படக்கவிதைப் போட்டி (113)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.05.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
வெய்யிலின் கொடுமை நிலத்திலே தெரியும்
பயிர் நிலங்கள் வெடித்து பாளமாய் தெரியும்
இதனை கண்ட விவசாயின் மனம் வெதும்பும்
வானின்று மழைப் பெய்யாத என ஏங்கும் !
வெய்யிலின் கடுமை நிழலில் இருப்பவனுக்கு தெரியாது
படித்து பட்டம் வாங்கிய விவசாய மகனுக்குப் புரியாது
ஏர் பின்னது உலகம் என்று வள்ளுவன் சொல்லியது
ஏனோ படைத்தவனுக்கு நடைமுறையில்,நடக்காமல் போனது !
படித்தவுடன், வேலையில் சேர்ந்து பெருமை படவும்
காசை பார்த்தவுடன் ஆடம்பர வாழ்க்கை வாழவும்
ஆவல் கொண்டு, தனக்கென்று பொன், பொருள் சேர்க்கவும்
தன் மனைவி, மக்கள் என்ற வேலி போட்டு வாழ்வதும் !
தந்தை உழவானாலும் தொழிலை மதிக்க தெரியவில்லை
அவரது உழைப்பிலே வளர்ந்ததை நினைத்து பார்க்கவில்லை
நிலம் பாழாய் போனாலும் கவலைப்பட நி னைப்பதில்லை
கூறு போட்டு விற்கவும், வீட்டு மனையாக்கவும் தயங்கவில்லை!
இன்றுதான் ஞானம் பிறந்து, சற்றே சிந்தித்து பார்த்தேன்
உழவுத் தொழில் என்றும் கோழைப் படாது என உணர்ந்தேன்
பிறர்க்கு அடிமையாய் வேலை செய்ய வெட்கம் அடைந்தேன்
நானும், உயர்ந்து, உழவு தொழில் செய்ய புறப்பட்டேன் !
பட்டம் பெற்றாலும், பாட்டாளியாக உழைக்க தீர்மானித்தேன்
ஆழ்கிணறு தோண்டி, தண்ணீர் பெற ஏற்பாடு செய்தேன்
விவசாயம் கற்று, என் குடும்பத்தை மேன்மையுறச்செய்தேன்
நானே விவசாயி , கடவுள் கண்டெடுத்த தொழிலாளி ஆனேன் !
ரா.பார்த்தசாரதி
வேலை வரும் வேளை
படித்து முடித்து விட்டேன்!
பட்டமும் பெற்று விட்டேன்!
ஒளி மயமான எதிர் காலம் இனி என்று!
உள்ளம் மகிழ்ந்திருந்தேன் !
வேலைக்கு மனுப் போட்டு நானும்
காத்திருந்தேன்!
இன்று வரும், நாளை வரும், வேலை என்று
தினமும் பார்த்திருந்தேன் !
வேலைக்கு நான் போட்ட மனுக்கள் பல நூறு!
வேலை இல்லை என்று சொல்லி உயிரோட வதைச்சாரு!
வேலை இல்லா இளைஞர்களின் வேதனையை
யார் அறிவார்!
அப்பா சொல்லாலே சுட்டெரிப்பார் !
அம்மா முகம் சுளிப்பார்!
தண்டச் சோறென்று சுற்றத்தார் பரிகசிப்பார்!
வேலை இல்லா ஆண் மகனின்
நிலை பாரீர்!
நீர் இல்லா பாழ் நிலமாய் ஆன
நிலை பாரீர்!
வேலை இல்லா எங்களை ஏளனம்
செய்யாதீர்!
சொல்லம்பால் எங்களை வேரோடு
சாய்க்காதீர்!
வெடித்து பாளம் பாளமாய் போனது
இந்த நிலம் மட்டுமல்ல! !!
எங்கள் இதயமும் தான்!
இந்த நிலம் வாழ நீர் தாருங்கள்!
இளைஞர்கள் வாழ வேலை தாருங்கள்!
வயலும், இளைஞனும் பிழைத்தால் தான்
வையகம் என்றும் நிலைத்திருக்கும்!
வெப்ப யுகப் பிரளயம் 2000
சி. ஜெயபாரதன், கனடா.
சூடு காலம் வருகுது !
நாட்டுக்குக்
கேடு காலம் வருகுது !
நாடு நகரம், காடு வயல்
வீடு நரக மாகப் போகுது !
ஆற்றில் எல்லாம்
நீர் ஓட்ட மின்றி நிலம் காய்ந்து
ஏரி, குளம், நீர் வரண்டு
பூமித்தளம்
துண்டு துண்டாய்ப்
பிளந்து
விண்டு பட்டுப் போனது !
பூகோளம் மின்வலை யுகத்தில்
பொரி உருண்டை ஆனது !
ஓகோ வென்றிருந்த உலக மின்று
உருமாறிப் போனது !
ஓசோன் ஓட்டை யாகி,
பூகோள மெல்லிய வாயுப் போர்வை
பூச்சரித்துக் கந்தை ஆனது !
மூச்சடைத்து நம் விழி பிதுக்க
சூட்டுயுகப் போர் மூளுது !
தொத்து நோய் குணமாக்க
தூயநீர் வளம், காற்று வளம் தேவை !
காலநிலைக் கோலத்துக்குக்
காரணிகள் வேறு வேறு !
கரங் கோத்துப் பூமி காக்க அனைவரும்
புறப்படுவீர் எனக் கூறு கூறு !
ஓரிடத்தில் எரிமலை வெடித்து
உலகெலாம் பரவும்
கரும்புகை மூட்டம் !
துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
உருகி, உருகி
உப்பு நீர்க்கடல் உயரும் !
உஷ்ணம் மெதுவாய் ஏறும் !
தாளம் தடுமாறி
வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
கோடை காலம் நீடிக்கும்,
குளிர் காலம் குறுகிப் போகும்,
பனி மலைகள் வளராமல்
குள்ள மாகும்
நில வளம் செழிப்பிழக்கும் !
நிலப் பகுதி வறண்டு போகும் !
நீர்ப் பகுதி நிலமாகும் !
உணவுப் பயிர்கள் கருகிப் போகும் !
பஞ்சம், பட்டினி,
நோய், நொடிகள் மக்களைப் பீடிக்கும் !
மனித நாகரீகம் நாசமாகி
புனித வாழ்வு மோச மாகி
வெறிபிடித் தாட்டும், தரணியில்
வெப்ப யுகப் பிரளயம் !
+++++++++++
நெடுவாசல் திற!
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடச் சொன்னார்கள்
ஆற்று மணல் தானெடுத்து
அழிவு நோக்கிப் போகின்றோம்
அணைக்கட்டி நீரதனைக்
காக்கும்வழிக் கண்டார்கள்
மனை போட்டு விற்றுவிட
சூழ்ச்சி பல செய்திட்டோம்
சுட்டெறிக்கும் சூரியன்
வெட்டவெளிக் காடு
பட்டுப்போன நிலமென்று-கை
கட்டி தினம் நின்றிருந்தோம்
பட்டினியைப் போக்குமொரு
பயிர் வளர்க்கும் பருவந்தனில்
கொட்டுகிற மழைக்குக்
காத்துக்கண் பூத்திருந்தோம்
கொட்டும் மழைக்காலத்திலோ-நீர்க்
காக்கும்வழி விட்டுவிட்டு
வறட்டு வாதம் பேசி நம்முள்
பிளவுபட்டு நின்றிருந்தோம்
மாரிமழைப் பொழியுமுன்னே
ஏரி குளம் வாவியெனும்
நீராதாரம் தூர்வாரி
சீரமைத்துக் காத்திடுவோம்
வீட்டுமனையாகிவிட்ட நிலம்
மீட்டு, தேன் குடிக்கும் ஊழல் நரி
கொட்டமதை அடக்கிடுவோம்;
நன்நீர் கிட்ட வழிசெய்வோம்.
பயிர் வளர்த்து உயிர் காக்கும்
அய்யாக்களைக் கண்ணாகக்
காக்க வழிசெய்யும் தலைமைக்கு
நெடுவாசல் திறந்துவைப்போம்!!!
இதுதானா…
விளைந்த நிலத்தையும்
விற்றுவிட்டோம்
வெளிநாடு செல்ல..
வழியில் ஒருவன் ஏமாற்றினான்,
வீடு திரும்பினேன்-
கைப்பொருள் இழந்தே..
இருந்த வயலில் உழைத்தோம்
எருமை மாடு போல..
இதுவும் ஏமாற்றியது
மழையைப் போல,
எல்லாம் இழந்தோம்
பலரைப் போல..
வயலின் வெடிப்பு
கொஞ்சம் பெரிதாயிருந்தால்,
வேறு குழியே
வெட்டவேண்டாம்-
உழவர் வாழ்வு இதுதானா…!
-செண்பக ஜெகதீசன்…
வறட்சி மாநிலம்
=================
மண் வெளியில் தண்ணீரின்றித் தவிக்கையில்
***விண்வெளியில் தண்ணீர் தேடும் விந்தையாம்
நிலத்திலே நீர்த்துளி ஏதுமில்லா நேரம்தனில்..
***நிலவிலினிலே ஆராய்ச்சி செய்தென்ன பயன்..?
தாயிழந்த குழந்தை மிரண்டு விழிப்பதுபோல..
***வாய்பிளந்தஏரி நீருக்காக நீலவானம் நோக்குமோ.!
திட்டமுடன் ஆறுகுளம் ஏரிமடு வயலென..
***பட்டாபோட்டு விற்றதால் வந்தது நீர்வறட்ச்சி..!
இரத்தம் சுண்டி உதட்டில்வரும் வெடிப்புபோல
***ஈரம்வற்றிய நிலமும் வெடித்து பிளக்குதுபாரடா..!
பொக்கையும் பிளவுமாய்க் காணும் ஏரிகளங்கே..
***கொக்கையும் காணொம் மீனையும் காணொம்..!
தன்னிலதோடு தரிசு நிலத்தையும் வளைப்பதில்..
***தன்னிகரில்லா போராளிகள் அரசியல் வாதிகள்..!
வெட்டிய மரமெலாம் கட்டுமரமாகி காசாகும்..
***கட்டுப்பாடின்றி கட்டிட மெழும் குளக்கரையில்..!
சதிசெய்தே வாழப்பழகிய சதிகார ரவர்களிடம்..
***விதிசெய்யும் வேலைகள் ஒருபோதும் பலிக்காது..!
காண்பது எதையும் பார்வையிலேயே வளைத்து..
***தன்னகம் கொள்வதில் பெருவல்லமை யாளர்கள்..!
தூற்றும் அரசியலில் பொதுநலமென்று சொல்லி..
***தூர்வாரும் காட்சி நாடகம்கூட அரங்கேறுமப்பா..!
போராடி ஆறுஏரி குளம்மடு மீட்டெடுத்தால்பின்..
***நீராடி மகிழலாம்நாம் பருவமழை பொய்கையில்..!
பிறை வடிவிலமைத்த பழந்தமிழர் குளம்ஏரிதனில்..
***குறையில்லா நீர்ரிருப்பில் கொண்டாடி மகிழ்ந்தனர்..!
மழை வரும்போதெல்லாம் மறந்து தூங்கியமக்கள்..
***மழைவருமுன் விழிப்புடன் தூர்வார வேண்டுமப்பா..!
பழங்கோவில் அருகருகே பெருங்குள மிருக்குமாம்
***விழும்மழைநீர் வீணாகாது குளம்வந்து சேருமாம்
வீணாகும் மழைநீரைநுண் மதிகொண்டு சேமித்தால்
***வான்பொய்த்தாலும் வாளாது சுகமாய் வாழலாம்..1
குளமிருந்தால் நீரில்லை குளமேயில்லை யிப்போது
***குளமிருக்கும் இடத்தில் குடியிருப்பு காண்கிறோம்..!
குளங்களைப் பராமரிக்கும் குடிமராமத்து திட்டமது..
***உளமுடன் செயல்பட்டால் வளமுடனுண்டு வாழ்வு..!