Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் (78)

நிர்மலா ராகவன்

இல்லறத்தில் இன்பம் சூழ

நலம்

பணம் மட்டும் மகிழ்ச்சியைத் தருமா?

என் சக ஆசிரியை மிஸஸ் சின்னின் கதையைக் கேளுங்கள். பதில் கிடைக்கும்.

முப்பத்தைந்து வயதான மிஸஸ் சின் மலேசியாவிலுள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவள்.

“நான் மிகவும் மகிழ்ச்சியானவள், இல்லை?” அடிக்கடி இப்படிக் கேட்பாள். இன்னாரிடம் என்றில்லை.

“திருமணத்துக்கு முன்பு, நாங்கள் காதலர்களாக இருந்தபோது, எப்போது அவரை மீண்டும் பார்ப்போம் என்றிருக்கும் எனக்கு. இப்போதோ!” என்று தலையில் அடித்துக்கொள்வாள்.

அவனது வேலையிலேயே முழுகிப்போயிருந்த ஒரு பணக்காரன் அவளுடைய அழகிற்காக அவளைக் கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். நண்பர்களிடையே பெருமையாகக் காட்டிக்கொள்ள அப்படி ஒரு மனைவி தேவைப்பட்டிருப்பாள். அதன்பின், அவளை அதிகம் கவனிக்கத் தோன்றவில்லை.

அப்படி ஒரு ஏமாற்றத்தை, பராமுகத்தை, எந்தப் பெண்தான் தாங்குவாள்! `அவள் வீட்டுக்கு எந்த வேளையில் போனாலும், சாப்பிட ஒன்றும் இருக்காது!’ என்று ஒரு சில ஆசிரியைகள் தெரிவித்ததுண்டு.

ஒரு முறை, எங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளுக்கு மட்டும் என்று நடந்த ஒரு விருந்தில் அவளுடைய கணவன் விரைந்து வந்து சாப்பிட ஆரம்பித்தான். எவ்வளவு பணம் இருந்தென்ன!

மிஸஸ் சின் சொல்வதைக் கேட்டு, `அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை! கணவன் கைநிறைய சம்பாதிக்கிறார்! பெரிய கார் வைத்திருக்கிறாள்!’ என்பார்கள் பிறர்.

நான் மட்டும், “உண்மையில் அவளுக்குச் சந்தோஷமே கிடையாது. மகிழ்ச்சியாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் அவளுக்கே வந்துவிட்டது. அதனால்தான் அடிக்கடி பிறரிடம் அப்படிக் கேட்கிறாள்!” என்பேன்.

“எதனால் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை?” என்று ஒருத்தி கேட்டபோது, “அவள் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைத்திருக்காது. கணவன் தன் வேலையிலேயே ஆழ்ந்துபோகிறான். இவளுக்காகத் தனியாக நேரம் ஒதுக்குவது கிடையாது. இதெல்லாம் அவள் சொல்வதுதானே! அவள் எப்படி கணவரைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்று கவனியுங்கள். புரியும்,” என்று பதிலளித்தேன்.

`என்னையும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா!’ என்று கணவரிடம் கேட்டால், அவர் என்ன சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் அவளைப் போன்றவர்களுக்கு.

`பெரிய வீடு வாங்கியிருக்கிறார், நான் என்ன செலவு செய்தாலும் கண்டுகொள்வதில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?’ என்று சமாதானம் செய்துகொள்ள முயற்சித்து, தோல்வி கண்டவள் அவள்.

அவர் கொடுக்கும் பணத்தால் அவள் விரும்பும் ஆடையணிகளையும், கைப்பைகளையும் வாங்க முடியும். அதனால் மட்டும் நிறைவு கிடைத்துவிடுமா?

`இன்னுமா உனக்குப் பேராசை?’ என்று கேட்டுவிட்டால்?

`நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்!’ என்று சொல்லிக்கொண்டவள், பிறரும் அப்படியே நினைக்கவேண்டும் என்பதுபோல் இருந்தது அவள் பேச்சும் நடத்தையும்.

தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டாள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பொறுக்க முடியாமல் போய்விட்டது. சமைக்கத் தோன்றவில்லை. தான் பெற்ற சிறு பிள்ளைகளை வேலை வாங்குவதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வாள்.

இப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க ஒரே வழி தம்பதிகள் மனம்விட்டுப் பேசுவதுதான். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல் சண்டையில் முடியலாம். ஆனாலும் வேறு வழியில்லை. இருவரில் ஒருவருக்கு மனத்தாங்கல் என்றாலும், அதை மற்றவரிடம் தெரிவித்தால்தானே மற்றவருக்குப் புரிய வைக்க முடியும்? நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறதோ, இல்லையோ, தனது குறையைச் சொல்லிக்கொள்பவருக்கு `முயற்சி செய்து பார்த்துவிட்டோம்,’ என்ற ஆறுதலாவது கிடைக்கும்.

பல தம்பதியர் ஒருவர்போலவே மற்றவரும் இருப்பதுதான் காதலின் அடையாளம் என்று எண்ணுகிறார்கள். மாறுகிறார்கள், அல்லது மாற்றுகிறார்கள். உண்மையில், அன்பைத் தகர்க்கும் வழி இது.

நொந்துவிட்டதுபோல் நயமாகப் பேசி (`நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’), அது பலிக்காவிட்டால் வசவுகளால், அல்லது வன்முறையால் தாம் நினைத்தபடி வாழ்க்கைத்துணையை நடக்க வைப்பார்கள் சிலர்.

கதை

கீதா இயல்பிலேயே கலகலப்பானவள். தந்தையின் பரிபூரணமான அன்பிற்குப் பாத்திரமாகி இருந்ததால், எல்லா ஆண்களுடனும் தயக்கமின்றி பழக முடிந்தது.

அவளுக்கு நேர் எதிரிடையானவன் முரளி. பாசமற்ற பெரிய குடும்பத்தில் வேண்டாத மகனாகப் பிறந்தவன். பிறருடன் பேசவே வெட்கம் தடுக்க, தயக்கப்பட்டவன்.

கீதாவின் கலகலப்பு அவனை அயரவைத்தது.

அவளுக்கு அவனது வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருந்தபோதும், தன்னால் அவனை மகிழ்விக்க முடியும், சமூகத்தில் பிறர் மதிக்கும் நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பினாள்.

கல்யாணமாகி ஓரிரு மாதங்களிலேயே புரிந்தது, முரளியால் மாற முடியாது என்று. ஏனெனில், அவளை அவன் மாற்ற முயன்றான். கீதாவின் குணம் புரிந்திருந்தும், பிற ஆண்களைப்பற்றிப் பேசினாலே சந்தேகம் வந்துவிடும். வார்த்தைகளாலேயே அவளை வதைத்தான்.

அவளோ, பிடிவாதமாக, `என்னால் அவரை மாற்றிக்காட்ட முடியும். என்னைப் பழையபடி சுதந்திரமாக இருக்க விடுவார்!’ என்று நம்பினாள். எல்லாவற்றையும் பொறுத்துப்போனாள். இதனால் அவளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க, உடல் உபாதைகள் ஏற்பட்டதுதான் கண்ட பலன்.

இம்மாதிரியான சில பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பிறர் பக்கபலம் அளிக்க, பழைய தன்மையைப் பெறுவார்கள் – அப்படி மாறுவது குடும்ப மகிழ்ச்சியை ஓரளவு குறைக்கும் என்பதை ஏற்று.

விட்டுக்கொடுப்பதால் யாருக்கு மகிழ்ச்சி?

தன் சுக துக்கங்களைவிட தனக்குத் தாலி கட்டிய கணவரின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், `விட்டுக்கொடுப்பதுதான் நல்ல மனைவிக்கு அடையாளம்!’ என்று நம்புகிறார்கள். அப்படியானால், ஒரு பெண்ணின் மன நிலை, இன்ப துன்பம் இதெல்லாம் மறைக்கப்பட வேண்டியனவா, இல்லை, முக்கியம் கிடையாதா?

கணவர் என் குழந்தை

`என் கணவருக்கு ஒவ்வொன்றையும் நான்தான் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். அவர் ஒரு சிறு குழந்தைபோல!’ என்று பெருமை பேசிக்கொள்ளும் பெண்களைப் பார்த்திருக்கிறேன்.

கணவர் எந்த விதத்திலாவது தன்னை நாட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தம் கணவருக்குச் சுயேச்சையாக எதையும் செய்துகொள்ளத் தெரியாதபடி ஆக்கிவிடுகிறார்கள். நாளடைவில் அம்மாதிரியான நடப்பே இரு தரப்பினருக்கும் எரிச்சலை மூட்டிவிடும்.

`நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்!’ என்று தம்பதியரில் ஒருவர் கேட்பது மற்றவருக்குப் பெருமையில்லை.

ஒருவர் சொன்னார், “நான் கல்யாணம் செய்துகொண்டால், மனைவி என் சட்டையில் பிய்ந்துபோன பித்தான்களை தைத்துத் தருவாள் என்று நம்பினேன்!” என்று.

அப்போது அவர் அக்காரியத்தைத் தானேதான் செய்துகொண்டிருந்தார்.

புரிந்தும், “என்ன ஆச்சு?” என்று நான் சிரித்தேன்.

“`நீங்களே தைத்துக்கொள்ளுங்கள்,’ என்றுவிட்டாள்!” ஏமாற்றத்துடன், பெருமூச்சு விட்டார்.

அவருக்கு அப்போது புரியவில்லை, தன்னைச் சுதந்திரமாக வாழப் பழக்குகிறாள் மனைவி என்று.

ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்வது என்றால் அது ஒருவரின் விருப்பத்திற்கு எல்லாம் மற்றவரும் செவிசாய்க்க வேண்டும் என்பதில்லை.

அதிகாரம் செலுத்துபவர் ஆரம்பத்தில் பெருமையாக உணரலாம். ஆனால், `என் மனைவி நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள்!’ என்று பெருமை பேசுகிறவர் சில வருடங்களுக்குப்பின் அவளுக்கு அடங்கிப்போவதுதான் நடக்கிறது.

தொடருவோம்

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க