இந்த வார வல்லமையாளர் (290)

-விவேக்பாரதி

 


வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத பல தனிச்சிறப்புகளை நம் தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் ஒன்று நமது யாப்பிலக்கண அமைப்பு. மக்கள் பேசும் இயல்பான ஒலிகளுக்கும் சொற்களுக்கும் உள்ளே இருக்கின்ற இசையைக் கணக்கிட்டு அறிந்து, செவிகளுக்கு இனிமை பயக்கும் செய்யுள்கள் இயற்றி, அதற்கொரு இலக்கணம் வகுத்தது நம் தமிழ் முன்னோர்களின் சிறப்பான திறன். பொதுவாகவே உயிரைக் கிள்ளி ஒருகணத்தில் நம்மை ஆட்டுவிக்கின்ற சக்தி கவிதைகளுக்கு உண்டு. இன்றைய காலத்தில், வசன நடைக்கவிதைகளும், உரை வீச்சுக் கவிதைகளும், ஐக்கூ, சென்றியு போன்ற வேற்று மொழிக் கவிதை வடிவங்களும் பரிமளித்துக் கொண்டிருக்கும் நவீன காலமாக விளங்குகிறது நமது தமிழ்க் கவிதைச் சமூகம். இத்தகைய நிலையில், அதுவும் நவீனக் கவிதைகள் மிகுந்து குவிந்து கிடக்கும் நம் இணைய வெளிகளில் நமது பாரம்பரிய மரபு செய்யுள் எழுதும் கலையை, அதற்கான இலக்கணங்களைச் சொல்லிக் கொடுத்து, பல தரமான கவிஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஒரு முகநூல் குழு.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யாப்பியல் சிந்தனைகளை மீட்டுருவாக்கவும், யாப்புக் கவிதைகளின் இலக்கணங்களைப் பாடமாக்கிப் பயிற்றுவிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு முகநூல் குழு, “பைந்தமிழ்ச் சோலை.” நல்ல கவிதை ஊற்றத்துடன் முகநூலில் எழுதிக் கொண்டிருந்த கவிஞர்களை, யாப்புக் கவிதைகள் கற்றுக் கொண்டு எழுத ஆர்வமாக இருந்த பாவலர்களை இனம் கண்டுகொண்டு அவர்களுக்கு இலக்கணங்களை எளிமையான பாடங்களாக வழங்கி, வருட நிறைவில் “பாவலர் பட்டத் தேர்வு” வைத்து, வெவ்வேறு நிலைகளில் தேர்ச்சிபெறும் கவிஞர்களுக்கு அவர்களது மதிப்பெண்களுக்கு ஏற்றாற்போல் பட்டம் வழங்கியும் வருகிறது இந்த முகநூல் குழு. இவை அனைத்துமே ஒரு தனிமனிதர் எடுத்துவரும் பெரும் முயற்சி என்றால் அது வியப்பு. ஆம், இந்த முகநூல் குழுவை நிறுவி, ஐயங்களைக் களைந்து, பாடங்கள் மூலம் பயிற்றுவித்து, பட்டம் வழங்கித் தாயுள்ளத்தைப் போல இன்பம் கொள்ளும் அந்தத் தனிமனிதர் மரபுமாமணி பாவலர் மா வரதராசன் அவர்கள்.

தமிழ் இலக்கியங்களில் மீதும் மரபு இலக்கணத்தின் மீதும் தீராத பற்றுடையவராய்த் தனது இளம் வயதுமுதல் கவிதை புனையும் ஆற்றலுடன் விளங்கிய மா வரதராசன் அவர்கள், முகநூலில் நுழைந்த ஒரு வருடத்தில் அதிலே நிரம்பிக் கிடக்கின்ற வசன நடை உரைவீச்சுக் கவிதைகளைக் கண்டு, மரபு இலக்கணத்திற்கும் மறுவாழ்வு கொடுக்கும் எண்ணம் கொண்டதாகச் சொல்லியே அந்தக் குழுவைத் தொடங்கியிருக்கிறார். பலரது ஏச்சுக்கும், வசைகளுக்கும் ஆளாகிப் பின்னாளில் இன்றும் முகநூலில் நிறைய யாப்பியல் அறிந்த பாவலர்களை உருவாக்கி வருகிறார் என்பதிலிருந்தே தமிழன்னை மீது அவர் கொண்டிருக்கும் தீராத பக்தியும் காதலும் புலனாகிறது.

பைந்தமிழ்ச் சோலை என்ற மின்தளம் உருவாக்கி, பல பாவினங்களுக்கு எளிமையான வடிவில் இலக்கணங்களை அளித்து, இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கும்படி அரிய பணி செய்திருக்கும் மா வரதராசன் அவர்கள், இந்தத் திங்கள் முதல் முழுக்க முழுக்க தமிழ் மாதங்களின் பெயரிலேயே வெளியாகும் “தமிழ்க்குதிர்” என்கிற மாதாந்திர மின்னிதழையும் உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார் என்பது பாராட்டத் தக்கது.

அவருக்கே இந்த வார “வல்லமையாளர்” விருதை வல்லமை மின்னிதழ் சார்பில் அறிவிப்பதில் அவரது மாணவனாகப் பயின்ற யான் மிகவும் பேருவகை எய்துகிறேன்.

சொல்லரும் தமிழர் யாப்பின்
   சுவையினை இணையம் கற்க,  
வெல்லமாந் தமிழத் தாயும்
   வெல்லவே உழைப்பை நல்கிப்
பல்கலைக் குழுவைச் செய்த
   பாவலர் வரத ராசன்
வல்லமை யாளர் என்று  
   வழங்குதல் பொருத்த மாமே!

(“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
http://www.vallamai.com/?cat=955

 

 

About the Author

has written 56 stories on this site.

"கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்" துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் "வித்தக இளங்கவி" என்ற பட்டம் பெற்றவர். "மகாகவி ஈரோடு தமிழன்பன்" விருது பெற்றவர். "முதல் சிறகு" என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர்.