவனையும் இணைத்துப் பேசியதையும் ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பிக்கிறாள். அவனும், உங்க வாழ்க்கையில் பிரச்சனை வருவதற்கு நானும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருந்துருக்கேன் என வருத்தப்படுகிறான்.

கணவன் தனக்குச் செய்த துரோகத்துக்குப் பதில் தானும் துரோகம் செய்யத் துணிகிறாள். அஃதாவது தன்னையே எழுத்தாளன் சகாதேவனிடம் ஒப்படைக்கிறாள். “சராசரி ஆம்பளைக்கு இருக்குற எல்லா ஆசையும் சராசரி பொம்பளைக்கும் இருக்கும்ல. அதேதான் எனக்கும் இப்போ வந்த ஒடனே கேட்டீங்கள்ல, அந்த மாதிரி ஒருநாள் கூட தீபக் என்கிட்ட இந்தப் பொடவையில் நல்லாருக்கேன்னு சொன்னதில்ல. லவ் பண்ணினப்போ இருந்த தீபக்கை நான் மேரேஜுக்கு அப்புறம் மிஸ் பண்ணிட்டேன். பொண்ணுங்களுக்கு எப்பவுமே ஒரு செக்யூரிட்டி தேவைப்பட்டுக்கிட்டே இருக்கும். அப்பா பாதுகாப்புல இந்த ஒலகத்தைக் கவனிச்சிட்டு அப்புறமா இன்னொரு ஆணோட பயணப்படுறதுன்னா அது புருஷனாத்தானே இருக்க முடியும். அப்பிடித்தானே இந்தச் சமூகம் சொல்லியிருக்கு. நாம இந்தச் சமூகத்துக்கு எதிரா எதுமே பண்ண முடியாது. யோசிச்சுப் பாருங்க. அப்படி எல்லாம் மறுக்கப்பட்ட நிலையில் ஒரு பொண்ணா நான் என்ன பண்ணியிருக்க முடியும். என் பொண்ணுங்க வாழ்க்கையை நெனச்சிப் பார்த்துதான் டைவர்ஸுக்கு சம்மதிக்கல. எனக்காகவும் கொஞ்சம் வாழணும்னு தோணுச்சி. நீங்க வந்தீங்க. என் மேல அன்பா இருந்தீங்க. அது காதலா மாறிச்சி. காமம் கலக்காட்டி காதல் ருசிக்காதுல்ல. அதான் படுத்துட்டேன்” -(எழுத்தாளன்,ப.50).  காலந்தோறும் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. முதலில் தந்தையின் கட்டுப்பாட்டில், அடுத்து கணவனின் கட்டுப்பாட்டில், அதன் பிறகு மகனின் கட்டுப்பாட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைத்தான் மதிபாரதியின் கருத்தாகக் கணேசகுமாரன் பிரதி பலித்துக்காட்டியுள்ளார்.

பெண்கள்

ஆண், பெண் இருபாலரும் எந்தப் பருவத்தினராயினும் இருவரும் இணைந்துதான் சமூகம் உருவாகிறது. ஆண் சமூகம், பெண் சமூகம் எனப் பிரித்துப் பேசினாலும் இவை சமூகத்தின் அங்கங்களாகி இணையும் பொழுதுதான் முழுமை பெறுகிறது. ஆனால், சமூகத்தில் இருபாலரும் ஒத்த நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை. ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் கட்டுப்பட்டவள் என்ற எண்ணமே சமூகத்தில் வேரோடி நிற்கிறது. இதனால், சமூகத்தில் பெண்கள் பல்வேறு நிலைகளில் இழிவுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இந்நிலை அகற்றப்பட வேண்டும் என்பதே சமூகச் சீர்திருத்தவாதிகளின் எண்ணமாகும்.

எழுத்தாளன் புதினத்தில் இடம்பெரும் பெண் கதைமாந்தர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களால் புறக்கணிக்கப்படக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். சகாதேவனின் மனைவி ஜெயந்தி, மகள் தமிழ். தீபக்கின் மனைவி மதிபாரதி என்கிற ஜெயலட்சுமி இவர்களின் மகள்கள் (இரட்டையர்) இருவர். சண்முகத்தின் மனைவி சரிதா, மகள் தர்ஷனா. சண்முகத்தின் காதலி உமா.

ஜெயந்தியைத் திருமணம் செய்து கொண்ட சகாதேவன் சில காலம் அவளுடன் தன் உடல்பசியை மட்டுமே தீர்த்துக் கொள்பவனாக வாழ்கிறான். பின்பு சென்னைக்குச் சென்று எழுத்தாளனாகப் பிறரால் அடையாளம் காணப்பட்டதும் தன் மனைவியின் நினைவே இல்லாமல் இருக்கிறான். இந்தக் காலகட்டத்தில்தான் கவிஞர் மதிபாரதியுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு அவளுடன் அடிக்கடித் தங்கும் விடுதிகளில் காம விளையாட்டில் ஈடுபடுகிறான். திருவள்ளுவர்,

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ
ஆன்ற ஒழுக்கு”  6

என்று உரைக்கின்றார். அஃதாவது பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும் என்கிறார். ஆனால், பெண்கள் குறித்து உயர்வாக எழுதும் எழுத்தாளன் சகாதேவன் இன்னொருவன் மனைவி எனத் தெரிந்தும் மதிபாரதியுடன் கூடிக் குலவுகிறான்.

தீபக், தன் மனைவி மதிபாரதி கவிதை எழுதக் கூடாது எனக் கண்டிக்கிறான். ‘நீ எழுதுறது எனக்குப் பிடிக்கலைனு சொல்றேன். எழுதுறதை நிறுத்திடு. எனக்குப் பொண்டாட்டியா இருந்தா மட்டும் போதும்’ எனக் கூறுகிறான். மதிபாரதியின் எழுத்துச் சுதந்திரத்தைக் கூடப் பறிக்க நினைக்கிறான் தீபக். பெண் என்பவள் தனக்காக வாழாமல் தன் கணவனுக்காக மட்டுமே வாழவேண்டும் என்பதை இக்கூற்று தெளிவுறுத்துகிறது.

சண்முகம் என்பவன் ‘உமா’ என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அவனது பெற்றோர் அவனைக் கட்டாயப்படுத்தி சரிதா என்ற பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். தாலி கட்டிய நாள் முதல் அவளை ஒரு மனுஷியாகக்கூட  ஏற்றுக் கொள்ளாமல் அவளுடன் வாழ்கிறான். ஒரு நாள் பெசன்ட் நகர் பீச்சுக்கு சரிதாவை அழைத்துச் சென்று அவளிடம் உரையாடுகிறான்.

“நமக்கு நடந்தது அரேஞ்சுடு மேரேஜ். நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல பெருசா எதுவும் ஷேர் பண்ணிக்கல. இப்போ சொல்றேன். என்னோட பாஸ்ட்ல ஒரு லவ் இருக்கு. கல்யாணம்னு என் அப்பா கம்பெல் பண்ணினப்போ அந்தக் காதலுக்கு குட்பை சொல்லிட்டுத்தான் வந்தேன். எனக்கு அமையற பொண்டாட்டி கிட்ட நாம உண்மையா இருப்போம்னுதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நான் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கல. ஒய்ஃபும். உன்னைத் தப்பா சொல்லல” -(எழுத்தாளன்,ப.44-45).  தனக்குப் பிடித்தது போல் இல்லை என்பதற்காகவே சரிதாவைப் புறக்கணிக்கிறான். அவள் தனக்காக வாழாமல் தன் கணவனுக்காகவே வாழ்கிறாள். இருந்தும் அவளை வெறுத்து ஒதுக்கும் இழி குணம் கொண்டவனாகவே சண்முகம் படைக்கப்பட்டிருக்கிறான்.

விவாகரத்து

தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம்ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக் கொடுக்க முடியாது. மட்டுமின்றி விட்டுக் கொடுக்கவே இயலாத விடயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன் மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனிச் சேர்ந்து வாழவே இயலாது போனால்…. பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை. இந்நிலையில் மனம் ஒத்துப் போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரப் பூர்வமாக பிரிதலே விவாகரத்து. ஆங்கிலேயர் வருகையால் நமது பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் ஏற்பட்டுள்ள பெரும் மாறுதல்களுள் ஒன்று சட்டப்படி விவாகரத்து பெறுதல். நம் நாட்டில் விவாகரத்து பெறுவது எளிதல்ல. அதில் ஏகப்பட்ட விதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் தக்க காரணங்கள் காட்ட வேண்டும். ஒரு குடும்பம் பிரிந்தால் அஃது அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல, சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கிறது. எனவே, நமது சட்டம் கூடியவரை விவாகரத்து ஏற்படுவதைத் தவிர்க்கவே விரும்புகிறது. ஆனால், சட்டத்தின் துணை கொண்டு மணவிலக்குப் பெறாமலே பிரிந்து வாழ்வதும் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பல்கிப் பெருகி வருகின்றது.

மரபுத் திருமணம் செய்து கொண்ட சண்முகம் – சரிதா தம்பதியர் வாழ்வில் விரிசல் ஏற்படுகிறது. திருமணமான ஓர் ஆண்டிற்குள்ளேயே அவளை விட்டுப் பிரிய நினைக்கிறான் சண்முகம். அவள் தன் வயிற்றில் சண்முகத்தின் கருவைச் சுமந்து கொண்டிருக்கிறாள். “நீ கன்சீவா இருக்கிறேன்னு சொன்னப்போ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஏன் இவ்ளோ அவசரமா நடக்குதுன்னு எனக்கே என்மேல கோபமாதான் இருந்துச்சி. ஒனக்கு அடுத்த மாசம் டெலிவரி. அதுவரைக்கும் நான் உன்கூட இருக்கேன். முறைப்படி டிவோர்ஸ் அப்ளை பண்ணி ஒன் இயர் வெயிட் பண்ணி அதுக்கப்புறம் ஃபார்மாலிட்டீஸ்லாம் முடிச்சிட்டுப் பிரியறதுக்கு அடுத்த மாசமே பிரிஞ்சிடலாம். எனக்கும் உமாவுக்கும் நெக்ஸ்ட் இயர் மேரேஜ் நடந்திடும். நான் உன் லைஃப்ல எந்த விதத்திலும் க்ராஸ் பண்ண மாட்டேன். என் பேரன்ட்ஸை நான் கன்வின்ஸ் பண்ணிக்குவேன். உங்க அப்பா அம்மாகிட்டவும் நான் பேசுறேன். நான் இவ்ளோ தைரியமா முடிவெடுக்குறதுக்குக் கூட நீதான் காரணம். உன்னால் எதையும் ஃபேஸ் பண்ண முடியும்ங்கிறதைத்தான் இந்த ஆறு மாசம் பார்த்தேன். உனக்குப் பணமா எந்த ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்றேன். நாம பிரிஞ்சிடலாம்” -(எழுத்தாளன்,ப.45).  என்று சண்முகம் கூறியதைக் கேட்ட சரிதா விவாகரத்துக்குச் சம்மதிக்கிறாள். பின்பு அவளுக்கு தர்சனா என்ற பெண் குழந்தை பிறக்கிறாள். அதன் பிறகு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தன் மகளுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறாள். சரிதாவின் பெற்றோர் அவளை வேறொரு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும் அவள் மறுத்து விடுகிறாள். எட்டு வருடங்களுக்குப் பிறகு சகாதேவனின் கவிதைகளைப் படித்து அவனுடைய இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்கிறாள். அவனது எழுத்துக்கள் பெண்கள் பிரச்சனைகளை அவர்களே எழுதுவது போல் உள்ளது. இதன் காரணமாகவே சகாதேவனின் எழுத்துக்களை உயிர்ப்புடன் நேசிக்கும் வாசகியாகிறாள். சகாதேவனின் எழுத்துக்களில் ஒன்றி விட்ட சரிதா அவனையும் அவனது எழுத்துக்களையும் விமர்சிக்கும் விமர்சகியாகவும் மாறுகிறாள்.

காதலித்து மணம் புரிந்து கொண்ட தீபக் தன் மனைவி ஜெயலெட்சுமியை (மதிபாரதி) விவாகரத்து செய்ய நினைக்கிறான். ஆனால், அவள் தன் இரண்டு மகள்களின் எதிர்காலத்தை நினைத்து பிரிய மறுக்கிறாள். ஒரு நாள் மதிபாரதி தன் கவிதைகள் குறித்து சகாதேவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது சகாதேவன் ‘நீங்கள் எழுதித்தான் தீரணும்னா அதுக்கு சில விலை தந்துதான் ஆகணும்’ என்கிறான். அதற்கு அவள், “இல்லைங்க. அதெல்லாம் தாண்டியாச்சி, டைவர்ஸ் வரைக்கும் போய் நிக்குது” -(எழுத்தாளன்,ப.21).  என்கிறாள். எந்தச் சூழலிலும் திருமண உறவினை முறிக்கக்கூடாது என்று பெண்களின் உள்ளத்தில் ஊறிப் போன சமூக மரபு முழுவதுமாக நம்பிக்கையற்றதாய், பயனற்றதாய்ப் போய் விடவில்லை என்பதையே மதிபாரதியின் செயல்பாடு காட்டுகிறது.

மதுப் பழக்கம்

பெரும்பான்மையான படைப்பாளிகளும் சரி கலைஞர்களும் சரி இந்த ‘மது’ என்னும் அரக்கனின் பிடியில் இருந்து தப்பித்ததாக வரலாறு என்பது இதுவரை இல்லை. கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் மது என்பது ஒரு சாபக்கேடு என்பதில் எள்ளின் முனைஅளவுகூட சந்தேகம் இல்லை. “மது அருந்தும் பழக்கம் நம் நாட்டில் சங்ககாலந்தொட்டு இன்று வரை நிலவி வருகின்றது. இன்று இல்லங்களில், காப்பி, தேநீர் மற்றும் பலவகை சத்துணவுப் பானங்கள் அருந்தப்படுவது போல அன்று மது தமிழரின் வாழ்விலும் இன்ப துன்பங்களிலும் இடம் பெற்றாலும் பெரும் சிக்கல்கள் உருவானதாகத் தெரியவில்லை”7 ஆனால், இன்று மது அருந்தும் பழக்கம், சூது, மாது, போதைப்பொருள் எனப் பல்வேறு ஒழுக்கக் கேடுகளுக்கு அழைத்துச் செல்கிறது.

சகாதேவன் ஓர் இலக்கிய நிகழ்வுக்காக சேலம் செல்கிறான். பேருந்து நிலையம் அருகில் அறை எடுத்துச் சக எழுத்தாளர்களான பாரதி நேசன், ராம், கௌரவன் ஆகியோருடன் தங்குகிறான். காலை, மதியம் இலக்கிய நிகழ்வு முடிந்து அருகிலேயே அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அன்று இரவு சகாதேவன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறான். “இரவு சக எழுத்தாள நண்பர்களுடன் மது அருந்தினான் சகாதேவன்” -(எழுத்தாளன்,ப.28).  மதுபோதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. சகாதேவன் ராமைப் பார்த்து, “என்ன ராம்…. பெக் அதிகமாகிடுச்சோ” -(எழுத்தாளன்,ப.28)  என்று கேட்கிறான். பிறகு கலவரம் அதிகமாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அன்று  இரவே பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மதிபாரதியை அழைத்துக் கொண்டு வெளியேறுகிறான் சகாதேவன். “அளவோடு இருந்தால் குடிப்பழக்கமும் தவறானதன்று; அளவுக்கு மீறினால் தவறு”8 என்று ஜெயகாந்தன் கூறும் கருத்து இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குடிப்பழக்கத்திற்கு ஆளானோர் அளவோடு நிற்பதில்லை என்பதை மேற்காணும் நிகழ்வு படம்படித்துக் காட்டுகிறது.

