வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ வீசும் மணம் – 2

0

-முனைவர் ச.அருள்

தமிழ் வளர்த்த சான்றோரைப் பாராட்டல்

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய அறிஞர்கள் பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் எனப் பல நூற்றாண்டுகளாக பிறமொழி ஆதிக்கத்தால் தொய்வுற்றிருந்த தமிழ் மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழ் அறிஞர்கள் பலர். அவர்களுள் தலைசிறந்த தமிழ் அறிஞராக இன்றும் என்றும் போற்றத்தக்கவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள். இவர் மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிடில் எத்தனையோ இலக்கியங்கள் தமிழர்களுக்குக் கிட்டாமலேயே போயிருக்கும். ‘ஏடு காத்த ஏந்தல்’ என்று இவரைச் சிறப்பிக்கின்றார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றவர்.  உ.வே.சாமிநாத ஐயர் சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பெருங்கதை முதலிய இலக்கியங்களை ஓலைச்சுவடியில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தொகுத்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

கவிஞர் வைரமுத்து, ‘மொழி காத்தான் சாமி’ என்னும் பொருண்மையில் உ.வே.சா. குறித்து எழுதிய கட்டுரையில், “தமிழ் என்பது விழுமியம், பெருமிதம், வீரம், ஈரம், காதல், பண்பாடு, தத்துவம் என எல்லாம் கூடிக் கலந்த ஒரு பெரிய கலாசாரக் கடல். இத்தனை கருவிகளுக்கும் சான்று தந்தவர்தாம் உ.வே.சாமிநாதையர். அவர் இல்லையெனில் தமிழின் தொன்மைக்கும், தமிழினத்தின் பெருமைக்கும் தடயங்களும் சான்றுகளும் ஆவணங்களும் இல்லை. ஊர் ஊராய் ஏடு தேடி அந்த அந்தணக் கிழவன் சந்தனமாய்த் தேய்ந்திராவிடில் ஒரு செம்மொழியின் முதல் தகுதியான தொன்மை என்பதற்கு நாம் ஆதாரமற்றுப் போயிருப்போம்” என்று கூறியுள்ளார்.

வ.சுப.மாணிக்கனார், ‘மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்க்கு’ என்னும் கவிதையில்,

பார்காத்தார் ஆயிரம்பேர் பசித்தார்க்காகப்
பயிர்காத்தார் ஆயிரம்பேர் பாலர்க் காக
 மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில்
மனங்காத்த தமிழ்த்தாய் “என் உடைமை யெல்லாம்
யார்காத்தார்” எனக்கேட்க ஒருவன் அம்மா
யான்காப்பேன் எனவெழுந்தான்
சாமி தான்!
நீர்காத்த தமிழகத்தார்
நெஞ்சின் உள்ளான்
நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான்.
   பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி!
போகாத புகழ்க்கன்னி மணந்த நாத!
செய்யாத மொழித்தொண்டு செய்த ஐய!
சிறுகாத நெஞ்சத்தேம் வணங்கு செம்மல்!
எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும்
இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று
நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த
நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க!”             – (மாமலர்கள், .72)

என்று வாழ்த்துகிறார். உலகினைக் காத்தவர்கள் பசித்தோர்க்கு உணவு கொடுக்கப் பயிர் செய்து அந்தப் பயிரைக் காத்தவர்கள்; குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காக தாய்மடி காத்தவர்கள்; இவர்கள் மத்தியில் தமிழ்த்தாயின் உடைமைகளை, தமிழ் இலக்கியங்களைக் காப்பதற்காக தன்னார்வத் தொண்டராக வந்தவர்தாம் உ.வே.சாமிநாதையர். இவர் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஓய்வில்லாமல் தமிழ்த் தொண்டாற்றி தமிழர்கள் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறார். தமிழைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டவர் தமிழுக்கு உயிரானவர் உ.வே.சா.சாமிநாதையர் அவர்தம் தாள் வாழ்க என்கிறார் வ.சுப.மாணிக்கனார்.

அண்ணாமலை செட்டியார்

 செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை தமிழ் இசைக்காக தமிழ் மொழிக்காக உழைத்த உத்தமர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினை நிறுவி பலருக்குக் கல்வி வழங்கிய அண்ணாமலை செட்டியார் சிறந்த கொடை உள்ளம் படைத்தவர். தமிழ் இசை மீது ஈடுபாடு கொண்ட அண்ணாமலை செட்டியார் தமிழிசையை ஆய்வு செய்வதற்காக 1941– இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தார். இந்த நிதியானது தமிழிசை இயக்கத்திற்கு ஓர் உந்துதலாக இருந்தது. வ.சுப.மாணிக்கனார் ‘வள்ளல் அண்ணாமலையரசர்’ என்னும் கவிதையில்,

நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான்;
நீங்காத கலைப்புரட்சி நிரம்பச் செய்தான்;
கல்லாத இனமெல்லாம் கற்க வைத்தான்;
காணாத பெருங்கழகம் களத்து வைத்தான்;
இல்லாத புலவர்களை இருப்போர் ஆக்கி
இணையாத தமிழ்ப்புகழை ஈட்டிக் கொண்டான்;
வெல்லாத செயலில்லை என்று போற்ற                                    விளங்கியவன் மன்அண்ணா மலையன் வாழ்க.” – (மாமலர்கள், 76)

என்று அண்ணாமலை செட்டியாரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். நிலைத்து நிற்காத செல்வத்தை நிலைக்கச் செய்து, கலைகளில் புரட்சி செய்தவர் அண்ணாமலையரசர். மிகப்பெரும் பல்கலைக்கழக்தை உருவாக்கி, கல்லாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கியவர். தமிழறிஞர்களை ஊக்குவித்து தமிழின் புகழை உலகறியச் செய்தவர். அண்ணாமலை அரசர் தம் பல்கலைக்கழகத்தில் (மீனாட்சி, தமிழ்க்கல்லூரி) தலைவராக உ.வே.சாமிநாதையரை நியமித்து, விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.ராகவையங்கார், அ.சிதம்பரநாதன், கோ.சுப்பிரமணியப் பிள்ளை, மு.அருணாசலம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலிய தமிழ் அறிஞர்களைப் பணியில் அமர்த்தியவர். இவர்களைப் பற்றி விரிவாக மேற்கண்ட கவிதையில் மேலும் வரிகள் நீட்சி பெறுகின்றன.

தமிழ்சூடி

ஔவையார் எழுதிய ஆத்திசூடியின் பாயிரம் ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே’ என்று அமைந்திருந்ததால் பாடலின் முதல் சொல்லையே இந்த இலக்கியத்திற்கு உரிய பெயராக அமைத்துக் கொண்டனர். ஔவையாருக்குப் பின்னர் ஆத்திசூடிகள் எழுதியவர்களில் பாரதியார் – புதிய ஆத்திசூடி, பாரதிதாசன் ஆத்திசூடி, வாணிதாசன், சுத்தானந்த பாரதி, ந.சஞ்சீவி, மு.வரதராசன் ஆகியோரின் புதிய ஆத்திசூடி, ந.ரா.நாச்சியப்பன் – நெறிசூடி, ச.மெய்யப்பன் – அறவியல்சூடி, தமிழண்ணல் – ஆய்வு சூடி, ரெ.முத்து கணேசன் – முத்துசூடி, புலவர் சோம.இளவரசு – நீதி சூடி எனத் தங்கள் விருப்பத்திற்கேற்ப பெயர்களை அமைத்துக் கொண்டனர். இவர்களைப் போல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்சூடி என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் சிறுவர்கள் சிந்திக்கத்தக்க 118 சிறந்த அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்சூடி பாயிரத்தில்,

தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்
தாய்மொழி தவறாது கற்பாய் குழந்தாய்
திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய்
தீமைகள் மனத்தினும் தீண்டாய் குழந்தாய்
துடிபோலப் பள்ளிக்குத் தொடர்வாய் குழந்தாய்
தூய்தமிழ் எங்குமே சொல்வாய் குழந்தாய்
தென்றலில் நன்றாகத் திளைப்பாய் குழந்தாய்
தேனினிய நூலகம் செல்வாய் குழந்தாய்
தைத்திங்கள் பொங்கலில் தளிர்ப்பாய் குழந்தாய்
தொண்டுகள் பலசெய்யத் துடிப்பாய் குழந்தாய்
தோலாத தமிழ்நூல்கள் தொகுப்பாய் குழந்தாய்
தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்”                               – (மாமலர்கள், ப.140)

என்று வ.சுப.மாணிக்கனார் பாடியுள்ளார். தாய்மொழியாம் தமிழ் மொழியைத் தவறாமல் கற்றுத் திருக்குறளில் தெளிவு பெற்றால் மனத்தில் தீமைகள் அண்டாது என்கிறார். துடிப்போடு பள்ளிக்குச் சென்று தூய தமிழில் பேச சொல்கிறார். இயற்கைக் காற்றை சுவாசித்து, நூலகத்தில் நல்ல நூல்களை வாசித்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நன்றாகக் கொண்டாடப் பணிக்கின்றார். வாண்டுகள் தொண்டுகள் பல செய்து, தமிழ் நூல்களைத் தொகுத்து தமிழை மாலையாகச் சூடி வழிபடச் சொல்கின்றார்.

வ.சுப.மாணிக்கனார் தமிழ் சூடியில் தமிழ்மொழி, தமிழ் நூல்கள், தமிழ் இனம் குறித்துப் பேசுகிறார். செந்தமிழ் பயில் (50), சொல்லைக் கலவேல் (53), இந்தியை விலக்கு (21), தாய்மொழி முதன்மொழி (62), அகத்தமிழ்படி (1), புறத்திணை படி (88), தொல்காப்பியம் படி (70), திருக்குறள் வரப்பண் (63), சங்க நூல் போற்று (44), ஔவையைப் போற்று (12), குறுந்தொகை படி (36), முத்தமிழ் பரப்பு (100), தமிழிசை பரப்பு (61), யாப்புப் பழகு (108), தேவாரம் பாடு (68), விவிலியம்படி(113), மொழிபல கல் (104), நூல்கள் எழுது (77), கண்ணகி வழிநட (19), சிலம்பை நடி (46), பூம்புகார் போற்று (89), பேகனைப் புகழ் (91), ஆழ்வார் நெறிநில் (2) எனத் தமிழ்சூடி உரைக்கின்றது. தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்று, அதற்கு ஏற்ப வாழுமாறு வலியுறுத்துகின்றார். மேலும், தீண்டாமை யொழி (64), போரையொழி (94), மதுவை விலக்கு (96), கையூட்டு மறு (40), கிளர்ச்சி எதற்கு (34) எனச் சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். நெஞ்சை உயர்த்து (78), உன்னைத் திருத்து (31), ஏனென்று கேள் (8), சாவிலும் மகிழ் (45), பிறவியை மதி (86), மக்களை மதி (14), யமனைப் புறங்காண் (45), மாற்றம் விரும்பு (97) என தன் முன்னேற்றச் சிந்தனைகளை விதைத்துச் சென்றுள்ளார்.

பெண்மையைப் போற்றிய வ.சுப.மாணிக்கனார்

இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்டோதரி, அரக்க மன்னன் தேவதச்சன் மயனின் மகள். அழகு, கடமை, கண்ணியம், நேர்மை பண்புகள் நிறைந்தவள். இராவணன் பிறன் மனையாளாகிய சீதையைக் காமுற்று அசோகவனத்தில் கொண்டு வந்து சிறை வைத்திருக்கிறான் என்ற செய்தி கேட்டு மண்டோதரி மனம் உடைந்து கலங்குகிறாள். அவனைத் திருத்தத் துணிவு கொள்கிறாள். இராவணன் நள்ளிரவில் அசோகவனம் சென்று இரந்து சீதையின் காலடியில் விழ முற்பட்டபோது, அங்கு முன்னரே சென்றிருந்த மண்டோதரி எதிரே நிற்கிறாள். தன் மனைவியைக் கண்ட இராவணன் நடுங்குகிறான். மண்டோதரி அவனுக்கு அரசு நெறியையும் ஒழுக்க நெறியையும் இடித்துச் சொல்லிச் சீதைக்கு உடனே, விடுதலை அளிக்கிறாள். கணவனைத் திருத்திய மண்டோதரியின் கற்புப் புரட்சியை,

நுழையாத குடிசைக்குள் நோன்பிருப்பார்
  விட்டகன்ற நொடிமை பார்த்து
விழையாத முனிவேடம் மேற்கொண்டு
  பிறனுடலை விரும்பித் தூக்கி
இழையாத துயர்வனத்தில் இல்லாள்கள்
  செவிகேட்க வைத்தான் என்றால்
 பிழையாத மனைவியர்க்கும் பிழைசெய்ய
   இடங்கொடுத்த பிசடு போமே
களித்தாடுங் கணவனையும் கழிகாமக்
  கணவனையும் கன்று சூதல்
விளித்தாடுங் கணவனையும் வினைசுருக்கித்
   தசைபெருக்கி வீம்பே பேசி
நெளித்தாடுங் கணவனையும் நெஞ்சரிக்கும்
   புகைகுடித்து நீள ஊதித்
 திளைத்தாடுங் கணவனையும் திருத்துகின்ற
  பொறுப்புடையாள் தீமை யில்லாள்                               – (மாமலர்கள், பக்.147-148)

என்று ‘புரட்சி மண்டோதரி’ பாடல் பாடுகின்றார். இராமன் இல்லாத கவிதையில் நேரத்தில் முனிவர் வேடத்தில் சீதையைத் தூக்கி வந்த இராவணனைத் திருத்தும் கற்புடையாளாக மண்டோதரியைக் காட்டியுள்ளார் வ.சுப.மாணிக்கனார். இந்தப் படைப்பில் இராவணணின் கயமை, பேதைமை, கீழ்மை, சூழ்ச்சி பேசப்படுகிறது. மண்டோதரியை புரட்சிப் பெண்ணாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

வீரச்செல்வி செம்மலர்

‘கொல்லாச் சிலம்பு’ என்னும் கவிதையில், பொற்கொல்லன் மனைவி செம்மலர் என்பவள் தன் வீட்டின் உள்ளறைக்குள் விலை உயர்ந்த சிலம்பு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதைத் திடீரென காண்கிறாள். பாண்டிமாதேவி தன் ஒரு சிலம்பு காணாமல் போயிற்று என்று சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது. குடுகுடுப்பைக்காரனுக்குப் பொற்கொல்லன் கொடை செய்த அருமையும் அவள் நினைவுக்கு வருகிறது. உடனே, பாண்டியன் தேவியைப் பார்க்கிறாள். புகாரிலிருந்து மனைவியொடு வந்த ஒரு வணிகன் தன் சிலம்பைக் களவாடினான் எனவும் பெருந்தண்டனை பெறுவான் எனவும் தேவி வெளிப்படுத்துகிறாள். இவருவரும் அரசவைக்குச் சென்ற சமயம் கள்வனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு வருக என்று பாண்டியன் ஊர்க் காவலர்க்குக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறான். அரசனை இடைமறித்துச் செம்மலர் இத்தீர்ப்பு முறையற்றது எனக் கூறித் தான் அன்று எதிர்பாராது ஓரிடத்துக் கண்ட சிலம்பினைக் காட்டுகிறாள். அதுதான் காணாமல் போன பாண்டிமாதேவியின் காற்சிலம்பு.

                நிகழ இருந்த கொலையைத் தவிர்த்து செங்கோலையும் தங்கள் உயிர்களையும் காத்து அளித்த செம்மலர் நல்லாளைப் பாண்டியன் அரசவையில் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டுகிறான். அவளது பெருந்தொண்டினையும் துணிச்சலையும் உலகத்தார் அறிய வேண்டிய ‘செம்மலர்’ என்ற நாடகம் அரசு விழாவாக ஆண்டு தோறும் நடைபெற வேண்டும் என்று ஆணையிடுகிறான். பாண்டியன் அன்புப் பரிசாக வழங்கிய முத்து மாலையைச் செம்மலர் தன் தொண்டின் பரிசாக வாங்க மறுத்து விடுகிறாள். தங்களுக்கு வர இருந்த தீய விளைவுகள் செம்மலரின் கடமை வீரத்தால் மாறி விட்டன என்ற நிலையறிந்த கோவலனும் கண்ணகியும் ‘வீரச்செல்வி’ என்று செம்மலராளை மனத்தில் வைத்துப் போற்றுகின்றனர். செம்மலர் நங்கையின் நற்புகழினை,

”சோலை மலருட் சுருண்ட பாம்புபோல்
  சேலை யடுக்கினுட் சிலம்பணி கண்டாள்
பொன்செய் கொல்லன் பொன்னன் மனையாள்
நன்செய் போலும் நல்வரம் புடையவள்
பைங்கலன் கொழிக்கும் பட்டினம் பிறந்தவள்
செம்மலர் என்னும் செல்லப் பெயரினள்
 நாற்பது வயதினும் நலியா இளமையள்
 ஏற்பதை ஏற்பாள் எதிர்ப்பதை எதிர்ப்பாள்
திண்ணைப் பள்ளியிற் சிறுதமிழ் கற்றாள்
எண்ணல் பெருக்கல் இளங்கணக் கறிவாள்
உண்மைக் கதைகளை உள்ளங் கொள்வாள்
அரிய தாயினும் உரியதைப் பேணி
உரிய தாயினும் ஊர்வம்பு பேசாள்
அன்புடைக் கணவன் அரண்மனைக் கொல்லன்
 என்ற தொடர்பால் இல்லற முதலே
 பாண்டிய தேவியொடு பழகி வருவாள்”    – (மாமலர்கள், ப.153)

என்று வ.சுப.மாணிக்கனார். புகழ்ந்துப் போற்றியுள்ளார். செம்மலர் என்பவள் நல்லவற்றை ஏற்பவளாகவும் அல்லவற்றை எதிர்ப்பவளாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள். பாண்டியனைக் கொலைப் பழியில் இருந்து காப்பாற்றியதற்காக,

    “எதிரது அறிந்துடன் எல்லாம் தடுத்த
       முதுக்குறை நங்கைக்கு முடிதாழ் வணக்கம்!
      கொலையும் பழியும் கொடுமையும் தவிர்த்து
      நிலையும் புகழும் நேர்மையும் காட்டி
      உற்ற காலத்துள் ஓடோடி வந்து
      குற்றம் புகாமல் கோன்மை காத்துப்
      பெற்ற தாயினும் பேரன்பு செய்த
      வெற்றிச் செம்மலர் வீரியை வணங்குதும்”           – (மாமலர்கள், பக்.157-158)

என்று செம்மலரைப் புகழ்ந்து வணங்குகிறார். பெற்ற தாயினும் சிறந்தவளாக செம்மலரை பாண்டிய மன்னன் உயர்த்திப் போற்றியுள்ளான். கண்ணகியைப் புலம்ப வைத்த பொல்லாச் சிலம்பை கொல்லாச் சிலம்பு என்று வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். சிலம்புக்கு உரியவளான கண்ணகியையும் அவளது கணவன் கோவலனையும் கொல்லாச் சிலம்பு புகழ்ந்து பேசுகிறது. பாண்டிய மன்னனின் தீர்ப்பு இந்தப் படைப்பில் ரத்து செய்யப்படுகிறது. கோவலன் மீது சுமத்தப்பெற்ற குற்றம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னன் நல்லவனாகவும் குடிமக்களுக்கான நீதியை நிலை நாட்டக் கூடியவனாகும் கடமை தவறாதவனாவும் காட்சிப்படுத்தபட்டிகிறான். இந்தப் படைப்பை வ.சுப.மாணிக்கனார் சிலப்பதிகாரத்தின் மாற்றுச் சிந்தனைக்கான விதையாக ஊன்றியுள்ளார்.

முடிவுரை

வ.சுப.மாணிக்கனார் படைப்பாளர், பேராசிரியர், தமிழ்ப் பற்றாளர், பதிப்பாளர், உரைநடை ஆசிரியர், உரை ஆசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர், ஆங்கிலப் புலமையாளர் எனப் பன்முக ஆற்றல் வாய்ந்தவராக ஒளிர்கின்றார். இவரது கவிதை நூல்கள் இவரை மிகச் சிறந்த கவிஞராக அடையாளப்படுத்துகின்றன. தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், இராமாயணம், பாரதியம் ஆகியவற்றில் தனித்த ஈடுபாடு கொண்டவர் என்பதை இவரது கவிதைகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. குறிப்பாக, மாமலர்கள் என்னும் கவிதை நூல் இவரை மாபெறும் கவிஞராகவும், சிந்தனையாளராகவும் வெளிக்காட்டியுள்ளது. இந்நூலினைப் பல்வகைச் செய்யுளோடு பல்வகைப் பொருண்மைச் சார்ந்ததாகப் படைத்திருக்கிறார்.

பழைமையில் பிடிப்பும் புதுமையில் வேட்கையும் கொண்டவராகத் திகழ்கின்றார். இந்தியை எதிர்த்தும் தாய்மொழியாம் தமிழ்மொழிக் கல்வியை ஆதரித்தும் எழுதியுள்ளார். தாய்மொழியைக் கற்க வலியுறுத்தும் வ.சுப.மாணிக்கனார் மொழிக்கலப்பினால் தாய்மொழியான தமிழ்மொழிக்குக் கேடு விளையும் என்பதையும் தெளிவுற உரைக்கின்றார்.

எழுத்துச் சீர்திருத்தத்தை பெரிதும் ஏற்றுக் கொள்ளாதவர் என்பதை இவரது கவிதைகள் புலப்படுத்துகின்றன. தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் இனம் பற்றிய சிந்தனைகள் இவரது கவிதைகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

தமிழர்கள் ஆங்கிலத்தின் பால் கொண்ட மோகத்தைச் சாடியுள்ளார். இந்தி இந்தியாவின் பொதுமொழி இல்லை என்பதைத் தம் கவிதை வழி நிறுவியுள்ளார். தமிழ் மொழி, தமிழ் இசை, தமிழ்க் கல்வி, தமிழர் கலை வளர்த்த சான்றோரை உச்சி முகர்ந்து புகழ்ந்துள்ளார்.

வ.சுப.மாணிக்கனார் உள்ளம், சொல், செயல்களால் தூய்மையானவர் என்பதால் நாடு நலம் பெற நற்கருத்துக்களை நாளும் சிந்தித்து எழுதியுள்ளார். சிறார் மனங்களில் நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆத்திசூடி அமைப்பில் தமிழ்சூடி இயற்றிச் சிறுவர் உள்ளமும் வாழ்வும் செழிப்புற வழிவகைக் கண்டுள்ளார். ‘புரட்சி மண்டோதரி’, ‘கொல்லாச் சிலம்பு’ என்னும் இரண்டு கவிதைகளும் இராமாயணம், சிலப்பதிகாரம் சார்ந்த காப்பியங்களாகவும், இவை பெண்மைக்கும் பெண்களின் புரட்சிப் பண்புக்கும் மதிப்பளிக்கும் புதிய படைப்புகளாக மிளிர்கின்றன.

தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்துத் தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் செய்து தானே தமிழாகி விட்ட தமிழ்ப் பேராசானுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *