வின்சன்ட் வான் கா
நியாண்டர் செல்வன்
வறுமையில் எந்தத் தொழிலும் கைவராமல் தவிக்கும் இளைஞன், கெரியரில் என்ன செய்ய முடியும்?
ஆயுள் முழுக்க அண்ணன் சம்பாத்தியத்தில் வாழ்ந்த ஒருவனால் என்ன சாதிக்க முடியும்?
15 வயதில் முயன்று கைவிட்டதை 30 வயதில் எடுத்துச் செய்து, தொடர்தோல்விகளுக்குப் பின் உலகின் மிக உன்னதமான கலைஞனாக அத்துறையில் ஆக முடியுமா?
முடியும் என நிரூபித்தார் வின்சன்ட் வான் கா…
வின்சன்ட் வான் கா.. காலம் 19ஆம் நூற்றாண்டு
ஓவியம் கற்றுக்கொள்ளலாம் என ஒவியப் பள்ளியில் 15 வயதில் சேர்ந்தார். ஓவியம் சுத்தமாக வரவில்லை. அதன்பின் விற்பனையாளர், ஆசிரியர் என என்னென்னவோ வேலை பார்த்தார். பாதிரியார் ஆக முயன்றார். தன் அத்தை மகளை மணக்க முயன்றார். அப்போது அவர் எந்த வருமானமும் இல்லாமல் இருந்தார். அவரது அண்ணன்தான் அவருக்கு உணவளித்துக் காப்பாற்றி வந்தார். இத்தகையவருக்கு எப்படிப் பெண் கொடுப்பார்கள்?
அதன்பின் மனம் வெறுத்து, ஒரு விலைமகளைக் காதலிக்க ஆரம்பித்தார். அவள் பகலில் இவருடன் வாழ்வாள். மாலையில் தொழிலுக்குப் போய்விடுவாள். அவளைத் தொழிலுக்குப் போகாமல் தடுக்கவும் இவருக்கு வருமானமில்லை. வீட்டில் விவரம் தெரிந்து கண்டபடி திட்டி, அவளை அடித்து விரட்டிவிட்டார்கள். அதன்பின் அவள் நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.
27 வயதில் அனைத்தையும் இழந்து நின்றவருக்கு வீட்டில் “இனி மேலாவது எதாவது உருப்படியாகச் செய்” என்றார்கள். இவருக்கு ஏனோ திடீர் என 15 வயதில் ஓவியம் வரைந்த நினைவு வந்தது… “நான் ஓவியன் ஆகப் போகிறேன்” என்றார். எல்லாரும் சிரித்தார்கள். அண்ணன் மட்டும் “அவன் விருப்பப்படி பண்ணட்டும். நான் தானே பணம் கொடுக்கிறேன். உங்களுக்கு என்ன” எனச் சொல்லி அவரை ஓவியப் பள்ளியில் சேர்த்தார்.
வயது முதிர்ந்த மாணவர், அங்கே இவர் மட்டுமே.. இவர் வரைந்த ஓவியங்களைப் பார்த்து அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். “10 வயது மாணவர்களுடன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து தான் நீ ஓவியம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனச் சொல்லி அவரைக் கீழ் வகுப்புக்கு அனுப்பினார்கள்
27 வயது ஆண், 10 வயது சிறுவர்களுடன் உட்கார்ந்து ஓவியம் கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும்? ஆனால் வான் கா விடவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல… பல ஆண்டுகள். அத்தனை ஆண்டுகள் கழிந்தும் ஓவியப் பள்ளியில் அவரது திறமையை ஏற்றுக்கொள்ளவில்லை. “நீ வேறு தொழிலைக் கற்றுக்கொள். ஏன் இதில் வாழ்க்கையை வீணடிக்கிறாய்” எனக் கேட்டார்கள்.
அதன்பின் கடற்கரையில் அமர்ந்து தானே ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார் வான் கா. தன்னந்தனியே பயிற்சி எடுக்கையில் ஓவியக் கலை பிடிபட்டது. அதன்பின் தன் 34ஆவது வயதில் பாரிசுக்குப் போனார். அங்கே தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்தார்.
அதை எந்தக் கண்காட்சியும் வாங்க முன்வரவில்லை என்பதால் காபிக் கடை, மளிகைக் கடை மாதிரி இடங்களுக்குக் கொடுத்துக் காட்சிப்படுத்தினார். அண்ணன் தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அவரிடம் பணம் சுத்தமாக இல்லை. ரொட்டி, கருங்காப்பி, சிகரெட்… இவற்றை மட்டுமே மாதக் கணக்கில் உண்டார். சூடான உணவை உண்டே பல மாதங்கள் ஆகியிருந்தது.
பற்கள் உதிர்ந்து, மனநிலை குன்றி, ஓவியம் வரைய மாடல்களுக்குக் கொடுக்கக் கூட காசு இல்லாத நிலையில் தன்னைத் தானே வரைந்தார். விவசாயிகள், அன்றாட வாழ்க்கையில் காணும் எளிய மக்களை வரைந்தார். இறுதியில் தன் 36ஆவது வயதில் கொடிய வறுமையில், துப்பாக்கியை எடுத்துச் சுட்டு, தற்கொலை செய்துகொண்டார்.
அதன்பின் அவரது ஓவியங்கள் பலரது கண்ணில் பட்டு, அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். டாக்டர் ஒருவருக்கு, காது வலி சிகிச்சைக்குக் கொடுக்கப் பணம் இன்றி, ஒரு ஓவியத்தைக் கொடுத்து வைத்திருந்தார். அது ஐந்து கோடி டாலருக்கு விலை போனது. அவரது ஒவ்வோர் ஓவியமும் சுமாராக 10 கோடி டாலருக்கு விற்றது.
இன்னும் இரு ஆண்டுகள் தாக்குப் பிடித்து இருந்திருந்தால், மிகப்பெரும் செல்வந்தராக ஆகியிருப்பார்.
ஆனால் அனைத்திலும் தோல்வியுற்று, வாழ்நாளின் கடைநி நிமிடம் வரை அண்ணன் சம்பாத்தியத்தில் வாழும் நிலையை அடைந்திருந்தாலும் உலகின் மிக உன்னதமான ஓவியக் கலைஞனாக ஆகித்தான் தன் உயிரை விட்டார். தான் பாடுபட்டு அடைந்த வெற்றியைச் சுவைக்க இறுதியில் அவர் உயிருடன் இருக்கவில்லை.
Photo courtesy: Wikipedia