Author: சச்சிதானந்தம்

  • அறுமுகநூறு (4)

     

    -சச்சிதானந்தம்

     

    சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து,

    உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து,

    எதிலும் நிலையா மனதை மறந்து,

    கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்!                                                                 16

     

    தா ளிரெண்டும்  தீ யாக,

    தோ ளிரெண்டும் பூ வாக,

    மே  னிஎங்கும்  நீ ரோட,

    வா என்றாய் தா விவந்தேன்!                                                                                           17

     

    பிடியோடு உறவாடும் உன்னண் ணனை,

    பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை,

    விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை,

    படியேறி வருகையில் பாடுகின் றேன்!                                                                             18

     

    கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும்,

    படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்?

    நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம்,

    மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்!                                                                         19

     

    அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும்,

    சரவணா! சரவணா! சிகரங்கள் சொல்லும்,

    முருகனே! முருகனே! என்றுமனம் சொல்லும்,

    பரமனின் குமரனைப் பாடிடச் செய்யும்!                                                                          20

     

    படத்துக்கு நன்றி: http://muruganarul.blogspot.com/2009/11/blog-post.html

     

    Share
  • அறுமுகநூறு (3)

    சச்சிதானந்தம்

    அறுமுகநூறு

     

    தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி,

    உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி,

    சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி,

    அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி!                                                                     11

     

    அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி,

    அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி,

    தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி,

    விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி!                                                                 12

     

    ஐந்தமு துணவின் சுவையே போற்றி,

    நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி!

    வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி,

    பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி!                                                                         13

     

    இசைக்கு மயங்கும் இறைவா போற்றி,

    இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி,

    இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி,

    இருண்ட இதயம் களைவோன் போற்றி!                                                                          14

     

    வாரம் கடந்து, வருடம் கடந்து,

    வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து,

    காமம் கடந்து, கவலை கடந்து,

    கந்தன் அருளின் கருணை அடைவோம்!                                                             15

     

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி :

    http://www.gildedserpent.com/art36/SashiResponse.htm

     

    Share
  • அறுமுகநூறு (2)

    -D.சச்சிதானந்தம்-

     

    முதல் பகுதி இங்கே

     

    அடிமனக் கடலின் அமுதே போற்றி,

    அறுமுக நிலவின் ஒளியே போற்றி,

    அதிமது ரத்தின் சுவையே போற்றி,

    அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி!                                                                     6

     

    கவிமனம் கொண்ட கந்தா போற்றி,

    குவிமனம் என்றாய் குகனே போற்றி,

    செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,

    புவியினைக் காக்கும் புதல்வா போற்றி!                                                                          7

     

    அகமிகுங் குகனின் நினைவே போற்றி,

    மிகமிகு மவனின் கருணை போற்றி,

    முகமிகு முறுவல் தருவோன் போற்றி,

    சுகமிகு மவனை நினைந்தே போற்றி!                                                                              8

     

    இளமுறு வல்தரு வள்ளல் போற்றி,

    வளமுறு மில்தரு மன்னன் போற்றி,

    உளமுறு மல்லல் கொல்வோன் போற்றி,

    குளமுறுங் கமலக் குழவியே போற்றி!                                                                             9

     

    தண்டம் கொண்ட தருவே போற்றி,

    அண்டம் காக்கும் உருவே போற்றி,

    கண்டம் கறுத்தவன் மைந்தா போற்றி,

    கொண்டோம் மனதில் உன்னைப் போற்றி!                                                                      10

     

    படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2012/12/hindu-god-subramanya-pictures.html

     

    Share
  • அறுமுகநூறு (1)

     

    -D.சச்சிதானந்தம்-

     

    காப்பு

     

    கணபதி என்னும் குணபதி போற்றி,

    சினமதி நீக்கும் அவனடி போற்றி,

    தனபதி சிறுமதி களைந்தவன் போற்றி,

    மனமதில் பூத்த பாசெய் கின்றேன்!

     

    நூல்

     

    வெண்முக நிலவின் தண்முகம் தன்னைத்

    தன்முக மாகக் கொண்டசண் முகனை

    இன்முகம் கொண்டு என்மனம் தன்னில்,

    கொண்டொரு பன்முகப் பாசெய் கின்றேன்!                                                                   1

     

    சிவன்மலை ஆண்டவன் சீரடி போற்றி,

    சினங்கொண்டு தணிந்தவன் திருவடி போற்றி,

    சிகரங்கள் தோறும் சேர்ந்தவன் போற்றி,

    சிவந்தசெவ் வடியினைச் சிரங்கொண்டு தொழுவோம்!                                                   2

     

    படியேறி வந்துனது மடி ஏறுவேன்,

    மடியேறி உன்மனதில் குடி ஏறுவேன்,

    கொடியேறும் சேவலுடன் படி ஏறியே.

    அடிமீது அடிவைத்து வருவே னடா!                                                                                 3

     

    படிக்கொரு பாடல் கொடுப்பாய் போற்றி,

    படித்திடும் ஆவல் விதைப்பாய் போற்றி,

    பனிக்குட வாழ்வை அறுப்பாய் போற்றி,

    படைத்தவ னுன்னை அடைவேன் போற்றி!                                                                    4

     

    அடிக்கொரு பாடல் அருள்வாய் போற்றி,

    அனைத்துல குயிரின் கருவே போற்றி,

    அமைத்தொரு பாவைத் தருவாய் போற்றி,

    அடிக் கரும்பாக இனிப்பாய் போற்றி!                                                                                5

     

    (தொடரும்)

     

    படத்துக்கு நன்றி: http://murugan.org/screensavers.htm

    Share