நியாண்டர் செல்வன்

1949.. ஜப்பான்….. ஹிரோஷி யமவுச்சி (Hiroshi Yamauchi) எனும் இளைஞன்.. இளவயதில் அவன் அப்பா அவனைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போய்விட்டார். அம்மா மட்டுமே வளர்த்து வந்தார்.

கல்லூரியில் படிக்கையில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது, “உன் தாத்தா மரணப் படுக்கையில் இருக்கிறார். வந்து பார்” என.

போனால் தாத்தா அவன் கையைப் பிடித்தபடி “நான் ஒரு சீட்டுக்கட்டு உற்பத்தி செய்யும் கம்பனியை நடத்தி வருகிறேன். அதை எனக்குப் பின் நீ தான் பார்க்கவேண்டும்” என்றார்.

கம்பனி அப்போது இழப்பில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் இவனுக்கு அது தெரியாது. இளவயது வேறு. உற்சாகமாகச் சவாலை ஏற்றுக்கொண்டான்.

கம்பனிக்குப் போனால் சீட்டுக்கட்டுகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் இருந்தன. சீட்டுக்கட்டு விற்பனை குறைந்துகொண்டே வந்தது. இவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.

“இப்ப என்ன தொழிலுக்கு டிமாண்ட் இருக்கு” என நண்பர்களைக் கேட்டான்.

“சீட்டு கம்பனி நடத்துகிறாய்,. கூடவே சூதாட்டம், விபச்சாரம் எல்லாம் செய்தால் நல்ல லாபம் வரும்” என அவர்கள் ஆலோசனை கூற, இவனும் ஓட்டல்களைக் குத்தகைக்கு எடுத்து ஒருமணி நேர வாடகைக்கு விட்டு நன்றாகச் சம்பாதித்தான். இளவயது… அவனுக்கு வாய்த்த நண்பர்கள் அந்த ரகம், இவனுக்கும் பெரிய அறிவு எல்லாம் கிடையாது.

ஆனால் ஸ்ட்ரோக் வந்து படுக்கையில் கிடந்த தாத்தாவுக்கு விவரம் தெரிந்து, அவனை அழைத்துக் கண்டபடி திட்டித் தீர்க்க, “சரி வேறு ஏதாவது செய்யலாம்” எனச் சொல்லி “விஞ்ஞானிகள் தேவை” என விளம்பரம் கொடுத்தான்.

இக்கம்பனி இருந்த நகரம், க்யோட்டோ. விஞ்ஞானிகள் எல்லாம் டோக்கியோவுக்கு வேலைக்குப் போகத் தான் ஆசைப்பட்டார்கள். வந்தவர்களை இண்டர்வியூ எடுத்ததில் குன்பேய் யோகோய் என்பவன் மட்டுமே தேறினான். அவனுக்கும் பெரியதாக எதுவும் தெரியாது. அவன் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மாணவன். மதிப்பெண்கள் மிகக் குறைவு. எந்த அனுபவமும் இல்லை. அவன் கொடுத்த சம்பளத்துக்கு இவன் மட்டுமே தேறினான்.

முதலாளி, விஞ்ஞானி.. இருவரும் கல்லூரி மாணவர்கள், கம்பனி மூழ்கும் நிலையில் இருக்கிறது…… ஏதோ அதிசயம் நடக்கவேண்டும்.. நடந்தது.

“நீ போய் உன் விருப்பப்படி ஆராய்ச்சி பண்ணு. நல்லதா ஒரு பொருளைக் கண்டுபிடி. விற்கலாம்” என முதலாளி சொன்னார்.

குன்பே யோகோய், லேபுக்கு போனான். அங்கே போர் அடித்ததால் நீளமான குச்சியை எடுத்து, செயற்கைக் கை ஒன்றைப் பதித்து, அதை வைத்துத் தூரத்தில் இருக்கும் பொருட்களை எடுக்க முயற்சி செய்துகொண்டு இருந்தான்.

ஜன்னல் வழியே பார்த்த முதலாளி, “வாடா என் ஆபிசுக்கு” என்றார்.

“சரி வேலை காலி” என நினைத்து பயந்தபடி உள்ளே போக “இப்ப செஞ்சு விளையாடினாயே ஒரு கை? அதை விற்பனைக்கு விட்டால் என்ன?”

“நல்ல ஆலோசனையா இருக்கே..”

“சும்மா கை மட்டும் போதாது. அதுக்கு வாகா கலர் பந்தையும் தயார் பண்ணு. தூரத்தே இருக்கும் பொருட்களை எடுக்கலாம்னு சொல்லி… விற்கலாம்”

அந்தப் பொம்மை, சந்தையில் சக்கைபோடு போட்டது. பெரிய கம்பனிகள் இக்கம்பனியை நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தன.

அதன்பின் விஞ்ஞானி ஒரு நாள், முதலாளி ஆபிசுக்கு வந்தார்.

“மெட்ரோ ரயிலில் வருகையில் பார்த்தேன். ஜப்பானில் எல்லாரும் தினம் 1- 2 மணிநேரம் பயணித்துத் தான் ஆபிசுக்கு வருகிறார்கள். ரயிலில் வருகையில் பயங்கரமாக போர் அடிக்கிறது. ஒருத்தன் கால்குலேட்டரை வைத்து அமுக்கிக்கொண்டே வந்தான். அப்போது எனக்கு அந்த ஆலோசனை தோன்றியது. கால்குலேட்டர் கம்பனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம். கால்குலேட்டர் உருவில் கையில் வைத்து விளையாடுவது மாதிரியான கருவி ஒன்றைச் செய்து விற்றால் என்ன? ரயில் பயணிகள் ஏராளமாக வாங்குவார்கள்..”

ஷார்ப் எனும் கால்குலேட்டர் கம்பனியைப் பிடித்தார்கள். ஐடியாவைச் சொன்னதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “ஏம்ப்பா ஆபிசுக்கு போகிறவன் எத்தனை டென்சன்ல போவான்? அவனுக்கு விளையாட்டுப் பொம்மையா? பெரியவங்க எல்லாம் பொம்மையை வெச்சு விளையாடுவாங்களா? சரி. அது உன் கவலை…. பணம் கொடு. நாங்க தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்…”

கேம்பாய் எனும் அக்கருவி வெளிவந்து விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல் ஆண்டில் 4.3 கோடி பொம்மைகள் விற்றுத் தீர்ந்தன. ரயிலில் போகையில் அது இல்லாமல் போக முடியாது எனும் அளவுக்கு மக்கள் அதற்கு அடிமை ஆனார்கள். அதன் பல்வேறு வெர்சன்களைக் கொண்டு வந்து விற்க, ஒவ்வொன்றையும் மக்கள் பைத்தியம் பிடித்தது போல வாங்கினார்கள்.

அதன்பின் சர்வதேச ஆர்டர்கள் குவிய, கம்பனி பன்னாட்டு நிறுவனம் ஆனது…

அக்கம்பனி நின்டென்டோ (Nintendo)….

எதுவும் தெரியாத இரு கல்லூரி மாணவர்கள் இணைந்து செய்த சாதனை இது.

இருவருக்கும் இருந்தது எதாவது செய்து முன்னேற வேண்டும் எனும் துடிப்பும், அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அதில் பல முட்டாள்தனங்களைச் செய்தார்கள். விபச்சார விடுதி நடத்தியது மாதிரியான முட்டாள்தனம் தான், செயற்கைக் கையை விற்றதும், கேம்பாயை விற்றதும். ஆனால் நூறு முட்டாள்தனங்களைச் செய்தால் தான் ஒரு நல்ல விசயத்தை நமக்கே தெரியாமல் செய்வோம். அது ஜீனியஸ் ஸ்ட்ரோக் ஆக இருக்கும்… நம்மை அது எங்கோ கொண்டுபோய்விடும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *