நிர்மலா ராகவன்

விடு, விட்டுத்தள்ளு!

நலம்
ஒரு குழந்தை பலூனைப் பிடித்திருந்தது. கையை லேசாகத் திறக்க, பலூன் பறந்தே போய்விட்டது. பறிபோன பலூனையே நினைத்து அக்குழந்தை கதறிக்கொண்டிருந்தது — இன்னொன்று கையில் கிடைக்கும்வரை.

அந்த நிலையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம், வளர்ந்தபின்னரும். பலூனுக்குப் பதில் நினைவுகள். அவை இன்பம் அளிப்பனவாக இல்லாவிட்டாலும், கைவிட்டுப் போகாமல் அவைகளை கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஒன்று போனால், இன்னொன்று.

அடுத்து என்ன செய்வது என்று புரியாததால் இந்தக் குழப்பம். சில சமயம், மீளாத்துயர். பொதுவாகவே, நாம் அனுபவித்த துன்பம் சம்பந்தமான எதையோ கேள்விப்படும்போதோ, படிக்கும்போதோ பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்கும்.

விவாகரத்துபற்றி நான் எழுத, என்னைத் தொடர்புகொண்டு, தன் அவல வாழ்க்கையை நெடுநேரம் பகிர்ந்துகொண்டாள் ஒரு பெண்மணி.

கதை

கணவனது நீண்ட காலக் கொடுமையைத் தாங்கமுடியாது போனாலும், தன் குழந்தைகள் சற்று பெரியவர்களானதும் விலகலாம் என்று நிச்சயித்திருந்தாள் யமுனா. இறுதியில் விவாகரத்து பெற்றாள். ஆனாலும், அவர்பால் எழுந்த வெறுப்பை மறக்க முடியவில்லை.

பிறரது செயல்களையோ, சொற்களையோ நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நம்மையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். அப்படிச் செய்தால்தான் நிம்மதி கிட்டும்.
`இத்தனை காலமாக எதற்காக இப்படி ஒருவரைப் பொறுத்திருந்தோம்! எவ்வளவு மடத்தனம்!’ என்று மனதிற்குப் பட்டாலும், நம்மையே மன்னித்துக்கொண்டால்தான் அமைதி கிட்டும்.

பிறரை வெறுப்பதால் எந்தப் பலனுமில்லை. அவர் நம் எண்ணத்தால் மாறப்போவதுமில்லை.

`கணவன் எப்படி இருந்தால் என்ன, இனி அவன் என்றும் நம்மைப் பாதிக்க முடியாது!’ என்று விட வேண்டியதுதான்.

“இப்போது என்ன செய்கிறீர்கள்?” என்று யமுனாவை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தேன்.

நல்லவேளை, அவள் மாற்றத்துக்கு அஞ்சி ஒடுங்கவில்லை. தன் புதிய தொழிலைப்பற்றி, குழந்தைகளைப்பற்றி உற்சாகமாகப் பேசினாள்.

நாம் கடந்தகால நினைவுகளையே அசைபோட்டுக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அத்துடன், எதிர்காலத்திற்கான ஆயத்தங்களையும் செய்ய முடியாது போகிறது.

இருப்பினும், சில நிகழ்வுகளை, `விட்டுத்தள்ளு!’ என்று ஒதுக்க முடிவதில்லையே!

கதை

என் ஒரே மகன் சசி நீரில் மூழ்கி இறந்தபின், குடும்பத்தாருடன் நான் அவனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் நான்கு வயதே ஆன சசி எங்களுடனேயே இருப்பதுபோன்ற ஒரு திருப்தி, மகிழ்ச்சி, உற்சாகம் — எல்லாருக்குமே.

பிறகு கவுன்சிலர்போன்ற ஒரு தோழி எனக்காக நேரத்தை ஒதுக்கினாள். எதிர்பாராத சம்பவம் என்பதால் அதன் பாதிப்பு மிகுந்த அதிர்ச்சியை அளித்திருந்திருந்தது.

ஏழு மாதங்களுக்குப்பின், `நீங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். இவையெல்லாம் அற்புதமான நினைவுகள். காலப்போக்கில் மறந்துவிடுமே! அவைகளை எழுதிவைங்கள்!” என்றபோது, அயர்ச்சியாக இருந்தது.

மறக்கக்கூடியவையா அவை!

“ஆங்கிலத்திலா! எப்படி எழுதுவது?”

“என்னிடம் சொல்வதுபோலவே!”

குழந்தை என் பக்கத்தில் இல்லாவிட்டால் என்ன! எவ்வளவோ மகிழ்ச்சியான தருணங்களை அவனுடன் கழித்திருந்தேனே!

அப்படி ஆரம்பித்தது இருநூறு பக்கங்களில் நிறைவடைந்தது. Through My Heart என்ற தலைப்பில், nirurag@wordpress.com என்ற தளத்தில் முப்பது ஆண்டுகளுக்குப்பின் வெளியிட்டேன்.

உலகின் பல பாகங்களிலிருந்தும் கடிதங்கள் வந்தன. பிறரும் என்னுடன் சேர்ந்து கலங்குகிறார்கள் என்பது சொல்லமுடியாத ஆறுதலை அளித்தது. என் துக்கம் சற்றே குறைந்தது.

பெற்ற குழந்தையை இழந்த சில தாய்மார்களைப்போல் நான் பூஜை அறையைவிட்டே வெளியே வராது, நிம்மதி தேட முயற்சிக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தேன். அதனால் எதிர்காலத்தைப்பற்றியும் யோசிக்க முடிந்தது.

காதல் தோல்வியா? விடு!

காதல், திருமணம் ஆகியவைகளில் தோல்வி அடைந்தவர்கள், `விடு!’ என்ற மனப்பான்மை இருந்தால்தான் முன்னேற முடியும். ஒரு பெண்ணால் விரக்தி அடைபவர்களில் பலருக்கு எல்லாப் பெண்களுமே நம்பத் தகாதவர்கள் என்ற அச்சம் ஏற்பட்டுவிடுகிறது.

இப்படிப்பட்ட இருவர் தம் கதையை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள், வெவ்வேறு தருணங்களில்.

“சில பெண்களுக்கு எவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தாலும், கணவனை ஏசிப் பேசுகிறார்களே!” என்று ஆரம்பித்திருந்தார் ஒருவர்.

குறுக்கே சில கேள்விகள் கேட்டு, சரியாகப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். (சிலர் வாய்மூடி, தலையாட்டியபடி கேட்டுக்கொள்வார்கள். அம்முறை ஆறுதல் தருவதில்லை என்று கூறினார் அவர்). அதன்பின், “உங்களிடம் என் கதையைச் சொல்ல வேண்டுமே!” என்றார், கெஞ்சலாக.

அவர் கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு, “நடந்ததையே நினைத்து வருத்தப்படாதீர்கள். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள்!” என்று சமாதானப்படுத்தினேன்.

ஒரேமாதிரி இருவரும் பதிலளித்தார்கள்: “ஐயோ, வேண்டாம்பா!”

ஒருவரை அவர் இருப்பதுபோலவே ஏற்காதவர்களைப்பற்றி எண்ணிக் குழம்பி, நேரத்தை வீண்டிப்பானேன்! நம் அருகில் இல்லாவிட்டாலும், அப்படிப்பட்டவர் நம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டேதான் இருப்பார். நமக்குப் பிடிக்காத ஒருவருக்கு எதற்காக அந்த உரிமையைக் கொடுக்க வேண்டும்?

கதை

எனக்கு ஒரு அமெரிக்க தம்பதிகள் நண்பர்களாக இருந்தார்கள். எங்கள் வீட்டு விருந்துக்கு அழைத்தபோது, அவர்களுடைய நெருக்கத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்.

லூசி தன் நாட்டுக்குத் திரும்பிய பின்னரும், எங்கள் நட்பு தொடர்ந்தது. கோலாலம்பூரில் இரவு நேரங்களில் கோல்ஃப் ஆடப்போவதாகச் சொல்லி, கிளப்பில் வேலைபார்த்த ஒரு சீனப்பெண்ணுடன் கணவர் உறவு வைத்துக் கொண்டிருந்ததை அறிந்து விவாகரத்து செய்துவிட்டதாக எழுதியிருந்தாள். அதன்பின், ஒரு வயோதிகரை மணம் செய்துகொண்டாள். இருந்தும், `தன்னை நம்பச்செய்து ஒருவன் ஏமாற்றிவிட்டானே!’ என்று முதல் கணவர்மீது கொண்ட ஆத்திரம் அடங்கவில்லை.

என் அமெரிக்கப் பயணத்தின்போது, நான் லூசியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். திக்கித் திக்கிப் பேசினாள். `உன்னை யார் அழைக்கச் சொன்னது?’ என்பதுபோலிருந்தது அவள் பேசிய முறை. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
விவாகரத்து ஆன இன்னொரு பெண்மணி சமாதானமாகக் கூறினாள்: “அவள் பேசிய விதத்திற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. `மலேசியா’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே அவளுக்கு கடந்தகாலக் கசப்புகள் மேலெழுந்துவிட்டன!”

பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் வாழ்க்கைத் தத்துவம். அதனால்தான் இந்துக்களின் போகி பண்டிகையின்போது, பழைய சாமான்களை எரிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சீனர்களும் அப்படித்தான்.

“துடைப்பம், முறம், பழைய தினசரி எல்லாவற்றையும் ஏன் குப்பைமாதிரி வீட்டின் முன்வாசலிலேயே ஒரு ஓரமாகக் குவித்து வைத்திருக்கிறார்கள்?” என்று நான் உறவினர் ஒருவரைக் கேட்டபோது, “பண்டிகைக்குமுன் எரிப்பார்கள்,” என்று பதில் வந்தது.

பழங்குப்பைகளோடு நம்மை வாட்டும் நினைவுகளையும் ஒதுக்கினால், `உரக்கச் சிரித்தால்தான் மகிழ்ச்சி!’ என்ற பொய்யான நிலைமை மாறும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.