Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் (82)

நிர்மலா ராகவன்

வயதாகிவிட்டதா? அதனால் என்ன!

நலம்

`ஆண்களிடம் சம்பளமும் பெண்களின் வயதையும் கேட்கக்கூடாது!’

சிறு குழந்தைகள் தம் வயதைவிட ஒன்றிரண்டைக் கூட்டிச் சொல்வார்கள், பெருமையுடன். பிறர் தம்மை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்களோ என்ற பயம்தான் காரணம்.

ஒரே கவலை

பொதுவாகவே, வயதாக ஆக, நாம் மரணத்தின் அருகில் இருக்கிறோமே என்ற கவலை பலருக்கும் வந்துவிடுகிறது. அதனால், இன்று உயிருடன்தானே இருக்கிறோம் என்று திருப்தி அடைய முடியாது போகிறது.

சிலருக்குத் தம் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் மனைவிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. தமக்கு வயதாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு மனமில்லை.

`நான் முன்பெல்லாம் இப்படியா பலகீனமா இருந்தேன்! எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால்தான்!’ என்று மனைவியிடம் பாய்வார்கள் — நாற்பது வருட `இல்லறத்துக்கு’ப்பின்!

“எனக்கு முடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. அவமானமாக இருக்கிறது!” என்றாள் என் சக ஆசிரியை பரம்ஜித் கௌர்.

“இதில் அவமானமென்ன! உதிர முடி இருக்கிறதே என்று திருப்தி அடைய வேண்டியதுதான்!” என்றேன் அவளுக்கு ஆறுதலாக.

நடையில் தளர்ச்சியா? நடக்கவாவது முடிகிறதே என்று சந்தோஷப்படுக்கொள்ளலாமே!

ஐம்பது வருடங்களுக்குமுன் ஒருவர் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெறும்போது, நண்பர்கள் எல்லாரும் கைத்தடிதான் பரிசாக அளிப்பார்களாம்.

இன்றோ!

தள்ளாடி நடந்து, எப்போது விழுந்துவிடுவாளோ என்ற பயத்தைப் பார்ப்பவருக்கு அளிக்கும் என் உறவினரிடம், “ஒரு தடி வைத்துக்கொள்ள மாட்டாயோ!” என்றேன், கரிசனத்துடன்.

“வயசானவள்னு நினைச்சுடுவாடி!” என்றாள். அவளுடைய பேரனுக்குக்கூட கல்யாணம் நடந்திருந்தது!

வயதானதில் பெருமை

சிலர் `எனக்கென்ன! வயசானவன்!’ என்று அடிக்கடி கூறுவார்கள். பெருமையாக. தம்மை எல்லாரும் மதித்து நடத்த வேண்டும், தாம் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய குரலில் இருக்கும். அந்த எண்ணம் ஏமாற்றத்தில்தான் முடியும்.

வயதானால் அனுபவங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில் அவர்களுடைய அதிகாரத்தை எத்தனை இளையவர்கள் ஏற்பார்கள்?

கதை

தொண்ணூறு வயதான மீனாட்சி பாட்டி படுக்கையிலேயேதான் நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது.

ஒரு முறை, சிறுவனான பேரன் கையைச் சொறிந்தபடி பெரிதாக அழ, “பூச்சி கடிச்சிருக்கும். புளியை ஜலத்திலே கெட்டியா கரைச்சுத் தடவினால் சரியாப் போயிடும்!” என்றார்.

உடனே குணம் தெரிந்தது. எக்காலத்திற்கும் ஏற்றதாக இருப்பவைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

`எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்..’ என்பதைக் கடைப்பிடிப்பவர்கள் தகுந்த அறிவுரைகளைப் பின்பற்றி பலன் அடைகிறவர்கள்.

தவிர்க்க முடியாதது

மனிதனாகப் பிறந்த எவருமே தாமும் ஒரு நாள் முதுமை அடையப்போகிறோம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள். இளமையில் முதியவர்களைப் பார்த்துக் கேலி, இளக்காரம். அவர்களுடைய அறிவுரையோ, `தொணதொணப்பு’.

அவர்களே முதுமை அடையும்போது, `எத்தனையோ சொன்னார்கள். நான் கேட்கவில்லை!’ என்ற வருத்தம்தான் மிஞ்சும்.

அதிகாரம் செலுத்தாது, கட்டுப்படுத்த நினைக்காது குழந்தைகளுடனும் இளையவர்களுடனும் பழகினால், இளமைக்கே உரிய உற்சாகம் பிறரையும் தொற்றிக்கொள்ளும்.

அலட்சியமும் இலட்சியமும்

இருபது வயதை எட்டும் இளைஞர்கள் இலட்சியவாதிகளாக இருக்கிறார்கள். வயது ஏற, ஏற, உலகின் போக்கு பிடிபட்டுப்போகிறது. அதனால் கசப்பு ஏற்படலாம். அவர்களைப் பாதித்தவைகளைக் கண்டு அலட்சியம் மிக, சுயநலவாதிகளாக மாறுகிறார்கள்.

காலங்கடந்த வருத்தம்

பழையதொரு புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதைப்போல, தாம் வாழ்ந்த காலங்களை அசைபோடும்போது, எத்தனையோ கைகூடாத லட்சியங்களும், கனவுகளும் பெரிதாகப் புலன்படும். அவைகளை நினைத்து வருந்தினால் முதுமையின் பாதிப்புதான் அதிகரிக்கும். எவ்வளவு ஆசைப்பட்டாலும், எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், இளமை என்னவோ திரும்பிவிடப் போவதில்லை.

கதை

எனது நெருங்கிய தோழி ஒரு மருத்துவ நிபுணர். `இதில் கால்சியம், இதில் புரோதச்சத்து,’ என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவாள். குதிரையேற்றத்திலிருந்து ஏதேதோ உடற்பயிற்சிகள் வேறு.

எழுபது வயதை எட்டியதும், “என்னதான் கவனமாக இருந்தாலும், முதுமையைத் தோற்கடிக்க முடியாது!” என்றாள் விரக்தியுடன். “இன்னும் எதற்கு தலைமுடிக்குக் கறுப்புச் சாயம்!”

தோற்றத்தில் முதுமையை ஏற்றவுடன் மனமும் தெளிவடைய, ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் நிறைவு காண்கிறாள். எதையாவது புதியதாகக் கற்றுக்கொண்டே இருப்பது மனதை, அதன்மூலம் உடலையும், இளமையாகவே வைத்திருக்கும்.

உலகில் இருக்கும் எல்லா அவலங்களையும் ஒருவரால் ஒழிக்க முடியாவிட்டாலும், ஒத்த மனதுடையவருடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாமே! வாழ்விலும் ஒரு பிடிப்பு ஏற்பட இது நல்ல வழி.

`வண்டி’ ஓடும்வரை

வயதானதால் உடல் சற்றுத் தளரலாம். ஆனால், மனதையும் தளரவிடுவது உயிர் இருக்கும்போதே இறப்பதுபோல்தான்.

“உயிரை நடத்திச்செல்லும் வாகனம் உடல்,” என்கிறார்கள். நம்முடைய வாகனம் ஒன்று சற்று பழையதாகிவிட்டால், அதில் அடிக்கடி கோளாறு உண்டாகிறதல்லவா? தூக்கியா ஏறிந்துவிடுகிறோம்? நம் உடலும் அப்படித்தான். நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க முடியாது. அதைப்பற்றியே சிந்தனையை ஓடவிடாது, பிறரிடமும் நம் `போதாத காலத்தை’ப்பற்றிப் பேசாது இருந்தாலே வியாதிகளும் நம்மைப் பார்த்து அஞ்சி விலகும்.

ஞாபகசக்தி குறைவா? பழைய கஷ்டங்களும் மறந்திருக்குமே!

`என்னாலே ஒண்ணுமே முடியலே!’

இப்படிச் சொல்வது சோம்பலின் அறிகுறியா, இல்லை, `உன் வயதுக்கேற்றபடி நட!’ என்று யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயமா?

‘உன்னால் எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. மறந்து, மறந்து போய்விடுகிறாய்! ஒதுங்கி இருந்து, நடப்பதை வேடிக்கை பார்!’ என்பது கொடுமை.

நம்மால் இயன்றதை சிரத்தையுடன், சற்று சிரமப்பட்டாவது செய்யலாமே!

இந்த வயதிலுமா `பிறர் பழிப்பார்களே!’ என்று அஞ்சி நடக்கவேண்டும்?

கதை

எனக்குச் சற்று பரிச்சயமாகி இருந்த லிண்டாவிடம் அவள் வயதைக் கேட்டேன்.

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ஐம்பத்து ஏழு!” என்றாள் ரகசியக்குரலில். அதற்கு முன்பு, `நான் எப்போது ஷாப்பிங் போனாலும், லிப்ஸ்டிக் வாங்குவேன்!’ என்று தெரிவித்திருந்தாள் மகிழ்ச்சியுடன்.

லிண்டாவற்குப் பேரக்குழந்தைகள் இருந்தார்கள். அதனால் என்ன! வயதானதால் மட்டும் ஒருவர் தம் விருப்பு வெறுப்புகளுக்குத் தடை விதித்துவிட வேண்டுமா?

தனக்கு இளமையில் கைகூடாமல் போன ஆசைகளை உயிர் இருக்கும்போதே நிறைவேற்றாமல், `அடுத்த ஜன்மத்தில் பார்த்துக்கொள்ளலாம்!’ என்று ஒத்திப்போடுவார்களா யாரேனும்?

உலகின் போக்கு

நான் சந்தித்த மலாய் ஆசிரியைகளின் வயதைக் கேட்டால், `நாற்பதுக்கு மேலே!’ என்று பூசி மெழுகுவார்கள்.

41? 50? 100?

எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மீதியை நம் கற்பனைக்கு விட்டுவிட வேண்டியதுதான்.

அவர்களைத் துளைத்து, தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவானேன் என்ற பெரிய மனதுடன் யாரும் மேற்கொண்டு கேட்கமாட்டார்கள்.

பி.கு: என் வயதுதானே?

அது ஆச்சு, மூணு கழுதை வயசு! (ஒரு கழுதையின் ஆயுட்காலம் எத்தனை என்று ஆராய்வது உங்கள் பாடு!).

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here