படக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி
நீலவானப் பின்னணியில் கருங்கோட்டில் அமர்ந்திருக்கும் கோலவெண் பறவைகளின் கவின்காட்சி கண்ணைப் பறிக்கின்றது. மூவண்ணங்காட்டி எண்ணங்கவரும் இவ்வொளி ஓவியத்தை எடுத்திருக்கும் புகைப்பட நிபுணர் திருமிகு. கீதாமதிக்கும், இவ்வழகிய படத்தைப் படக்கவிதைப் போட்டி 232க்குத் தெரிவுசெய்து தந்துள்ள தேர்வாளர் திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றிகள்!
இயற்கையின் படைப்பில் பறவைகள் வியப்புக்குரியவை. வானவெளியெங்கும் சுற்றித் திரியும் சுதந்தரமும், அந்திவந்தால் குடும்பத்தோடு கூட்டிலிணைந்து பாட்டிசைத்து மகிழும் பாக்கியமும் பெற்றவை அவை. கொலைத்தொழில் புரியும் புள் வேட்டுவனிடம் சிக்காதவரை பறவைகளின் கலைவாழ்வுக்குப் பங்கமில்லை.
பார்த்தாலே பரவசமளித்துக் கவியுள்ளத்தைத் தட்டியெழுப்பும் இவ் எழிற்படத்தைக் காணுகையில் பாமழை பொழியாது விடுப்பரோ நம் பாவலர்கள்?
ஆதலால், போட்டியில் கலந்துகொள்ள வாரீர்! உம் கவிதைகளைத் தாரீர்! எனக் கவிஞர் குழாத்தைக் கரங் குவித்து அழைக்கின்றேன்!
*****
’பட்ட மரமும் பறவைகளாலே அழகுறுதலைப் போல் கெட்ட குடும்பமும் கூடியிருந்தால் கேடது நீங்கிப் பொலிவு பெறும்’ என நம்பிக்கை விதைகளைத் தம் பாவில் தூவியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
தழைக்க…
பட்ட மரத்தில் பறவைகள் அமர்ந்தால்
பளிச்சிடும் மரமும் பெற்றிடும் புத்துயிர்,
கெட்ட குடியென ஒதுங்கிச் செலாதே
கேடது நீங்கிடக் கூடிடு குடும்பமாய்,
தொட்டதற் கெல்லாம் வேண்டாம் சண்டை
தொடர்ந்திடு உறவை உதவிகள் செய்தே,
எட்டிடும் தூரமே இன்ப வாழ்க்கை
என்றும் செலாதே உறவைத் துறந்தே…!
*****
”மதிமுகம் மலர்ந்த மரங்களெல்லாம், மலடாய் மாண்டது மானிடனாலோ?” என வருந்தி, பட்டமரம் மீண்டும் பசுமைபெறப் பறவைகள் நிகழ்த்தும் பிரார்த்தனைக் கூட்டமிது என்கிறார் திரு. ராவணா சுந்தர்.
பட்டமரம் பசுமை பெற,
பறவைகளின் பிரார்த்தனைக் கூட்டம்.
உச்சிவெயில் உயிரைக் உருக்கையில,
உல்லாசமாய் உன்மடியில் ஊசலாடினோமே!
இரைதேடி இறைஞ்சும் இதழ்களுக்கு,
இளைப்பாற இளங்கனி இழைத்தாயே!
சிற்றின்பச் சிந்தனைகள் சிலிர்ப்பூட்டும்போது,
சிரங்களில் செவ்வண்ணமே சீராட்டினாயே!
முத்தத்தின் முதல்கருவை முட்டையிடும்போது,
முக்கிளையினை முதல்மடியாக முகமலர்ந்தாயே!
தாய்மடி தீண்டாத் தருணமும்,
தன்மடியில் தழைத்துத் துயிலெழுப்பினாயே!
மூடர்களின் முன்னேற்ற முன்னுரையில்,
முல்லையின் மூச்சுதான் முதல்பலியோ?
மதிமுகம் மலர்ந்த மரங்களெல்லாம்,
மலடாய் மாண்டது மானிடனாலோ!
அன்னைகளின் ஆருயிர் அரும்ப,
அழுகுரல் அறிந்து அருள்வாயா…!
இறைவா….?
*****
”பருவங்கள் மாறும்; பட்ட மரமும் பூத்துக் குலுங்கும்! காலங்கள் மாறும்
கண்ட கனவு நனவாகும்; அதுவரை காத்திருக்க கற்றுக்கொள்!” என்று பொறுமையின் பெருமையைப் பறவைக்கும் மானுடர்க்கும் சேர்த்தே போதிக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.
மாற்றம் மனமாற்றம்
இலைகள் உதிர்ந்து
கிளைகள் மட்டும் இருக்க
பட்ட மரமும் பறவைகளுக்குப்
புகலிடமாய் மாறும்
உடைந்த கிளைகள் கூட
விறகாய்ப் பயன்படும்!
பயனற்ற பொருளாய்
அவன் படைப்பில் ஏதும் இல்லை!
அத்தனையும் இழந்தாலும்
அது முடிவல்ல, ஆரம்பம்!
முடியும் என்று முயன்றிடு
துறந்தவை யாவும் திரும்பக் கிட்டும்
வாழ்க்கை ஒரு சக்கரம் என்று
அது உனக்கு என்றும் உணர்த்தும்!
பருவங்கள் மாறும்
பட்ட மரமும் பூத்துக் குலுங்கும்
காலங்கள் மாறும்
கண்ட கனவு நனவாகும்
அதுவரை காத்திருக்கக் கற்றுக்கொள்
நம்பிக்கையோடு
நல்ல காலம் பிறக்கும் என்று!
சூழ்நிலைகளும் துயரங்களும்
அள்ளும் பாத்திரங்களின்
உருவம் கொள்ளும்!
நீர்நிலை போல்
பார்ப்பவரின் பார்வையைப் பொருத்திச்
சிறுது பெரிது என மாறும்
சூழ்நிலைகளை மாற்ற இயலாது!
நம் சிந்தனையை மாற்ற முடியும்
இதுவும் கடந்து போகும்
என்று உன் சிந்தனையில்
விதைத்திடு!
வெற்றிக்கனி தரும் செடி
தானாய் முளைத்துவிடும்!
*****
பட்டமரமும் அதனை விட்டகலாப் பறவைகளும் நம் கவிஞர்களின் சிந்தனையைக் கிளறி, ”இன்மை நிரந்தமன்று!” எனும் நன்மொழியை உதிர்க்க வைத்திருக்கின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…
வேடந்தாங்கிய பறவைகள்!
இயற்கையன்னை தானளித்த
இன்பபுரி இவ்வையகத்தை
நகரமயமாக்கி வைத்து
நரகமதை உருவாக்கினோம்!
நீர்வளத்தைக் கெடுத்துவிட்டோம்
நிலமடந்தை வளமொழித்தோம்
கால் வைக்கும் இடமெல்லாம்
கட்டிடங்கள் உயர்த்திவைத்தோம்!
பச்சைநிறத் தாயவளின்
கச்சைமலை முகடழித்து
மிச்ச மீதம் ஏதுமின்றி
தாய்ப்பாலை வீணடித்தோம்!
வான்பொய்த்து மழையில்லை
கதிரவனால் அதிவெப்பநிலை
நில அதிர்வால் வீடில்லை – எனக்கூறி
அப்பாவிப் பறவையென்ற
வேடங்கொண்டு வாழ்ந்திருப்போம்!
இயற்கை வளமழித்து
கான்க்ரீட் மரக்கிளையில்
வண்ணமெல்லாம் தானிழந்து
வாட்டமுற்று வீற்றிருப்போம்!
”நீர்வளத்தைக் கெடுத்து, நிலவளத்தை அழித்ததனால் வான்பொய்த்து மழையில்லை; நிலஅதிர்வால் வீடில்லை என்றானபின் கான்கிரீட் மரக்கிளையில் வாடி அமர்ந்திருக்கும் வேடப்பறவைகள் நாம்!” என்று மக்களின் மதியீனத்தால் விளைந்த சீர்கேட்டைச் சிறப்பாகப் பாட்டில் பதிவுசெய்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.