வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர் (268)

இந்த வார வல்லமையாளர்! 

 

இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மொழியியல் மற்றும் பறவைகள் ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவரது கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை வல்லமை வாசகர்களிடம் பெற்றுள்ளன.

இவரை வாழ்த்திய முனைவர் ராஜம் “இவருடைய கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் …

‘சங்கப்பாடல்களில் பறவைகள்’ என்று வெறும் விவரிப்புக் கட்டுரையாக (descriptive essay) எழுதாமல் … அந்தப் பாடல்களில் காணும் செய்திகளுக்கும் பறவையியலில் கூறப்படும் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி எழுதுவது.

இவருடைய கட்டுரைகளை ஊன்றிப்படித்தால் சங்கப்பாடல்களில் வலம்வரும் பறவைகளைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.” என குறிப்பிடுகிறார்

சங்க இலக்கியத்தில் சிட்டுக்குருவி பற்றி இவர் கூறும் கட்டுரை மிக சிறப்பானது

“————————————பாரி பறம்பின்
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலை படர்தந்தாங்கு” (ஒளவையார், அகநானூறு: 303: 10௧5)

இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.

மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.

இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, ப்,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.

திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, ப், 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted or the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா) என்று கொள்ள வேண்டுமென்கிறார்.

சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374, புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும் குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.” என்கிறார்

அறிவியலையும், இலக்கியத்தையும் ஒருங்கிணைத்து எழுதும் வல்லமையாளார் சற்குணா பாக்கியராஜ் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.இவரை விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் ராஜம் அவர்களுக்கு நம் நன்றிகள்

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    வல்லமையாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். பறவைகள் பற்றிய செய்திகளைப் புதிய நோக்கில், புதிய பார்வையுடன் படைத்து வருகிறார். இதற்குப் பின்னுள்ள கடின உழைப்பையும் ஆர்வத்தையும் பெரிதும் பாராட்டுகிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க