Author: செல்வன்
-

வின்சன்ட் வான் கா
நியாண்டர் செல்வன்வறுமையில் எந்தத் தொழிலும் கைவராமல் தவிக்கும் இளைஞன், கெரியரில் என்ன செய்ய முடியும்?ஆயுள் முழுக்க அண்ணன் சம்பாத்தியத்தில் வாழ்ந்த ஒருவனால் என்ன சாதிக்க முடியும்?15 வயதில் முயன்று கைவிட்டதை 30 வயதில் எடுத்துச் செய்து, தொடர்தோல்விகளுக்குப் பின் உலகின் மிக உன்னதமான கலைஞனாக அத்துறையில் ஆக முடியுமா?முடியும் என நிரூபித்தார் வின்சன்ட் வான் கா…வின்சன்ட் வான் கா.. காலம் 19ஆம் நூற்றாண்டுஓவியம் கற்றுக்கொள்ளலாம் என ஒவியப் பள்ளியில் 15 வயதில் சேர்ந்தார். ஓவியம் சுத்தமாக வரவில்லை. அதன்பின் விற்பனையாளர், ஆசிரியர் என என்னென்னவோ வேலை பார்த்தார். பாதிரியார் ஆக முயன்றார். தன் அத்தை மகளை மணக்க முயன்றார். அப்போது அவர் எந்த வருமானமும் இல்லாமல் இருந்தார். அவரது அண்ணன்தான் அவருக்கு உணவளித்துக் காப்பாற்றி வந்தார். இத்தகையவருக்கு எப்படிப் பெண் கொடுப்பார்கள்?அதன்பின் மனம் வெறுத்து, ஒரு விலைமகளைக் காதலிக்க ஆரம்பித்தார். அவள் பகலில் இவருடன் வாழ்வாள். மாலையில் தொழிலுக்குப் போய்விடுவாள். அவளைத் தொழிலுக்குப் போகாமல் தடுக்கவும் இவருக்கு வருமானமில்லை. வீட்டில் விவரம் தெரிந்து கண்டபடி திட்டி, அவளை அடித்து விரட்டிவிட்டார்கள். அதன்பின் அவள் நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.27 வயதில் அனைத்தையும் இழந்து நின்றவருக்கு வீட்டில் “இனி மேலாவது எதாவது உருப்படியாகச் செய்” என்றார்கள். இவருக்கு ஏனோ திடீர் என 15 வயதில் ஓவியம் வரைந்த நினைவு வந்தது… “நான் ஓவியன் ஆகப் போகிறேன்” என்றார். எல்லாரும் சிரித்தார்கள். அண்ணன் மட்டும் “அவன் விருப்பப்படி பண்ணட்டும். நான் தானே பணம் கொடுக்கிறேன். உங்களுக்கு என்ன” எனச் சொல்லி அவரை ஓவியப் பள்ளியில் சேர்த்தார்.வயது முதிர்ந்த மாணவர், அங்கே இவர் மட்டுமே.. இவர் வரைந்த ஓவியங்களைப் பார்த்து அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். “10 வயது மாணவர்களுடன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து தான் நீ ஓவியம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனச் சொல்லி அவரைக் கீழ் வகுப்புக்கு அனுப்பினார்கள்27 வயது ஆண், 10 வயது சிறுவர்களுடன் உட்கார்ந்து ஓவியம் கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும்? ஆனால் வான் கா விடவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல… பல ஆண்டுகள். அத்தனை ஆண்டுகள் கழிந்தும் ஓவியப் பள்ளியில் அவரது திறமையை ஏற்றுக்கொள்ளவில்லை. “நீ வேறு தொழிலைக் கற்றுக்கொள். ஏன் இதில் வாழ்க்கையை வீணடிக்கிறாய்” எனக் கேட்டார்கள்.அதன்பின் கடற்கரையில் அமர்ந்து தானே ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார் வான் கா. தன்னந்தனியே பயிற்சி எடுக்கையில் ஓவியக் கலை பிடிபட்டது. அதன்பின் தன் 34ஆவது வயதில் பாரிசுக்குப் போனார். அங்கே தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்தார்.அதை எந்தக் கண்காட்சியும் வாங்க முன்வரவில்லை என்பதால் காபிக் கடை, மளிகைக் கடை மாதிரி இடங்களுக்குக் கொடுத்துக் காட்சிப்படுத்தினார். அண்ணன் தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அவரிடம் பணம் சுத்தமாக இல்லை. ரொட்டி, கருங்காப்பி, சிகரெட்… இவற்றை மட்டுமே மாதக் கணக்கில் உண்டார். சூடான உணவை உண்டே பல மாதங்கள் ஆகியிருந்தது.பற்கள் உதிர்ந்து, மனநிலை குன்றி, ஓவியம் வரைய மாடல்களுக்குக் கொடுக்கக் கூட காசு இல்லாத நிலையில் தன்னைத் தானே வரைந்தார். விவசாயிகள், அன்றாட வாழ்க்கையில் காணும் எளிய மக்களை வரைந்தார். இறுதியில் தன் 36ஆவது வயதில் கொடிய வறுமையில், துப்பாக்கியை எடுத்துச் சுட்டு, தற்கொலை செய்துகொண்டார்.அதன்பின் அவரது ஓவியங்கள் பலரது கண்ணில் பட்டு, அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். டாக்டர் ஒருவருக்கு, காது வலி சிகிச்சைக்குக் கொடுக்கப் பணம் இன்றி, ஒரு ஓவியத்தைக் கொடுத்து வைத்திருந்தார். அது ஐந்து கோடி டாலருக்கு விலை போனது. அவரது ஒவ்வோர் ஓவியமும் சுமாராக 10 கோடி டாலருக்கு விற்றது.இன்னும் இரு ஆண்டுகள் தாக்குப் பிடித்து இருந்திருந்தால், மிகப்பெரும் செல்வந்தராக ஆகியிருப்பார்.ஆனால் அனைத்திலும் தோல்வியுற்று, வாழ்நாளின் கடைநி நிமிடம் வரை அண்ணன் சம்பாத்தியத்தில் வாழும் நிலையை அடைந்திருந்தாலும் உலகின் மிக உன்னதமான ஓவியக் கலைஞனாக ஆகித்தான் தன் உயிரை விட்டார். தான் பாடுபட்டு அடைந்த வெற்றியைச் சுவைக்க இறுதியில் அவர் உயிருடன் இருக்கவில்லை.Photo courtesy: Wikipedia -

ஒரு யுக்தி
செல்வன்
2001ஆம் ஆண்டு.ஓக்லாந்து பேஸ்பால் அணி தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை ஏலம் எடுக்கக் காசு இல்லை. அணியின் முன்னணி விரர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.இந்தச் சூழலில் அணியின் மேலாளர் பில்லி பீன், பீட்டர் பிராண்டு எனும் யேல் பல்கலைக்கழக எகனாமிக்ஸ் வல்லுனரை சந்திக்கிறார். பீட்டர் பிராண்டு, அவரிடம் “பேஸ்பால் ஆட்டமே மிகத் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறது. நான் சொல்லும் கணிதவியல் மாடல்களை வைத்து வீரர்களை ஏலம் எடுத்தால் அணி வெற்றிபெறும்” என்கிறார்.அப்போது பேஸ்பால் நட்சத்திர மவுசை வைத்தே இயங்கி வந்தது…. ஹோம் ரன் எனப்படும் சிக்சருக்கு ஒப்பான அடிகளை அடிப்பவர்கள் பெரும் விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார்கள். பேட்டிங் சராசரி கூடுதலாக இருப்பவர்களும் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்கள். நட்சத்திரங்களைப் பார்க்கவும், ஹோம் ரன்களைப் பார்க்கவும் கூட்டம் கூடியது..“இந்த மாடலே தவறு. பேட்டிங் சராசரியை அவுட் ஆகாமல் இருப்பதன் மூலம் செயற்கையாகக் கூட்டமுடியும். ஹோம் ரன்களை அடிக்கணும் என எந்த அவசியமும் இல்லை. பந்தைத் தட்டிவிட்டுவிட்டு முதல் பேசுக்கு ஓடுவதில் வல்லவர்களை விலைக்கு வாங்கினால் போதும். அப்படி தட்டிவிட்டுவிட்டு ஓடினால் ரன்கள் வந்துகொண்டே இருக்கும்” என்ற பீட்டர் பிராண்ட், அந்த மாடலை வைத்துக் கணக்குகளைப் போட்டு, வீரர்கள் சிலரை ஏலம் எடுக்கச் சொன்னார்.அதில் வயதானவர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள், காயம்பட்டுச் சரியாக ஆடமுடியாமல் இருப்பவர்கள் எனப் பலர் இருந்தார்கள். நட்சத்திர வீரர்களை எல்லாம் ஏலம் எடுக்காமல் இவர்களை மிக மலிவான விலைக்கு ஓக்லாந்து அணி ஏலம் எடுக்கவும் அவர்கள் நகைப்புக்கும், பகடிக்கும் ஆளானார்கள். அணி நிர்வாகத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கருதினார்கள்.ஆனால் சீசன் துவங்கியதும் இந்த உத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. நட்சத்திர வீரர்கள் இல்லை, ஹோம் ரன்கள் இல்லை, ஆனால் ரன்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தன. தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வென்று உலக சாதனை படைக்கவும் விளையாட்டு உலகமே அதிர்ச்சி அடைந்து, பில்லிபீனைத் திருப்பிப் பார்த்தது. அந்த ஆண்டு, பட்டத்தையும் ஓக்லாந்து அணி வென்றது.உடனடியாக பில்லிபீனை வலுவான, பெரிய அணியின் முதலாளிகள் சூழ்ந்தார்கள். “எத்தனை தொகை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறோம். எங்கள் அணிக்கு வாருங்கள்” என்றார்கள். ஒரு அணி ஒன்றேகால் கோடி டாலரைக் கொடுக்க முன்வந்தது. அனைத்தையும் மறுத்து அடுத்த சீசனுக்கு தன் அணியின் சார்பிலேயே களம் இறங்கினார் பில்லிபீன்.2001ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியைப் பெற்றுத்தந்த விவிஎஸ் லட்சுமண் இந்த உத்தியைத் தான் கையாண்டார். அந்த 281 ரன்களில் ஒரே ஒரு சிக்சர் கூட இல்லை. “சிக்சருக்கும், பவுண்டரிக்கும் இருக்கும் வேறுபாடு 2 ரன்கள் தான். ஆனால் தூக்கி அடிக்காவிட்டால் அவுட் ஆகமாட்டோம்” என்றார் லட்சுமண்.அடித்து ஆடும் ஆவேச ஆட்டம் இல்லை, ரசிகர்களை வியக்க வைக்கும் ஷாட்டுகள் இல்லை… ஒன்று, இரண்டு, நாலு என மெதுவாக ரன்கள் ஏறின. மெதுவாக, நிலையான, திட்டமிட்ட ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது,.பீட்டர் பிராண்டும், பில்லிபீனும் கையாண்ட உத்தி, இன்று அனைத்து பேஸ்பால் அணிகளாலும் கையாளப்படுகிறது. அவர்கள் கிட்டத்தட்ட லெஜண்டுகளின் இடத்தை அடைந்துவிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து, Moneyball எனும் ஆங்கிலப் படம் வெளிவந்தது. பிராட் பிட், பில்லி பீன் வேடத்தில் நடித்தார்.வெற்றி சிக்சர்களாலும், ஹோம் ரன்களாலும், பெரிய சாதனைகளாலும் தீர்மானிக்கப்படுவதில்லை. நிதானமான, தொடர்ச்சியான, சிறுசிறு வெற்றிகள் மூலமே வெற்றி பெறுவோம். நாம் எப்படி ஜெயித்தோம் என்பதே அதன்பின் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். -

குவியம்
செல்வன்நல்ல தொழிலதிபர்கள் வாடிக்கையாளரின் தேவைகள் என்ன என அறிந்து அதை நிறைவேற்றுவார்கள்.ஆனால் மாபெரும் தலைவர்கள், வாடிக்கையாளருக்கு எது நல்லது எனத் தானே கண்டுபிடித்து அதை அவர்களுக்குக் கொடுப்பார்கள்.உலகின் முதல் காரை வடிவமைத்த ஹென்றி போர்டு இதைத்தான் சொன்னார்.“வாடிக்கையாளரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டிருந்தால் நல்ல குதிரைவண்டி வேண்டும் எனப் பதில் சொல்லியிருப்பார்கள்”அக்கால வாடிக்கையாளர்கள், காரைப் பார்த்ததே இல்லை. பின்னே கார் வேண்டும் என அவர்களுக்கு எப்படி தெரியும்?ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிர்வாகிகளிடம் அதைத்தான் சொன்னார், “நல்ல ஐடியாக்களை நிராகரித்தால் தான் ஆப்பிள் மேம்படும்” என.வாரன் பப்பட்டும் அதைத்தான் சொன்னார், “உங்களுக்குத் தோன்றும், சொல்லப்படும் அனைத்து நல்ல ஆலோசனைகளையும் நிராகரிக்கவும். உங்களிடம் ‘எஸ்’ எனும் வார்த்தையை வாங்குவதே மற்றவர்களுக்குப் பெரும்பாடாக இருக்கவேண்டும்” என.பல கம்பனிகளின் சிக்கலே இதுதான். நல்ல ஐடியாக்கள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொள்வார்கள்.“கொரொனா வந்தாச்சு. மாஸ்க் தயாரித்தால் நல்ல லாபம் வரும்”… உடனே தொடங்கு மாஸ்க் பேக்டரி.“ஆன்லைன் தான் இனி எதிர்காலம்… ஆரம்பி ஆன்லைன் பல்கலைக்கழகம் ஒன்னை..”இப்படி “நல்ல ஐடியாக்கள்” பலவற்றைக் கேட்டு, அனைத்தையும் செயல்படுத்தி, கடைசியில் ஏகப்பட்ட கடன், ஏகப்பட்ட தொழில்கள், எதிலும் ஒருங்கிணைப்பு இல்லை எனும் நிலையில் அனைத்தும் பறிபோகும்.சாம்சங் கம்பனி ஒரு கன்சல்டன்டை அழைத்தது.. “ஆப்பிளை விடச் சிறந்த போன்களை நாம் தயாரிக்கணும். எப்படி எனச் சொல்லுங்கள்..”அவர் ஆராய்ந்து பார்த்துவிட்டு சொன்னார்.. “உங்ககிட்ட ஐம்பதுக்கு மேல் மாடல் இருக்கு. அவர்களிடம் ஐபோன் ஒண்ணு மட்டுமே இருக்கு. இதில் எதை வைத்து அவர்களை முறியடிக்கப் போகிறீர்கள்?”ஐபோன் ஒன்றில் மட்டுமே ஆப்பிள் கவனம் செலுத்தியது. பல நல்ல ஐடியாக்களை நிராகரித்தார்கள். இன்று ஆப்பிளின் ஐபோன் டிவிசன் மட்டுமே மைக்ரோசாப்டை மிஞ்சிய லாபம் ஈட்டுகிறது.போஃகஸ்.. குவியம்.. கவனம் முழுவதும் ஒரே ஒரு சிறப்பான ஐடியாவில் இருப்பதும், மற்ற அனைத்து “நல்ல ஐடியாக்களையும்” நிராகரிப்பதும், செய்யும் அந்த ஒரே ஒரு விசயத்தைத் தன்னிகரற்ற சிறப்புடன் செய்வதுமே வெற்றிக்கான வழி.—
-

தேசத் துரோகியின் கதை
நியாண்டர் செல்வன்
“என்னடா சோதனைமயமான வாழ்க்கை இது, இத்தனை கடினமாக இருக்கிறது? இதில் இருந்து எப்படி மீண்டு வருவது?” என நினைக்கும் சூழல் வந்தால் அலெக்சாண்டர் சோல்சென்ஸ்டைனை (Aleksandr Solzhenitsyn) நினைத்துக்கொள்ளவும்.
அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்:
ஹிட்லர் ஆட்சியில் துன்புறுதல்
ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து போரிடுதல்
அதன்பின் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு எட்டாண்டுகள் உலகின் மிகக் கொடிய சிறைவாசம்
நிர்ப்பந்த விவாகரத்து..மனைவியை பிரிந்து 15 ஆண்டுகள்
அதன்பின் உள்நாட்டுத் தனிமைச் சிறையில் அடைபடுதல்
அதன்பின் கான்சர்
சொந்த நாட்டை விட்டுக் குடியுரிமை பறிக்கப்பட்டு, துரத்தி அடிக்கப்படுதல்……”
இத்தனையும் ஒரு மனிதனுக்கு நிகழ்ந்தால் அவன் அதன்பின் என்ன ஆவான்?
—
அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன் ஓர் எளிய ரஷ்ய வீரர். அவரது நாட்டை ஹிட்லர் படையெடுத்துப் பிடிக்க, ரஷ்ய ராணூவத்தில் சேர்ந்து வீரப் போர் புரிந்தார் அலெக்சாந்தர். இருமுறை விருது பெற்றார்.
அவரது துரதிர்ஷ்டம்… போர் சமயம் ஸ்டாலினை விமர்சித்து அவர் எழுதி வைத்திருந்த சில குறிப்புகள் ராணுவ அதிகாரிகள் கையில் கிடைக்க, தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உலகப் போரில் ஜெர்மனி தோற்றதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் சிறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
தேசத் துரோகிகளுக்கு 10 ஆண்டுகள் குலாக் எனப்படும் வதைமுகாமில் தண்டனை கிடைக்கும். போருக்கு முன் அவர் மணந்த மனைவியை நாட்டுக்காக, திருமணம் ஆன ஒரே ஆண்டில் பிரிந்து போருக்குச் சென்றார் அலெக்சாந்தர். ஆனால் தேசத் துரோகி ஆகிவிட்டதால் அவர் மனைவியின் ரேசன் கார்டு ரத்தாகும் நிலை வர, இருவரும் வேறு வழியின்றி விவாகரத்து பெற்றனர்.
அதன்பின் குலாகில் 10 ஆண்டுகள் கடுமையான சித்திரவதை அனுபவித்தார். அதன்பின் விடுதலை பெற்றாலும் அவரை அவர் பிறந்த பகுதியை விட்டு, கசாகஸ்தானுக்கு நாடு கடத்தினார்கள். அங்கே அவருக்குக் கேன்சரும் வந்தது.
இதுதான் அவரது வாழ்வின் மிகச் சோதனையான கட்டம். இங்கிருந்து தான் அவர் மீண்டெழுந்தார்.
தன் சிறை அனுபவங்களை வைத்து ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி, ஒரு நாவல் எழுதினார் (One Day in the Life of Ivan Denisovich). கடும் பத்திரிக்கை தணிக்கை இருந்த ரஷ்யாவில் அதை எப்படி வெளியிட முடியும்? ஆனால் ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. ஸ்டாலின் இறந்து குருசேவ் அதிபரானார். குலாக் முறையைக் கடுமையாகச் சாடி வந்த குருசேவ் அரசின் தணிக்கைத் துறையிடம் இந்த நூல் அனுமதிக்குப் போனது.
“நூல் எழுதியதற்குத் தன்னைக் கைது செய்ய மீன்டும் போலிஸ் வரும்” என நினைத்திருந்த அலெக்சாந்தர் சோல்சென்டைன் வீட்டுக்கு நூலை வெளியிட அனுமதி அளித்துக் கடிதம் வந்தது.
நூல் வெளியானது… இரும்புத் திரை நாட்டிலிருந்து அரசை விமர்சித்து இப்படி ஒரு நூலா என உலகமே ஸ்தம்பித்தது.. ஒட்டுமொத்த உலகிலும் ரஷ்யாவில் பாலாறும், தேனாறும் ஓடுவதாக ஒரு பிம்பம் கட்டமைக்கபட்டிருந்த 1960களில் இப்படி ஒரு நூல் ரஷ்யாவிலிருந்தே வெளியானது உலகையே வியப்பில் ஆழ்த்தியது…ஆனால் அதற்குள் குருசேவ் இறக்க, சோல்சென்ஸ்டைனுக்கு வேறு எந்த நூலை எழுதவும் அனுமதி கிடைக்கவில்லை. அவரை போலிஸ் கைது செய்ய முனைகையில் அந்தச் செய்தி வந்தது… அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது என…
அதன்பின் அவரைக் கைது செய்யும் முயற்சியை சோவியத் அரசு கைவிட்டது. ஆனால் வீட்டுக் காவலில் அதிபயங்கரமான ஒரு நூலை அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு தாளாக எழுதி, தன் மகள் மூலம் நூலை ரகசியமாக ஒவ்வொரு தாளாக வெளியே கொண்டு போனார்.
அதில் இருந்தது, குலாகுகளின் விவரம், அதில் அடைபட்டுக் கிடந்த 256 கைதிகளின் பேட்டி, அங்கே நடந்த கொடுமைகள், ரஷ்ய மக்களின் வாழ்க்கை விவரம் ஆகியவையே.
எஸ்தோனியாவில் இருந்து இலக்கிய ஆர்வலர்கள் மூலம் நூல் பாரிசுக்குச் சென்றது. நூல் பதிப்பும் ஆனது. சோவியத் அரசுக்குப் பேரதிர்ச்சி… தன் உயிரே போனாலும் பரவாயில்லை எனக் கடும் வீட்டுக் காவலில் இருந்து அந்த நூலை எழுதினார் அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன்.
The gulag archipelago என அழைக்கப்படும் அந்த நூல் வெளியாகி, உலகெங்கும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது. அவரை என்ன செய்வது எனக் குழம்பிய சோவியத் அரசு, அதன்பின் அவரது குடியுரிமையைப் பறித்து நாடு கடத்திவிட்டது.
1974இல் நாடு கடத்தப்பட்ட அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன், அதன்பின் 1994இல் சோவியத் அரசு வீழ்ந்த பின்னர்தான் ரஷ்யா திரும்பினார். அவரது குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டது மாத்திரமின்றி அவர் ரஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளராக அறிவிக்கப்பட்டு, ரஷ்ய மாணவர்களுக்கு அவரது நூல் பாடப் புத்தமாக வைக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு அவர் ரஷ்யாவில் இறந்தபோது, ரஷ்ய அதிபர் மெட்வடேவ் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
முதல் பத்தியை இப்போது மீண்டும் படிக்கவும்.
Photo courtesy: Wikipedia
-

பணம் என்பது காகிதத்தாள் தான்!
நியாண்டர் செல்வன்
கேரளாவில், முத்தூட் பைனான்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்துக்கு ஒரு ரிப்பேர் வேலை பார்க்க ஒரு எஞ்சினியர் செல்கிறார்.
அந்தச் சமயம் அந்த வங்கியில் ஐந்து கொள்ளையர், துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.
இவர் அவர்களை எதிர்த்துப் போராட-> டிஷ்யூம்….வீர மரணம்.
“அவர் ஒரு வீரர்” எனப் போலிஸ் கமிசனர் பாராட்டுகிறார்..
இதில் வீரம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.
வீரம் என்பது வள்ளுவர் சொன்னதுபோல் “வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும்” எண்ணிச் செய்ய வேண்டிய செயல்.
நாம் என்ன காரியம் செய்யவிருக்கிறோம்? அதைச் செய்து முடிக்கவேண்டிய வலிமை என்ன? எதிரியின் வலிமை என்ன? நமக்குத் துணையாக வருபவர் வலிமை என்ன?-> இதைக் கணக்கிட்டுச் செயல்பட வேண்டும்.
துப்பாக்கியுடன் ஐந்து பேர். எதிரே ஒருவர்… வந்தவர் நோக்கம் பணத்தைக் கொள்ளை அடிப்பது… ஆட்களை கொல்வது இல்லை.
அதிலும் அது இவர் பணமும் இல்லை, நிதி நிறுவனப் பணம். பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம். உயிர் போனால் என்ன செய்ய முடியும்?
புகழ்மாலைகளைச் சூட்டிவிட்டு போலிஸ் கலைந்துவிடும், நிதி நிறுவனம், இன்சூரன்சு சில லட்சங்களைக் கொடுக்கலாம். அதன்பின் இவரது குடும்பம், தாய், மனைவி, பிள்ளைகள்… வாழ்நாள் முழுக்க இவரை இழந்து வருந்துவார்கள். எத்தனை பணமும், புகழும் அதை ஈடு கட்டாது.
ஒரு பத்து நிமிடம் ஹேன்ட்ஸாப் பொசிசனில் இருந்திருந்தால், இன்று இவர் உயிருடன் இருந்திருப்பார்.
உயிரைப் பொருட்படுத்தாமல் போரிட வேண்டிய சமயங்கள் உண்டு. இன்னொரு உயிரைக் காப்பாற்ற அப்படிப் போரிடலாம்.
நிதி நிறுவனத்தின் பணத்தைக் காப்பாற்ற தன் உயிரை இழக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
உங்கள் போர்க்களங்களை நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நினைத்தபோது விட, உயிர் மலிவான பொருள் இல்லை.
பணம் என்பது காகிதத்தாள் தான்……
-

சாதித்துக் காட்டிய சாரா ப்ளேக்லி (Sara Blakeley)
நியாண்டர் செல்வன்12ஆவது முடித்தபின் சட்டப் படிப்பில் சேரலாம் என நினைத்தேன். மதிப்பெண் குறைவாக இருந்தது. அதனால் டிஸ்னிலாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் வேலையில் சேர்ந்தேன். ஸ்டாண்ட் அப் காமடியை முயன்றேன். அதன்பின் பேக்ஸ் மெசின் விற்கும் கம்பனியில் சேர்ந்து கடை, கடையாக ஏறி பேக்ஸ் மெஷின் விற்றேன். அது நிலையான வேலை இல்லை. விற்பனையைப் பொறுத்துத் தான் வருமானம்.
பெண் என்பதால் விரைவில் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிடுவேன் எனத்தான் வீட்டில் நினைத்தார்கள். காதலனும் விரைவில் திருமணம் செய்யலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில் ஒரு நாள் பார்ட்டி ஒன்றுக்கு சீ த்ரூ வெள்ளை ஸ்கர்ட் அணிந்து போக வேண்டும். அதற்கு டைட்டான கருப்பு உள்ளாடை அணிந்து போனால் பின்புறம் எடுப்பாகத் தெரியும் என நினைத்தேன். சந்தையில் அப்படி எந்தப் பொருளும் இல்லை. நாமே தைத்தால் என்ன என யோசித்து பார்ட்டிக்குக் கூட போகாமல் உட்கார்ந்து தைத்தேன். நல்ல எடுப்பாக இருந்ததாக எல்லாரும் சொன்னார்கள்.
இந்த உள்ளாடையைச் சந்தைக்கு கொண்டுவந்தால் என்ன எனத் தோன்றியது. ஆனால் கையில் பணம் இல்லை. தொடர்புகள் இல்லை. நான் ஒரு சாதாரண பேக்ஸ் மெசின் விற்பனைப் பிரதிநிதிதான். பொருளை உற்பத்தி செய்யக்கூட ஒரு பாக்டரி அவசியம். கையில் விதவிதமான சாம்பிள்கள் இல்லாமல் எப்படி துணிக்கடைகளை அணுக முடியும்?
வார இறுதி நாட்களில் துணி உற்பத்தி செய்யும் மில்களுக்குப் படையெடுத்தேன். என் ஐடியாவை உட்கார்ந்து கேட்கக்கூட யாரும் முன்வரவில்லை. அதன்பின் அந்த ஸ்பின்னிங் மில் முதலாளிகள், உணவு இடைவேளையில் வெளிவரும் நேரம், ஆபிஸில் காரில் ஏறும் நேரம் எனப் பார்த்துப் பிடித்து என் ஐடியாவை விளக்க நேரம் கேட்டேன். பத்து நொடிகள்தான் கிடைக்கும். அந்த 10 நொடிகளுக்குள் அவர்களைச் சிரிக்கவைத்தால் இன்னும் 10 நொடி கூடுதலாகக் கிடைக்கும். ஐடியாவை கேட்ட அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். “இதெல்லாம் மிக எளிமையான உள்ளாடை. விற்காது. விற்றாலும் யார் வேண்டுமானாலும் காப்பியடித்து எளிதில் போட்டிக்கு வந்துவிடுவார்கள்” என்றார்கள். அவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்களுக்கு இம்மாதிரி உருவத் தோற்றத்தை மேம்படுத்தும் பொருள்கள் எத்தனை முக்கியம் என அவர்களுக்குத் தெரியவில்லை.
பல மாதங்கள் முயன்றபின் ஒரு மில் முதலாளியைச் சந்தித்தேன். அவருடன் 1 நிமிடம் மட்டுமே பேசினேன். முதலாளி ஐடியாவைக் கேட்டுவிட்டு, முடியாது என்றார். விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். காரில் ஏறுகையில் அழுகையாக வந்தது…. அப்போது அவர் பின்னால் வந்தார். “எனக்கு மூன்று பெண்கள். உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. உனக்கு சாம்பிள்கள் தயாரித்துக் கொடுக்கிறேன். அதன்பின் உன் அதிர்ஷ்டம்” என்றார்.
அதன்பின் கையில் இருந்த $750 போட்டு சின்னதாக கம்பனி ஒன்றைப் பதிவு செய்தேன். ஸ்பான்க்ஸ் எனும் பிரண்டு பெயரையும் பதிவு செய்தேன். துணிக்கடை ஒன்றில் சாம்பிள்களைக் காட்டிச் சின்னதாக ஆர்டர் ஒன்றை வாங்கினேன். அது மிகப்பெரும் செயின். உள்ளூரில் உள்ள ஒரு கடையில் இதை விற்க முன்வந்தார்கள். பொருளைக் கொடுத்ததுடன் கடமை முடிந்தது என இருக்காமல் கடைக்குப் போய் அங்கே வரும் வாடிக்கையாளரிடம் என் பொருளை நானே டெமாண்ஸ்ட்ரேட் செய்து விற்றேன்.
கொஞ்சம், கொஞ்சமாக விற்பனை சூடு பிடித்தது. அதன்பின் என் வேலையை விட்டுவிட்டு, துணிக்கடையில் தவமிருந்து பொருளை விற்றேன். விற்பனை சூடுபிடிக்க, பிற கிளைகளில் விற்க முன்வந்தார்கள். அங்கெல்லாம் சென்று பொருளை நானே கடையில் நின்று விற்றேன். முதலாண்டு $4 மில்லியன் அளவுக்கு விற்பனை.
அதுவரை வீட்டில் நான் இதை எல்லாம் செய்ததே யாருக்கும் தெரியாது. நண்பர்களுக்குத் தெரியாது. காதலனுக்குத் தெரியாது. சொல்லியிருந்தால் “எதுக்கு வெட்டி வேலை? இருக்கும் வேலையைப் பார். கல்யாணம் செய்துகொள், இது எல்லாம் உருப்படாது” எனத்தான் சொல்லியிருப்பார்கள்.
ஆனால் முதலாண்டில் $4 மில்லியன் விற்பனையைச் சாதித்தபின் வீட்டில் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தாலும், அதன்பின் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு உதவ முன்வந்தார்கள். கையில் இருக்கும் பணத்தைப் புரட்டிக் கொடுத்தார்கள். காதலன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரம் என் கம்பனியில் பணியாற்றினார். இரண்டாமாண்டு $10 மில்லியன் விற்பனை. பிராண்டு வளர்ந்தது. விளம்பரம் செய்தோம். பல கடைகளை அணுகினோம். ஏழாம் ஆண்டில் என் 30ஆவது வயதில் என் முதல் பில்லியன் டாலரைச் சம்பாதித்தேன்.
போர்ப்ஸ் பத்திரிகை, என்னை உலகின் 93ஆவது வலிமை வாய்ந்த பெண்ணாகத் தேர்ந்தெடுத்தது. இன்று என் கம்பனி, விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. எனக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
டிஸ்னிலாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் பணியில் இருந்த, பள்ளி இறுதியை மட்டுமே தொட்ட ஒரு பெண்ணால் 30 வயதில் பில்லியனர் ஆக முடிகிறது என்றால் உங்களால் ஏன் நீங்கள் விரும்பும் உயரத்தைத் தொட முடியாது?
-
இந்த வார வல்லமையாளர் (270)
இவ்வார வல்லமையாளராக அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
டொனால்ட் டிரம்ப் வடகொரியாவில் அமைதியை ஏற்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்படலாம் என ஊடகங்களில் கூறப்படுகிறது. அத்துடன் வடகொரியாவில் மாட்டியிருந்த மூன்று அமெரிக்கர்களையும் விடுதலை செய்து அனைவராலும் பாராட்டுபெற்றார். இவரது உலக அமைதிக்கான முயற்சிகளுக்காக இவரை வாழ்த்தி, இவ்விருதை வல்லமை வழங்குகிறது
அமெரிக்காவின் மிகபெரிய பணக்காரர்களில் ஒருவர் டொனால்ட் டிரம்ப். ஆனால் ஏழை எளிய மக்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தார். குறிப்பாக மிச்சிகன், விஸ்கான்ஸின், பென்சில்வேனியா, வடவர்ஜினியா, கென்டக்கி
போன்ற உற்பத்திதொழில் சார்ந்த மாநிலங்களில் ப்ளூகாலர் எனும் உழைக்கும் வர்க்கத்தின் பேராதரவே இவரை “சுதந்திர உலகின் தலைவர்” என அழைக்கபடும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்த்தியது.ஒரு பணக்காரரை போல இவர் சிந்திக்காமல் ஒரு அமெரிக்க குடிமகனாக சிந்தித்தார். அமெரிக்க தொழிற்சாலை வேலைகள் வேறுநாடுகளுக்கு செல்வதை கண்டித்தார். சுதந்திர பொருளாதாரம் எனும் பெயரால் நடக்கும் மோசடி வேலைகளை எதிர்த்தார். நிலக்கரி சுரங்க தொழிலாளருக்காக குரல் கொடுத்தார். ப்ரைமரியில் இவரை எதிர்த்த 16 ரிபப்ளிக்கன்களும் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் பெருச்சாளிகள். கோடி, கோடியாக பணம் வைத்திருந்தவர்கள். அனைவரையும் அனாசயமாக ஊதித்தள்ளி ஜெயித்தார். அதன்பின் இலரி க்ளின்டன் அம்மையாரை பொதுத்தேர்தலில் சந்தித்தார்.
இலரி முதல் பெண் வேட்பாளர் என்பதாலும், அவரது அரசியல் அனுபவத்தாலும், பில் க்ளின்டனின் மனைவி, முன்னாள் முதல் பெண்மணி, முன்னாள் செக்ரடரி ஆஃப் ஸ்டேட் (வெளியுறவுத்துறை அமைச்சர்) என்பதாலும் எளிதில் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கபட்டது. ஓபாமா, ஆலிவுட் நடிகர்கள், வாரன் பப்பட், பில்கேட்ஸ் போன்ற கோடீசுவரர்கள், கூகிள், பேஸ்புக் போன்ற பெரும் கம்பனிகள், நடிகர்கள், ஊடகங்கள் என அதிகாரவர்க்கம் முழுக்க இலரி க்ளின்டன் பக்கம் நின்றது. ஆயிரம் பேய்களை ஒற்றை வேப்பிலையால் அடித்து விரட்டும் மாரியம்மன் கோயில் பூசாரி போல ட்விட்டர் எனும் ஒற்றை ஆயுதம் கொண்டு அனைவரையும் வீழ்த்தி, மாபெரும் மக்கள் ஆதரவை பெற்று ஆட்சியை பிடித்தார் வெற்றித்திருமகன் டொனால்ட் டிரம்ப்.

ஆட்சியை பிடித்தபின் மக்கள் நலனே முக்கியம் என கருதி இவர் நடத்திய நல்லாட்சியின் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவில் குறைந்து, வரிகள் குறைந்து, தொழில் செய்ய இருக்கும் கட்டுப்பாடுகள் குறைந்து பெண்கள், சிறுபான்மையினர் நலன் மேம்பட்டு நாடு வளமாக இருந்து வருகிறது.
இவரை போல ஆட்சிபொறுப்புக்கு வந்து உலக அமைதிக்கு பாடுபட இளைஞர்களுக்கு இவ்விருது ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது
வல்லமையாளர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-
இந்த வார வல்லமையாளர் (269)
இவ்வார வல்லமையாளராக அ.முத்துலிங்கம் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்
1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
(நன்றி: விக்கிபிடியா)
பரிந்துரை செய்த பேராசியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-
இந்த வார வல்லமையாளர் (268)
இந்த வார வல்லமையாளர்!
இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மொழியியல் மற்றும் பறவைகள் ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவரது கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை வல்லமை வாசகர்களிடம் பெற்றுள்ளன.
இவரை வாழ்த்திய முனைவர் ராஜம் “இவருடைய கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் …
‘சங்கப்பாடல்களில் பறவைகள்’ என்று வெறும் விவரிப்புக் கட்டுரையாக (descriptive essay) எழுதாமல் … அந்தப் பாடல்களில் காணும் செய்திகளுக்கும் பறவையியலில் கூறப்படும் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி எழுதுவது.
இவருடைய கட்டுரைகளை ஊன்றிப்படித்தால் சங்கப்பாடல்களில் வலம்வரும் பறவைகளைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.” என குறிப்பிடுகிறார்
சங்க இலக்கியத்தில் சிட்டுக்குருவி பற்றி இவர் கூறும் கட்டுரை மிக சிறப்பானது
“————————————பாரி பறம்பின்
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலை படர்தந்தாங்கு” (ஒளவையார், அகநானூறு: 303: 10௧5)இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.
மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.
இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, ப்,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.
திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, ப், 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted or the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா) என்று கொள்ள வேண்டுமென்கிறார்.
சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374, புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும் குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.” என்கிறார்
அறிவியலையும், இலக்கியத்தையும் ஒருங்கிணைத்து எழுதும் வல்லமையாளார் சற்குணா பாக்கியராஜ் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.இவரை விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் ராஜம் அவர்களுக்கு நம் நன்றிகள்
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-
இந்த வார வல்லமையாளர் (267)
இவ்வார வல்லமையாளராக நாட்டுப்புற பாடல் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது
இன்று ஜனாதிபதி கையால் பத்மஸ்ரீ விருது பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் அம்மா விஜயலட்சுமி அவர்கள்
விஜயலட்சுமி பிறந்த ஊர் இராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டி ஆகும். தந்தை பொன்னுசாமி, தாய் மூக்கம்மாள்; எம்.ஏ. முனைவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புற கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தார். இவரது கணவர் முனைவர் நவநீதகிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியர்.

மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய இராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சூழ்நிலை பாரதம்’ என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘பச்சைக்கோயில்’ என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார். கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், நிகழ்த்துக் கலைகள், பாடல்கள், பழைமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாச்சாரங்கள், ஆகியவற்றை உற்றுநோக்கி 5000 ஒலி நாடாக்களும், 300 காணொளி நாடாக்களும் பதிவு செய்து பாதுகாத்து வருகிறார்.
தமிழ் நாட்டுப்புறகலைகளுக்கு அளிக்கபட்ட சிறப்பாக வல்லமை இவரது விருதை கருதுகிறது. இவரை போல நம் மக்களின் கலைகளை பாதுகாப்பதில் அனைவரும் ஊக்கமுடம் செயல்பட வல்லமை விரும்புகிறது
வல்லமையாளர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.
Thanks:
Tamil wikipedia
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-
இந்த வார வல்லமையாளர் (266)
இந்த வார வல்லமையாளராக சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்
போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வீட்டிற்கே நேரில் சென்று போலீஸார் மன்னிப்பு கேட்டு சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை போரூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேரை மடக்கிய போரூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாபு என்பவர் அவர்கள் செய்த ஒரு தவறுக்காக சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததால் இளைஞர்கள் அவமானத்தால் குறுகி நின்றனர்.
நட்டநடு சாலையில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் காவலர் ஒருவர் இளைஞர்களைத் தாக்கும் சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துப் பகிர்ந்தார்.
இந்த வீடியோ பதிவு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார்.
விசாரணையில் காவலர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று அந்தக் காவலரை மன்னிப்பு கேட்க ஆணையர் உத்தரவிட்டார்.
ஆணையரின் உத்தரவை அடுத்து ராமாபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் காவலர் பாபுவுடன் சென்றனர். மொத்தமாக போலீஸார் வந்ததைப் பார்த்த பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் அவர்களிடம் பேச்சுகொடுத்த துணை ஆணையரும், உதவி ஆணையரும் ‘பயப்படாதீர்கள், அன்று நடந்த சம்பவத்தில் எங்கள் காவலர் தவறிழைத்துள்ளார். பாதிக்கப்பட்ட தம்பிகளைப் பார்த்து தனது வருத்தத்தைக் கூறி மன்னிப்பு கேட்க வந்துள்ளார்’ என்று கூறியுள்ளனர்.
ஒரு கணம் தங்களை மறந்த பெற்றோர் ‘பரவாயில்லை சார்’ என்று கூறியுள்ளனர். இல்லை. சம்பந்தப்பட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க, கமிஷனர் உத்தரவு என்று அதிகாரிகள் கூறி 3 இளைஞர்களையும் அழைத்து வருமாறு கூறினர்.
பின்னர் அழைத்து வரப்பட்ட இளைஞர்களிடம், அதிகாரிகள் முன்னிலையில் காவலர் பாபு மன்னிப்பு கேட்டு, ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூற நெகிழ்ந்து போன அந்த இளைஞர்கள் சார் நாங்கள் அதை அன்றே மறந்துவிட்டோம். எங்களுக்கு ஒரு அண்ணன் இருந்து கண்டித்தது போல் எடுத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளனர்.
ஆனாலும் காவலர் பாபு, ‘நான் செய்தது தவறுதான், அவர்களை அடித்திருக்கக் கூடாது’ என்று கூற, ‘நாங்கள் தான் சார் தவறு செய்துவிட்டோம் என்று இளைஞர்கள் கூற நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை பார்த்த அக்கம் பக்கத்தினரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.
இளைஞர்களுக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் புத்தகமும், இனிப்புகளும் அளித்த துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் அறிவுரை வழங்கினார். பின்னர், காவலர் பாபுவிற்கு அந்த இடத்திலேயே உதவி ஆணையர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.
காவலரால் தாக்கப்பட்ட இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படும், அவர்கள் போலீஸாரை விரோதியாகவே பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து போலீஸாருக்கும் பாடமாக, அதே சமயத்தில் இளைஞர்களும் அவர்கள் தவறை உணரும் வண்ணம் அவர்கள் வீட்டிற்கே போலீஸ் உயரதிகாரிகள் சென்று வருத்தம் தெரிவித்தது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.
இந்த நல்ல மாற்றம் நாடெங்கும் தொடர கமிஷனர் விஸ்வநாதன் அவர்களின் முன்னுதாரணம் உதவும் எனும் நோக்கில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-
இந்த வார வல்லமையாளர் (265)
இவ்வார வல்லமையாளராக தென்னிந்திய திரைத்துறை மையம் அமைப்பை தேர்ந்தெடுக்கிறோம்.
இந்த அமைப்பு புதியதாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் பெண்களால் துவக்கபட்ட அமைப்பாகும். சென்னையில் சமீபத்தில் இயங்க துவங்கியுள்ள இந்த நிறுவனம் திரைத்துறை பெண்களுக்கு குரல் கொடுத்து செய்திகளில் இடம் பிடித்தது. இதன் தலைவி வைஷாலி சுப்பிரமணியன்
பெண்கள் பாலியல் ரீதியாக பணியிடங்களில் துன்புறுத்தப்படும் விகிதம் மிக அதிகம் எனில் திரைத்துறையில் இது மிக அதிகம் எனும் குற்ற்சாட்டு உண்டு. செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடிப்பை விட்டுவிட்டு ஓடிய நடிகையர் ஏராளம். அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அமைப்பாக இது உருவெடுத்துள்ளதாக வைஷாலி கூறுகிறார்
நடிகையர் என மட்டும் இன்றி சினிமாவில் நடிக்கும் துணைநடிகையர், பூக்களை கட்டி சினிமா கம்பனிக்கு விற்கும் பாட்டி, சினிமா கம்பனியில் பாத்திரம் கழுவும் பெண்கள் என அனைத்து மட்ட பெண்களுக்கும் குரல் கொடுக்கவும், நியாயமான ஊதியம் வழங்க கோரியும் போராட இருப்பதாக கூறுகின்றனர் இவர்கள்.
பல படப்பிடிப்பு மையங்களில் நடிகையருக்கு போதுமான கழிப்பிடம், பாதுகாப்பு ஆகியவையே இல்லை என்றும் இரவு நேர ஷூட்டிங் முடிந்து பாதுகாப்பாக திரும்புவதே கடினம் என்றும் சினிமா படம் எடுக்கையில் உடல் உபாதை, மாதவிடாய், பேறுகால சிரமங்களுக்கு கூட எந்த தீர்வும் இல்லை என ஆதங்கபடுகின்றனர்
பல சினிமா பிரபலங்கள் இவர்களின் இம்முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். “சினிமா நடிகையர் மேல் இனி யாரும் கைவைக்க முடியாது” எனும் போர்க்குரலை எழுப்பி பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் இவ்வமைப்பினரை பாராட்டி இதுபோன்ற விழிப்புணர்வு அனைத்து துறைகளிலும் வரவேண்டும் எனும் நோக்கில் இவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-
இந்த வார வல்லமையாளர் (264)
இந்த வார வல்லமையாளராக சூப்பர்ஸ்டார் என மக்களால் அன்புடன் அழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கர்நாடகாவில் பிறந்த மராட்டியர். வசிப்பது சென்னையில், மணமுடித்தது தமிழச்சியை. இப்படி மாநில எல்லைகளை தாண்டி மக்களால் சொந்தம் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி. இந்தியாவெங்கும் படங்களின் வெற்றி, தோல்வியை தாண்டி தன் நடிப்புக்காக ரசிக்கபடுபவர். கண்டக்டர் வேலையில் இருந்து சூப்பர்ஸ்டார் ஆக உயர்ந்தவர். அத்துடன் நிறுத்திக்கொண்டிருந்தாலே அது வாழ்நாள் சாதனையாக அமையும். ஆனால் அதையும் தாண்டி 1996ல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அதன்பின் தற்போது அரசியலிலும் நுழைந்துவிட்டார். இவ்வாரம் இவரது காலா டீசர் வெளியாகி, இவரது அரசியல் நுழைவின் முதல் அடியும் எடுத்து வைக்கபட்டிருப்பதால் செய்திகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

திரையுலகில் சூப்பர்ஸ்டாராக மட்டுமே இவரை இன்றைய தலைமுறை அறியும் என்றாலும் இவரது நடிப்பாற்றலை எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபதுவரை, அவள் அப்படித்தான் போன்ற படங்களில் நாம் கண்டோம். முரட்டுக்காளையில் தனக்கென ஒரு தனிப்பாதை அமைத்து மேலேறியவர் அதன்பின் அடுத்த 30 ஆண்டுகளில் அதை ராஜபாட்டையாக அமைத்து சூப்பர்ஸ்டாராக பரிணமித்தார். கபாலியில் அந்த பழைய ரஜினியை மீண்டும் கண்டோம். அதே ரஜினியை மீண்டும் காலாவில் காண இருக்கிறோம். அத்துடன் அரசியல்வாதி எனும் அவரது புதிய பரிணாமத்தையும் காண இருக்கிறோம்.
அவரது அரசியலுக்கு நாம் அளிக்கும் அங்கீகாரம் அல்ல இது. ஆனால் அவரது வாழ்க்கை சரிதத்தை எழுதுகையில் இதை குறிப்பிடாமல் எழுத முடியாது அல்லவா?
எம்ஜிஆர், சாவித்திரி, சிவாஜிக்கு பின் திரிசூலங்களாக தமிழ் திரையுலகிற்கு கிடைத்தவர்கள் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூவர். மூவரும் நடிப்பில் புகழின் உச்சியை எட்டிய நிலையில் அதன் அடுத்தகட்டமாக கமலும், ரஜினியும் அரசியலில் புகுந்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி என இதற்கு முந்தைய தலைமுறையின் இரு சூப்பர்ஸ்டார்களும் ஒரே சமயத்தில் அரசியலில் இருந்தும் அதில் எம்ஜிஆர் மட்டுமே ஜொலிக்க முடிந்தது. இம்முறையும் அதுவே நிகழுமா அல்லது இருவருமே ஜொலிக்காமல் போவது நிகழுமா என்பது வழக்கம் போல மக்களின் கையில் தான் உள்ளது.
நம்மளவில் தன் நடிப்புலக வாழ்வின் உச்சத்தையும், அரசியல்வாழ்வின் முதல்படியிலும் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினியை வருங்கால தலைமுறைக்கு ஆதர்சமாக இருப்பவர் எனும் நோக்கில் பாராட்டி வல்லமையாளர் விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-
இந்த வார வல்லமையாளர் (263)
1970களில் எம்ஜிஆர், சிவாஜி அலை ஓயும் சமயம் மூன்று இளம் நட்சத்திரங்கள் அறிமுகம் ஆகினர். ரஜினி, கமல், ஸ்ரீ தேவி. மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் போட்டி போட்டு நடித்து மூவரும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, இந்திய திரையுலகில் தமக்கென ஒரு இடம் பிடித்தனர். இதில் இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லக்கூடிய அளவு உயர்ந்தவர் ஸ்ரீ தேவி.
இவருக்கு முன் எந்த பெண்ணும் திரையுலகில் இத்தனை உயரத்தை அடைந்ததில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என ஒவ்வொரு மொழியினரும் இவர் தம் மொழி நடிகை என சொந்தம் கொண்டாடும் அளவு இவரை தவிர வேறு யாரும் இருப்பார்களா என்பது கேள்விக்குரியது
இவரது சொந்த ஊர் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி. ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக 1969ல் முதன்முதலில் அறிமுகமான படம் துணைவன். அதே ஆண்டிலேயே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரம். அதற்கு அடுத்த ஆண்டில் தெலுங்கு திரையுலகில் அறிமுகம். இப்படியாக தமிழில் துவங்கி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து, இந்தியா முழுவதும் அந்தந்த மொழி நடிகையாகவே பிரபலமான கதாநாயகிகள் இந்தியாவில் வேறு யாருமே இல்லை.
தமிழில் துணைவன் துவங்கி, 2015ல் வெளிவந்த புலி வரை, 72 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஹிந்தியில் அவருக்கு முதல் படம், 1975ல் வெளிவந்த ஜூலி. மரணமடைவதற்கு முன்பாக, ஷாருக்கானுடன் அவர் நடித்துக்கொடுத்திருக்கும் ஸீரோ திரைப்படம் ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். ஜூலி முதல் ஸீரோ வரை இந்தியில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் 72தான்.
ஸ்ரீ தேவி தமிழில் நடிக்க வந்த காலகட்டத்தில், லதா, மஞ்சுளா, சாரதா, சுஜாதா, ஸ்ரீ பிரியா என பலரும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் யாரிடமும் ஸ்ரீதேவியிடம் இருந்த ஒரு அப்பாவித்தனமும் அழகும் இருந்ததில்லை. அதுவே அவரைத் தனித்துவமானவராகக் காட்டியது என்கிறார் எழுத்தாளர் தேவிபாரதி.

16 வயதினிலே படத்தில் மயிலு, மூன்று முடிச்சு படத்தில் செல்வி, சிவப்பு ரோஜாக்கள் சாரதா என ஆரம்பகாலப் படங்களில், ஒரு நெருக்கடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்ணாக அவர் தொடர்ந்து நடித்து வந்தது, அந்த காலகட்டத்தோடு மிகவும் பொருந்திப்போனது என்கிறார் தேவிபாரதி.
தமிழ்த் திரையுலகில் அந்த காலகட்டத்தில் நடித்தக்கொண்டிருந்த பல கதாநாயகிகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு ஸ்ரீதேவிக்குக் கிடைத்தது. 75களிலிருந்து 80களின் மத்திவரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் பல வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலும் ஸ்ரீதேவியே கதாநாயகியாக இருந்தார்.
மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளையராணி ராஜலட்சுமி, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், லட்சுமி, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிகலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை போன்ற படங்களில் ஸ்ரீதேவிக்கு வாய்த்த பாத்திரங்கள் அந்த காலகட்ட நடிகைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.
மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்த குழந்தை நடத்திரம்
“அந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியே இல்லை. அழகு, அப்பாவித்தனம், அர்ப்பணிப்பு என அந்தக் காலத்து தமிழ் ஆண்களின் மனதில் பெண் தேவதையாக ஸ்ரீதேவி உருப்பெற்றிருந்தார். ஸ்ரீ பிரியா, சுஜாதா ஆகியோரை அப்படிச் சொல்ல முடியாது” என்கிறார் தேவிபாரதி.
ஸ்ரீ தேவியின் கண்களில் ஒரு அழகும் அப்பாவித்தனமும் இருந்தது. அதனை தமிழ் சினிமா மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது என்கிறார் தேவிபாரதி. அதற்கு உதாரணமாக, 16 வயதினேலே படத்தில், துவக்கத்திலேயே ஸ்ரீ தேவியின் கண்களின் க்ளோஸப் நீண்ட நேரத்திற்கு திரையில் காண்பிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.
“ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது பேபி ராணி, பேபி ஷகிலா ஆகியோரும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால், ஸ்ரீ தேவி இந்தியாவின் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பெண் குழந்தைகள், பெரும்பாலும் பெரிய நட்சத்திரமாக பிற்காலத்தில் வருவதில்லை. ஸ்ரீ தேவி ஒரு விதிவிலக்கு” என்கிறார் ராஜசேகர்.
ஸ்ரீதேவி நடிக்கவந்த காலகட்டமும் அவருக்கு மிக உதவிகரமாக இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரது காலகட்டம் முடிவுக்கு வந்து, ரஜினி – கமல் காலகட்டம் துவங்கியிருந்தது. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதை பாரதிராஜாவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவராக ஸ்ரீ தேவி மட்டுமே இருந்தார் என்கிறார் ராஜசேகர்.
தெலுங்குப் படங்களில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளே இந்தித் திரையுலகிற்கு அவரை அழைத்துச் சென்றன என்கிறார் ராஜசேகர். தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள், இந்திப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஸ்ரீதேவியையே நாயகியாக நடிக்கவைத்தார்கள். ஆனால், வெகுவிரைவிலேயே தனது சொந்த பலத்தில் இந்தித் திரையுலகில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்ரீதேவி. 1983ல் வெளிவந்த ஹிம்மத்வாலா திரைப்படத்தின் வெற்றி அவரை எங்கோ கொண்டுசென்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த வாரிசு, சந்திப்பு, நான் அடிமை இல்லை என மூன்று தமிழ்ப் படங்களில் ஸ்ரீ தேவி நடித்தார்.
“அது தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த மிகப் பெரிய சோகம். அவரது உடல்கூட தமிழகத்திற்கு வராது என்பது இன்னும் பெரிய வருத்தத்தை அளிக்கிறது” என்கிறார் தேவிபாரதி.
ஸ்ரீ தேவிக்கு இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் ரசிகர்கள், 70களின் ஸ்ரீ தேவியை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
Thanks: BBC
-
இந்த வார வல்லமையாளர் (262)
இவ்வார வல்லமையாள்ர்களாக விஞ்ஞானி சுமிதா மித்ராவை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இவர் அமெரிக்க பேடண்ட் அலுவலகத்தின் பாராட்டுக்கும், அங்கிக்காரத்துக்கும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்
சுமிதா மித்ரா நானோபார்ட்டிகிள்ஸ் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்சொத்தைகளை அடைக்கும் வழியை கண்டுபிடித்துள்ளார். இது தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு மேம்பட்டதாகவும், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும் எனவும் தெரிகிறது
3எம் எனும் கம்பனியில் வேலை செய்தபோது இதை கண்டுபிடித்த்து இதுவரை சுமார் 60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இது பலனளித்துள்ளது.
இது தவிர பல்சொத்தைகளை அடைக்கும் பசைகள், நானோகாம்பொசிட் வகை தொழில்நுட்பம் ஆகியவற்றையும் சுமிதா மித்ரா கண்டுபிடித்துள்ளார். 3எம் கம்பனியில் இருந்து ஓய்வுபெற்று சொந்தமாக தொழில்நுட்ப கம்பனி ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார்

இவர் அமெரிக்காவில் வசித்தாலும் இவரது சொந்த ஊர் கல்கத்தா ஆகும். கல்கத்தா ரெசிடென்ஸி கல்லூரி மாணவி ஆவார். இவரது கணவர் சாம் மித்ரா ஆவார். தன் கணவருடன் இணைந்து தான் வசிக்கும் மின்னியபொலிஸ்- செயிண்ட்பால் நகரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக அறிவியல் குறித்து உரை நிகழ்த்துவதில் தன் விடுமுறைகளை இவர் செலவிடுகிறார்
அறிவியல், மாணவர் மேல் கொண்ட அன்பு, உழைப்பு, ஊக்கம் ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுமிதா மித்ராவை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வல்லமையாளர் சுமித்ரா மித்ராவுக்கு நம் நல்வாழ்த்துகள்
இவரை பரிந்துரைத்த அண்ணாகண்ணன் அவர்களுக்கு நம் நன்றி
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )


