ஒரு யுக்தி

செல்வன்

2001ஆம் ஆண்டு.
 
ஓக்லாந்து பேஸ்பால் அணி தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை ஏலம் எடுக்கக் காசு இல்லை. அணியின் முன்னணி விரர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.
 
இந்தச் சூழலில் அணியின் மேலாளர் பில்லி பீன், பீட்டர் பிராண்டு எனும் யேல் பல்கலைக்கழக எகனாமிக்ஸ் வல்லுனரை சந்திக்கிறார். பீட்டர் பிராண்டு, அவரிடம் “பேஸ்பால் ஆட்டமே மிகத் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறது. நான் சொல்லும் கணிதவியல் மாடல்களை வைத்து வீரர்களை ஏலம் எடுத்தால் அணி வெற்றிபெறும்” என்கிறார்.
 
அப்போது பேஸ்பால் நட்சத்திர மவுசை வைத்தே இயங்கி வந்தது…. ஹோம் ரன் எனப்படும் சிக்சருக்கு ஒப்பான அடிகளை அடிப்பவர்கள் பெரும் விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார்கள். பேட்டிங் சராசரி கூடுதலாக இருப்பவர்களும் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்கள். நட்சத்திரங்களைப் பார்க்கவும், ஹோம் ரன்களைப் பார்க்கவும் கூட்டம் கூடியது..
 
“இந்த மாடலே தவறு. பேட்டிங் சராசரியை அவுட் ஆகாமல் இருப்பதன் மூலம் செயற்கையாகக் கூட்டமுடியும். ஹோம் ரன்களை அடிக்கணும் என எந்த அவசியமும் இல்லை. பந்தைத் தட்டிவிட்டுவிட்டு முதல் பேசுக்கு ஓடுவதில் வல்லவர்களை விலைக்கு வாங்கினால் போதும். அப்படி தட்டிவிட்டுவிட்டு ஓடினால் ரன்கள் வந்துகொண்டே இருக்கும்” என்ற பீட்டர் பிராண்ட், அந்த மாடலை வைத்துக் கணக்குகளைப் போட்டு, வீரர்கள் சிலரை ஏலம் எடுக்கச் சொன்னார்.
 
அதில் வயதானவர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள், காயம்பட்டுச் சரியாக ஆடமுடியாமல் இருப்பவர்கள் எனப் பலர் இருந்தார்கள். நட்சத்திர வீரர்களை எல்லாம் ஏலம் எடுக்காமல் இவர்களை மிக மலிவான விலைக்கு ஓக்லாந்து அணி ஏலம் எடுக்கவும் அவர்கள் நகைப்புக்கும், பகடிக்கும் ஆளானார்கள். அணி நிர்வாகத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கருதினார்கள்.
 
ஆனால் சீசன் துவங்கியதும் இந்த உத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. நட்சத்திர வீரர்கள் இல்லை, ஹோம் ரன்கள் இல்லை, ஆனால் ரன்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தன. தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வென்று உலக சாதனை படைக்கவும் விளையாட்டு உலகமே அதிர்ச்சி அடைந்து, பில்லிபீனைத் திருப்பிப் பார்த்தது. அந்த ஆண்டு, பட்டத்தையும் ஓக்லாந்து அணி வென்றது.
 
உடனடியாக பில்லிபீனை வலுவான, பெரிய அணியின் முதலாளிகள் சூழ்ந்தார்கள். “எத்தனை தொகை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறோம். எங்கள் அணிக்கு வாருங்கள்” என்றார்கள். ஒரு அணி ஒன்றேகால் கோடி டாலரைக் கொடுக்க முன்வந்தது. அனைத்தையும் மறுத்து அடுத்த சீசனுக்கு தன் அணியின் சார்பிலேயே களம் இறங்கினார் பில்லிபீன்.
 
2001ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியைப் பெற்றுத்தந்த விவிஎஸ் லட்சுமண் இந்த உத்தியைத் தான் கையாண்டார். அந்த 281 ரன்களில் ஒரே ஒரு சிக்சர் கூட இல்லை. “சிக்சருக்கும், பவுண்டரிக்கும் இருக்கும் வேறுபாடு 2 ரன்கள் தான். ஆனால் தூக்கி அடிக்காவிட்டால் அவுட் ஆகமாட்டோம்” என்றார் லட்சுமண்.
 
அடித்து ஆடும் ஆவேச ஆட்டம் இல்லை, ரசிகர்களை வியக்க வைக்கும் ஷாட்டுகள் இல்லை… ஒன்று, இரண்டு, நாலு என மெதுவாக ரன்கள் ஏறின. மெதுவாக, நிலையான, திட்டமிட்ட ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது,.
 
பீட்டர் பிராண்டும், பில்லிபீனும் கையாண்ட உத்தி, இன்று அனைத்து பேஸ்பால் அணிகளாலும் கையாளப்படுகிறது. அவர்கள் கிட்டத்தட்ட லெஜண்டுகளின் இடத்தை அடைந்துவிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து, Moneyball எனும் ஆங்கிலப் படம் வெளிவந்தது. பிராட் பிட், பில்லி பீன் வேடத்தில் நடித்தார்.
 
வெற்றி சிக்சர்களாலும், ஹோம் ரன்களாலும், பெரிய சாதனைகளாலும் தீர்மானிக்கப்படுவதில்லை. நிதானமான, தொடர்ச்சியான, சிறுசிறு வெற்றிகள் மூலமே வெற்றி பெறுவோம். நாம் எப்படி ஜெயித்தோம் என்பதே அதன்பின் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.