-D.சச்சிதானந்தம்-
காப்பு
கணபதி என்னும் குணபதி போற்றி,
சினமதி நீக்கும் அவனடி போற்றி,
தனபதி சிறுமதி களைந்தவன் போற்றி,
மனமதில் பூத்த பாசெய் கின்றேன்!
நூல்
வெண்முக நிலவின் தண்முகம் தன்னைத்
தன்முக மாகக் கொண்டசண் முகனை
இன்முகம் கொண்டு என்மனம் தன்னில்,
கொண்டொரு பன்முகப் பாசெய் கின்றேன்! 1
சிவன்மலை ஆண்டவன் சீரடி போற்றி,
சினங்கொண்டு தணிந்தவன் திருவடி போற்றி,
சிகரங்கள் தோறும் சேர்ந்தவன் போற்றி,
சிவந்தசெவ் வடியினைச் சிரங்கொண்டு தொழுவோம்! 2
படியேறி வந்துனது மடி ஏறுவேன்,
மடியேறி உன்மனதில் குடி ஏறுவேன்,
கொடியேறும் சேவலுடன் படி ஏறியே.
அடிமீது அடிவைத்து வருவே னடா! 3
படிக்கொரு பாடல் கொடுப்பாய் போற்றி,
படித்திடும் ஆவல் விதைப்பாய் போற்றி,
பனிக்குட வாழ்வை அறுப்பாய் போற்றி,
படைத்தவ னுன்னை அடைவேன் போற்றி! 4
அடிக்கொரு பாடல் அருள்வாய் போற்றி,
அனைத்துல குயிரின் கருவே போற்றி,
அமைத்தொரு பாவைத் தருவாய் போற்றி,
அடிக் கரும்பாக இனிப்பாய் போற்றி! 5
(தொடரும்)
படத்துக்கு நன்றி: http://murugan.org/screensavers.htm


Leave a Reply