நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள்
78. படைச் செருக்கு
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
போர்க்களத்துல ஒரு வீரன் சொல்லுதான். எங்க தலைவர எதித்து நில்லாதீக. நின்னவனெல்லாம் செத்து இப்பம் நடுகல்லா நட்டமா நிக்கான்.
குறள் 772:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
காட்டுல ஓடுத முயல் மேல குறி தப்பாம எய்து கொன்ன அம்ப கையில வைக்கதவிட, வெட்ட வெளில நிக்க யான மேல குறி தப்பி வீசின வேலக் கையில பிடிக்கது ஒசந்தது.
குறள் 773:
பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
பகையாளிக்கு பயப்படாம இருக்க வீரத்த ஆண்மை ங்குதோம். அந்தப் பகையாளிக்கு துன்பம் வருதப்போ ஒதவுதத ஆண்மையின் உச்சம் ங்குதோம்.
குறள் 774:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
போர்க்களத்துல கையில வச்சிருந்த வேலை யானை மேல எறிஞ்சு தொரத்தி உட்டுப்போட்டு இன்னொரு வேலத் தேடிக்கிட்டு வாரவன், தன் நெஞ்சுமேல பாஞ்ச வேலப் பாத்து சந்தோசப்பட்டு அதப் புடுங்கி சண்டபோடுவான்.
குறள் 775:
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
எதிருல இருக்க பகையாளிய கோவமா பாத்துக்கிட்டிருக்குத கண்ணு அவன் வேல எறிஞ்ச சமயம் இமைச்சிதுனா அது தோத்துப் போகல்ல செய்யும்.
குறள் 776:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து
ஒரு வீரன் தான் வாழ்ந்த நாளக் கணக்குபோட்டுப் பாத்து, போரால தன் ஒடம்புல தழும்பு விழாத நாளயெல்லாம் வீணான நாள்னு வெறுத்து ஒதுக்கிப்போடுவான்.
குறள் 777:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
உசிரப்பத்திக் கவலப்படாம தன்னயச் சுத்தி பரவி இருக்க புகழ மட்டுமே விரும்புத வீரன் காலுல கட்டுத வீரக்கழல் தனி பெரும கொண்டது.
குறள் 778:
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்
போர்க்களத்துல உசிரப்பத்தி கவலப்படாம சண்டபோடுத வீர மறவன், ராசா கோவப்பட்டு வேண்டாம்னு தடுத்தாலும் தன் வீரத்துல கொறைய மாட்டான்.
குறள் 779:
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்
சபதம் செஞ்சதுக்குத் தக்கன போர்ல சாவுததுக்கு துணிஞ்ச வீரன யாராச்சும் எளக்காரமா பேச முடியுமா?
குறள் 780:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து
தன்னய நல்ல மொறையில பாத்துக்கிட்ட தலைவன் தனக்காக கண்ணீர் உடுததுகணக்கா சாவு வந்துச்சின்னா அந்தச் சாவுத வாய்ப்பு கேட்டுப்பெறுத அளவுக்கு சிறப்பானது.
(அடுத்தாப்லையும் வரும்…)