செல்வன்

இந்தவார வல்லமையாளர்: சுந்தர் ஐயர்

Screen Shot 2017-05-19 at 11.48.06 PM

ஜோக்கர் படத்தில் வரும் ஜாஸ்மினே, ஜாஸ்மினே எனும் பாடலை பாடிய சுந்தர் ஐயர் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார்.

இவரது சொந்த ஊர் தருமபுரி. மிக எளிய பின்புலத்தை சேர்ந்தவர். அரசு இசைப்பள்ளியில் இசை ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் மாதம் 7000 ரூ. சம்பளத்துக்கு வேலை செய்யும் இவர், அந்த சம்பளத்தில் தன் குடும்பத்தினரை காப்பாற்ற மிகச் சிரமப்பட்டு வருகிறார். வேலைநேரம் போக தெருக்கள், கோயில்களில் அமர்ந்து பாடுவது வழக்கம்

தருமபுரியில் ஒருமுறை ஜோக்கர் பட ஷூட்டிங் பார்க்கப்போனபோது யதேச்சையாக படத்தயாரிப்பாளரிடம் சில பாடல்களை பாடிக்காட்டினார்.  அதன்பின் தயாரிப்பாளர் இவரை சென்னைக்கு அழைத்து ஜோக்கர் படத்தில் வரும் ஜாஸ்மினே, ஜாஸ்மினே பாடலை பாட  வாய்ப்பளித்தார்.

சென்னைக்குச் செல்ல பேருந்து கட்டணம் கூட இல்லாமல் தன் மனைவியின் தோட்டை அடமானம் வைத்து சென்னை சென்ற சுந்தர் ஐயர், பாடலைப் பாடி ஐயாயிரம் ரூபாய் சன்மானம் பெற்றார். அதன்பின் தருமபுரி திரும்பி தன் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு தேசிய விருது கிடைத்த செய்தி வந்ததும் இனிய அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

டெல்லி சென்று தேசிய விருதைப் பெற்று வந்தாலும், இன்னமும் அடுத்தவேளை உணவுக்கு அரிசி வாங்க வழியில்லாமல்தான் இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவிக்கையில் “தெருப்பாடகனாக இருந்த எனக்கு ஒரே பாடலில் தேசிய விருது கிடைத்தது நம்ப முடியாத விசயம். ஆனாலும் இப்போதும் என்னிடம் அடுத்தவேளை அரிசி வாங்க காசு இல்லை. வசதியானவர்களுக்கு விருது கிடைத்தால் அது பெருமை, எளியவர்களுக்கு கிடைத்தால் அது வெறுமை” என கருத்து தெரிவித்தார்.

எளிய பின்புலத்தில் பிறந்து, முதல் பாடலில் தேசிய விருது பெற்ற சுந்தர் ஐயர் அவர்களின் இந்த வெற்றி வறுமையில் வாடும் எளிய கலைஞர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக கருதி அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து சிகரங்களை எட்ட வாழ்த்துகிறோம்.

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்தவார வல்லமையாளர்! (223)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *