இந்த வார வல்லமையாளராக சூப்பர்ஸ்டார் என மக்களால் அன்புடன் அழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

கர்நாடகாவில் பிறந்த மராட்டியர். வசிப்பது சென்னையில், மணமுடித்தது தமிழச்சியை. இப்படி மாநில எல்லைகளை தாண்டி மக்களால் சொந்தம் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி. இந்தியாவெங்கும் படங்களின் வெற்றி, தோல்வியை தாண்டி தன் நடிப்புக்காக ரசிக்கபடுபவர். கண்டக்டர் வேலையில் இருந்து சூப்பர்ஸ்டார் ஆக உயர்ந்தவர். அத்துடன் நிறுத்திக்கொண்டிருந்தாலே அது வாழ்நாள் சாதனையாக அமையும். ஆனால் அதையும் தாண்டி 1996ல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அதன்பின் தற்போது அரசியலிலும் நுழைந்துவிட்டார். இவ்வாரம் இவரது காலா டீசர் வெளியாகி, இவரது அரசியல் நுழைவின் முதல் அடியும் எடுத்து வைக்கபட்டிருப்பதால் செய்திகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

திரையுலகில் சூப்பர்ஸ்டாராக மட்டுமே இவரை இன்றைய தலைமுறை அறியும் என்றாலும் இவரது நடிப்பாற்றலை எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபதுவரை, அவள் அப்படித்தான் போன்ற படங்களில் நாம் கண்டோம். முரட்டுக்காளையில் தனக்கென ஒரு தனிப்பாதை அமைத்து மேலேறியவர் அதன்பின் அடுத்த 30 ஆண்டுகளில் அதை ராஜபாட்டையாக அமைத்து சூப்பர்ஸ்டாராக பரிணமித்தார். கபாலியில் அந்த பழைய ரஜினியை மீண்டும் கண்டோம். அதே ரஜினியை மீண்டும் காலாவில் காண இருக்கிறோம். அத்துடன் அரசியல்வாதி எனும் அவரது புதிய பரிணாமத்தையும் காண இருக்கிறோம்.

அவரது அரசியலுக்கு நாம் அளிக்கும் அங்கீகாரம் அல்ல இது. ஆனால் அவரது வாழ்க்கை சரிதத்தை எழுதுகையில் இதை குறிப்பிடாமல் எழுத முடியாது அல்லவா?

எம்ஜிஆர், சாவித்திரி, சிவாஜிக்கு பின் திரிசூலங்களாக தமிழ் திரையுலகிற்கு கிடைத்தவர்கள் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூவர். மூவரும் நடிப்பில் புகழின் உச்சியை எட்டிய நிலையில் அதன் அடுத்தகட்டமாக கமலும், ரஜினியும் அரசியலில் புகுந்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி என இதற்கு முந்தைய தலைமுறையின் இரு சூப்பர்ஸ்டார்களும் ஒரே சமயத்தில் அரசியலில் இருந்தும் அதில் எம்ஜிஆர் மட்டுமே ஜொலிக்க முடிந்தது. இம்முறையும் அதுவே நிகழுமா அல்லது இருவருமே ஜொலிக்காமல் போவது நிகழுமா என்பது வழக்கம் போல மக்களின் கையில் தான் உள்ளது.

நம்மளவில் தன் நடிப்புலக வாழ்வின் உச்சத்தையும், அரசியல்வாழ்வின் முதல்படியிலும் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினியை வருங்கால தலைமுறைக்கு ஆதர்சமாக இருப்பவர் எனும் நோக்கில் பாராட்டி வல்லமையாளர் விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (264)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.