சாதித்துக் காட்டிய சாரா ப்ளேக்லி (Sara Blakeley)

0
நியாண்டர் செல்வன்

12ஆவது முடித்தபின் சட்டப் படிப்பில் சேரலாம் என நினைத்தேன். மதிப்பெண் குறைவாக இருந்தது. அதனால் டிஸ்னிலாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் வேலையில் சேர்ந்தேன். ஸ்டாண்ட் அப் காமடியை முயன்றேன். அதன்பின் பேக்ஸ் மெசின் விற்கும் கம்பனியில் சேர்ந்து கடை, கடையாக ஏறி பேக்ஸ் மெஷின் விற்றேன். அது நிலையான வேலை இல்லை. விற்பனையைப் பொறுத்துத் தான் வருமானம்.

பெண் என்பதால் விரைவில் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிடுவேன் எனத்தான் வீட்டில் நினைத்தார்கள். காதலனும் விரைவில் திருமணம் செய்யலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில் ஒரு நாள் பார்ட்டி ஒன்றுக்கு சீ த்ரூ வெள்ளை ஸ்கர்ட் அணிந்து போக வேண்டும். அதற்கு டைட்டான கருப்பு உள்ளாடை அணிந்து போனால் பின்புறம் எடுப்பாகத் தெரியும் என நினைத்தேன். சந்தையில் அப்படி எந்தப் பொருளும் இல்லை. நாமே தைத்தால் என்ன என யோசித்து பார்ட்டிக்குக் கூட போகாமல் உட்கார்ந்து தைத்தேன். நல்ல எடுப்பாக இருந்ததாக எல்லாரும் சொன்னார்கள்.

இந்த உள்ளாடையைச் சந்தைக்கு கொண்டுவந்தால் என்ன எனத் தோன்றியது. ஆனால் கையில் பணம் இல்லை. தொடர்புகள் இல்லை. நான் ஒரு சாதாரண பேக்ஸ் மெசின் விற்பனைப் பிரதிநிதிதான். பொருளை உற்பத்தி செய்யக்கூட ஒரு பாக்டரி அவசியம். கையில் விதவிதமான சாம்பிள்கள் இல்லாமல் எப்படி துணிக்கடைகளை அணுக முடியும்?

வார இறுதி நாட்களில் துணி உற்பத்தி செய்யும் மில்களுக்குப் படையெடுத்தேன். என் ஐடியாவை உட்கார்ந்து கேட்கக்கூட யாரும் முன்வரவில்லை. அதன்பின் அந்த ஸ்பின்னிங் மில் முதலாளிகள், உணவு இடைவேளையில் வெளிவரும் நேரம், ஆபிஸில் காரில் ஏறும் நேரம் எனப் பார்த்துப் பிடித்து என் ஐடியாவை விளக்க நேரம் கேட்டேன். பத்து நொடிகள்தான் கிடைக்கும். அந்த 10 நொடிகளுக்குள் அவர்களைச் சிரிக்கவைத்தால் இன்னும் 10 நொடி கூடுதலாகக் கிடைக்கும். ஐடியாவை கேட்ட அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். “இதெல்லாம் மிக எளிமையான உள்ளாடை. விற்காது. விற்றாலும் யார் வேண்டுமானாலும் காப்பியடித்து எளிதில் போட்டிக்கு வந்துவிடுவார்கள்” என்றார்கள். அவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்களுக்கு இம்மாதிரி உருவத் தோற்றத்தை மேம்படுத்தும் பொருள்கள் எத்தனை முக்கியம் என அவர்களுக்குத் தெரியவில்லை.

பல மாதங்கள் முயன்றபின் ஒரு மில் முதலாளியைச் சந்தித்தேன். அவருடன் 1 நிமிடம் மட்டுமே பேசினேன். முதலாளி ஐடியாவைக் கேட்டுவிட்டு, முடியாது என்றார். விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். காரில் ஏறுகையில் அழுகையாக வந்தது…. அப்போது அவர் பின்னால் வந்தார். “எனக்கு மூன்று பெண்கள். உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. உனக்கு சாம்பிள்கள் தயாரித்துக் கொடுக்கிறேன். அதன்பின் உன் அதிர்ஷ்டம்” என்றார்.

அதன்பின் கையில் இருந்த $750 போட்டு சின்னதாக கம்பனி ஒன்றைப் பதிவு செய்தேன். ஸ்பான்க்ஸ் எனும் பிரண்டு பெயரையும் பதிவு செய்தேன். துணிக்கடை ஒன்றில் சாம்பிள்களைக் காட்டிச் சின்னதாக ஆர்டர் ஒன்றை வாங்கினேன். அது மிகப்பெரும் செயின். உள்ளூரில் உள்ள ஒரு கடையில் இதை விற்க முன்வந்தார்கள். பொருளைக் கொடுத்ததுடன் கடமை முடிந்தது என இருக்காமல் கடைக்குப் போய் அங்கே வரும் வாடிக்கையாளரிடம் என் பொருளை நானே டெமாண்ஸ்ட்ரேட் செய்து விற்றேன்.

கொஞ்சம், கொஞ்சமாக விற்பனை சூடு பிடித்தது. அதன்பின் என் வேலையை விட்டுவிட்டு, துணிக்கடையில் தவமிருந்து பொருளை விற்றேன். விற்பனை சூடுபிடிக்க, பிற கிளைகளில் விற்க முன்வந்தார்கள். அங்கெல்லாம் சென்று பொருளை நானே கடையில் நின்று விற்றேன். முதலாண்டு $4 மில்லியன் அளவுக்கு விற்பனை.

அதுவரை வீட்டில் நான் இதை எல்லாம் செய்ததே யாருக்கும் தெரியாது. நண்பர்களுக்குத் தெரியாது. காதலனுக்குத் தெரியாது. சொல்லியிருந்தால் “எதுக்கு வெட்டி வேலை? இருக்கும் வேலையைப் பார். கல்யாணம் செய்துகொள், இது எல்லாம் உருப்படாது” எனத்தான் சொல்லியிருப்பார்கள்.

ஆனால் முதலாண்டில் $4 மில்லியன் விற்பனையைச் சாதித்தபின் வீட்டில் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தாலும், அதன்பின் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு உதவ முன்வந்தார்கள். கையில் இருக்கும் பணத்தைப் புரட்டிக் கொடுத்தார்கள். காதலன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரம் என் கம்பனியில் பணியாற்றினார். இரண்டாமாண்டு $10 மில்லியன் விற்பனை. பிராண்டு வளர்ந்தது. விளம்பரம் செய்தோம். பல கடைகளை அணுகினோம். ஏழாம் ஆண்டில் என் 30ஆவது வயதில் என் முதல் பில்லியன் டாலரைச் சம்பாதித்தேன்.

போர்ப்ஸ் பத்திரிகை, என்னை உலகின் 93ஆவது வலிமை வாய்ந்த பெண்ணாகத் தேர்ந்தெடுத்தது. இன்று என் கம்பனி, விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. எனக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

டிஸ்னிலாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் பணியில் இருந்த, பள்ளி இறுதியை மட்டுமே தொட்ட ஒரு பெண்ணால் 30 வயதில் பில்லியனர் ஆக முடிகிறது என்றால் உங்களால் ஏன் நீங்கள் விரும்பும் உயரத்தைத் தொட முடியாது?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *