இந்த வார வல்லமையாளர் (267)
இவ்வார வல்லமையாளராக நாட்டுப்புற பாடல் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது
இன்று ஜனாதிபதி கையால் பத்மஸ்ரீ விருது பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் அம்மா விஜயலட்சுமி அவர்கள்
விஜயலட்சுமி பிறந்த ஊர் இராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டி ஆகும். தந்தை பொன்னுசாமி, தாய் மூக்கம்மாள்; எம்.ஏ. முனைவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புற கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தார். இவரது கணவர் முனைவர் நவநீதகிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியர்.
மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய இராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சூழ்நிலை பாரதம்’ என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘பச்சைக்கோயில்’ என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார். கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், நிகழ்த்துக் கலைகள், பாடல்கள், பழைமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாச்சாரங்கள், ஆகியவற்றை உற்றுநோக்கி 5000 ஒலி நாடாக்களும், 300 காணொளி நாடாக்களும் பதிவு செய்து பாதுகாத்து வருகிறார்.
தமிழ் நாட்டுப்புறகலைகளுக்கு அளிக்கபட்ட சிறப்பாக வல்லமை இவரது விருதை கருதுகிறது. இவரை போல நம் மக்களின் கலைகளை பாதுகாப்பதில் அனைவரும் ஊக்கமுடம் செயல்பட வல்லமை விரும்புகிறது
வல்லமையாளர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.
Thanks:
Tamil wikipedia
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )