இந்தவார வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளராக சுனாமி விஞ்ஞானி குசலா ராஜேந்திரன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்வடைகிறது. நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் இவற்றைப்பற்றி அமெரிக்காவின் தென் கரோலினா பல்கலையில் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் பேரா. குசலா. இப்பொழுது ’இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸயன்ஸ்’ (Indian Institute of Science) என்னும் புகழ்மிகு ஆய்வுப்பல்கலையில் பூகம்பம், சுனாமி ஆய்வுத் துறையில் புவிஅறிவியல் பேராசிரியை. அவர் கணவரும் இத்துறையினரே. விஞ்ஞானத் துறைகளில் இந்தியப் பெண்கள் நிறைய வரவேண்டும். வாய்ப்புகள் நிறைய உள்ளன என்கிறார் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக மதிக்கப்பெறும் குசலா. பெண்விஞ்ஞானிகளுக்கு இந்திய அரசாங்கம் அளிக்கும் முதல் விருதைப் பெற்றவர் குசலா ராஜேந்திரன்.இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கிழக்குக் கரையருகே இந்தவாரம் ஒரு சுனாமி, பூகம்பத்தின் பின்னர் தோன்றியுள்ளது. அறிவியல் முன்னேற்றத்தால் உயிர் இழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் சுனாமி ஆராய்ச்சி நிறுவனம் நல்ல பணிகளை மேற்கொண்டுள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்தில் சுனாமி வந்திருக்கவேண்டும் என்று கணித்து, குசலா ராஜேந்திரன் கடற்கரையில் இருந்து உள்ளே ஒரு கிமீ தூரத்துக்கு ஆழிப்பேரலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கியதை விஞ்ஞானபூர்வமாக நிறுவினார். மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடுவது சுனாமி அலைகள் என்கிறார்.

மணிமேகலையில் சுனாமி குறிப்பு: பேரிடர் ஆராய்ச்சியில் அசத்தும் பெண் விஞ்ஞானி
https://www.bbc.com/tamil/science-45046033

மணிமேகலையில் சுனாமி பற்றிய குறிப்புகள்

பேரிடர்களுக்கான காரணங்களை கண்டறிய வெறும் புவி அறிவியல் அறிவு மட்டும் போதாது என்று கூறும் குஷாலா தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி குறித்த ஆய்வுக்கு சங்க இலக்கியமான மணிமேகலை உதவியது என்கிறார்.

”பேரிடர்களை ஆய்வு செய்ய வரலாறு, கணிதம், இலக்கியம்,தொல்லியல் என எல்லா துறையையும் படிக்கவேண்டும். சுனாமி ஆராய்ச்சியின்போது, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அறிய வரலாறு மற்றும் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளனவா என்று பார்த்தோம். காவேரிப்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்த மணல் மாதிரிகளை நானும், புவியியல் வல்லுநரான என் கணவர் ராஜேந்திரனும் சோதனை செய்தோம். பாதிப்புக்கு ஆளாகாத காவேரிப்பட்டினத்தின் உட்பகுதிகளில் மணல் மாதிரிகளை எடுத்தோம். இரண்டு மாதிரிகளுக்கும் உள்ள கால அளவை கணக்கிட்டோம். மணிமேகலையில் பிரளயம் ஏற்பட்டதாக குறிப்புக்கள் இருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டோம். 2004க்கு முன்னர் சுனாமி ஏற்பட்டதற்கான சான்றாக பழைய மணல் மாதிரி உள்ளது என்பதை அறிவியல்பூர்வமாக சோதனை செய்து, மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள பிரளயம், சுனாமி என்றும் அந்தபகுதியில் முன்னர் சுனாமி ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்தோம்,” என்கிறார் குஷாலா.

வாய்ப்புகளை இழக்கும் பெண்கள்

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தனது ஆய்வு மாணவியுடன் வேலைசெய்ததாக கூறும் குஷாலா, பெண்கள் புவிஅறிவியல் படிப்புகளில் சேருவதற்கு குடும்பங்களில் ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்கிறார்.

15 ஆண்டுகளாக ஒட்டுமொத்த கிராமத்தை நிர்வகிக்கும் பெண்கள்
மதுப் பழக்கம் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிப்பது ஏன்?
”என்னுடைய ஆய்வு மாணவி தற்போது ஐஸ்லாந்தில் வேலைசெய்கிறார். நான் ஒரு ஆசிரியை என்பதால், என்னுடன் அவர் நேபாளத்துக்கு வருவதற்கு அவரது பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதுபோல எத்தனை பேருக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரியவில்லை. நாம் முன்னேறுவதற்கு நாமே தடையாக இருக்கிறோம் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்,”என்று கேள்வி எழுப்புகிறார்.

”வெளிநாடுகளில் புவிஅறிவியல் படிப்புகளில் ஈடுபடுவார்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நம் நாட்டில் இன்னும் கூட குழந்தைகள் என்ன படிக்கவேண்டும் என பெற்றோர்கள் தீர்மானித்துக்கொண்டு இருக்கிறார்கள். அயல்நாடுகளில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பாடங்களை படிப்பதால் சாதிக்கின்றார்கள். நம் நாட்டில் பெற்றோர்கள் தாங்கள் விரும்புகிற பள்ளியில் சேர்த்து, டியூஷன் அனுப்புகிறார்கள், மருத்துவம்,பொறியியல்,தகவல்தொழில்நுட்ப படிப்புகளில் சேர்த்து, நல்ல வருமானம் கொடுக்கும் பணியில் குழந்தைகள் வேலைசெய்யவேண்டும் என்று எண்ணுகிறார்கள். சம்பளம் வாங்குவது மட்டும்தான் சமூகத்தில் அந்தஸ்து தரும் என்ற சிந்தனையில் இருக்கிறார்கள். சம்பளம் முக்கியம் ஆனால் பயனுள்ள வாழ்க்கை அதைவிட அவசியம்,” என புவிஅறிவியல் போன்ற படிப்புகள் அரிதான படிப்பாகவே இருக்கிறது என்று விளக்கினார்.

மேலும் அவர், ”நான் 1976ல் ரூர்கி பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்தபோது எங்கள் வகுப்பில் ஆறு நபர்கள் இருந்தோம். நான் மட்டும்தான் ஒரே மாணவி. தற்போதும்கூட ஆராய்ச்சி படிப்புகளை பெண்கள் தேர்வு செய்தாலும், பயோடெக்னாலாஜி போன்ற படிப்பை எடுத்துக்கொண்டு ஒரு அறிவியல் ஆய்வகத்தில் வேலைசெய்தால் போதும் என்ற நிலைதான் உள்ளது. எங்களைப் போல புவிஅறிவியல்,இயற்கை பேரிடர்களை பற்றி படிக்க அதிமாக பயணம் செய்யவேண்டும். ஒருவேளை ஆண் ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், மாணவியை ஆய்வுகளுக்கு அனுப்பிவைக்க பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். இந்தநிலை மாறவேண்டும்,” என்று பெற்றோர்களிடம் ஏற்படவேண்டிய மனமாற்றம் பற்றி பேசுகிறார் குஷாலா. “

சுனாமி: அன்றைய அழிவும் இன்றைய மாற்றமும்
https://www.bbc.com/tamil/global/2014/12/141226_tsunaminowthen

சுனாமி பேரலைகளை மீறி மெல்ல மலரும் வாழ்க்கை
https://www.bbc.com/tamil/global/2014/12/141224_mawardhastroy2004 பெருஞ்சுனாமியில் காலே நகருக்குச் சென்ற ரயில் கவிழ்ந்து 802 பேர் இறந்தனர்,
அதுபற்றி அந்த ரயிலின் கார்ட் கருணதிலகெ அதே ரயிலில் பயணிக்கையில் பேசுகிறார்:
https://www.bbc.com/tamil/global/2014/12/141225_lankatrain

மேலும் அறிய,
Developments in Communicating Tsunamis:

Prof. Kusala Rajendran:
https://lifebeyondnumbers.com/kusala-rajendran-chasing-earthquakes-won-indias-1st-national-award-for-woman-scientist/
https://thewire.in/science/finding-faults-kusala-rajendran
https://english.manoramaonline.com/women/on-a-roll/2018/08/12/meet-leading-seismologist-of-india-kushala-rajendran.html

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *