சேக்கிழார் பா நயம் – 42
திருச்சி புலவர் இராமமூர்த்தி
———————————————–
சுந்தரர் தில்லைத் திருத்தலத்தில் கூத்தப் பிரான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் . அப்போது தூக்கிய திருவடியை உடைய கூத்தப் பிரான் திருவருளால் வானில் ஓர் ஒலி எழுந்தது! அவ்வொலி சிவபிரான் வழங்கிய அருளொலியே யாகும் ‘’முத்துக்களை அலைத்து வரும் காவிரியால், பெருகிய வளமுடைய வயல்கள் சூழ்ந்த திருவாரூரிலே நம்மிடம் வருக!’’ என்ற நாதத்தைக் கேட்டதும், அதனை உணர்ந்து கொண்டு எழுந்தார். இதனைச் சேக்கிழார்,
‘’எடுத்தசே வடியா ரருளினார் ‘தரளம் எறிபுனன் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணை ஆ ரூரில் வருகநம் பா’லென வானில்
அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதங் கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.’’
என்று பாடினார். அதன்பின்னர் சுந்தரர் கொள்ளிடம் , திருக்கோலக்கா, திருப்புன்கூர் ஆகிய தலங்களைக் கடந்து திருவாரூரின் எல்லைப் புறத்திலே வந்து நின்றார்! அந்த நேரத்தில் ஆழித் தேரால் புகழ்பெற்ற திருவாரூரில் வாழ்ந்த அடியார்களை நோக்கிச் சிவபெருமான், ‘’என்றும் குறையாத பக்தியுடைய நம் ‘’ ஆரூரன்’’ என்ற சிறப்புப்பெயர் பெற்ற சுந்தரர், நாம் அன்புடன் அழைக்கக் கேட்டு , இவ்வூருக்கு வந்துள்ளான்! அவனை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவருக!’’ என்று கட்டளையிட்டார்! இதனைச் சேக்கிழார்,
‘’தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வாருக்கு
ஆராத காதலின்நம் ஆரூரன் நாம்அழைக்க
வாராநின் றான்அவனை மகிழ்ந்தெதிர் கொள்வீர் ‘’
என்று பாடினார். அவ்வாறே அடியார்கள் சுந்தரரின் சிறப்புக்களைப் போற்றி , அவர் முன் சென்று அவரை எதிர் கொண்டு வரவேற்று வணங்கினர்! அவர்களை நம் வன்றொண்டராகிய சுந்தரர் தாமும் கரங்களைக் குவித்து வணங்கியவாறே , அத்திருவாரூர்த் திருவீதியில் ஆலயம் நோக்கிச் சென்றார். அப்போது அவர் தம்மை எதிர்கொண்டழைத்த சிவனடியார்களை நோக்கி, ‘’ எம் தந்தையாகிய பெருமான் எழுந்தருளிச் சிறப்பிப்பதும் இந்தத்திருவாரூரோ? அப்பெருமான் மிகவும் எளியவனாகிய என்னையும் ஆட்கொள்வாரோ? ‘’ என்பதை அவர் திருமுன் சென்று கேட்டுச் சொல்க!’’ என்றுவேண்டினார்! இந்த வேண்டுகோளையே ஈற்றடிகளில் அமைத்து பதிகம்பாடினார்.
‘’வாயிற்புறத்துத் தம் முன் வந்து தம்மை யெதிர்கொண்டு வணங்குபவர்களாகிய திருவா ரூரின் அடியவர்களை, அவர் தம்மை வணங்குதற்கு முன்னரே தாம் கை குவித்து வணங்கி அவர்களுடன் கலந்து வந்து இருதிறத்தார்க்கும் மனமகிழச்சி பொங்க முன்னே சொன்ன வாறு தம்மை வரவேற்க அலங்கரிக்கப்பெற்று விளங்கும் திருவீதியினுள்ளே செல்வாராய நம்பிகள்; திருத்தொண்டர் … பாடி – இறைவன் ஆணையின் படி தம்மை வரவேற்க வந்த அந்த அடியவர்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு, “எமது பெருமான் விரும்பி எழுந்தருளியிருப்பது இத்திருவாரூரேயாகும்; அப்பெருமான் எம்மையும் ஆட்கொண்டருளுவரோ? கேளுங்கள்!“ என்ற கருத்துக் கொண்ட மகுடத்தையுடைய சந்தமும் இசையும் பொருந்திய காந்தாரப்பண்ணிலமைந்த திருப்பதிகம் பாடிக் கொண்டே – தமக்கும் அவர்கட்கும் பெருமானாகிய புற்றிடங்கொண்டாரது கோயில் திருவாயிலை அடைந்தார்.இதனையே, வந்தெதிர் கொண்டு வணங்குவார்முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து சிந்தை களிப்புற வீதி யூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி “யெந்தை யிருப்பது மாரூ ரவர் எ ம்மையு மாள்வரோ கேளீ“ ரென்னுஞ் சந்த விசைப்பதி கங்கள் பாடித் தம்பெரு மான்றிரு வாயில் சார்ந்தார். என்று பாடுகின்றார்.
இப்பாடலில் சிந்தை களிப்புற – என்றதொடர் கூத்தப் பெருமான் ஆணையிட்ட திருஆரூர்த் தலத்தை யடைந்தோம் எனவும், ஆரூர்ப் பெருமான் ஆணையின்படிப் போந்த இவ்வடியவர்களை வணங்கப்பெற்றோம் எனவும் நம்பிகள் மனமகிழ்ந்தார். “நம்பிரானாராவார் அவரே“ என்று துணிந்து எதிர் கொண்ட அடியவர்கள் இந்த நம்பிகளைக் கிடைத்து வணங்கப்பெற்றோம் என்று சிந்தை களிப்புறுமாறு என்பதுமாம். மிகக் கடையேனாய், ஆட்கொள்ளப் பெறும் தகுதிபெறாத என்னையும். என்னையும் என்போல்வாரையும் என்று உளப்படுத்தி எம்மை எனப் பன்மையாற் கூறினார்.
கேளீர் – நீங்கள் பழ அடியீர்கள். திருவாரூரிலே பிறக்கும் பெருமைத் தவமுடையீர்கள்; . எனது தகுதியின்மை நோக்கி இகழாது, உங்கள் உரிமையாலே உங்களது விண்ணப்பத்திற் கிணங்கி,இறைவன் என்னை ஆள்வரோ? அதைப் பழகிய நீங்கள் அவரிடம்கேட்டுச் சொல்லுங்கள் என்ற குறிப்பாம். அடியார் மூலம் ஆண்டவன் திருவருள் கிட்டும். அல்லவா?
இவ்வாறே திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாரூரைத் தரிசிக்க எழுந்தருளியபோது தம்மை எதிர்கொண்ட அடியார்களை நோக்கி, உங்கள் இறைவனாகிய “திருவாரூரான் வருந்தும் போதெனை வாடல் எனுங் கொலோ“ என்று வினவித் திருப்பதிகம் பாடியருளினர். அப்பர் சுவாமிகளும் இவ்வாறே அடியவர்களை வினவி “நமக்குண்டு கொலோ … ஆரூர் அவிர்சடையான் …
தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே“ என்று பாடியருளினர். அடிமைத் திறத்தின் சிறப்புப் பொருந்திய தலம் திருவாரூர் என்பது இங்கே. “திருத்தொண்டத் தொகை“ பாடியருளப் பெற்றமையாலும், “நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை“யத் தேவர்கள் வணங்கி நிற்கும் தேவாசிரியன் விளங்குகின்றமையாலும் காணப்பெறும். இத்தலத்தே வாழ்வாராம் அடியார்களின் சிறப்பாவது இறைவனால் முன்னமே ஆட்கொள்ளப் பெற்று இனியுமோர் பிறப்பில்லாத பக்குவான்மாக்களே இங்குப் பிறக்கும் பெரு பெறுகின்றார் என்பதாம்.இங்குப் பிறப்பிற் செலுத்துகின்றமையாலே இறைவன் இவர்களை முத்தியிற் செலுத்துகிறான். இதனாலேயே ,
‘’திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்’’
என இவர்கள் திருத்தொண்டத் தொகையில் தனியாகத் துதிக்கப் பெற்றனர்.
‘’ஆரூர்ப்பிறக்க முத்தி ‘’ என்பது பழமொழி . ‘’பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும் ‘’ என்றார் கல்லாடனாரும். இவர்கள் முன்னமே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற முத்தான்மாக்கள் ஆதலின் மேலே காட்டியபடி, மூன்று ஆசாரியன்மார்களும் இந்த அடியவர்களை வினவிப் பதிகம் பாடிப் பின்னரே தலத்தினுள் சென்று ஆண்டானைப் பாடியருளினர் என்க !