தேர்தல் சீர்திருத்தங்கள்
பவள சங்கரி
தலையங்கம்
தேர்தல் செலவுகளுக்கு கட்சிகளுக்கு அரசு செலவுத்தொகையை அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு. தேர்தலில் கட்சியில் செய்யும் செலவுகளில் எது அரசு கொடுத்த பணத்தில் செய்யப்படுகிறது, எது அவருடைய கட்சிப்பணத்திலிருந்து செய்யப்படுகிறது என்று பிரித்துப்பார்க்க முடியாது என்ற காரணம் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டியது பற்றி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கட்சி நன்கொடைகளே ஊழலின் ஆரம்பமாக உள்ளது. வாக்காளர்களுக்கு இலவசங்கள் கொடுப்பதும், பணம் கொடுப்பதும் ஊழலை ஊக்குவிக்கிறது. தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள் அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகளை மக்களிடம் சுரண்டுவதற்கும் இதுவே காரணமாகவும் அமைந்துவிடுகிறது. தேர்தலுக்காக கட்சியினர் நன்கொடை பெறுவதையும் செலவு செய்வதையுமே முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும். தேர்தல் செய்திகளை அரசே வெளியிட்டு தேர்தலை நடத்தினால் பல்வேறு முறைகேடுகள் தடை செய்யப்படும். வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு பணம் இலவசங்கள் கொடுப்பவர்களையும் அவர்கள் சார்ந்த கட்சிகளையும் பத்து ஆண்டுகள் தேர்தலில் நிற்பதற்கு தடை செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்தால் நேர்மையான தேர்தலை சந்திக்கக்கூடும்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இந்த நன்கொடைகள் பெற்று செலவு செய்வது அங்கும் ஊழலை வழிவகுத்துக்கொண்டே இருக்கின்றன. ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளில் அரசே தேர்தல் செலவினங்களை ஏற்றுக்கொள்வதோடு வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்புகள் விளம்பரப்படுத்தப்படுவதும் அரசு மூலமாகவே நடைபெற்று தேர்தலும் ஒழுங்காக நடைபெறுகிறது. இந்த முறையை நம் நாட்டிலும் பின்பற்றலாமே.. தேர்தல் சீர்திருத்தங்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமானதொன்று.