அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (24.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – 233

 1. பாதுகாப்பு…

  பூட்டி யிருக்கும் கோவிலுள்ளே
  பார்த்தது போதும் பிள்ளைகளே,
  வீட்டி லுள்ளோர் தேடிடுவர்
  விவரம் ஏதென அஞ்சிடுவர்,
  நாட்டி லுள்ள நடப்பறிய
  நம்பி வருவீர் பெற்றோருடன்,
  வேட்டை யாடும் உலகமிது
  வெளியே யில்லை பாதுகாப்பே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. தாழ் திறவாய்!

  வானுயர் கோவிலில் தொழுதுநிற்போம்
  பள்ளிவாசல்கள் தோறும் ஓதிநிற்போம்
  தேவ ஆலயம் தேடி ஓடிடுவோம்
  ஆதிமூலத்தை காண ஏங்கிடுவோம்!

  காட்டினில் இறையைத் தேடிடுவோம் – மந்திர
  பாட்டினில் அவன்தாள் நாடிடுவோம் – வெற்று
  ஏட்டினில் சொல்லிய வழியேல்லாம்
  போட்டிப் போட்டு செய்திடுவோம்!

  ஆண்டுகள் பல தவஞ்செய்து நின்று
  கண்டிடும் வழியென்னி காத்துநிற்போம்
  கண்டவர் விண்டிலர் என்று சொல்லி
  கண்டிட தினந்தினம் ஏங்கிடுவோம்!

  நல்லுரை சொல்லிடும் வேதமெல்லாம் – பிறர்
  வெந்துயர் தீர்த்திடும் அன்பர்தனை
  முந்திய தெய்வமாய் வைத்தையுணர்ந்து – நம்
  உள்ளுரை பரம்பொருள் மீட்டிடுவோம்!

  ஈட்டிடும்பொருள் பிறர்க்கீழ்ந்திடுவோம்!
  வாட்டிடும் பிறர்பிணித் தீர்த்திடுவோம்!
  நாட்டினில் வரியவர் வாழ்ந்திடவே
  பூட்டிய மனத்தாழ் திறந்திடுவோம்!

 3. தொடரும் தேடல்

  விடை தெரியா வினாக்களால்
  நிறைந்ததே வாழ்க்கை
  விடை தேடியே வயதும் கடந்திடும்
  வாழ்க்கை முடியும் வரை
  கேள்விக்குறியாய் இருக்கும்
  பலர் வாழ்க்கைக்கு விடையாய்
  மலர்ந்திடும் மழலைச்செல்வம்
  அத்தனையும் அறிந்துகொள்ளும் ஆசையில்
  வினா தொடுத்தே வளர்ந்திடும்
  குழந்தை பருவம்
  இனம் புரியாமல் செய்வதறியாமல்
  குழம்பியே கேள்விகளை தொடுத்திடும்
  இளமை பருவம்
  சந்திக்கும் அனைத்திலும்
  சந்தேகமாய் வினா எழுப்பியே
  வீணாய் நகரும் வாலிபப்பருவம்
  எடுக்கும் முயற்சியே கேள்வியாய் முன்னே இருக்கும்
  வினாவாய் போய் சேரும் காலம் தன்னை
  விடையாய் எதிர்பார்த்து காத்திருக்கும்
  முதுமை பருவம்
  கேள்விகளாய் நிறைந்த வாழ்க்கையில்
  கடவுள் பற்றி கேள்வி எழாமல் எப்படி இருக்கும்?
  உருவமில்லா சக்திக்கு உருவம் தந்தோம்
  கல்லில் அதை வடித்து
  கடவுள் என்று பெயர் சூடியே உயிர் தந்தோம்
  கல்லாய், கடவுளாய் கண்டவனை
  நாத்திகன் என்றும் ஆத்திகன் என்றும்
  பிரித்து வைத்தோம்
  எங்கும் எதிலும் அவனே
  அருளாய் நிறைந்து இருந்தும்
  மனிதநேயம் கொண்டு
  சக மனிதனை பார்க்க மறந்துவிட்டோம்
  குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றும்
  ஜாதி மத பேதம் இல்லையென்றும் கற்றுத்தந்து
  கடவுளை வைத்தே
  பிரிவினையை மழலையில் கலந்துவிட்டோம்
  எங்கும் நிறைந்தவனை
  கல்லுக்குள் புட்டி வைத்தோம்
  கடவுள் என்று சொல்லி
  கோயிலையும் பூட்டி வைத்தோம்
  விடை தெரியா வினாவாய் இறைவன் இங்கே
  விளையாட்டையும் விட்டுவிட்டு
  விடை அறிய
  பூட்டிய கோயிலுக்குள்
  இருளில் இறைவனை தேடும் இவர்கள்
  தேடல்கள் என்றும் தொடரும் ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *