மீனாட்சி பாலகணேஷ்.

நடுநின்ற படைமதனார்!

இறையருள் தான் ஒரு ஆணையும் பெண்ணையும் காதலில் கருத்தொருமித்துக் கூட்டி அதில் வரும் இடையூறுகளையும் நீக்கி, அவர்கள் இருவரையும் வாழ்வில் ஒன்றுபட்டு இன்புற அருளுகின்றது என்பது எழுதப்படாத ஒரு நியதி! மானிடக் காதலர் காதலில் இடையூறு வரும் போது தான் கடவுளைத் துணைக்கழைப்பர் ! தெய்வீகக் காதலரோ ஒருவரை ஒருவர் கண்ட தருணத்திலிருந்தே தெய்வ அருளே தம்மை ஒருவருக்கொருவர் காண்பித்தது எனக் கருதி, அவ்வருளே வரும் இடையூறுகளையும் களைந்து தம் இருவரையும் வாழ்க்கையில் கூட்டி வைக்கும் எனவும் உறுதியாக நம்புவர்.

தம்பிரான் தோழரான சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் உண்டான காதல் இத்தகைமைத்தே! ஆயினும் அது நிறைவேற ஒவ்வொரு கட்டத்திலும் சிவபிரானின் அருளும் உதவியும் தேவைப்பட்டது என்பது வெளிப்படையாக நாம் கண்பது.

இறைவனால் மீளா அடிமையாக்கிக் கொள்ளப்பட்ட சுந்தரர் அவன் ஆணைப்படி திருவாரூர் செல்கின்றார். ஆரூர்க் கோவிலை வந்தடைந்த சுந்தரரை அவ்வூர்ப் பெரியார்கள் வரவேற்று உபசரிக்கின்றனர்.

அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்து வரும் பரவை நாச்சியாரும் தம் தோழிமார் புடைசூழப் புற்றிடம் கொண்ட பெருமானான தியாகேசரின் தரிசனத்திற்காகக் கோவிலுக்குள் வருகின்றார்.

‘இருவரும் சந்திக்க வேண்டும் என்னும் ஊழ்வினையின் வலிமையால், சுந்தரர் பரவையாரைக் காண்கிறார்,’ என்கின்றார் பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான்.

புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடைய நம்பி
நற்பெரும்பான்மை கூட்ட நகை பொதிந்திலங்கு செவ்வாய்
விற்புரை நுதலின் வேல்கண் விளங்கிழை அவரைக் கண்டார்.

மகிழ்ச்சியால் புன்முறுவலுடன் விளங்கும் சிவந்த வாயையும் வில் போன்ற நெற்றியின் கீழ் வேல் போன்ற கண்களையும் உடையவரான பரவையாரைச் சுந்தரர் காண்கின்றார். காதல் வெள்ளம் உடனே கரைபுரண்டு ஓடியது! இவர் யார் என அதிசயித்தார்.

கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்.

கற்பக மரத்தின் மலர்க்கொம்புகளுடன் கூடிய கொம்போ! காமன் தனது பெருவாழ்வாகக் கொண்ட பொருளோ! அழகு எனும் பொருள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த புண்ணியமோ? அற்புதமோ எனவெல்லாம் அதிசயித்து ஒன்றும் விளங்காமையால், இது எதற்கும் இணையாகாத சிவபிரான் திருவருள் தானோ, அறியேனே என எண்ணினார் சுந்தரர். சிவனருளோ என்றதன் காரணம், இவர் சிவனுக்கே ஆளானவர்; ‘மீளா அடிமை,’ என்ற சாசனம் எழுதிக் கொடுத்தவர்; அவன் அருள் வழியிலே சென்று வாழ்கின்றவர்; ஆகவே இவ்வாறு பரவையாரைக் கண்ட அற்புதம் நிகழ்ந்தது அச்சிவனருளால் தான் என உறுதியாக நம்பினார்.

இங்கு ஒன்றை நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிலகாலம் முன்பே சுந்தரரை இறைவனார் அவருடைய திருமண நிகழ்வின் போது முதிய அந்தணராக வந்து அடிமைப் படுத்தித் தடுத்தாட் கொண்டார். பின்பு, அவரைத் திருவாரூருக்கு வரச் செய்து, அழகில் சிறந்து விளங்கும் பரவையாரை அவர்முன் தோன்றச் செய்து, காதல் வயப்படவும் வைத்தார். ஆகவே நாவலூர் வன்தொண்டருக்கு இவையெல்லாம் இறைவன் திருவருள் செயல்களாகவே தோன்றியதில் ஒரு வியப்புமில்லையே!

மேலும் காதல் வயப்பட்டுச் சிந்திக்கிறார் சுந்தரர். “நான்முகன் இத்தகைய அழகு மிகுந்த ஓவியம் ஒன்றினைத் தான் எழுத இயலாமையினால் உண்டான தனது வருத்தம் நிறைவு பெறும்படி தனது உள்ளத்தில் படைத்த மணிவிளக்கோ இவர்?” அழகான சொல்லாட்சி நிறைந்த பாடல்.

ஓவியநான் முகனெழுத ஒண்ணாமை உள்ளத்தால்
மேவியதன் வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ
மூவுலகின் பயனாகி முன்நின்றது எனநினைந்து
நாவலர்கா வலர்நின்றார் நடுநின்றார் படைமதனார்.

புற்றிடங் கொண்டாரை வணங்கிச் செல்பவரான சுந்தரர், ‘மூவுலகிலும் பெறக்கூடிய பயனே என்முன் இங்கு நின்றது எனத் தெளிந்து மேலே செல்லாது நின்றார். இங்ஙனம் நின்ற அவருக்கும் அவரால் காணப்பெற்ற எழில்மாது பரவையாருக்கும் இடையில் இன்னொருவரும் யாரும் காணாமல் நின்றாராம்!

அட! யாரவர்?வேறொருவரும் இல்லை!

யாராலும் காணவியலாத அனங்கனான மதனன் தான் தனது படைகளுடன்- மலரம்புகளுடனும், கரும்பு வில்லுடனும்- இருவருக்கும் இடையே நடுவில் புகுந்து அவரது தொழிலைச் செய்ய ஆயத்தமாக நின்றார் !! அவர் வைத்த குறி தப்புமா? அந்தச் சிவபிரானையும் தனது மலரம்பினால் வீழ்த்தியவர் தானே! தம்பிரான் தோழர் மட்டும் எம்மாத்திரம்?

பரவையாரின் கெண்டைமீன் கண்கள் நாவலூரரை, சுந்தரரைக் கண்ணுற்றன. இதுவும் பண்டு இறைவன் விதித்த விதி கூட்டியதால் நிகழ்ந்தது. பெண்மைக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களையும் விஞ்சி, அவற்றை அழித்து சுந்தரர் மாட்டு ஒரு பெரு விருப்பம் மனதில் எழுந்தது!

முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடைஅண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
என்னேஎன் மனந்திரித்த இவன்யாரோ எனநினைந்தார்.

“என் மனத்தை இதுகாறும் யாரும் கவரவில்லை! என் முன் பெரொளிப் பிழம்பெனத் தோன்றும் இவர் முருகப் பெருமானோ? தனக்கு ஒப்பில்லாத மன்மதனோ? மின்னல் போலும் செஞ்சடை கொண்ட அண்ணலான சிவபெருமானின் மெய்யருள் பெற்று விளங்குபவனோ? இவ்வாறு எனது மனத்தைத் திரியச் செய்த இவன் யார்?” எனப் பரவையார் எண்ணுவார். எண்ணிய வண்ணமே பரமனைச் சேவிக்கக் கோவிலுட் புகுந்தார்.

அவரைக் கண்டு சுந்தரர், “இவர் யார்?” என் அருகிலிருந்தோரிடம் வினவ, “தேவர்களும் அணுகுதற்கு அரியவரான பரவை எனும் பெயர் கொண்ட மங்கை நல்லாள் இவர்,” எனும் மொழி கேட்டார்; பரவையாரிட ம் கண்டதும் கொண்ட காதலினால் வருந்திய சுந்தரர், “பரமனார் பரவையைத் தருவார்,” என்றபடி அரவின் ஆரம் புனைந்த சிவபிரானின் அடிபணிந்து இருந்தார். இறைவன் தன் காதலியைக் கூட்டி வைப்பார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தான் அவரை வழிநடத்திச் சென்றது.

இறைவன் திருவருளே இம்மங்கையைக் காண்பித்தது ஆகையால் அத்திருவருள் எங்கே சென்றது எனக் கொஞ்ச நேரம் பரவை என்ற ஈசன் திருவருளினைத் தேடிக் களைத்தார் சுந்தரர். பின்பு தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கிருந்தார்.

இங்கு நாம் ‘இறையருள் இருவரையும் சுலபமாகக் கூட்டி வைத்து விடும் அல்லவோ’ என்று எண்ணலாம்; ஆயினும் மானிடராய்ப் பிறந்தோர், தேவரே ஆனாலும், மானிட வாழ்வின் நியதிகளுக்குக் கட்டுப் பட்டவர் ஆகின்றனர் அல்லவா? ஆகவே, இங்கு சுந்தரரும், பரவையாரும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்ட போதும், நாம் இதுவரை பார்த்த மற்றக் காதலரைப் போலவே, ஒருவரையொருவர் யாரென்று அறியாத நிலை; எங்ஙனம் சந்திப்பது என்ற குழப்பம். இவர்களுடைய துயரை நீட்டிப்பதற்கெனவே, மாலைப்பொழுது வந்து இரவென நீண்டு வளர்கின்றதாம்.

வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவ லூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர்பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.

இதனை வெகு அருமையாகச் சுட்டுகிறார் சேக்கிழார் பெருமான். சுந்தரர் பரவையாரின் காதல் நயத்தை ரசிக்கப் புகுந்த நாம் அக்காதலைப் பெருமைப்படுத்தும் புலவர் பெருமானின் கவிதை நயத்தினையும் அதன் உட்கருத்தையும் தான் சிறிது ரசிப்போமே!

நீர் நிலைகளில் பகற்பொழுதினைக் கழித்த பறவைகள் மாலையில் தம் இருப்பிடங்களை அடைந்தன. நாவலூரர் ஆகிய சுந்தரர் பரவை எனும் பாவை தனக்குத் தந்த காதலினால் எழும் துன்பமும் அதன் பொருட்டுத் தன் உயிரைப் பற்றிச் சூழ்ந்து கொண்ட தனிமையையும் உடையவரானார் என்கிறார்.

ஆவி சூழ்ந்த தனிமை என்பது மிக அருமையான ஒரு சொற் பிரயோகம். ‘என் ஆவி நல்குவர் ஆரூரை ஆள்பவர்’ என்று திடங்கொண்டுள்ளார் சுந்தரர். அதாவது ‘திருவாரூர் இறைவர் எனக்கு எனது உயிர் (ஆவி) போன்றவராகிய பரவையாரைத் தந்தருள்வார்,’ என்கிறார். இங்கு அவருக்கு உயிர் போன்ற பரவையார் அருகில் இல்லை; ஆனால் அப்பரவையார் தந்த காதலும் அதனால் வரும் துன்பம் நிறைந்த தனிமையும் மட்டுமே இருந்ததாம். ஆவியின்றி அது சூழ்ந்த தனிமை மட்டுமே இருந்ததால் இதனை ‘ஆவி சூழ்ந்த தனிமை’ எனக் குறிப்பிட்டார்.

பிரிந்து இருக்கும் காதலர் படும் துயரங்களை சுந்தரரும் அனுபவிக்கிறார்.

“எம் இறைவனின் நெற்றிக் கண்ணால் எரியுண்ட காமன் வெளிப்பட்டு என்முன் வந்து என்மேல் அம்பெய்வதும் அவ்விறைவனின் திருவுள்ளம் தானோ?” எனக் கூறி வருந்துவார்.

தண்மதியிடம் கேட்கிறார்: “என் துயரைக் கண்டாய்; உன் இயல்பிலேயே நின்று தண்மையான கதிர்களைப் பொழியாமல் அதற்கு மாறாக வெம்மை மிகுந்த கதிர்களை வீசுகிறாயே! உன்னையா எம்மிறைவர் அருளுடன் எடுத்துத் தம் சடைமுடி மேல் அணிந்து கொண்டார்? நீ அவன் போன்றில்லையே?” என்பார்.

“அலைகளை எடுத்தெறியும் திரைகடலே! எல்லாத் தேவர்களையும் அச்சுறுத்திய கொடிய நஞ்சினை நீ எம் தலைவனான இறைவனையே உண்ணுமாறு செய்து உன் அலைக்கரங்களால் அவரிடம் கொடுத்தாய்! உனது அக்கொடுமைக்கு முன் நான் எம்மாத்திரம்?” என்றும் புலம்புவார்.

“இனிய பொதியமலைத் தென்றலே! நீ எங்கள் பிரானுடைய மலையில் அல்லவோ தோன்றினாய்? நீ வந்த வழியோ நீர் நிலைகள் நிறைந்த சோழ நாடு அன்றோ? பின்பு ஏன் என்மீது தீக்காற்றாக வீசுகிறாய்?” எனவும் தவிப்பார்.

இவர் இவ்வாறு தவிக்க, பரவையாரும் இறைவனை வணங்கி அவ்வணக்கத்தின் பயனாக நல்ல கணவனைப் பெறும் குலமகள் போன்று, தம்மிடம் புதியதாகக் குடிகொண்ட காதலுடன் சென்று தனது மாளிகையினை அடைந்தார். சுந்தரரைப் பற்றியே எண்ணியிருந்தவர், தோழியரிடம், “இறைவனின் ஆலயத்தில் நம் எதிரே வந்தவர் யார்?” என வினவினார். அவர்கள் அவர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தம்பிரான் தோழரான ஆளுடை நம்பி எனக்கூறக் கேட்டார். காதலினால் தமது நிறையும் நாணும் ஒருசேர நீங்கிட, உயிரை மட்டும் தாங்கியவராகி, ஆற்றாமையால் துடித்தார்.

என்றவுரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம்
வன்றொண்டர் பால்வைத்த மனக்காதல் அளவின்றி வளர்ந்து பொங்க
நின்றநிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்கஉயிர் ஒன்றுந் தாங்கி..’

மெல்லிய பூம்படுக்கையில் வீழ்ந்து காதல் வருத்தத்தால் தவித்தார். பலவாறு புலம்பியும் வருந்தினார்.

“திருவாரூரில் உறையும் ஈசரே! உம்மையன்றி என் துயரை யாரறிவார்? கங்கையும், நிலவும், புள்ளிகளையுடைய பாம்பும் ஊர்வதற்கு இடமாகிய சடையை உடையவரே! காளை மீது எழுந்தருள்பவரே! உம்மீது அன்பில்லாதவர் (பக்தி இல்லாதவர்) போல் நான் இத்துன்பத்தை அடையலாகுமோ?” எனவும் கேட்டார்.

இவர்களுடைய பழைய கதையை நாம் சிறிது அறிந்து கொள்ள வேண்டும்.

கயிலயங்கிரியில் தனக்கும் உமையம்மைக்கும் தொண்டு செய்த ஆலால சுந்தரரையும், கமலினியையும் அந்த இறைவனே திருவுள்ளம் கொண்டு மண்ணுலகில் மானிடராய்ப் பிறக்கச் செய்தார். அவர்கள் கயிலையில் ஒரேயொரு கணம் ஒருவரையொருவர் விருப்புடன் நோக்கியதால், புவியில் பிறந்து, காதலின்பத்தை உணர்ந்து, நல் வாழ்வும் வாழ்ந்து வருவீர்கள் என அருளினார்.

ஒருவரை ஒருவர் கண்டு விரும்பியதும் கடிமணம் புரிந்து கொள்வதல்ல காதல். காதலின் சுவைகளான, பிரிவாற்றாமை, உடல் மெலிதல், இரங்குதல், ஊடல், கூடல் முதலிய எல்லாவற்றையும் அனுபவித்தும், இடையூறுகள் வரும்போது, அவற்றை எதிர் கொண்டு, தமது புத்தி சாதுரியத்தினாலும், இறையருளினாலும், கொண்ட காதலில் உறுதியாக நின்று, விரும்பிய துணையை அடையும் போதும் தான் காதலின் அருமை பெருமைகளும் உயர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றது. இத்தகைய காதலின்பத்தினைத் தம்பிரான் தோழரும் அனுபவித்திடத் திருவுள்ளம் பற்றினார் இறைவன். அதனால் தானோ என்னவோ, முதலில் மானுடரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தி, சுந்தரரை அடிமை கொண்டு தம் தோழராக்கிக் கொண்டார்.

பின்பு, பரவையாராகப் பிறந்திருந்த கமலினியாரைக் கண்டு காதல் கொள்ளவும் செய்தார். இவற்றை எல்லாம் நடத்தி விளையாடல் புரிந்தவர், பின்பு இவர்கள் இருவரும் திருமணம் என்ற பந்தத்தில் இணையவும் திருவுளம் கொண்டார். சுந்தரர் கனவில் தோன்றி, “பரவையை உனக்குத் தலைவியாய்த் தந்தோம்,” எனவும், பரவையார் கனவில்தோன்றி, “நம்பி ஆரூரனுக்கும் உனக்கும் விரைவில் திருமணம் நிகழ்விப்போம்,” என்றும் உறுதி கூறி, அவ்வண்ணமே, அடியார்கள் மூலம் திருமணத்தை நடத்தியும் வைத்தார்.

திருவாரூர் ஈசன் தனது தோழராய் வந்து இவ்வாறெல்லாம் அருள் செய்த திறத்தை வியந்து பாடி மகிழ்ந்துள்ளார் சுந்தரர்.

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழைஒண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.. என வாழ்த்துகின்றார்.

இறையருள் ஒன்றே துணை செய்து காதலின் பொன்வீதியில் இருவரை இணைத்து வைக்கும் என்பது மெய்யே அன்றோ?

************
படம் உதவி: www.vivekabharathi.in

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *