இந்த வார வல்லமையாளராக சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்

போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வீட்டிற்கே நேரில் சென்று போலீஸார் மன்னிப்பு கேட்டு சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை போரூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேரை மடக்கிய போரூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாபு என்பவர் அவர்கள் செய்த ஒரு தவறுக்காக சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததால் இளைஞர்கள் அவமானத்தால் குறுகி நின்றனர்.

நட்டநடு சாலையில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் காவலர் ஒருவர் இளைஞர்களைத் தாக்கும் சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துப் பகிர்ந்தார்.

இந்த வீடியோ பதிவு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார்.

விசாரணையில் காவலர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று அந்தக் காவலரை மன்னிப்பு கேட்க ஆணையர் உத்தரவிட்டார்.

ஆணையரின் உத்தரவை அடுத்து ராமாபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் காவலர் பாபுவுடன் சென்றனர். மொத்தமாக போலீஸார் வந்ததைப் பார்த்த பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அவர்களிடம் பேச்சுகொடுத்த துணை ஆணையரும், உதவி ஆணையரும் ‘பயப்படாதீர்கள், அன்று நடந்த சம்பவத்தில் எங்கள் காவலர் தவறிழைத்துள்ளார். பாதிக்கப்பட்ட தம்பிகளைப் பார்த்து தனது வருத்தத்தைக் கூறி மன்னிப்பு கேட்க வந்துள்ளார்’ என்று கூறியுள்ளனர்.

ஒரு கணம் தங்களை மறந்த பெற்றோர் ‘பரவாயில்லை சார்’ என்று கூறியுள்ளனர். இல்லை. சம்பந்தப்பட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க, கமிஷனர் உத்தரவு என்று அதிகாரிகள் கூறி 3 இளைஞர்களையும் அழைத்து வருமாறு கூறினர்.

பின்னர் அழைத்து வரப்பட்ட இளைஞர்களிடம், அதிகாரிகள் முன்னிலையில் காவலர் பாபு மன்னிப்பு கேட்டு, ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூற நெகிழ்ந்து போன அந்த இளைஞர்கள் சார் நாங்கள் அதை அன்றே மறந்துவிட்டோம். எங்களுக்கு ஒரு அண்ணன் இருந்து கண்டித்தது போல் எடுத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் காவலர் பாபு, ‘நான் செய்தது தவறுதான், அவர்களை அடித்திருக்கக் கூடாது’ என்று கூற, ‘நாங்கள் தான் சார் தவறு செய்துவிட்டோம் என்று இளைஞர்கள் கூற நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை பார்த்த அக்கம் பக்கத்தினரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

இளைஞர்களுக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் புத்தகமும், இனிப்புகளும் அளித்த துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் அறிவுரை வழங்கினார். பின்னர், காவலர் பாபுவிற்கு அந்த இடத்திலேயே உதவி ஆணையர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

காவலரால் தாக்கப்பட்ட இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படும், அவர்கள் போலீஸாரை விரோதியாகவே பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து போலீஸாருக்கும் பாடமாக, அதே சமயத்தில் இளைஞர்களும் அவர்கள் தவறை உணரும் வண்ணம் அவர்கள் வீட்டிற்கே போலீஸ் உயரதிகாரிகள் சென்று வருத்தம் தெரிவித்தது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.

இந்த நல்ல மாற்றம் நாடெங்கும் தொடர கமிஷனர் விஸ்வநாதன் அவர்களின் முன்னுதாரணம் உதவும் எனும் நோக்கில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (266)

  1. மன்னிப்பு கேட்பது என்பது அகந்தையையின் எல்லையை கடந்த நற்செயல். மனது தான் மன்னிப்பு கேட்கக்கூடிய துணிவான மனப்பான்மையை அளிக்கௌம். எனவே இந்த வார வல்லமையாளரை வாழ்த்துகிறேன்; செல்வனையும். ஒரு நெருடல். காவல் துறையின் பெயர் தற்காலம் அடி மட்டத்தில் இருக்கிறது. எல்லா பிரவுகளிலும் கடமை பலி ஆவதை அன்றாடம் காண்கிறோம். திரு. ஏ.கே. விஸ்வதாதன் ஆவன செய்ய வேண்டும்; அதை வல்லமையில் தெரிவிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.
    கடமையாற்றும் குடிமகன் என்ற வகையில் அவர் கேட்டால் பரிந்துரை செய்யமுடியும். நினைத்தால் எதையும் செய்ய முடியும்.
    அன்புடன்,
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.