கற்றல் ஒரு ஆற்றல்-79
க. பாலசுப்பிரமணியன்
“படித்தல்” – ஒரு விந்தையான செயல்
“படித்தல்” என்பது கற்றலுக்கு உரமிடும் ஒரு செயல். பல வகைகளில் கற்றல் நடந்தாலும் “படித்தல்” கற்றலை வளப்படுத்தவும் உறுதிப்படுத்தவும், கற்றலின் அடிப்படையில் புதிய சிந்தனைகளை சேகரிப்பதற்கும் தேவையான ஒரு ஆரோக்கியமான உள்ளீட்டு.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்பது வள்ளுவம்
” A Reader lives a thousand lives before he dies ” என்று ஒரு ஆங்கில மேதை கூறினார். ஒவ்வொரு முறையும் ஒருவர் புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவர்களுடைய உள்ளக்கதவுகள் திறக்கப்பட்டு அங்கே கருத்துக்களின் உணர்வுகளின் ஒரு திருவிழாவே நடக்கின்றது. படிக்கும் நேரங்களில் புத்தகங்களின் கதாபாத்திரங்களோடு ஒன்றி அவர்களுடைய அதே உணர்வு நிலையை அந்தப் பாத்திரங்கள் பகிர்ந்துகொள்ளும் பொழுது மனநிலைகள் பக்குவப்பட்டு சீரான மனநிலைக்கும் அத்தோடு சேர்ந்த அமைதிக்கும் வித்திடுகின்றது.
ஆகவே “படித்தல்” என்பது கற்றலின் ஒரு முக்கிய பகுதி. “படித்தல்” என்ற செயலால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன.?
1. இது அறிதல் -புரிதல் என்ற இரு செயல்களுக்கு முன்னோடி.
2. ‘படித்தலில்” புத்தகம் என்ற ஒரு ஊடகம் உப்யோகப்படுத்தப்படுவதால் ‘கற்றலுக்கு’ ஒரு ஆதாரமும் ஒரு வழிமுறையும் கிடைக்கின்றது.
3. “படித்தலின்” பொழுது “பார்த்துப் படித்தல் “நினைவாற்றலை” வளப்படுத்த உதவுகின்றது
4. மூளைக்குத் தேவையான “பொருளாக்கம்” “கருத்தாக்கம்” என்ற இரு முக்கிய செயல்களுக்கு “படித்தல்” மிகவும் ஏதுவாக இருக்கின்றது.
5. “படித்தல்” படிக்கப்படும் நிகழ்வுகள், பாத்திரங்கள், செயல்கள், உணர்வுகள் இவற்றோடு சரியாகவும், பொறுமையுடனும் உறவாட உதவுகின்றது.
படித்தல்- அறிதல் -புரிதல் ஆகிய நிகழ்வுகளைப் பற்றிய மிக நுண்ணியமான துல்லியமான ஆராய்ச்சிகள் மேலை நாடுகளில் பல இடங்களிலில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக நமக்கு கிடைக்கின்ற பல தகவல்கள் நமது முந்திய சிந்தனைகளையும் ‘படித்தலுக்கும் – அறிதலுக்கும் -புரிதலுக்கும்” இடையே உள்ள போராட்டங்களையும் முயற்சிகளையும் நல்ல கருத்துக்களையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆராய்ச்சிகளின்படி கண்டறியப்பட்ட உண்மை ” Seeing is not knowing” .. அதாவது “பார்ப்பதெல்லாம் அறிதல் அல்ல.” கண்கள் ஒரு காட்சியைக் காணும்பொழுது அல்லது ஒரு புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவைகளுக்கு அதன் மொழியோ, கருத்தோ அல்லது பொருளோ தெரிவதில்லை.. ஒரு புத்தகத்திலுள்ள வார்த்தைகள் தமிழா, ஆங்கிலமா, தெலுங்கா அல்லது பிரென்ச் மொழியா என்று தெரியாது. கண்திரைகளில் விழுவதெல்லாம் வெறும் வடிவங்களே. இந்த வடிவங்கள், வண்ணங்கள், உருவங்கள் அலசப்பட்டு, நேர்கோடுகளாக, விளைவுகளாக, மற்றும் சில உருவகங்களாகப் பிரிக்கப்பட்டு கண்களிலிருந்து நரம்புகளால் மின்னதிர்வுகளாக அதனுடன் சம்பத்தப்பட்ட மூளையின் பல பாகங்களுக்கு எடுத்தச் செல்லப்பட்டு (சுமார் 32 இடங்கள்) அலசப்பட்டு பின் மூளையின் ஒரு பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு, தன்னுடைய பழைய நினைவுகள், அறிவுச் சேமிப்புக்களுடன் ஒப்பிடப்பட்டு பொருள் சேர்க்கப்பட்டு மூளை நமக்கு ஒரு கணத்தின் பல்லாயிரம் விழுக்காட்டு பகுதி நேரத்தில் தெரியப்படுத்துகின்றது. அது மட்டுமல்ல அந்தக் கருத்துக்களோடு, அதன் பொருள்களுக்கேற்றாற்போல் சம்பந்தப்பட்ட உணர்வுகள் தூண்டப்பட்டு அவையும் பொருளோடு நமக்கு கிடைக்கின்றது. இத்தனையும் நடக்கும் நேரம் கணினிகளால் கூட எட்ட முடியாத நேரம் ! என்னே விந்தை! என்னே இயற்கையின் விளையாட்டு ! என்னே இறையின் அருள்மாட்சி!
ஆகவே ஒரு மாணவன் ஒரு புத்தகத்தைப் படிக்கும் செயல் அவனுடைய தனிப்பட்ட செயல். இதை மற்றொரு மாணவருடன் ஒப்பிடுதல் தவறாக விளையும். ஒவ்வொரு மாணவனின் அறிதல் புரிதல் செயல்களுக்கான நேரம் அவரவருடைய உடல், மனம், சூழ்நிலை, கருத்தாழம் காணும் திறன், பொருள் அறியும் திறன் மற்றும் முந்திய அனுபவங்கள், ஆர்வம் போன்ற பல காரணங்களால் நிச்சயிக்கப்படுவதாலும் உருவாக்கப்படுவதாலும் இரு மாணவர்களுடைய அல்லது தனிப்பட்ட மனிதர்களுடைய “படித்தல்” என்ற செயல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது வேறு எந்தக் காரணங்களால் பாதிக்கப்படுகின்றது கற்றலில் இதன் தாக்கம் என்ன என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இனிமேலாவது மற்றவர்களைப் பார்த்து “என்னத்த படிச்ச போ” என்று சொல்லாமல் இருக்கலாமே !
(தொடரும்)