முடிவுரை

ஒரு சமூகத்தை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நியாயமாகவும் நேர்மையாகவும் கடத்திச் செல்பவனே சிறந்த எழுத்தாளன் ஆகிறான். இப்புதினத்தில் முதன்மைக் கதைமாந்தனாக வரும் எழுத்தாளன் சகாதேவன் சுயக்கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இல்லாதவனாகவே இருக்கிறான். புதினத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை தான் ஓர் ஆண் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறான் சகாதேவன். வரிக்கு வரி நான் ஓர் ஆண், நான் ஓர் ஆண், நான் அடுத்தவன் மனைவி கூட இருப்பேன் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை ஏனென்றால் நான் ஒரு ஆண் என்பதாகவே இக்கதை நகர்கிறது. தன் மனைவி ஜெயந்தி தன்னுடைய எழுத்தை இரசிக்கவில்லை என்பதற்காகவே சகாதேவன் அவளைக் குற்றப்படுத்துகிறான். சகாதேவன் எல்லா இடங்களிலும் தன்னை நியாயப்படுத்துகிறான். தன் மனைவி ஜெயந்திக்குத் தெரியாமல் வேறொருவன் (தீபக்) மனைவியுடன் (மதிபாரதி) தவறான உறவை ஏற்படுத்தி வாழ்ந்து வருகிறான். அது குறித்த எந்தக் குற்ற உணர்ச்சியும் அவன் மனத்தில் இல்லை.

இரண்டு மகள்களோடு வாழ்க்கையில் தடுமாறும் மதிபாரதியை நற்கருத்துக்கள் கூறி நல்வழிப்படுத்தாமல் தன்வயப்படுத்தி தன் இச்சையைத் தீர்த்துக்கொள்கிறான் சகாதேவன். இந்தச் சமூகத்தில் ஓர் ஆண் தனியாக வாழ்ந்து விடலாம். ஆனால், ஒரு பெண் தனியாக வாழ முடியாது. அதனால்தான் மதிபாரதியின் கணவன் தீபக் நாம் இதிலிருந்து பிரிந்து விடலாமா? எனக் கேட்கும் போது அவள் மறுத்துவிடுகிறாள். அவள் விவாகரத்து செய்தால் தன் இரண்டு மகள்களோடு தனியாக வாழ முடியாது. அப்படியே தனித்து வாழ்ந்தாலும் இந்தச் சமூகம் அவளை அடங்காப்பிடாரி, மோசமானவள் எனக் கூறலாம். கணவன் தீபக் வேறொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்த மதிபாரதி மனம் கலங்கி, பின்பு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கணவனைப் பழிவாங்கும் நோக்கில் இன்னொருத்தியின் கணவனைத் தேடிப் போகிறாள்.

மதிபாரதி தான் வேறொரு ஆணுடன் (சகாதேவன்) இருப்பதைப் பற்றி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாதவளாகவே இருக்கிறாள்.  சரிதா தன் கணவனை விவாகரத்து செய்து, தனியாக தன் மகளுடன் வாழும் போதும் சுயமரியாதை உள்ளவளாகவும், ஒழுக்கம் மிக்கவளாகவும் வாழ்ந்து வருகிறாள்.

எழுத்தாளர்கள் என்பவர்கள் பெருங்குடிகாரர்கள் என்பதை இப்புதினத்தின் கதைமாந்தர்கள் வழி கணேசகுமாரன் புலப்படுத்தியுள்ளார். முந்நாளில் பெண்கள் திருமணம் ஆகும் வரை பெற்றோருக்கும், திருமணம் ஆனபின் கணவனுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். ஆனால், இந்நாளில் அவர்கள் தாங்களாகவே பொருள் தேடவும், சிந்திக்கவும், செயல்படவும் தொடங்கிவிட்டார்கள் என்பதை இப்புதினம் வழி அறியமுடிகிறது.

*****

குறிப்புகள்

  1. இரா.தண்டாயுதம், சமூக நாவல்கள், ப.25
  2. க.கைலாசபதி, தமிழ் நாவல் இலக்கியம், ப.116
  3. தா.வே.வீராசாமி, தமிழில் சமூக நாவல்கள், பக்.3-4
  4. எஸ்.ஜெ.பாஸ்கல் கிஸ்யாட், சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள், ப.1
  5. அகநானூறு, பா.12:4-5
  6. திருக்குறள், 148
  7. ச.பரிமளா, சங்கத் தமிழர் வாழ்வில் தேறல் (ஆய்வுக் கோவை-1), இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம், பக்.372-377
  8. கரு.முத்தையா, ஜெயகாந்தன் நாவல்களில் பாத்திரப்படைப்பு, ப.378

*****

கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
அ.வ.அ.கல்லூரி (தன்.),
மன்னன் பந்தல்,
மயிலாடுதுறை.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க