பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

 

யெஸ்மெக் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 181

 1. விடை அடக்க – காளை தம்
  படை முடக்க தோன்றும் பயம்
  இடை மறிக்க இரு இரும்பு தேர்
  உடை களைந்து களமாட
  தடை எங்கே ?
  மனதிலா, உடல் பலத்திலா.

 2. தொல்குடி சமூகத்தின்
  உச்சாணி கொம்பன்

  தான் வளா்த்த பண்பாட்டில்
  எழுந்து நிற்கும் இயற்கை
  ஒத்த உள்ளன்போடு
  எண்ணினான் வாழ

  காதலை வெளிப்படுத்த
  கையாண்ட காட்சிகள் பல

  வேர்த் தேடி ஓடியவன்
  காதலைக் கண்டான் வீரத்தில்
  காட்சிகள் மாறினாலும்
  சண்டைகள் மாறவில்லை

  விலங்கோடு போராடி
  விலங்கோடு உறவாடி
  விலங்கில் வீரத்தை உணா்ந்து
  வீரப் பண்பாடாக வளா்த்தெடுத்த காளை
  பண்பாட்டின் வீரனான காளை

  மனிதனுக்கு மட்டுமல்ல
  ரோசம்
  மாட்டிற்கும்தான்
  தன்னைத் தொட்டவன்
  குடல் சாிக்க வேகத்தொடு
  விவேகமாக துள்ளியெழும்
  காளைக்கு வாழ்க்கை !

  பண்பாட்டின் உச்சம்
  உலகுக்கு!

 3.   சோரம் போகாத வீரம்
    ______________________
  அக்கட்ட போ அக்கட்ட போ…….
  அம்புட்டுப்பயலும்அக்கட்டபோ!
  திமிலை ஆட்டி திமிரா வாரான்
  தில்லிருந்தாப்புடிச்சுக்காட்டு!!
  அஞ்சு கத்தை சோளத்தட்டை
  கஞ்சமின்றி முழுங்கிப்புட்டு
  மஞ்சுவிரட்டு நோம்பி போல
  பாஞ்சுவந்து நின்னிருக்கான்..
  பஞ்சராக்கும் முன்னால
  பிஞ்சுகளே ஓடிடுங்க!!!
  அம்புபோல கொம்பு சீவி
  தெம்போட வந்திருக்கான்..
  தள்ளிநில்லு இல்லையுனா
  தண்ணிகாட்டிப்போயிடுவான்!
  தமிழனோட அடையாளம்
  தாங்கி வருகிறான்….
  தம் புடிச்சு நின்னு காட்டு
  தலை வணங்குவான்…
  சிவபெருமான் வாகனம்
  கவனமிருக்கட்டும்….
  எவ்வளவோ தடைகளையும்
  எதித்து ஜெயிச்சவன்!.
  கல்வி செல்வம் இருந்தாலும்
  துள்ளவேணும் வீரம்..
  ஜல்லிக்கட்டு அருமையாக
  சொல்லித்தரும் பாடம்!.
  (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி
  பவானி… ஈரோடு……)

 4. நாட்டுக் காளையின் பெருமை..!
  ============================

  காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
  ……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்.!
  பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
  ……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்.!
  தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
  ……….தொய்ந்துயர சற்றேபக்க வாட்டில் சாயும்.!
  வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
  ……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்.!

  முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
  ……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்.!
  கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
  ……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்.!
  கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
  ……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்.!
  போட்டியென வந்துவிட்டால் போதும் அது
  ……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்.!

  வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
  ……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு.!
  ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
  ……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை.!
  பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
  ……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்.!
  நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
  ……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்.!

 5. கவனமாய் விளையாடுவீர்…

  பாயும் காளையை அடக்கிடவே
  பதுங்கி நிற்கும் காளையரே,
  மேயும் மாட்டைப் பழக்கியேதான்
  மாந்தர் அடக்கி விளையாடியது
  தூய தமிழர் வீரமானது
  தரணி யெல்லாம் போற்றிடவே,
  ஓய வேண்டாம் விளையாடுவீர்
  உங்கள் நலனுக் கிடர்வராதே…!

  செண்பக ஜெகதீசன்…

 6. காளையும்.. காளையரும்..
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  ஆ. செந்தில் குமார்.

  ஆற்றல் மிகுந்திருக்கும்.. ஆனாலும் பரமசாது..
  சீற்றம் அடைந்துவிட்டால்.. தோற்றத்தில் மதயானை..
  பக்குவம் அடைந்துவிட்டால்.. ஆக்கப்பணிகட்குப் பேருதவி..
  அக்கணமே தவிடுபொடி.. அமைதியை இழந்துவிட்டால்..

 7. மஞ்சினைக் கண்டு அஞ்சிடும் காளைகாள்…….

  பாய்ந்து வரும் காளைகண்டு பயந்து நிற்கும் காளைகளே
  ஓய்ந்து விட்டதா உங்கள் உள்ளத்தின் தற்றுணிபு

  கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை
  ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து.
  கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை
  வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள்
  சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார்.
  நல்ல சகுனமிது நம்மினத்துக் கென்றிருந்தோம்.

  எந்தப் பயமுமின்றி எதிர்த்து வரும் காளைதனை
  எந்திரத்தின் பின்னொளிந்து என்ன செய்யப் போகின்றீர்?
  உற்ற நண்பன் பின்னே ஒளிப்பதுதான் வீரமென்றால்,

  விழலுக் கிறைத்தது போல் வீரத்தை வீண்டித்து
  பழம் படுபனையின் கிழங்கு பிளப்பதற்கு
  ஆப்பு மொங்கான் கோடரியை ஆயுதமாயக் கொண்டதுபோல்
  ஜல்லிக் கட்டுக்குத் தடைநீக்கம் பெற்றிடற்காய்
  சட்டமொன்றைக் கேட்டு தடியடியேன் பட்டுலைந்தீர்?

  மஞ்சுவைக் கண்டு அஞ்சிடும் இளைஞனே நீ

  சேயெனப் பசுவைப் போற்று சிரம்பணிந்ததனையேற்று
  வாயுறையாகப் பொங்கல் வழங்கி நற் பட்டுச் சாத்து
  தூய நல்லன் பினோடும் துணிவொடும் வீரத்தோடும்
  பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச்
  சாயடா அதனையுந்தன் சமர்த்தினை உலகு காண.
  வாயிலா நண்பன் மஞ்சு வதையுறாததனைப் பற்றி
  தாயென அன்பு செய்நீ தரணியுன் பண்பைக் காணும்.

  ஆய வெம் கலைகளுள்ளே அதுவுமொன்றிது வேறில்லை.
  நேயமும் தயையுமெங்கள் நிலத்தினில் புதிதோ இல்லை.

 8. கோபமே கொம்புகளாய்
  குருதி சிவப்பே கண்களாய்
  குதித்தோடித் தாக்க வரும் காளையே
  நீ எங்களைத்
  தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்!

  விடிந்தும் விடியாப் பொழுதில்
  வாசலில் நீர் தெளித்து கோலமிடும்
  பெண்கள் தாலிப் பறித்தோடும்
  கொள்ளையர்கள் அல்ல நாங்கள்!

  பேருந்து கூட்ட நெரிசலிலும்
  விழா கடைவீதி என்றெங்கும்
  பெண்களை சீண்டுகின்ற
  காமப் பித்தர்கள் என்றா
  நீ எங்களை கருதிவிட்டாய்?

  நெருக்கடி மிகுந்த சாலைகளில்
  நடப்பவர்கள் நடுங்கியோட
  வாகனப் போட்டி நடத்தும்
  விபரமறியா விடலைகள் என்றே
  நீ நினைத்து விட்டாய் போலும்!

  உனக்கும் எங்களுக்குமான
  வீர விளையாட்டை மீட்டெடுக்க
  மெரினாவில் கூடிய பெருங் கூட்டத்தின்
  சிறு அங்கங்கள் நாங்கள்!

  ஆராய்ச்சி மணி அடித்த
  ஆரூர் பசுவின் வாரிசு போலும் நீ
  அதனால்தான் அநீதி கண்டு
  சினமுற்று சீறுகிறாய்!
  தவறேதும் நாங்கள் செய்யவில்லை
  தயவு செய்து திரும்பி விடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *