ஏறன் சிவா

மலரென் றழைத்தாரடி — உன்றன்
மனத்தைக் குழைத்தாரடி — தோழி
வலிமை யிழந்தாயடி!

அழகைப் புகழ்ந்தாரடி — உன்றன்
அறிவை யிகழ்ந்தாரடி — தோழி
ஆற்றல் குறைந்தாயடி!

நிலவும் முகிலுமென்றே — உன்றன்
நினைவை மறைத்தாரடி — தோழி
நிழலாய்ச் சரிந்தாயடி!

வலையை விரித்தாரடி — உன்றன்
வாழ்வைப் பறித்தாரடி — தோழி
மருண்டு விழித்தாயடி!

தென்றல் எனவுரைத்தே — உன்றன்
திண்மை யழித்தாரடி — அதைத்
தெரிய மறந்தாயடி!

கனவைக் கலைத்தாரடி — அதில்
கல்லை விடுத்தாரடி — தோழி
காய மடைந்தாயடி!

காதல் மறுத்தாரடி — உன்றன்
கண்ணீர் பழித்தாரடி — தோழி
கனவுக்குள் வாழ்ந்தாயடி!

ஓதும்உன் சொல்லைத் — தீயில்
உதறி எறிந்தாரடி — தோழி
ஊமையாய் நின்றாயடி!

வஞ்சி உனக்கெதிராய் — இங்கு
வளருங் களைபிடுங்க — உளத்தில்
மாற்றங்கள் காண்பாயடி!

நெஞ்சு நிமிர்வாயடி — தோழி
நெருப்பாய் இருப்பாயடி — உன்றன்
நிலையை உயர்த்துதற்கே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *