Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

பல்கலை வல்ல நல்லறிஞர் – மயிலை சீனி வேங்கடசாமி

மேகலா இராமமூர்த்தி

செவ்விலக்கியங்களையும் ஒல்காப் புகழுக்குரிய இலக்கண நூலான தொல்காப்பியத்தையும் படைத்தளித்த பண்டைத் தமிழர்கள் தமிழ்நாட்டு வரலாற்றை ஏனோ முறையாகத் தொகுத்து  ஆவணப்படுத்தவில்லை. அதனால் அவ்விலக்கிய இலக்கண நூல்களிலுள்ள பாடல்களைக் கொண்டே அன்றைய தமிழகத்தை நாம் ஊகித்தறிய வேண்டியிருக்கின்றது.

பிற்காலப் பல்லவர் காலந்தொடங்கிக் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் போன்றவற்றில் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளைப் பொறித்து வைக்கும்  வழக்கம் அரசர்களால் தொடங்கப்பட்டதாகத் தெரிகின்றது. பிற்காலச் சோழர்கள் காலத்தில்  மேலும் அதிக எண்ணிக்கையிலான கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் பொறித்து வைக்கப்பட்டன.

நம் வரலாற்றை அறிய, இக்கல்வெட்டுகளும் பட்டயங்களும் பேருதவி புரிகின்றன என்பதில் ஐயமில்லை. எனினும், இவற்றைப் படித்தறிய இன்றைய தமிழ் எழுத்துகளை மட்டும் ஒருவர் அறிந்திருந்தால் போதா. அன்றைய தமிழ் எழுத்துமுறைகளையும் நன்கு அறிந்திருத்தல் அவசியம். அவ்வகையில் தம்முடைய ஆழங்காற்பட்ட தமிழிலக்கியப் புலமையாலும், கல்வெட்டுகளைப் படித்தறியும் பயிற்சியாலும், பன்மொழித் திறத்தாலும் அன்றைய தமிழகம் குறித்த பல அரிய தகவல்களைத் தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த பெருமைக்குரியவர் மயிலை சீனி வேங்கடசாமி எனும் ஆய்வியல் அறிஞராவார்.

சென்னையிலுள்ள மயிலாப்பூரில் 1900, திசம்பர் 16-இல் பிறந்தார்  வேங்கடசாமி. அவருடைய தந்தையார் ஒரு சித்த மருத்துவர்; அத்தோடு பழந்தமிழ் ஓலைச் சுவடிகளையும், நூல்களையும் தேடித் தேடிச் சேகரித்து வாசிக்கும் பழக்கம் கொண்டவராகவும் அவர் இருந்திருக்கின்றார். ஆகையால், ’தந்தையர் ஒப்பர் மக்கள்’ எனும் நன்மொழிக்கேற்ப இளமையிலேயே வேங்கடசாமிக்கும் தமிழில் அளவற்ற பற்று ஏற்பட்டுவிட்டது. வேங்கடசாமியின் உடன்பிறப்புகளில் அவருடைய மூத்த அண்ணன், தந்தையைப் போலவே சித்த மருத்துவரானார். இரண்டாவது அண்ணனான சீனி. கோவிந்தராசன் நல்ல தமிழறிஞராய்த் திகழ்ந்தார். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை அவர் எழுதியதாகத் தெரிகின்றது. தொடக்கத்தில் தம் தமையனார் கோவிந்தராசனிடம் தமிழ் பயின்ற வேங்கடசாமி, பின்னர் மகாவித்துவான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் கற்றார். தமது இருபதாவது அகவைக்குள்ளாகவே தமிழிலுள்ள இலக்கண இலக்கிய நூல்களையெல்லாம் தாம் அறிந்துகொண்டுவிட்டது பற்றித் தம்முடைய 19ஆம் நூற்றாண்டில் தமிழிலக்கிய வரலாறு” எனும் நூலின் முகவுரையில் மயிலையாரே குறிப்பிட்டிருக்கக் காண்கிறோம்.

ஓவியக் கலையிலும் ஈடுபாடுகொண்டிருந்த அவர் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். நீதிக் கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய வேங்கடசாமி, குடிஅரசு, ஊழியன், செந்தமிழ், ஆனந்த போதினி, ஈழகேசரி உள்ளிட்ட பல இதழ்களில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்

தமது விடுமுறை நாள்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மயிலை வேங்கடசாமி,  தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்து, பிராமி, கிரந்தம், தமிழ் என எந்த எழுத்துமுறையில் அமைந்த கல்வெட்டையும் படித்தறியும் திறன்பெற்றார். தமிழோடு ஆங்கிலம், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், பாலி எனப் பலமொழிகளும் பயின்று பன்மொழி வித்தகரானார்.

பிற வரலாற்றாய்வாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, பௌத்தக் கோயில்களையும், அவை சார்ந்த தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தவர் மயிலையார் என்பது எண்ணத்தக்கது. இவருடைய படைப்புகளாக 33 தமிழ்நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்கின்றன. பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், கிறித்துவமும் தமிழும், மறைந்துபோன தமிழ்நூல்கள், களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,
கொங்குநாட்டு வரலாறு, சமயங்கள் வளர்த்த தமிழ், பழங்காலத் தமிழ் வணிகம், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் போன்றவை அவற்றில் சில. இவற்றில் ஒவ்வொரு நூலும் அருங்கருத்துகளைத் தாங்கி நிற்கும் பெருந்தகவல்களஞ்சியம் எனில் மிகையில்லை.

“மறைந்துபோன தமிழ்நூல்கள்” எனும் தம் நூலில் இருபதாம் நூற்றாண்டில் கிட்டாமற்போன தமிழ்நூல்கள் பலவற்றின் பட்டியலையும் அவற்றில் இடம்பெற்றிருந்த சில பாடல்களையும் அரிதின் முயன்று திரட்டித் தந்துள்ளார் வேங்கடசாமி. அவ்வாறு அவர் தேடித் தந்திருக்கும் அற்புதமான ஒருநூல் தகடூர் யாத்திரை. இன்றைய தருமபுரி மாவட்டமே அன்றைய தகடூர். அதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த குறுநில மன்னனான அதியமான் நெடுமானஞ்சிக்கும், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் தகடூரில் நடைபெற்ற போர்குறித்த செய்திகளைச் சிறப்பாக பேசும் நூல் இது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூலில் நூற்றுக்கணக்கான பாடல்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது நமக்குக் கிடைப்பவையோ 48 செய்யுட்கள் மட்டுமே. அரிசில்கிழார், பொன்முடியார் போன்ற சிறந்த புலவர்களின் பாடல்கள் இதில் உள்ளன.

பண்டைத் தமிழகத்தின் சமூக நிலையையும், வரலாற்றையும், அரசியல் அமைப்பையும் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவக்கூடிய செய்யுள் வடிவிலிருந்த சாசனங்களையும், செப்புப் பட்டயங்களையும், கல்வெட்டுகளையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்கு விளக்கங்களும் குறிப்புகளும் எழுதி ”சாசனச் செய்யுள் மஞ்சரி” எனும் நூலாக ஆக்கி அதனைச் சாகித்திய அகாதமியின் ஆதரவோடு மயிலையார் வெளியிட்டிருப்பது மகத்தான பணியாகும்.

”பௌத்தமும் தமிழும்” எனும் தம்முடைய ஆய்வு நூலில் பௌத்த மதமானது அசோகர் காலமான கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த வரலாற்றையும், அசோகருடைய உறவினராகிய மகேந்திரரும் அவரோடு வந்த பிக்குகளுமே அதைப் பரப்பியவர்கள் என்றும் குறிப்பிடும் மயிலை வேங்கடசாமி, அதே காலக்கட்டத்தில் வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த பிற சமயங்கள் பூரணனை வழிபட்டொழுகும் ஆசீவகம், அருகனை ஏத்தும் ஆருகதம் எனப்படும் ஜைனம், பிராமண சமயம் எனப்படும் வைதிகம் ஆகியன என்று குறிப்பிடுகிறார்.

பௌத்தத்தை உருவாக்கிய சாக்கிய புத்தரும், ஜைனத்தைத் தோற்றுவித்த வர்த்தமான மகாவீரரும், ஆசீவகத்தைத் தோன்றச் செய்த மக்கலிபுத்திரரும் சம காலத்தவரே. இம்மதங்கள் உருவான அதே காலத்தில் வைதிக மதமும் செல்வாக்கோடு இருந்தது. வடநாட்டைச் சேர்ந்த இந்த நான்கு மதங்களும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் தமிழகத்துள் நுழைந்தன என்கிறார் மயிலையார்.

அப்போது இவற்றினின்றும் வேறான மதத்தைத் தமிழ்நாட்டுத் தமிழர் மேற்கொண்டிருந்தனர். தமிழகத்துள் நுழைந்த இந்நான்கு மதங்களும் ஒன்றையொன்று இழித்தும் பழித்தும் பேசி, சமயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் வாழ்ந்துவந்த தமிழர்களிடையே சமயப் பூசலைக் கிளப்பிவிட்டன. தமிழக மக்களிடையே செல்வாக்குப் பெறும் போட்டியில் முதலில் வெற்றிபெற்றது பௌத்தமே ஆகும். ஏனைய மதங்களோடு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே பின்னடைவைச் சந்தித்த மதம் ஆசீவகம். எனவே வைதிகம், ஜைனம், பௌத்தம் எனும் மும்மதங்களுக்கிடையே மட்டும் சில காலம் சமயப்போர் நிகழ்ந்துவந்தது.

இந்த மும்முனைப் போட்டியில் அடுத்து தோல்வியைச் சந்தித்தது பௌத்தம். அதற்கான முதன்மைக் காரணம் பௌத்தம் தனது புறப்பகையான ஜைனத்தையும், வைதிகத்தையும் எதிர்த்துவந்த வேளையில் அதற்குள்ளேயே  ஈன யானம், மகா யானம் எனும் பெரும் பிரிவுகளும், அவை சார்ந்த உட்பிரிவுகளாகச் சிராவகயானம், மகாயானம், மத்திரயானம் போன்றவையும் தோன்றியதே. ’ஐயுறும் அமணரும், அறுவகைத் தேரரும்’ எனும் திருஞானசம்பந்தர் தேவாரத்தால் பௌத்தத்தில் ஆறுவகைப் பிரிவினரான தேரர்கள் (தேரர்கள் = பௌத்த பிக்குகள்) இருந்ததை அறிகின்றோம். இந்த உட்பிரிவினர் தமக்குள்ளும் ஓயாது வாதுசெய்து போரிட்டனர். புறப்பகை போதாவென்று ’உடன்பிறந்தே கொல்லும் வியாதி’யான அகப்பகையும் சேர்ந்ததால் பௌத்தம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.

அன்றியும் பொதுமக்களிடமிருந்தும் அரசிடமிருந்தும் கிடைத்த அளவற்ற செல்வத்தால் பௌத்த விகாரைகளில் வசித்த பிக்குகளும் தங்கள் தூய கடமைகளை மறந்து செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கினர். தம் நெறிதவறிய நடத்தையால் மக்களிடமிருந்த நன்மதிப்பையும் செல்வாக்கையும் இழந்தனர் அவர்கள். இக்காரணங்களால் தமிழகத்தில் நன்கு வளர்ந்துவந்த பௌத்தம் வீழ்ந்துபட்டது என்கிறார்.

ஈதொப்பவே, ”சணமும் தமிழும்” எனும் தம்முடைய மற்றோர் ஆராய்ச்சி நூலில் தமிழகத்தில் சமணத்தின் வளர்ச்சி வீழ்ச்சி குறித்துப் பரக்கப் பேசுகின்றார் சீனி வேங்கடசாமி. தென்னாடு வந்த பத்திரபாகு எனும் சமண முனிவரின் சீடரான விசாகமுனிவர் மூலமாகவே தமிழகத்தில் சமணம் பரவியது என்பதையும் ஜினர்களைக் கடவுளாகக் கொண்ட மதம் என்பதால் இது ஜைனமதம் என்றானதையும் நமக்கு அறியத் தருகின்றார் அவர்.

சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன அவை. சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்று பொருள். எனவே இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வெண்ணிற ஆடை உடுத்துவர். இவர்தம் ஆலயங்களிலுள்ள தீர்த்தங்கரர்களுக்கும் வெண்ணிற ஆடை அணிவிப்பர். திகம்பரம் (திக்+அம்பரம்) என்பதற்குத் திசைகளே ஆடை என்று பொருள். அதற்கேற்ப இப்பிரிவைச் சேர்ந்தவர்களும் திசைகளை ஆடையாக அதாவது எவ்வித உடையும் அணியாமல் அம்மணமாகவே இருப்பர். இவர்கள் கோவணம்கூட உடுத்துவதில்லை. இவர்களின் ஆலயங்களிலுள்ள தீர்த்தங்கரர்களுக்கும் இவர்கள் உடைகள் ஏதும் அணிவிப்பதில்லை. ஸ்தானவாசிகளுக்கு உருவ வழிபாட்டில் உடன்பாடில்லை. ஆதலால், அவர்கள் சமண ஆகம நூல்களையே அருகக் கடவுளாய்ப் பாவித்து வணங்குவர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தோர் திகம்பர சமணர்களே!

சமணர்கள் அனைவரும் துறவுநெறி மேற்கொண்டோர் அல்லர். அவர்களில் இல்லறவாசிகளும் உண்டு. அவர்களை சிராவகர் (சாவகர்) என்று குறிப்பர். இல்லறத்தை மேற்கொள்பவர் ஆயினும் அவர்களுக்கும் கடுமையான நெறிமுறைகளைச் சமணம் விதித்தே இருந்தது.

சிராவகர் பத்து ஒழுக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும். அவை: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை நயவாமை, பொருள் ஈட்டுவதில் வரையறை எனும் அணுவிரதம் ஐந்து. கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவு நேரத்தில் உண்ணாமை எனும் உண்ணாமைக் கொள்கைகள் நான்கு. பெரியோரை வணங்குதல் எனும் உயர்பண்பு; ஆகமொத்தம் பத்து ஒழுக்கங்கள்.

நன்னெறிகளும் நல்லொழுக்கங்களுமே இரு கண்களாகக் கொண்டு சமைக்கப்பட்ட சமணம், தமிழ் இலக்கிய இலக்கணத்துக்கும் அருந்தொண்டாற்றியிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தில் பெருவளர்ச்சி கண்ட சமணம் வீழ்ச்சியடைந்ததற்கான கரணியங்களையும் நுட்பமாய் ஆய்ந்திருக்கும் மயிலையார், பண்டைத் தமிழர் மதமும், வடநாட்டு வைதிக மதமும் கடவுளர் விஷயத்தில் சில கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தித் தம்முள் சமரசம் செய்துகொண்டன. அத்தோடு அவை ஒன்றுபட்டு தமிழகத்தில் ’பக்தி இயக்கத்தை’ முன்னெடுத்தன.

கிபி 7, 8-ஆம் நூற்றாண்டுகளில் பெரு வளர்ச்சிகண்ட இவ்வியக்கத்தை மக்களிடையே மகத்தான வெற்றிபெறச் செய்த பெருமை சைவ சமய நாயன்மார்களையும், வைணவ சமய ஆழ்வார்களையுமே சாரும். அவர்கள் வெகுமக்கள் கடைப்பிடித்தற்கேற்ற எளிய வாழ்வியல் நெறிகளையும், இல்லறத்திலிருந்தபடியே பக்தி வாயிலாய் முக்தி அடைவதற்கான எளிய வழிகளையும் தாம் போகுமிடமெல்லாம் தம் பாடல்கள்வழிப் பரப்புரை செய்யவே, அவற்றால் ஈர்க்கப்பட்ட மக்கள், கடைப்பிடிப்பதற்குக் கடினமாயிருந்த பௌத்த சமணக் கோட்பாடுகளைக் கைவிட்டு, சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றுவாராயினர்.

அக்காலச் சூழலில் சமண பௌத்தர்களில் பலருங்கூட சைவ வைணவ மதங்களைப் பின்பற்றி ஒழுகத் தலைப்பட்டனர்… ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று சொல்வது பொருத்தம். இவ்வாறு புதிதாகச் சைவ வைணவ சமயங்களில் தம்மை இணைத்துக் கொண்ட சமணரும் பௌத்தரும் தம்முடைய அவைதிக நெறிகள், ஒழுக்கங்கள் போன்றவற்றைச் சைவ வைணவ மதங்களில் கலந்தனர். அவ்வாறு கலந்தவையே இப்போது ’இந்து மதத்தில்’ காணக் கிடைக்கும் சமண பௌத்தப் பண்பாடுகளும் அவற்றின் கூறுகளும் என்பதையெல்லாம் தம் நூலறிவாலும் தமிழகமெங்கும் பயணப்பட்டுத் திரட்டிய பட்டறிவாலும் நன்குணர்ந்த மயிலை சீனி வேங்கடசாமி, அக்கருத்துகளை இவ்விரு நூல்களிலும் பதிவுசெய்திருக்கின்றார்.

”களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” எனும் மற்றொரு நூலில், களப்பிரர் என்றும் களப்பாளர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவோர் வடநாட்டார் அல்லர்; அவர்கள் கன்னட வடுகரே என்கிறார். இவர்கள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். இவர்களில் பெரும்பாலோர் சமண சமயத்தை ஆதரித்தோராகவும், சிறுபான்மை பௌத்த ஆதரவாளர்களாகவும், ஓரிருவர் சைவ வைணவ நெறிபற்றி ஒழுகியோராகவும் இருந்தனர் என்று கூறும் ஆசிரியர், இந்நூலில் திரட்டித் தந்திருக்கும் செய்திகள் களப்பிரர் காலம் இருண்ட காலமன்று நீதிநூற்களையும் தமிழில் பாடல்கள் இயற்றுவதற்குப் புதிய பா வகைகளையும் அறிமுகப்படுத்திய ஒளிமிகு காலமே என்பதை நிறுவுகின்றன.

இவ்வாறு தம் வாணாள் முழுவதையும் இலக்கிய, வரலாற்று ஆராய்ச்சியிலும் அவை சார்ந்த நூல்கள் எழுதுவதிலுமே செலவிட்ட மயிலை சீனி வேங்கடசாமி, 1980-இல் தம் எண்பதாம் அகவையில் பொன்னுடல் நீத்துப் புகழுடல் கொண்டார்.

இப்பேரறிஞரைப் ப(போ)ற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடல் இவரின் நிகரற்ற தமிழ்த்தொண்டுக்குக் கட்டியம் கூறுவதாகும்.

”தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்”

மயிலை தந்த மகத்தான அறிஞரான சீனி வேங்கடசாமியின் தன்னேரிலாத தமிழ்ப் பணிகளும், அருமையான ஆராய்ச்சி நூல்களும் அவருடைய பல்துறைத் திறனையும், நுண்மாண் நுழைபுலத்தையும் அறிவுலகில் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பது துணிபு.

*****

கட்டுரைக்கு உதவியவை:

  1. சமணமும் தமிழும் – பதிப்பு வீ. அரசு
  2. பௌத்தமும் தமிழும் – பதிப்பு வீ. அரசு
  3. மறைந்துபோன தமிழ் நூல்கள் –பதிப்பு வீ. அரசு
  4. தமிழ் இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு – பதிப்பு வீ. அரசு
  5. https://ta.wikipedia.org/wiki/மயிலை_சீனி._வேங்கடசாமி

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க