குறளின் கதிர்களாய்…(275)

செண்பக ஜெகதீசன்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது
-திருக்குறள் -1049 (நல்குரவு)
புதுக் கவிதையில்…
அனைத்தையும் எரித்துவிடும்
அணைக்கவியலா நெருப்பினிலும்,
அதற்கான மருந்து மந்திரங்கள்
துணையுடன்
அமைதியாய்த் தூங்கிடலாம்..
வாழ்வில்
வறுமை வந்தக்கால்,
வழியே இல்லை
மன அமைதியுடன்
உறங்கிடவே…!
—————————————————————————-
குறும்பாவில்…
எரியும் நெருப்பிலும்
ஏதோ வகையில் தூங்கமுடிந்தாலும்,
முடியாது வறுமையில்…!
—————————————————————————-
மரபுக் கவிதையில்…
எல்லாம் எரிக்கும் நெருப்பதுதான்
எரிந்திடும் போதே அதன்மேலே
வல்லமை மிக்கோர் மருந்துமாய
வழியது கொண்டே தூங்கிடலாம்,
எல்லாம் இழந்து வாழ்வினிலே
எதுவு மில்லா வறுமைவந்தால்,
சொல்ல முடியாச் சோதனையாய்ச்
சொற்பமும் தூங்க முடியாதே…!
—————————————————————————-
லிமரைக்கூ…
கிராமிய பாணியில்…
கொடியது கொடியது
வறும கொடியது,
வாட்டி வதைக்கும்
வறும கொடியது..
எரியிற நெருப்புல படுத்தாலும்
எப்புடியாவது தூக்கம் வந்து
எடஞ்சலு இல்லாமத் தூங்கிடலாம்,
கேடுகெட்ட வறும வந்தா
வாழ்க்கயில
கொஞ்சங்கூடத் தூக்கம் வராதே..
தெரிஞ்சிக்கோ
கொடியது கொடியது
வறும கொடியது,
வாட்டி வதைக்கும்
வறும கொடியது…!
(தொடரும்…………