க. பாலசுப்பிரமணியன்

தோல்வி என்பது என்ன ?

வெற்றிகளை மட்டும் சுவைத்து வாழ்ந்தவர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்விகளைச் சந்திக்க முடியாமல் திணறுகிறார்கள். சிறிய தோல்விகளைக் கூட அவர்களால் சந்திக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. அவர்கள் தோல்விகளைத் தங்கள் சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் பங்கமாகக் கருதுகின்றனர். ஆகவே, தோல்விகள் வரும்பொழுது வாழ்க்கையிலிருந்து விலகி, ஒதுங்கி, மறைந்து தங்களைத் தாங்களே சின்னாபின்னமாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அவர்களை மேலும் மேலும் பின்னடையச் செய்து உண்மையான  வாழ்க்கையிலிருந்து விரட்டுகின்றது. மன உளைச்சல், மன அமைதியின்மை மற்றும் இருளடைந்த பின்னோக்கான எண்ணங்களுக்கு ஆளாகி ஒரு நோயாளியாக உருவெடுக்கின்றனர். இன்றைய உலகில் இந்தப்போக்கு அதிக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் இன்றைய வாழ்க்கை முறைகள்தான். கூட்டுக்குடும்பமாக இருந்து பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை விரட்டிவிட்டு இப்பொழுது நாம் தனியாக சிறிய குடும்பங்களாக வாழத் தொடங்கிவிட்டோம். இருப்பதை பகிர்தல், விட்டுக்கொடுத்தல், தியாகம், உணர்வுகளைப் போற்றுதல் மற்றும் மதித்தல் போன்ற பல பரந்த பாங்குகள் கூட்டுவாழ்க்கையில் கிடைத்தன, ஆனால், தற்காலத்தில் போட்டி மனப்பான்மைகள் வளர்ந்து, நீயா நானா என்ற வன்மம் வளர்ந்து, தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சிகள் தலைதூக்கி நம்முடைய சமுதாயத்தை வதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளில் எதிலும் எங்கும் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற மனைப்பான்மை வளர்ந்து உண்மை நிலைகளை அறிந்தாலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்குத் தவறான ஈனமான முறைகளில் ஈடுபட்டாவது நம்மை வெற்றிபெற்றவர்களாக உலகுக்கு காட்ட வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது.

வயது வந்தவர்களிடம்  இருக்கின்ற இந்த உணர்ச்சிகள் கூட்டாகச் சமுதாயத்தை ஆள்வதால் அதுவே ஒரு இலக்கணமாக மாறி வளரும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகின்றது. ஆகவே சிறு குழந்தைகளும் இளைஞர்களும் கூட தோல்விகளைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதில்லை. இதன் தாக்கம் அவர்களுடைய மனநிலைகளையும் வளர்ச்சிப்போக்கையும் பாதிப்பதால் சமுதாயத்தில் ஒட்டுமொத்தமாக இந்த பிற்போக்கான எண்ணங்களின் ஆதிக்கம் நிலவி வருகின்றது. பல நேரங்களில் இவற்றைச் சரியான முறையில் அணுக முடியாதவர்கள் இதையே தங்கள் வாழ்வின் முற்றுப்புள்ளியாகக் கருதி தங்கள் இனிய வாழ்வை முடித்துக்கொள்ளத் துணிகின்றார்கள்.

சற்றே உன்னிப்பாக அலசிப்பார்த்தால் ஒரு உண்மை வெளிப்படும். இவர்கள் தோல்விகளாகக் கருதுவது உண்மையில் தோல்விகளே அல்ல. இவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு மதிப்பீடுதான் இது. சில நேரங்களில் இந்த மதிப்பீடுகள் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒப்பீடுகள் உண்மைக்குப் புறம்பானவை. அறிவியல் நோக்கோடு பார்க்கும்பொழுது ஒவ்வொரு மனிதனின் மூளையும் ஒவ்விதச் சிறப்போடு ஆர்வங்கள், ஈடுபாடுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் உள்ளீடுகளால் தாக்கப்பட்டு வளர்கின்றன. எனவே இரண்டு மனிதர்களை ஒரே நிலையில் வைத்து ஒப்பிடுவது இயற்கைக்குப் புறம்பானது. இதை உணர்ந்து கொண்டால் தோல்வி என்ற வார்தைக்குப் பொருளே இருக்காது. நிலைப்பாடுகள் மாறும் பொழுது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

“Every Child is born as a genius” என்று சொல்லுவார்கள். கல்வித் தகுதிகள் மாறுபடலாம், திறன்கள் மாறுபடலாம், பார்வைகள் மாறுபடலாம், ஆர்வங்கள் மாறுபடலாம், முயற்சி செய்யும் வழிகளும் இலக்குகளும் மாறுபடலாம். அவைகள் ஒருவரின் தோல்விக்கு அறிகுறி அல்ல. “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பது வள்ளுவம். வாழ்க்கையை நாம் எவ்வாறு மகிழ்வோடும் நிறைவோடும் சிறப்போடும் அறத்தோடும் வாழ்கிறோம் என்பதே வாழ்க்கையின் வெற்றிக்கான குறியீடு.

சற்றே அறத்தோடு வாழ்ந்து பார்க்கலாமே !

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *