நியாண்டர் செல்வன்

“என்னடா சோதனைமயமான வாழ்க்கை இது, இத்தனை கடினமாக இருக்கிறது? இதில் இருந்து எப்படி மீண்டு வருவது?” என நினைக்கும் சூழல் வந்தால் அலெக்சாண்டர் சோல்சென்ஸ்டைனை (Aleksandr Solzhenitsyn) நினைத்துக்கொள்ளவும்.

அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்:

ஹிட்லர் ஆட்சியில் துன்புறுதல்

ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து போரிடுதல்

அதன்பின் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு எட்டாண்டுகள் உலகின் மிகக் கொடிய சிறைவாசம்

நிர்ப்பந்த விவாகரத்து..மனைவியை பிரிந்து 15 ஆண்டுகள்

அதன்பின் உள்நாட்டுத் தனிமைச் சிறையில் அடைபடுதல்

அதன்பின் கான்சர்

சொந்த நாட்டை விட்டுக் குடியுரிமை பறிக்கப்பட்டு, துரத்தி அடிக்கப்படுதல்……”

இத்தனையும் ஒரு மனிதனுக்கு நிகழ்ந்தால் அவன் அதன்பின் என்ன ஆவான்?

அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன் ஓர் எளிய ரஷ்ய வீரர். அவரது நாட்டை ஹிட்லர் படையெடுத்துப் பிடிக்க, ரஷ்ய ராணூவத்தில் சேர்ந்து வீரப் போர் புரிந்தார் அலெக்சாந்தர். இருமுறை விருது பெற்றார்.

அவரது துரதிர்ஷ்டம்… போர் சமயம் ஸ்டாலினை விமர்சித்து அவர் எழுதி வைத்திருந்த சில குறிப்புகள் ராணுவ அதிகாரிகள் கையில் கிடைக்க, தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உலகப் போரில் ஜெர்மனி தோற்றதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் சிறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

தேசத் துரோகிகளுக்கு 10 ஆண்டுகள் குலாக் எனப்படும் வதைமுகாமில் தண்டனை கிடைக்கும். போருக்கு முன் அவர் மணந்த மனைவியை நாட்டுக்காக, திருமணம் ஆன ஒரே ஆண்டில் பிரிந்து போருக்குச் சென்றார் அலெக்சாந்தர். ஆனால் தேசத் துரோகி ஆகிவிட்டதால் அவர் மனைவியின் ரேசன் கார்டு ரத்தாகும் நிலை வர, இருவரும் வேறு வழியின்றி விவாகரத்து பெற்றனர்.

அதன்பின் குலாகில் 10 ஆண்டுகள் கடுமையான சித்திரவதை அனுபவித்தார். அதன்பின் விடுதலை பெற்றாலும் அவரை அவர் பிறந்த பகுதியை விட்டு, கசாகஸ்தானுக்கு நாடு கடத்தினார்கள். அங்கே அவருக்குக் கேன்சரும் வந்தது.

இதுதான் அவரது வாழ்வின் மிகச் சோதனையான கட்டம். இங்கிருந்து தான் அவர் மீண்டெழுந்தார்.

தன் சிறை அனுபவங்களை வைத்து ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி, ஒரு நாவல் எழுதினார் (One Day in the Life of Ivan Denisovich). கடும் பத்திரிக்கை தணிக்கை இருந்த ரஷ்யாவில் அதை எப்படி வெளியிட முடியும்? ஆனால் ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. ஸ்டாலின் இறந்து குருசேவ் அதிபரானார். குலாக் முறையைக் கடுமையாகச் சாடி வந்த குருசேவ் அரசின் தணிக்கைத் துறையிடம் இந்த நூல் அனுமதிக்குப் போனது.

“நூல் எழுதியதற்குத் தன்னைக் கைது செய்ய மீன்டும் போலிஸ் வரும்” என நினைத்திருந்த அலெக்சாந்தர் சோல்சென்டைன் வீட்டுக்கு நூலை வெளியிட அனுமதி அளித்துக் கடிதம் வந்தது.
நூல் வெளியானது… இரும்புத் திரை நாட்டிலிருந்து அரசை விமர்சித்து இப்படி ஒரு நூலா என உலகமே ஸ்தம்பித்தது.. ஒட்டுமொத்த உலகிலும் ரஷ்யாவில் பாலாறும், தேனாறும் ஓடுவதாக ஒரு பிம்பம் கட்டமைக்கபட்டிருந்த 1960களில் இப்படி ஒரு நூல் ரஷ்யாவிலிருந்தே வெளியானது உலகையே வியப்பில் ஆழ்த்தியது…

ஆனால் அதற்குள் குருசேவ் இறக்க, சோல்சென்ஸ்டைனுக்கு வேறு எந்த நூலை எழுதவும் அனுமதி கிடைக்கவில்லை. அவரை போலிஸ் கைது செய்ய முனைகையில் அந்தச் செய்தி வந்தது… அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது என…

அதன்பின் அவரைக் கைது செய்யும் முயற்சியை சோவியத் அரசு கைவிட்டது. ஆனால் வீட்டுக் காவலில் அதிபயங்கரமான ஒரு நூலை அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு தாளாக எழுதி, தன் மகள் மூலம் நூலை ரகசியமாக ஒவ்வொரு தாளாக வெளியே கொண்டு போனார்.

அதில் இருந்தது, குலாகுகளின் விவரம், அதில் அடைபட்டுக் கிடந்த 256 கைதிகளின் பேட்டி, அங்கே நடந்த கொடுமைகள், ரஷ்ய மக்களின் வாழ்க்கை விவரம் ஆகியவையே.

எஸ்தோனியாவில் இருந்து இலக்கிய ஆர்வலர்கள் மூலம் நூல் பாரிசுக்குச் சென்றது. நூல் பதிப்பும் ஆனது. சோவியத் அரசுக்குப் பேரதிர்ச்சி… தன் உயிரே போனாலும் பரவாயில்லை எனக் கடும் வீட்டுக் காவலில் இருந்து அந்த நூலை எழுதினார் அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன்.

The gulag archipelago என அழைக்கப்படும் அந்த நூல் வெளியாகி, உலகெங்கும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது. அவரை என்ன செய்வது எனக் குழம்பிய சோவியத் அரசு, அதன்பின் அவரது குடியுரிமையைப் பறித்து நாடு கடத்திவிட்டது.

1974இல் நாடு கடத்தப்பட்ட அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன், அதன்பின் 1994இல் சோவியத் அரசு வீழ்ந்த பின்னர்தான் ரஷ்யா திரும்பினார். அவரது குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டது மாத்திரமின்றி அவர் ரஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளராக அறிவிக்கப்பட்டு, ரஷ்ய மாணவர்களுக்கு அவரது நூல் பாடப் புத்தமாக வைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு அவர் ரஷ்யாவில் இறந்தபோது, ரஷ்ய அதிபர் மெட்வடேவ் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

முதல் பத்தியை இப்போது மீண்டும் படிக்கவும்.

Photo courtesy: Wikipedia

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *