ஒரு கதை
அண்ணாகண்ணன்
குருதிப்புனல் திரைப்படத்தின் கதைப்படி, காவல் துறை அதிகாரிகள் இருவர், தீவிரவாதக் குழுவிற்குள் ஊடுருவிக் கலப்பர். அவர்களுள் ஒருவர், படிப்படியாக முன்னேறி அதன் தலைமைப் பதவிக்கு வருவார். ரமணா திரைப்படத்தில், ஒரு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் போட்டித் தேர்வு எழுதி, அரசின் பல்வேறு துறைகளில் நுழைந்து நேர்மையாகப் பணியாற்றுவர். இதே போல் என்னிடம் ஒரு கதை இருக்கிறது.
உலகையே மாற்ற வேண்டும் என்ற உந்துதல் கொண்ட கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒரு குழுவாகச் சேர்கின்றனர். நாட்டின் அவல நிலை, அவர்களை வருத்துகிறது. சும்மா எழுதிக்கொண்டிருந்தால் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். இலஞ்சத்தை ஊழலையும் ஒழிக்க வேண்டும். நல்லாட்சி வழங்க வேண்டும். சரியான நீதி கிடைக்க வேண்டும். உரியவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். இவற்றையெல்லாம் நிறைவேற்ற, நேரடி அரசியலில் இறங்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என முடிவு செய்கின்றனர்.
கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவுக் குரல் கொடுத்தால் போதாது என்று நேரடியாகக் கட்சிகளில் சேர்கின்றனர்.
தங்களுக்குச் சாதகமான கட்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் சேர்கின்றனர். தங்கள் பேச்சாற்றலால், எழுத்தாற்றலால் முழுநேர அரசியல்வாதிகளையே தூக்கிச் சாப்பிடும் வகையில் செயல்படுகின்றனர். தங்கள் தலைவர்களைப் போற்றுவதானாலும் எதிர்க் கட்சிகளைத் தாக்குவதானாலும் முரட்டு அடி அடிப்பதில் முத்திரை பதிக்கின்றனர். பிரசார பீரங்கிகளாக வளர்கின்றனர். செய் அல்லது செத்துமடி, ஒன்றுசேர் புரட்சி செய், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என வீரமாகப் பேசுகின்றனர்.
அவர்களின் பெயர்கள் சுவரொட்டிகளில், பதாகைகளில் சிறிய எழுத்தில் தொடங்கி, படிப்படியாகக் கொட்டை எழுத்தாக வளர்கின்றன. கட்-அவுட்டுகளிலும் இவ்வாறே அவர்களின் உருவம் வளர்கிறது. மேடைகளில் சிறிய மாலை, ஆளுயர மாலையாக வளர்கிறது. சிறிய நினைவுப்பரிசு, பெரிய நினைவுப்பரிசாக வளர்கிறது. தொலைக்காட்சிகளில் சில விநாடிகள் தோன்றியவர்கள், மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். பத்திரிகைகளில் ஓரச் செய்தியாக இருந்தவர்கள், தலைப்புச் செய்தியாக வளர்கிறார்கள். அவர்கள் வெளியிடும் புத்தகங்களும் சிறிய அளவிலிருந்து பெரிய புத்தகங்களாக வளர்கின்றன. விரைவில் அவர்களுக்குப் பட்டங்கள் கிடைக்கின்றன. தலைவர்களின் இதயத்தில் இடம் பிடிக்கின்றனர். கட்சிகளில் பொறுப்புகளுக்கு வருகின்றனர். படிப்படியாக முன்னேறி, தேர்தலில் போட்டியிடுகின்றனர். பதவிகளுக்கு வருகின்றனர்.
இந்த இலக்கியவாதிகளும் அவர்களின் உள்வட்டத்தினரும் கட்சிகளின் அனைத்து நிலைகளிலும் அனைத்துக் குழுக்களிலும் இடம் பெறுகின்றனர். சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளுக்குமான செயல்திட்டத்தை இவர்கள் வடிவமைக்கின்றனர். எந்தக் கருத்தை முன்வைக்க வேண்டும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எப்படி முறியடிக்க வேண்டும், யாருடைய வாக்குகளை எப்படிப் பெற வேண்டும், எந்தக் கூட்டத்தை எப்படித் தூண்டிவிட வேண்டும், தங்களுக்குப் பாதகமான சூழலில், திடீர் சர்ச்சையைக் கிளப்பி, பிரசாரங்களை எப்படித் திசைதிருப்ப வேண்டும் என அனைத்திலும் நிபுணத்துவம் பெறுகிறார்கள்.
அடுத்தடுத்த தேர்தல்களில் வேட்பாளர்கள் யார் என்பதிலிருந்து மாநில அரசின் விருதுகள் யாருக்குக் கிடைக்க வேண்டும், யாருடைய புத்தகங்களை நூலகத்திற்கு வாங்க வேண்டும், தலைவர்களை யார் சந்திக்க வேண்டும், தலைவர்கள் யாரைச் சந்திக்க வேண்டும், கூட்டங்களில் தலைவர்கள் என்ன பேச வேண்டும் என்பது வரை இவர்களே தீர்மானிக்கின்றனர். இவர்களின் படைப்புகள், பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படுகின்றன. தேர்வுகளில் இவர்களைப் பற்றிய கேள்விகளுக்கு மாணவர்கள் விடை எழுதுகின்றனர்.
மாநிலத்தில் மட்டுமின்றி, மத்தியிலும் இவர்கள் அதிகாரத்திற்கு வருகின்றனர். இப்போது, நாட்டின் குரலாக இவர்கள் ஒலிக்கின்றனர். அயல்நாட்டுத் தூதுக் குழுவிலும் இவர்களே இடம் பிடிக்கின்றனர். இவர்களின் பின்னால் இலட்சக்கணக்கானவர்கள் திரள்கின்றனர். சுழல் விளக்கு பொருத்திய மகிழுந்துகளில் இவர்கள் விரைகின்றனர். இரண்டாம் கட்டத் தலைவர்களாக உயர்கின்றனர். எல்லாக் கட்சிகளிலும் இவர்களே மூளையாகச் செயல்படுகின்றனர். எந்த முடிவையும் இவர்களைக் கேட்காமல் தலைவர்கள் எடுப்பதில்லை. இவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ன? இவர்கள் என்னென்ன சமூக மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்? புதியதோர் உலகைப் படைத்தார்களா? மீதியை வெள்ளித் திரையில் காண்க.
இந்தக் கதையைத் திரைப்படம், வலைத்தொடர் போன்று ஏதேனும் வடிவத்தில் எடுப்பவர்கள், எனக்கு உரிய காப்புரிமைத் தொகையை (ராயல்டி) தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
