தலையெழுத்து கொழுந்து பறிப்பது – ஈழத்து மலையகக் கவிதைகள்

1

-முனைவர் சு.செல்வகுமாரன்

selvaஇலங்கை  மலையக மக்களின் வரலாறு நீண்ட நெடிய துயர வரலாற்றைக் கொண்டது. அம் மக்களின் வரலாற்றை ஐந்து நிலைகளில் வகைப்படுத்துவார் மலையக வரலாற்று ஆய்வாளர் சாரல் நாடன். அவை பிரிட்டீஸ் ஆட்சிக்குட்பட்ட காலம் (1820 -1919), உள்ளூர் ஆட்சிக்காகப் பரிசோதனை மேற்பட்டகாலம் (1921 -1947), சோல்பரி அரசியல் திட்ட காலம் (1948 -1977), சிறிமாவோ அரசியல் திட்ட காலம் மற்றும் ஜயவர்த்தனா அரசியல் திட்டகாலமாக (1978 -1986), காலத்தையும் 1986 க்கு பிறகு பிரேமதாசாவின் அரசியல் காலமாகவும் வகைமைப்படுத்துவார். இவ்வகைப்பாடானது அம்மக்களின் பிரச்சனைகளை அக்கால அரசியல் சூழலோடு பொருத்திப் பார்த்து புரிந்துகொள்ள உதவியாய் அமைகிறது.

மேற்சுட்டிய வகைப்பாட்டில் பிரிட்டீஸ் ஆட்சிக்குட்பட்ட முதற்காலக் கட்டப்பகுதி என்பது இம்மக்களின் இருண்ட காலம் என்றே கருதத்தக்கது. இக்கால கட்டத்தில்தான் தமிழகப் பகுதிகளிலிருந்து வறுமையில் வாழ்ந்த ஏராளமான தமிழ் மக்கள், பிரிட்டீஸ் அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஒப்பந்தக் கூலிகளாக காபி, தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கடல்வழியே கப்பலிலும், படகுகளின் மூலமாகவும் ஏற்றிச் செல்லப்பட்டு மலையகத்தில் கொண்டு சேர்க்கப்பட்டனர். எந்தவித அரசியல், சமூகப் பொருளியல், முன்னேற்றத்திற்குள்ளாகவும் உட்படுத்தப்படாத இம்மக்கள் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் அடிமைகளாகவே வாழ்ந்து மடிந்து போயினர் என்றே சொல்ல வேண்டும்.

ஆக ஈழத்தமிழர்கள், வரலாற்றில் மிகப்பெரிய கொடுமையை அனுபவித்தவர்களில் மலையகத் தமிழர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வாழ்வியல் வலியினை மலையகக் கவிதைகள் நிரம்பப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதைகளும் தமிழோவியனின் கவிதைகளும் மட்டுமின்றி சமீபகாலத்தில் வெளிவந்த இசைபிழியப்பட்ட வீணை (2007) தொகுப்பின் மூலமாகவும் இதனை நாம் கண்டடைய முடிகிறது.

“வியர்வை வடித்து
கூலியாய் உழைத்து
வெறுமையுள் நலிந்து
வீழ்வது எல்லாம்
துயரக் கதையினும்
துன்பக்கதை – அதைத்
தொனிக்குதே பேரிகைத் (தப்பொலி)
துடி ஒலிக் குமுறல்”         (http.//inioru.com)

என்று மலையக மக்கள் உழைத்தும் எவ்விதப் பயனுமின்றி வறுமையில் உழலும் அவலத்தை சி. வேலுப்பிள்ளை இந்தக் கவிதையில் குறிப்பிடுகிறார். இது ஒருவிதத்தில் பாமர மக்களின் வாழ்வியல் அவலத்தைத் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சென்றடையும் வண்ணம் கவிதை வடித்த பண்பாட்டுப் போராளி தோழர் ஜீவானந்தத்தின் அடர்த்தி மிகு மொழியினை  நினைவுபடுத்துவதாய் உள்ளது.

மலையக மக்களின் வாழ்வியலைப் பேசுவதில் தமிழோவியனின் கவிதைகளும் மிக முக்கியப் பங்களிப்பு செய்கின்றன. தமிழோவியனின் கவிதைகள் மலையக மக்களின் பன்முகப்பட்ட துயரினை, குறிப்பாக அவர்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை நுட்பமாக புலப்படுத்தக்கூடியன. ஆண்டாண்டு காலம் தம் வாழ்வைப் பணயம் வைத்துப் பெரும் முதலாளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் வருமானத்தை ஈட்டிக் கொடுத்த அம்மக்களில் பலருக்கு வாக்களிக்கின்ற உரிமை மறுக்கப்பட்ட அரசியல் துரோகத்தைப் பேசும் ஒரு கவிதை,

‘இன்று மிங்கே குடியுரிமை
வாக்குரிமை இழந்து நிற்கின்றோம்
நன்றி கெட்டோர் நாடற்றவர்
என்று கெடுத்ததால்
குன்றுகளில் உழைப்பவராய்த்
தின்று பிழைத்தோம்”          http://www.thinnai.com

என்று அவர்களின் மனவெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது.

மலையக மக்களின் வாழ்வில் தேயிலை பறிப்பது பெண்களின் தொடர் பணியாகின்றது. மிக குறைந்த கூலிக்கு அதிக எடை பறித்தாக வேண்டிய அவலம் அவர்களை நெருடுகிறது. சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு இன்னும் அதிக நெருக்கடி. குழந்தைகளுக்கான எவ்விதப் பாதுகாப்போ, ஊட்டச்சத்து உணவோ அங்கு கிடையாது. எனினும் குழந்தைகளைக் காப்பாற்றியாக வேண்டும். அவர்களின் பசியாற்றியாக வேண்டும் எனும் நிலையில் அதிகாலையிலே நடந்தே மலையேறிச் சென்று இலைகளைப் பறித்து கையும், காலும் அசதியுறும் நிலையினை,

“பச்சிளங் குழந்தைகள் பிள்ளைகள்
பாதுகாக்கு மகத்தில் நிறுத்தி
உச்சிமலை முகடுகளில் கொழுந்தை
உடல் வியர்க்கப் பறித்து – நிறுத்தே
ஓட்டமும் நடையுமாய்ப் பிள்ளைகள்
உறங்கும் காப்பகம் வந்தே
ஊட்டுவார் பாலை அரைவயிறாய்
ஓடுவார் மீண்டும் மலைக்கே”    http://www.thinnai.com

என்று பதிவு செய்கிறது. இசை பிழியப்பட்ட வீணை தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் இம்மக்களின் உணர்வுகளை திறம்பட பேசியுள்ளன. பல கவிதைகள் மிகச்சாதாரண வெகுஜன மொழியிலேயே அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இசைபிழியப்பட்ட வீணை கவிதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதும் தினகரன்.  “எது கவிதை எனும் கேள்விக்கு ஒவ்வொரு கோட்பாடும் வேறுவேறு விலக்கணங்களைக் கூறமுடியும். எனினும் மலையகத்துக்கும் பொருத்தமான கவிதை வடிவங்கள் எவை என்றால் இங்குள்ள கவிதை வடிவங்களையும் முன்மொழிய முடியும். தமது இலக்கு வாசகர்களை எளிதில் சென்றடையும் நோக்கில் படைக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் எவ்வித கவிதாமேதாவிலாச விமர்சனங்களையும் பொருட்படுத்தாது பயணிக்கின்றன” (இசைபிழியப்பட்ட வீணை, ப – 3)

என்கிறார். இதனை ஒரு சரியான மதிப்பீடாகவே பார்க்கமுடிகின்றது. இத்தொகுப்பு மலையகமக்களின் உணர்வுகளைக் கவிதைரீதியில் அணுகி உணர்ந்து கொள்வதற்கு மிகவும் பயனுடையதாகிறது.

சந்திரலேகாவின் “கற்கள் – கவண்கள் – தாவீது… ஈழப்போரின் ஊடாகவும் ஈழத்தில் மலையக மக்களை இரண்டாந்தரப் பிரஜையாகப் பார்க்கப்படுவதை, நடத்தப்படுவதை பதிவுசெய்கின்றது. தன்னை வஞ்சிக்கும் முதலாளித்துவத்துக்கும், தம்மை அந்நியனாகப் பிரகடனப்படுத்தும் சிங்கள அரசு, மற்றும் இன்னபிற மக்களுக்குமாகத் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதில் தீவிரம் காட்டுகின்றது.

