கூடு விட்டுக் கூடு பாய்வது இத்தனை எளிது

0
Annakannan snooker

அண்ணாகண்ணன்

திகில் ஊட்டக்கூடிய இந்த இயல்பினை அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன்.

கூடு விட்டுக் கூடு பாய்வது இத்தனை எளிது என்றும் நான் நினைக்கவில்லை.

திரைப்படம் பார்க்கையில் அதிலிருந்து வெளியே நின்று பார்ப்பதில்லை. அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமாகவும் நானே ஆகிவிடுவது. பல பாத்திரங்கள் இருக்கையில் அதில் ஒன்றுக்குள் புகுந்துவிடுவது. அதன் உணர்வுகளுடன் ஒன்றிக் கலந்துவிடுவது. அந்த நேரத்தில் புற உலகிலிருந்து முற்றிலுமாக விலகிவிடுவது.

திரையில் போர்க்களக் காட்சி. வாளுருவி, குதிரையில் ஏறி, எதிர்வரும் வீரர்களின் மேல் பாய்ச்சிக் கொல்வது. சுற்றி நின்று தாக்கும் நூற்றுக்கணக்கான வீரர்களைத் தனியொருவனாக எதிர்த்து நின்று சுழன்று சுழன்று தாக்குவது. இங்கெல்லாம் அந்த நாயகன் அங்கே தனித்து இல்லை.

நாயகி தண்ணீர் குடிக்கையில் அந்தத் தண்ணீராக அவள் வாய்க்குள் புகுந்து, கழுத்தில் இறங்கி, நெஞ்சுத் துடிப்போடு வயிற்றில் இறங்குவது. ஒவ்வொரு நடன அசைவின்போதும் தன்னிச்சையாக அதேபோல் நடனம் ஆடுவது, சொடுக்கும் பார்வையிலும் துடிக்கும் உணர்விலும் கலப்பது.

கிரிக்கெட் பார்க்கையில் பந்து வீச வரும்போது அந்தப் பந்துவீச்சாளராக மாறுவது. பிறகு அந்தப் பந்தாகவே மாறிவிடுவது. மட்டைவீச்சாளருக்கு வருகையில் மட்டை வீச்சாளராகவே மாறுவது. இப்போது மொத்த மைதானமும் என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவாக மாறி, ஓடிவரும் அவரது காலாக, அவரது கையாக, முட்டியாக, கைப்பிடியாக, பிறகு அந்த ஈட்டியாகவே மாறி, எழுச்சியுடன் பாய்வது. டென்னிஸ் பார்க்கும்போது அந்த ஆட்டக்காரராக மாறுவது. இப்போது பந்தை எதிர்கொள்வதும் அடிப்பதும் அவர் இல்லை. நானே. திரையில் மட்டுமில்லை, நிஜத்திலும் இப்படித்தான்.

கர்நாடக சங்கீதத்தில் ஓர் ஆலாபனையைக் கேட்கையில், அந்த நாவின் அசைவை, கண்டத்தின் அதிர்வை, மூச்சுக் காற்றின் பயணத்தை, அந்த இசை தோன்றும் இடத்தை உணர முடிகிறது. இதையே ஊளையிடும் ஒரு நாயின் குரல், தீனமாக எழும் ஒரு பசுவின் குரல், ஏங்கி அழைக்கும் ஒரு குயிலின் குரல் எழும் இடத்தையும் நெருங்க முடிகிறது.

குழந்தையுடன் பேசும்போது குழந்தையாகவே மாறிவிடுவது, அதனுடன் சண்டையிட நேர்ந்தால் குழந்தையுடன் சரிக்குச் சரியாக நின்று சண்டையிடுவது, வாகனத்தை ஓட்டுகையில் முழுமையாக ஓட்டுநராகவே மாறிவிடுவது, தோசை சுடும்போது முழு கவனத்தையும் தோசையின் மீது வைப்பது, சாலையோரம் ஒரு புன்னகையைக் கண்டால், அதை முழு உள்ளத்துடன் ஏற்றுப் புன்னகைப்பது, எந்த வேலையைச் செய்யும்போதும் அந்த வேலையை மட்டுமே மனத்தில் நிறுத்துவது போன்றவை இயல்பாக நடக்கின்றன.

இலக்கிய வரிகளைப் படிக்கையில் அதை எழுதியவரின் உள்ளத்துடன் பொருந்தி வாசிப்பது, திருவள்ளுவரின், ஆண்டாளின், பாரதியின், விவேகானந்தரின் உள்ளத்திற்குள் வாழ்வது, ஓர் அன்றாட நடவடிக்கை. எந்தப் பெரிய முயற்சியும் இல்லாமலே இதைச் செய்ய முடிகிறது. நினைத்த மாத்திரத்தில் அதுவாகவே மாறுவது.

கூர்மையான, நுணுக்கமான சில பணிகளைச் செய்யும்போது, என் உடலே கூர்முனையாக மாறிவிடும். மொத்த உணர்வுகளும் ஆற்றலும் ஒரு புள்ளியில் குவிந்துவிடும். என் பார்வை குவியும். என் விரல் குவியும். என் வாய் குவியும். என் மூச்சுக் காற்றும் அதைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அதை நிறுத்திவைத்து, நிறைவேற்றும் பணிகளும் உண்டு.

நான் செய்யக்கூடிய செயல்கள் பலவும் மிகச் சிறப்பாக இருக்கக் காரணம், அதற்கு என்னை ஒப்படைப்பதே. அச்செயலில் மாபெரும் ஆற்றல் படைத்த, மகத்தான ஆளுமை என்ற எண்ணத்தில் அதை நான் செய்யத் தொடங்குகிறேன். செய்யத் தொடங்கிய பின், அந்த எண்ணத்தையும் மறந்துவிடுவேன். அந்த நேரத்தில் வேறு எது குறித்தும் நான் சிந்திப்பதில்லை. விளைவு, இயல்பாகவே என் செயல்களின் தரம், பெரும் உயரத்தில் இருக்கும். சில நேரங்களில் வேறு சிந்தனையில் இருக்கும்போது, இன்னொரு பணியைச் செய்தாக வேண்டிய சூழல் தோன்றும். மனம் ஈடுபடாத நிலையில், சில பணிகள் சாதாரணமாக அமையும். சில நேரங்களில் இந்தத் தரம் போதும் என நானாக நினைப்பதால், சிலவற்றில் அது சராசரியாக அமைவதும் உண்டு.

இப்படியான தருணங்களைத் தவிர்த்து, பல நேரங்களில் நான் பற்றற்ற நிலையில் இருப்பதுண்டு. அதாவது, எத்தகைய பணிகளையும், கூடுபாய்வதையும் முடித்துவிட்டு, அமைதிக்குத் திரும்பிவிடுவது. இரண்டும் இரண்டு மனநிலை, அவ்வளவே.

நீ எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறிவிடு. இது வெறும் தத்துவம் இல்லை. வாழ்க்கைக் கொள்கை. அனைத்தும் மனத்திலிருந்தே தொடங்குகிறது. இதை இங்கு எழுதக் காரணம், என்னைப் போல் இது எல்லோராலும் முடியும். கடினமான பயிற்சி எதுவும் தேவையில்லை. முழுமையாக நம்பினால் போதும். சிறிதும் ஐயமின்றி நம்புங்கள். உங்களாலும் உங்கள் மனநிலையை ஒரு கணத்தில் மாற்ற முடியும். அதற்குரிய தேவையும் விருப்பமும் இருப்பது இந்த மனநிலையை இன்னும் எளிதில் கொண்டு வரும். முயற்சி திருவினையாக்கும். ஒரே ஒரு முறை முயன்றாலும் போதும்.

படம்: ஐயப்பன் கிருஷ்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.