சேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
———————————————————
திருவாரூரில் பரவை நாச்சியாரைச் சந்தித்த சுந்தரர், அம்மங்கையைத் திருமணம் புரிந்துகொள்ளும் அவாவினைப் பெருமானிடமே தெரிவித்தார். பரவையார் தம் முன் திருமணக் கோலத்துடன் திகழ்ந்த சுந்தரரைப் பற்றிய செய்திகளைத் தம் தோழியரிடம் உசாவித் தெரிந்துகொண்டார். அவர் ஆதி சிவனடியார் என்பதறிந்து அவர்பால் பெருங்காதலுற்றார். திருவாரூர்ச் சிவனடியார்களிடம் இறைவன், இருவரைப் பற்றியும் அவர்கள் கனவில் கூறி, அவர்கள் திருமணத்துக்கு உரிய செயல்களைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே சுந்தரர் கனவிலும், பரவையார் கனவிலும் அவர்கள் திருமணம் புரிந்துகொள்ளத் திருவருள் புரிந்தார். ஆகவே சுந்தரர், பரவையார், அடியார்கள் ஆகிய அனைவருக்கும், இறைவன் இருவர் திருமணத்தை உறுதி செய்தார்.
இறைவன் திருவருளால் தம் உள்ளத்தால் பரவையாருடன் இணைந்த சுந்தரர், தாமே , பரவையாருடன் இணைந்து, பெற்ற சிற்றின்பத்தையே பேரின்பமாக்கிக் கொள்ளும் வகையில், அவருடன் யோக வாழ்வில் இணைந்து வாழத் தொடங்கினார். இந்த வாழ்வு, இறையருளின் திறம் பெற்ற திருமண மக்களின் வாழ்வில் உண்டாகும்.
இதனைக் கம்பர் தம் இராமாயணத்தில் ,
‘மன்றலின் வந்து மணத்தவி சேறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன்றுணை அன்னமும் எய்திஇருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்’
என்று பாடுகிறார்.
இராமனும் சீதையும் கொண்ட காதல், கருங்கடற்பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடிய தெய்வீகத் தன்மை வாய்ந்தது. அவ்வாறே திருக்கயிலையில் உள்ளம் ஒன்றிய சுந்தரரும், பரவையாரும் திருவாரூரில், போகம் ஒன்றிய தெய்வீக யோக வாழ்வை நடத்தினர். திருவாரூர்த் தேவர்பிரான் திருவருளால் அழகிய நாவலூர் மன்னனாகிய சுந்தரர், பரவையாரின் திருமார்பாகிய மலைமேல் தவயோகம் பயின்றார்.
இரண்டு ஆன்மாக்களின் கூட்டத்திலே சிற்றின்பம் எனப் பேர்பெறும். நாயகன் நாயகி பாவனையில் ஆன்மாவாகிய நாயகி உயிர்த்தலைவனாகிய ஈசனைக் கூடுதல் பேரின்பம் எனப் பெறும். அவ்வாறே, பிராண வாயுவை அடக்கிச் சுழுமுனையின் வழியே பிரமரந்திரத்திற் செலுத்தித் துவாதசாந்தத்திலே விந்துச் சோதியாகிய ஒளியைத் தரிசித்து அக்காட்சியிலே அழுந்தி அதன்மயமாய் நிற்றல் சிவயோகம் எனப்பெறும்.
சீவன்மாக்களும் இவ்வாறே சிவயோகம் பயில்தல் வேண்டும் என்பது குறிப்பு.
திருமார்புகளின் சார்வே யோகமாயிற்று; அது பரம்பரை விருப்பமாய் விளைந்ததேயன்றி வேறு செயலுக்குக் காரணமாகவில்லை என்பது.
‘பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் அங்கு
முற்ற வரும் பரிசு உந்தீபற,
முறையாதும் மாயைஎன்றுஉந்தீபற’
என்ற திருவுந்தியாரால் விளங்கும் .
திருமார்புகள் பரஞானம், அபரஞானம் இரண்டையும் குறிக்கும் என்பது லலிதா சகஸ்ர நாமம்!
திருக்கயிலாய மின்னல்கள் வந்து சாரும் இடை , பரவையாரின் இடை என்பதை , ‘மின்னாருங் கொடிமருங்குல் பரவை எனும் மெல்லியல்’ என்ற தொடர் விளக்கும். மேலும் அவர்தம் திருமார்புகள் பொன்மலையாகிய கயிலாயத்தின் சார்பு பெற்றதை , ‘பொன்னாரும் முலை ஓங்கல் புணர்குவடே’ என்ற தொடர் விளக்கும். இந்தக் கயிலை மலையில் செய்யும் தவமே , சிவ பரம்பரையினர் பலகாலமும் மேற்கொண்டு பயிலும் யோகம் ஆகும். இதனையே சேக்கிழார் பெருந்தகை,
‘பொன்னாரும் முலை ஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார்!’
என்று பாடினார்.
இனி முழுப் பாடலையும் பயில்வோம்!
தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளான்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்!
இப்பாடலில் தெய்வத்தின் திருவருளால் இந்தப் பூமியில் வரும் உயிர்களின் செயல்கள் யாவும் தெய்வச் செயல்கள். ஆதலால், அதே தெய்வத்தின் கருணையினால் பூமியில் தோன்றும் நம் செயல்களும் தெய்வச் செயல்களாக அமைய வேண்டும். அவ்வகையில் நம் வழிபாடும் வாழ்க்கையும் அமைதல் வேண்டும். திருஞான சம்பந்தரின் திருமணம், அனைவர்க்கும் சிவலோகப் பேற்றை அருளியது இதனால்தான்.
‘காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே.’
‘என்செய லாவதி யாதொன்று மில்லை இனித்தெய்வமே
உன்செய லேஎன் றுணரப்பெற் றேன்!’
என்ற பட்டினத்தடிகள் பாடல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.
ஆகவே நாம் தெய்வத்தின் திருவருளாகவே அனைத்தையும் நினைக்கப் பழகிக் கொண்டோமானால், நம் வாழ்க்கையின் நடவடிக்கை ஒவ்வொன்றும் சிவன் திருவருளாகவே அமையும்; நாம் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாகும் சிறப்பினை நாம் பெறலாம். சேக்கிழார் தம் நயம் மிக்க பாடலால் நாம் அடையும் பயன் இதுவே!
(தொடரும்….