“மூச்சு முட்ட முட்ட
உழைப்பை உறிஞ்சி விட்டு
நான் இந்த பூமிக்கு
அந்நியமானவன் என
அக்கிரம போர்க் கோஷமிட நீ
பூமியின் அவதார மில்லையே…..?
பிறந்தவன் மட்டும் தான்”      (இசைபிழியப்பட்ட வீணை, ப – 10)

என எதிர்தரப்பை கேள்விக்குள்ளாக்கும் கவிதை தொடர்ந்து தாவீதுக்கு கவணும் கற்களும்தான் வீர கவசம் குறிஞ்சியின் தாவீதுகளுக்கும் என்று பதிவு செய்யும் தொன்மம் சார்ந்த குறியீடு முதன்மை பெறுகின்றது. கவிதையில் எழுப்பப்படும் கேள்விகளும், முன்வைக்கப்படுகின்ற கருத்தியலும், மலையக மக்களின் போர்க்குணம் மிக்க எழுச்சியை உணர்த்துபவையாக உள்ளன. எல்லா இனமும் மனிதகுலத்தை மகிமைப்பவையே என்று குறிப்பிடும் கவிஞர் எனது நிலம், எனது மொழி, எனது இனம், எனது குருதியாவும் மாசுபடுகிறதெனில் மரணம் என்னால் விரும்பப்படுவது என்கிறார். மேலும், தோழர் கற்களைப் பொறுக்கு, கவண்களை உற்பத்தி செய், கவச வாகனங்களை, கண்ணீர்ப் புகையைக் கற்களால் வீழ்த்து என்பதாக உத்தரவு பிறப்பிப்பது போராட்டத்தின் தேவையையும் அதுவே விடுதலைக்கான வழி என்பதையும் வலியுறுத்துகின்றது.

இஸ்மாலிகாவின் “நலம் பிறக்க வேண்டும்” மலையக மக்கள் வாழ்வில் பெரும் துயரினை அனுபவிக்கும் பெண்களின் வாழ்வினையும், அம்மக்களின் வறுமையினையும் பறைசாற்றுகின்றது. மலையகத்தில் ஊதுகின்ற சங்கு மங்கையவள் வாழ்வில் பெரும் பங்கு. இலைத்தளிரைக் கொய்ய வந்து இங்கு இன்னல்படும் வாழ்வு வேறு எங்கு? தலைவாரிப் பொட்டிடவா நேரம்?; தலை முழுகி ஆகிறதிரு வாரம். முலையசைய முதுகில் பெரும் பாரம். முந்நாளில் செய்ததிந்தப் பாவம் என்பதாய் தொடரும் கவிதை,

“தலையெழுத்து கொழுந்தெடுக்க வேணும்
தவறாது மலைக்குச் செல்ல வேணும்
குலை நடுங்க குளிரில் வாடவேணும்
கூடைநிறையக் கொழுந்தெடுக்க வேணும்
இருள் விலக எழுந்து செல்லும் வேளை
இளங்குழந்தை அழுது சுற்றும் காலை
அருள் புரிய யாருமில்லா ஏழை
எதிர்காலம் என்பதோர் பாலை”   (இசைபிழியப்பட்ட வீணை, ப – 17)

என்று துயரங்களைத் தாண்டி வாழ்வில் தடம்பதிக்க விரும்பும் அம்மக்களின் அவாவினை புலப்படுத்துகின்றது.

‘காலமெல்லாம் கஷ்டத்தை அனுபவித்து ஜென்மதேசம் போகவேண்டு மென்றாலும் கூலியாள் சட்டம் குறுக்கே நிற்கிறது. சட்டத்தை அனுசரித்துப் போகிறதாயிருப்பினும் தகராறுகள் பலக் குறுக்கிடுகின்றன. கொஞ்சம் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்தால் அடியும் குத்துந்தான் ஆதாயமாகிவிடும். அடிக்கும் குத்துக்கும் தப்பித்துக் கொள்ள முயன்றால் காவல் தண்டனைக்குட்பட வைத்துவிடுவார்கள்.

இலங்கைத் தீவின் செல்வ வளத்துக்கு மூலமாயிருந்து கொண்டிருக்கும் மலைத்தொடர்களுக்குச் செல்வோம். அங்கே தேயிலைப் பயிர்களை விருத்தி செய்து முறையே முதலாளிக்கும், நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் செல்வத்தை வழங்கக்கூடியவர்கள் என்ன நிலையிலிருந்து வருகின்றார்கள் என்பதனைக் கவனிப்போமாயின் கண்களில் நீர் பெருகாமற்போகாது. அவர்கள் தேசத்தை விட்டுப் புறப்பட எண்ணிய தினம் முதல் தென்னிலங்கையிலிருந்து திரும்பிப் போகின்றவரை அவர்கள் அநேக கஷ்டங்களைச் சமாளித்துக் கொண்டு போக வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். அங்கே சேகரித்துக் கொடுக்கும் தரகரின் கபட நாடகமோ வாய்விட்டுச் சொல்ல முடியாது. கங்காணியரின் தயாளச்சிந்தனையோ அளவிட வேண்டியதில்லை. கண்டக்டர்களின் அதிகாரமோ கணக்கிட வேண்டியதில்லை. சின்னதுரையின் சீரழிவோ செப்பவேண்டியதில்லை. பெரிய துரையின் கம்பீரமோ பேச வேண்டியதில்லை.” (மலையகத் தமிழர் வரலாறு, ஜீலை – 2011, பக் – 193,194.) என்கிறார் சாரல் நாடன்.

புனிதகலாவின் “சிறகுவிரி” தொன்மத்தின் மூலமாகப் பெண்ணியம் பேச விழைகின்றது. ஊழல் செய்தவனை உச்சியில் சுமந்து பெண்மையை ஈனப்படுத்திய நளாயினிப் பெண்ணாய் நீ நலமிழக்க வேண்டாம், கண்மூடிக் கணவன் பின்செல்லும் காவியச் சீதையாகவும் செயல்பட வேண்டாம். உன் சிறகுகளை நீயே சிதைத்துக் கொண்டு மரபுக் கூட்டுக்குள் அடைபட்ட காலம் மலையேறிப் போச்சு வெளியில் வா எனக் குரலை உயர்த்திப் பிடிக்கின்றது. மட்டுமின்றி அது என்ன உன் சிறகுகளில் புராணப் பிசுபிசுப்பு அறிவுச் சுடரொளியில் அதனை உலர்த்திக்கொள் என்பதுமான வரிகள் பெண் சார்ந்த மிகப்பெரிய மீட்டெடுப்பு முயற்சியாக அமைகின்றன.

“மலைகளேறி
மழையில் நனைந்து, விறைத்து
கொழுந்து சுமந்து, இறக்கிக்
களைப்போடு  வீடு வருகின்றேன்
வழமை போலவே
வழமைக்கு மாறாக
என்றாவது
ஒரு கோப்பை தேனீர் தந்து
அதிர்ச்சியின்பத்தால்
சிலிர்ப்பூட்ட
உன்னிடம் ஏனில்லை
என்னைப் பற்றிய சிறு எண்ணம்?”  (இசைபிழியபட்ட வீணை, ப – 24)

என்னும் கலைச்செல்வியின் கவிதை, பெண்ணிய ரீதியில் ஆணைக்கேள்வி கேட்கின்ற மிக முக்கியமான ஒரு கவிதையாகின்றது. மேலும் பரமேஸ்வரியின் தொழிலாளிப் பெண்ணின் சோககீதம், மலையகப் பெண்ணின் வரலாற்றை, துயரத்தை விவரிக்கின்றன. இரவு பசி மீதமிருக்கக் காலை பசியையும் சுமந்து கொண்டு தூரத்தே உயர்ந்து நிற்கும் பச்சை மலையை எட்டிப் பிடிக்கும் இளவயது தாய்க்குத் தேயிலையைக் கொஞ்சும் அளவிற்கு மழலையைக் கொஞ்ச நேரமில்லை. மாலை ஆகிடக் கூடையை முதுகிலும், குடும்ப பாரத்தை மனத்திலும் சுமந்திட வீடு வரும் அவளுக்கு பகல் முழுவதும் பட்டினியாய் வாடிய குழந்தையும், சாராயமே வாழ்க்கையாகி விட்ட கணவனுமே அங்கமாகிவிட்டனார். கூடையைச் சுமந்தே கூன் விழுந்ததால் முப்பது வயதிலே ஐம்பது வயதுத் தோற்றம். எனினும் அப்பெண்கள் முகமலர உலவுகின்றனர். ஏன் தெரியுமா பொறுப்பற்ற கணவனுக்குக் கள்ளும், தன் குழந்தைக்குக் கல்வியும் தன்னால் கிடைக்கப் பெறுகிறதென்ற மகிழ்ச்சியே என்பதாய் அக்கவிதை மலையகப் பெண்ணின் வாழ்வை யதார்த்தமாய் நகர்த்தி செல்கின்றது.

“இசைபிழியப்பட்ட வீணை” தொகுப்பில் பன்முகப்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எனினும் பெரும்பாலான கவிதைகள் அறிவுத்துறை சார்ந்தோ, கோட்பாடுகள் சார்ந்தோ எழுதப்பட்டவை அல்ல. முற்றிலும் மனித யதார்த்த வாழ்வின் ஊடாக எழும் பதிவுகளும் கேள்விகளுமாகவே உள்ளன. பொதுவாக பெண்ணெழுத்தில் மனைவி கணவனையும், அக்காள் தம்பியையும், பிள்ளை தந்தையையும் ஆணாதிக்க கேள்வியால் அதிரச் செய்யும் நிலையில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள “அப்பா” கவிதை அப்பாவை அப்பாவாகவே பார்ப்பதென்பதும், ஒரு பொறுப்புமிக்க ஆணுக்கான அங்கிகாரத்தை வழங்குவதும் முக்கியமானதாகிறது.

“தாய் என்னைக் கருவில் சுமக்க
நீங்கள் என்னைத்
தோள்மீது சுமக்க
தோழனாக்கினீர்கள்
நீங்கள் என் தந்தையானதற்கு
நான்
பெருமை பட்டுக் கொள்கின்றேன்
எந்நாளும்”         (இசைபிழியபட்ட வீணை, ப – 42)

என்பதாகத் தொடரும் கவிதை ஒரு தந்தையின் மன தைரியத்தை, சிக்கலான காலகட்டங்களில் முடிவுகளை எடுப்பதில் தந்தையிடம் இருந்த உறுதிப்பாடு, குழந்தையின் பாதுகாவலனாய், வாழ்க்கையைச் சொல்லிக் கொடுப்பதில் ஆசானாய் விளங்கியமையை அடையாளப்படுத்துகிறது.

மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்குத் தோட்டத்தை, தொழிலை மேற்பார்வை செய்யும் கங்காணிமார்களால் பாலியல் தொல்லை ஏற்படுவது அதிகம். இவை குறித்த துயரினை மலேசியத் தோட்டப்புற பாடல் ஒன்று

“கங்காணி
வேகமுடன் ஓடிவந்து
தாவணியைத் தொட்டாண்டி – கைக்குத்
தங்க காப்புத் தரேன்னு சொல்லி
கையப் புடிச்சி இழுத்தாண்டி” (புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும், ப – 68)

என்பதாகப் பதிவு செய்திருப்பதை முரசு நெடுமாறன் தனது கட்டுரை ஒன்றில் எடுத்தாள்வதைப் பார்க்கமுடிகிறது.

“வேலை நிறுத்தம்
காலை முதல் மாலை வரை
மணிக்கணக்கில் போராடிப்
பயனேதும் இல்லை
மாத முடிவில்
வருமானம் இன்றி
வறுமையில் குன்றி
துயரால் வாடும்
பிறவிகளாய் நாம்
என்று தான் ஒழியும்
அதிகாரிகளின் குரூர நோக்கம்
அன்று தான் தீரும் எம்
மக்களின் ஓலம்”   (இசைபிழியபட்ட வீணை, ப – 67)

எனும் மலையகப் பெண் கவிஞர் சரஸ்வதியின் “ஏழைகளின் ஓலம்” கவிதை அதிகாரிகளின் தவறான அணுகுமுறைகளால் ஏற்படும் போராட்டங்களும், அப்போராட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களின் நிலையினையும் புலப்படுத்துகின்றது. மேலும் சந்தாப் பணம் வாங்க மட்டும் சங்கங்கள், வாக்கு வாங்க மட்டும் கட்சிகள் என்னும் இரா. வனிதாவின் கூற்றும், முதலாளிமார் கைகள் செழிக்கின்றன. முதலானவர் வயிறுகள் வரள்கின்றன என்னும் வே. சசிகலாவின் கவிதை வரிகளும் மலையக மக்களின் வலி நிறைந்த வாழ்வினைப் பன்முகப்பட்ட யதார்த்தங்களோடும், விமர்சனங்களோடும் முன்வைப்பதைக் காணமுடிகின்றது. எனினும் இத்தகைய நெருக்கடியான மலையக மக்களின் வாழ்வியல் குறித்த பதிவினை ஈழத்தில் பெயர்பெற்ற நிலையில் கவிதை எழுதிக் கொண்டிருக்கக் கூடிய வ.ஜ.ச. ஜெயபாலன், சேரன், தீபச்செல்வன் போன்றோர் குறிப்பிடும் படியாகக் கவிதைகளில் பதிவு செய்யவில்லையோ என்பதும் ஐயமாகவே உள்ளது. ஆக ஈழத்து மலையக மக்களின் வாழ்வு என்பது இன்று கேட்பாரற்ற நிலையில் கொழுந்தெடுப்பதை மட்டுமே தலைவிதியாகக் கொண்டு பிறந்திருப்பதை மலையகக் கவிதைகள் உறுதிசெய்வதாய் உள்ளன.

****************

தமிழ் உதவிப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கல்கலைக்கழகம்
தற்போது பணியிட மாற்றம் காரணமாக அரசு கலைக்கல்லூரி,
பரமக்குடியில் பணியாற்றுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தலையெழுத்து கொழுந்து பறிப்பது – ஈழத்து மலையகக் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *