பத்திகள்

குவியம்

செல்வன்
 
நல்ல தொழிலதிபர்கள் வாடிக்கையாளரின் தேவைகள் என்ன என அறிந்து அதை நிறைவேற்றுவார்கள்.
 
ஆனால் மாபெரும் தலைவர்கள், வாடிக்கையாளருக்கு எது நல்லது எனத் தானே கண்டுபிடித்து அதை அவர்களுக்குக் கொடுப்பார்கள்.
 
உலகின் முதல் காரை வடிவமைத்த ஹென்றி போர்டு இதைத்தான் சொன்னார்.
 
“வாடிக்கையாளரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டிருந்தால் நல்ல குதிரைவண்டி வேண்டும் எனப் பதில் சொல்லியிருப்பார்கள்”
 
அக்கால வாடிக்கையாளர்கள், காரைப் பார்த்ததே இல்லை. பின்னே கார் வேண்டும் என அவர்களுக்கு எப்படி தெரியும்?
 
ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிர்வாகிகளிடம் அதைத்தான் சொன்னார், “நல்ல ஐடியாக்களை நிராகரித்தால் தான் ஆப்பிள் மேம்படும்” என.
 
வாரன் பப்பட்டும் அதைத்தான் சொன்னார்,  “உங்களுக்குத் தோன்றும், சொல்லப்படும் அனைத்து நல்ல ஆலோசனைகளையும் நிராகரிக்கவும். உங்களிடம் ‘எஸ்’ எனும் வார்த்தையை வாங்குவதே மற்றவர்களுக்குப் பெரும்பாடாக இருக்கவேண்டும்” என.
 
பல கம்பனிகளின் சிக்கலே இதுதான். நல்ல ஐடியாக்கள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொள்வார்கள்.
 
“கொரொனா வந்தாச்சு. மாஸ்க் தயாரித்தால் நல்ல லாபம் வரும்”… உடனே தொடங்கு மாஸ்க் பேக்டரி.
 
“ஆன்லைன் தான் இனி எதிர்காலம்… ஆரம்பி ஆன்லைன் பல்கலைக்கழகம் ஒன்னை..”
 
இப்படி “நல்ல ஐடியாக்கள்” பலவற்றைக் கேட்டு, அனைத்தையும் செயல்படுத்தி, கடைசியில் ஏகப்பட்ட கடன், ஏகப்பட்ட தொழில்கள், எதிலும் ஒருங்கிணைப்பு இல்லை எனும் நிலையில் அனைத்தும் பறிபோகும்.
 
சாம்சங் கம்பனி ஒரு கன்சல்டன்டை அழைத்தது.. “ஆப்பிளை விடச் சிறந்த போன்களை நாம் தயாரிக்கணும். எப்படி எனச் சொல்லுங்கள்..”
 
அவர் ஆராய்ந்து பார்த்துவிட்டு சொன்னார்.. “உங்ககிட்ட ஐம்பதுக்கு மேல் மாடல் இருக்கு. அவர்களிடம் ஐபோன் ஒண்ணு மட்டுமே இருக்கு. இதில் எதை வைத்து அவர்களை முறியடிக்கப் போகிறீர்கள்?”
 
ஐபோன் ஒன்றில் மட்டுமே ஆப்பிள் கவனம் செலுத்தியது. பல நல்ல ஐடியாக்களை நிராகரித்தார்கள். இன்று ஆப்பிளின் ஐபோன் டிவிசன் மட்டுமே மைக்ரோசாப்டை மிஞ்சிய லாபம் ஈட்டுகிறது.
 
போஃகஸ்.. குவியம்.. கவனம் முழுவதும் ஒரே ஒரு சிறப்பான ஐடியாவில் இருப்பதும், மற்ற அனைத்து “நல்ல ஐடியாக்களையும்” நிராகரிப்பதும், செய்யும் அந்த ஒரே ஒரு விசயத்தைத் தன்னிகரற்ற சிறப்புடன் செய்வதுமே வெற்றிக்கான வழி.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க