Author: டாக்டர்.சுபாஷிணி

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 100.

     வீல்ஸ்கா உப்புச் சுரங்கம், க்ராக்காவ், போலந்து

    முனைவர் சுபாஷிணி

    உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது நம் வழக்கில் உள்ள பழமொழி. எவ்வளவு தான் சுவையாகச் சமைத்தாலும், ஒரு துளி உப்பில்லாவிட்டால் அந்த உணவே பாழ் தான். உலக மனிதர் அனைவருமே உப்பினை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கடற்கரையோரங்களில் தான் உப்பளங்கள் பொதுவாக இருக்கும். ஒரு நாட்டின் மையப் புள்ளியிலே நிலத்துக்குக் கீழே 327 மீட்டர் ஆழத்தில் ஒரு உப்புச் சுரங்கம் இருக்கின்றது. அதனோடு இணைந்தார் போன்ற, உப்பினாலேயே வடிக்கப்பட்ட ஒரு சிற்பக் கலைக்கூடமும் இருக்கின்றது. அதனோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமும் இருக்கின்றது. இதனைக் காண வேண்டுமா? அப்படியென்றால் நாம் போலந்து நாட்டின் கிராக்காவ் நகரத்துக்குத் தான் செல்ல வேண்டும்.

    as1

    க்ராக்காவ் நகருக்கு அருகே இருக்கும் ஊர் வீல்ஸ்கா. இந்த நகரின் பெயரிலேயே இந்த உப்புச் சுரங்கம் செயல்படுகின்றது. இங்கு நிலத்தின் அடியில் உப்புப் பாளங்களைச் சுரண்டி எடுத்து வந்து அவற்றை விற்பனை செய்வது இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்பதைக் கேட்கும் போது இதன் பழமையை நினைத்து ஆச்சரியம் ஏற்படுகின்றது அல்லவா?

    இங்கே உள்ளே செல்வதற்குக் கட்டணம் கட்ட வேண்டும். தனியாக யாரும் செல்ல அனுமதி கிடையாது. ஆக ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து விளக்கம் சொல்லும் வழிகாட்டிகள் உதவியுடன் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். உள்ளே நுழைந்ததும் நாம் மரப்பலைகைகளால் அமைக்கப்பட்ட படிகளில் இறங்கி நடக்க வேண்டும். ஏறக்குறைய450க்கும் குறையாத படிகள் உள்ளன. கீழே இறங்கியதும் முதலில் தென்படுவது ஒரு ரகசிய அறை. அந்த அறை பொதுவாகவே பூட்டப்பட்டிருக்கும். நான் சென்ற வேளை என்னுடன் கூடுதலாக 2 அமெரிக்க பெண்களும் வந்திருந்தனர். ஆகவே கூட்டம் குறைவு என்பதால் எங்கள் வழிகாட்டி அந்த ரகசிய அறையை எங்களுக்குத் திறந்து காட்டினார். உள்ளே உப்புப்பாறைகளினாலேயே செதுக்கப்பட்ட அன்னை மேரியின் சிற்பமும் முக்கிய கத்தோலிக்க குருமார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்ட ஒரு தேவாலயமே கண் முன்னே இருந்தது. இது என்ன உலக அதிசயமா, என வியந்து நின்ற எங்களுக்குச் சிறு விளக்கம் அளித்து விட்டு, வாருங்கள் இன்னும் இருக்கின்றது .. இதை விடப் பிரமாதமாக எனச் சொல்லி அழைத்துச் சென்றார் எங்கள் வழிகாட்டி.

    as2

    கி.பி 13ம் நூற்றாண்டில் இங்கு உப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே இதனை வணிகமாக்கும் பொருட்டு உள்ளே சுரங்கப்பாதையைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் கீழே குதிரைகளை எடுத்துச் சென்று வண்டிகளை உருவாக்கி, தண்டவாளங்களை உருவாக்கி, சாலைப்பகுதிகளை உருவாக்கி உப்பினை தோண்டத் தோண்ட அவற்றை வெளியே எடுத்து வரத் தேவையான கருவிகளை படிப்படியாக உருவாக்கியிருக்கின்றனர்.

    as3

    சுரங்கத்திற்குள் செல்லும் போது பாதையைத் தவிர்த்து உப்பு சுவர்களில் பொதிந்து காட்சியளிக்கின்றது. உள்ளே காற்று மிதமாக இருக்கின்றது. உள்ளே நடக்கும் போது நாம் சுவாசிப்பது பல தாதுப்பொருட்கள் கலந்த ஆக்ஸிஜன் காற்று என்பதால் உடலுக்கு நன்மை தரும் ஒரு பயணமாகவும் இந்த சுரங்கப்பாதை பயணம் அமைந்தது. சுரங்கப்பாதை உள்ளே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைத்திருக்கின்றனர். இதன் மொத்த நீளம் 287 கிமீட்டர் ஆகும். ஏறக்குறைய 4 மணி நேரங்களை உள்ளே அந்தச் சுரங்கப்பாதைக்குள் நாங்கள் செலவிட்டமையால் ஏறக்குறைய 5 கிமீ தூரம் நடந்திருப்பேன் என்றே கருதுகிரேன்.

    இந்த உப்புச் சுரங்கத்திற்குள்ளே நீர் தேங்கிய குளங்கள் இருக்கின்றன. இங்குப் பணியாற்றிய சுரங்கத் தொழிலாளர்கள் பல நாட்கள் வெளியே செல்ல முடியாத சூழலில் சுரங்கத்திற்குள்ளேயே இருந்து பணிபுரிந்தனர். இவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக அச்சுரங்கத்திற்குள் ஏறக்குறைய 7க்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டியுள்ளனர். ஒவ்வொன்றிலும் மேரி மாதாவும். சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிருத்துவும் உள்ள வகையில் உப்பு பாறைப்படிவங்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.

    as4

    இந்த உப்புச் சுரங்கத்தின் மையப்பகுதி உலகப் பிரமாண்டங்களில் ஒன்று எனத் தயங்காது கூறலாம். ஒரு மிகப்பெரிய அரண்மனையில் விருந்தினர் பகுதியின் அலங்கரிப்பு போல சுவர்களில் நிறைந்துள்ள சிற்பங்களின் அழகை வர்ணிக்க சொற்கள் கிடையாது. கனவுலகத்தில் இருக்கின்றோமா என நம்மையே நாம் கேட்டுக் கொள்ளும் வகையில் இந்த மையப்பகுதியை வடிவமைத்திருக்கின்றனர். இங்கு சுவரில் புடைப்புச் சிற்பங்களாக உள்ள அனைத்துச் சிற்பங்களுமே உப்புப் பாளங்களினால் மட்டுமே தயாரிக்கப்பட்டவைதாம் என்பதே இதன் தனிச்சிறப்பு எனலாம். இந்த கலைப்படைப்புத் தொகுதியில் புதிதாக இணைந்திருக்கும் சிற்பம் மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜோன் பவுல் அவர்களின் சிற்பமாகும். இவரது சிற்பமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    உலகப் பிரமாண்டங்களில் ஒன்றாகத் திகழும் இந்த உப்புச் சுரங்கம் 1978ம் ஆண்டு யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றது. 2007ம் ஆண்டு வரை இங்கு உப்பு உற்பத்தி தொழில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 2007ம் ஆண்டு முதல் இங்கு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு சுற்றுலா தளமாக மட்டுமே இது இன்று இயங்கி வருகின்றது.

    as5

    இந்த உப்புச் சுரங்கத்திற்குள் உள்ள சிற்பங்களில் கிருத்துவ மத சார்புள்ள சிற்பங்களைத் தவிர்த்து முக்கியஸ்தர்களின் சிலைகளும் இங்கே உப்புப்பாளங்களினால் வடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மன்னர் கசிமியர், நிக்கோலவுஸ் கோப்பர்நிக்கஸ், யோஹான் வோல்வ்காங் ஃபோன் கோத்த, அலெக்ஸாண்டர் ஃபோன் ஹும்போல்ட், பில் கிளிண்டன் ஆகியோரது சிற்பங்களைக் குறிப்பிடலாம். பிரபலங்கள் மட்டுமன்றி உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையை விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிற்பங்களும் இங்கே உள்ளன. குதிரையில் பூட்டிய உப்புக்கட்டிகளைத் தூக்கிச் செல்லும் மனிதன், பாறைகளைத் தீ வைத்து உடைக்கும் தொழிலாளி, குளத்தைத் தூய்மை செய்யும் தொழிலாளி என இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த சுரங்கப்பாதைப் பணிகளை விவரிக்கும் வகையில் இந்தச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

    as6

    போலந்து ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நாடு. ஆக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் போலந்திலிருந்து வர்த்தகம் நடைபெற்ற மிகப்பிரபலமான நகரமாக க்ராக்காவ் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதன் முக்கியத்துவம் இன்றைய பொருளாதார மாற்றத்தால் சற்றே சரிந்திருந்தாலும் கூட இப்பகுதி ஐரோப்பாவின் மிக முக்கிய வணிகப்பாதையில் அமைந்திருக்கும் ஒரு பகுதி. ஆக இங்கிருந்து தோண்டப்பட்ட உப்பு பல்வேறு இடங்களுக்கு ஆற்றின் வழியாகவும் தரை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டது என்பது வரலாறு.

    அருங்காட்சியகங்களில் பல வகை உண்டு. உலக அதிசயங்களில் ஒன்று அருங்காட்சியகமாகக் காட்சி தரும் அமைப்பாகவே, வருவோரை வியப்பில் ஆழ்த்தும் வீல்ஸ்கா உப்புச் சுரங்கமும் அதன் அருங்காட்சியகமும் விளங்குகின்றன.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 99

    செக்போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    ஜெர்மனியின் வரலாற்றில் பல முக்கிய தேதிகள் நீண்ட பட்டியலாகவே உள்ளன. மிகப் பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்த நாடு ஜெர்மனி என்பது உண்மையே. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏனைய உலக நாடுகளின் மத்தியில் கிடைத்த பிரபலம் போல ஜெர்மனிக்குக் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படி மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாகத் திகழ்வது ஆகஸ்டு 13, 1961ம் ஆண்டு. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் ஜெர்மனியைப் பாதுகாப்பதில், குறிப்பாக அதன் அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மோதலின் விளைவாக உருவானதுதான் 1961ம் ஆண்டு பெர்லின் பிரச்சனை. இதுவே ஜெர்மனியின் கிழக்கு ஜெர்மனிக்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையே பெர்லின் மக்களைச் சுவர் அமைத்துப் பிரித்து வைத்த அரசியல் நிகழ்வினைக் குறிப்பிடும் ஒரு நாளாக அமைகின்றது.

    as1

    2ம் உலகப்போருக்குப் பின்னர் கூட்டு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்சு, சோவியத் யூனியன் ஆகிய நான்கு நாடுகளும் ஜெர்மனியைத் தங்கள் ஆளுமைக்குள் அடக்கி வைக்கும் வகையில் அதன் மையமாகிய பெர்லின் நகரை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்யும் முறையை உருவாக்கின. 1948ம் ஆண்டில் சோவியத் பகுதிக்குள் அமெரிக்கா செல்வதற்குத் தடைகளை சோவியத் யூனியன் ஏற்படுத்தியது. அந்த நிலையில் கிழக்கு பெர்லின் மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தரை வழி செல்ல இயலாததால், விமானங்களின் வழி கிழக்கு பெர்லின் மக்களுக்கு உணவும் அடிப்படைத் தேவைக்கான பொருட்களையும் வழங்கத் தொடங்கின. பின் 1949ம் ஆண்டு சோவியத் யூனியன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உதவிப் பொருட்களைத் தரை வழியே கிழக்கு பெர்லின் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் பாதையைத் திறந்தது.

    as2

    1950 வாக்கில் சோவியத் யூனியன் மேற்கிலிருந்து கிழக்கு ஜெர்மனிக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொருட்டு தடைகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அரசியல் நிலைமைகளின் காரணமாக பெர்லின் மக்கள் பட்ட இன்னல்களுக்கு அளவே இல்ல எனலாம். 1949க்கும் 1961க்கும் இடையில் கிழக்கு பெர்லினிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனிக்குச் சென்றோரின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன் மக்கள் தொகை ஆகும்.

    அகஸ்டு 13ம் நாள், 1961ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி தன்னை மேற்கு ஜெர்மனியிலிருந்து பிரித்துக் கொள்ளும் வகையில் பெர்லின் சுவரை எழுப்பியது. 155 கி.மீ. நீளம் கொண்ட சுவர் இது. கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாகப் பிரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுவர் இது. கருங்கல்லால் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் முள் வேலிகளும் பொருத்தப்பட்ட மிக உறுதியான சுவராக இந்த பெர்லின் சுவரை சோவியத் யூனியன் கையில் இருந்த கிழக்கு பெர்லின் அரசு உருவாக்கியது.

    சுவர் கொண்டு எழுப்பினாலும் ஒரு நுழைவுப் பாதை இந்தச் சுவற்றுப் பகுதியில் உருவாக்கப்பட்டது. அந்த வகை எல்லைக்காவல் நிலயம் தான் செக்போயிண்ட் சார்லி (Checkpoint Charlie). இந்தப் பாதை வழியாக ஒருவர் கால்நடையாகவும், வாகனத்தின் வழியாகவும் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் வந்து செல்லலாம். சார்லி (Charlie) என்பது ஒரு மறைமுகக் குறியீடு (code word). நாட்டோவினால் பயன்படுத்தப்பட்ட ஒரு ரகசியக் குறியீட்டுச் சொல்லை பிரதிபலிப்பது இச்சொல்.

    as3

    செக்போயிண்ட் சார்லி குறிப்பிடத்தக்க சில ஆங்கில, ஜெர்மானிய திரைப்படங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஜேம்ஸ் போண்ட் படமான ஆக்டபஸி திரைப்படமும் அதில் ஒன்று. Cafe Adler (Eagle Café) என்ற திரைப்படமும் இந்தப் பகுதிக்கு எதிராக உள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்தவாறு நிகழும் சில செய்திகளைச் சொல்லும் படம். இந்த உணவகம் இன்றும் இருக்கின்றது. 2013ம் ஆண்டு நான் பெர்லினுக்குச் சென்றிருந்தபோது இந்த உணவகத்தில் அமர்ந்தவாறு செக்போயிண்ட் சார்லியைப் பார்த்துக் கொண்டிருந்த நிமிடங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன.

    இந்த பெர்லின் சுவர் பல மரணங்களைப் பார்த்துள்ளது. மக்களின் சோக வாழ்க்கையை பெர்லின் சுவர் தன்னுள்ளே உறிஞ்சிக்கொண்டது என்று தான் குறிப்பிட வேண்டும்.

    as4

    1990ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் நாள் செக்போயிண்ட் சார்லியின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது தொடர்ச்சியாக இரு தரப்பிலிருந்தும் ஜெர்மானிய மக்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த மனித உரிமைக்கு எதிரான இந்த நடவைக்கைகளுக்கான எதிர்குரலே. ஜூன் மாதம் இக்கதவுகள் திறக்கப்பட்டாலும் எல்லைச் சோதனைகள் அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து கொண்டிருந்தன. 2ம் தேதி இரவு பெர்லின் சுவர்கள் ஜெர்மானிய மக்களால் தகர்த்து உடைக்கப்பட்டது. மக்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சுவர்களைத் தகர்த்து உடைத்தனர். கிழக்கும் மேற்கும் ஜெர்மானிய மக்களின் உறுதியால் ஒன்றிணைந்தது.

    ​1990ம் ஆண்டில் பெர்லின் சுவற்றை உடைப்பதற்கு முன்னரே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு விட்டது. ​முதலில் Dr. Rainer Hildebrandt என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1962ம் ஆண்டு உடைபட்டுக் கிடந்த பெர்லின் சுவரின் கற்களின் மேல் சில வாசகங்களை எழுதி வைத்தார். இது அப்பகுதியில் மக்களின் வலியைப் பதிவாக்கும் ஒரு அருங்காட்சியகம் தேவை என்ற சிந்தனையை எழுப்பியது. தற்சமயம் இந்த செக்பாயிண்ட் சார்லி அமைந்திருக்கும் அருங்காட்சியகமானது1963ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 13 August Consortium என்ற அமைப்பு இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. 13ம் தேதி என்பது பெர்லின் சுவர் எழுப்பப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் அமைந்த ஒரு அமைப்பாகும். இதன் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் Alexandra Hildebrandt அதாவது முதலில் கண்காட்சியை உருவாக்கிய Dr. Rainer Hildebrandt அவர்களின் மனைவியாவார். பெர்லினின் நகரிலுள்ள 100க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களும் மிக அதிகமான வருகையாளர்களால் வந்து பார்த்துச் செல்லும் அருங்காட்சியகங்களில் ஒன்று என்ற சிறப்பு கொண்டது இந்த அருங்காட்சியகம்.

    இந்த அருங்காட்சியகத்தின் கண்காட்சியில் பெர்லின் சுவர் எழுப்பப்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிடும் ஆவணங்களும், அதில் ஈடுபட்ட மனிதர்களைப் பற்றிய செய்திகளும், நாட்டோ கூட்டு நாடுகளைப் பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13, 1961ம் ஆண்டு பெர்லின் சுவர் அமைக்கப்பட்ட நிகழ்வு, அதன் தொடர்ச்சியாக அமுலுக்கு வந்த சட்டங்கள், நடைபெற்ற துர்சம்பவங்கள் ஆகியன பற்றிய ஆவணங்களும் கண்காட்சியில் உள்ளன. 2007ம் ஆண்டு நிரந்தர கண்காட்சிப்பகுதியை இந்த அருங்காட்சியகம் உருவாக்கியது. அதில் நாட்டோவின் (NATO) வரலாற்றைச் சொல்லும் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்ட்டுள்ளன. உலக அளவில் நாட்டோவின் (NATO) ஆரம்பக்கால வரலாற்றைக் குறிப்பிடும் மிக முக்கிய அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது எனலாம்.

    as5

    பெர்லின் நிகழ்வுகள் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் அரசியல் அடக்குமுறைகளை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் குறிப்புக்களும் ஆவணங்களும் இங்கு உள்ளன. இந்தியாவிலிருந்து காந்தியின் குடும்பத்தார் வழங்கிய 14 ஆவணங்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றன என்பதும் ஒரு சிறப்பே.

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி Friedrichstraße 43-45, 10969 Berlin.

    பெர்லின் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வரவேண்டிய ஒரு வரலாற்று மையம் இது என்பதால் கண்டிப்பாக தங்கள் சுற்றுப்பயணப் பட்டியலில் இதனை இணைத்துக் கொள்ள வேண்டும்.

    நிகழ்கால நிகழ்வுகள் வரலாறாக மாற்றம் பெறுகின்றன. வன்முறையை இல்லாதாக்கி அன்பை மேம்படுத்தி மனிதக் குலம் வாழ்வதே நல்வாழ்க்கையாக அமையும்.

    சரி.. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தைக் காண அழைத்துச் செல்கிறேன். இப்போது செக்போயிண்ட் சார்லி நினைவில் மூழ்கியிருங்கள் !
    .

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 98

    உடைந்த உறவுகள் – அருங்காட்சியகம், சாக்ரெப், குரோய்ஷியா

    முனைவர் சுபாஷிணி

    காதல்.. காதல்.. காதல்..

    பழமையைப் போற்றுவதற்கும், மானுடவியல் ஆய்வுகளில் உதவுவதற்கும், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆக்கங்களைப் பட்டியலிடவும் மட்டும் தான் அருங்காட்சியகமா? மனித உறவுகளில் உள்ள சில கூறுகளைப் பதிவாக்கி வைக்கவும் அருங்காட்சியகங்கள் வேண்டாமா?

    as1

    வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலர்.
    தற்செயலாகச் சந்திக்கும் அவர்களில் யாரோ ஒருவருடன் மனதில் திடீரென ஈர்ப்பு ஏற்பட்டு விடுவதை மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே உணர்ந்து அனுபவித்துக் கடந்து வருகிறோம். மனிதர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய அம்சங்களான குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடும் நாம், நம் தனி மனித உணர்வுகளின் அதி உயர்வான காதல் உணர்வைப் போற்றி மதிக்காமல் போய்விடுகின்றோமே..

    சில வேளைகளில் காதல் தோல்வியைத் தற்கொலையால் பூசிப்பவர்களும் உண்டு. காதல் தோல்வியால் மதுபானம், போதைப்பொருள் என சில தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் நலனையே கெடுத்துக் கொள்பவர்களும் உண்டு. ஒரு சிலரோ, உடைந்து போன காதலுக்கு மரியாதையைச் செலுத்தி விட்டு புதிதாகத் தோன்றியிருக்கும் காதலை வளர்த்தெடுப்பதில் மூழ்கிவிடுபவர்களும் உண்டு. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காதல் உணர்வுகள் எழுவது இயல்பு. காதல் வயப்பட்டோர் ஏதாவதொரு ஒரு காரணத்திற்காகத் தோல்வியைச் சந்தித்திருப்பதும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்து புதிய காதலை ரசித்து வாழ்க்கையைத் தொடர்வதே வாழ்க்கைக்கான வெற்றி. ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சோகம் மற்றொருவருக்குப் புதிய பாதையைக் காட்டலாமே, என்ற சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதுதான் குரோய்ஷியா நாட்டின் தலைநகரமான சாக்ரெப்பில் அமைந்திருக்கும் உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்.

    as2

    2006ஆம் ஆண்டு இத்தகைய ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவே அரசு இந்த முயற்சியில் இறங்கியது. அதன் அடுத்த ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு படிப்படியாகப் பல ஆவணங்களும் காட்சிப் பொருட்களும் இங்கு இணைக்கப்பட்டன. இன்றளவும் இணைக்கப்படுகின்றன.

    அருங்காட்சியகங்கள் என்றால் பொதுவாக எதனை எதிர்பார்ப்போம்..? சிதிலமடைந்த சுவர்கள், சிற்பங்கள், கற்கள், எலும்புக் கூடுகள், சின்னங்கள், நாணயங்கள் … இப்படித்தானே..?

    இங்கே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் தனி நபர்கள் நன்கொடையாக இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கிய சுய அனுபவங்களின் சான்றுகள் தாம். இங்கு உலகம் முழுவதிலிருந்து இத்தகைய பொருட்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றை முறையாகக் காட்சிப்படுத்தி குரோய்ஷிய மொழியிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இங்கு வைத்திருக்கின்றார்கள்.

    இங்குள்ள ஒரு சில சொந்தக் கதை அனுபவங்கள் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

    நெதர்லாந்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர். அவரது ஒரு காலணியும் எதனால் இதனை நினைவுச் சின்னமாக அனுப்பினார் என்ற விளக்கமும் உள்ளது. அதில் அவர் சொல்கிறார்.

    “1959ஆம் ஆண்டு. எனக்கு 10 வயது. அவனுக்கு 11 வயது. நாங்கள் இருவரும் மிகுந்த காதலில் இருந்தோம். நாங்கள் இருவரும் வெளியே தனியாகச் சுற்றினோம் என்பதை என் தாயாருக்குச் சொன்ன போது என் காதில் பலமான அடி விழுந்தது. என்னை என் அத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். எனக்கு 15 வயது. மீண்டும் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சில மாதங்கள் எங்கள் உறவு இனிமையாகக் கழிந்தது. பின்னர் அவன் ஜெர்மனி சென்று விட்டான். ஆனால் கடிதத் தொடர்பில் இருந்தோம். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் தொடர்பு துண்டித்துப் போனது.1998ஆம் ஆண்டு. நான் தொழில் ரீதியாக ஒரு பணியில் இருந்தேன். அச்சமயம் ஒரு வாடிக்கையாளர் வந்து பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில், அவர் அவன் தான் என அறிந்து கொண்டேன். அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான். தனக்கு முதல் திருமணம் வெற்றியாக அமையவில்லை என்றும் இரண்டாம் திருமணம் செய்திருப்பதாகவும் கூறினான். இனி இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என நான் கூறினேன். அவன் என் நினைவாக நான் அணிந்திருந்த காலணியில் ஒன்றினைக் கேட்க அவனுக்குக் கொடுத்து விட்டேன். பின்னர் யோசித்தேன். அந்த நினைவுகள் மீண்டும் தேவையில்லை. எஞ்சிய இந்த ஒரு காலணியை அருங்காட்சியகத்திற்கு என் வாழ்க்கை நினைவாகக் கொடுக்கின்றேன்.”
    ..என அவரது காதல் தோல்வி கதை அமைகிறது.

    அடுத்த கதை. இதனையும் ஒரு பெண் பிரேசில் நாட்டிலிருந்து எழுதியிருக்கின்றார். கடிதத்தோடு காகிதத்தால் செய்யப்பட்ட திருமண அலங்கார வளையத்தை அனுப்பியுள்ளார்.

    “நான் ஒரு எழுத்தாளர். நான் எனது பதிப்பக உரிமையாளரையே மணந்து கொண்டேன். திருமணத்திற்காக இந்த காகித அழகு வளையத்தை இருவருமே செய்தோம். இது முழுக்க முழுக்க காகிதத்தால் மட்டுமே ஆனது. நாங்கள் இருவரும் எழுத்துத் துறையில் இருப்பதால் அதனைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தோம். எங்கள் 5ஆம் ஆண்டு திருமண நாளின் போது அவன் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் ஆராய்ந்த போது அது ஊர்ஜிதமாகியது. அவனிடமிருந்து விலகி விட்டேன். அவன் நினைவுகளும் தேவையில்லை என்பதால் இந்தக் காகித அலங்கார வளையத்தை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்புகிறேன். ”
    .. இது அவரது கதை.

    இன்னொரு பெண்மணி.. குரோய்ஷியாவிலேயே இருப்பவர். அவரது திருமண ஆடையை இங்கு வழங்கியதோடு ஏன் என்ற காரணத்தை சில வரிகளில் கூறியிருக்கின்றார்.

    as3

    “நீண்ட சண்டைகள் எங்களுக்குள் ஏற்பட்டன. அவை தொடர்ந்தன. அவன் தன் பக்க நியாயத்தை மட்டுமே ஓயாது பேசிக் கொண்டிருந்தான். பேசுவதே அதிகம். தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் வேலைக்கும் செல்லவில்லை. திருமணம் முதல் எல்லாமே எனது செலவிலேயே நடந்தது. அவனால் எனக்குக் கடன் தொல்லையும் ஏற்பட்டது. அவனது கடன்களை அடைத்தேன். அவனை வெளியே விரட்டினேன். அவன் நினைவுகளும் வேண்டாம். இந்தத் திருமண கவுனும் வேண்டாம். ”
    ..இது அவரது வாழ்க்கையில் காதல் ஏற்படுத்திய காயத்தின் சான்று.

    இங்குள்ள காதல் தோல்வி சான்றுகள் பெண்கள் அனுப்பியவே அதிகம். இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஆண் ஒருவர் அனுப்பிய காதல் தோல்விக்கான காரணத்தையும் சான்றையும் பார்ப்போமே.

    “நான் அவளை முதன் முதலில் டிசம்பர் மாதத்தில் சந்தித்தேன். ஆரம்பத்தில் நட்பாக மட்டுமே எங்கள் உறவு தொடர்ந்தது. ஏனெனில் நான் அப்போது ஒரு காதலிக்காக ஏங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவளிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்க வந்திருந்தாள். எங்கள் உறவு இனிதே தொடங்கியது. அவள் திரும்பிச் செல்ல வேண்டிய காலம் வந்தது. என்னையும் அழைத்தாள். நான் லண்டனிலிருந்து வரமுடியாது எனக் கூறிவிட்டேன். எங்கள் உறவு முறிந்தது. “

    ஏன் முறிந்தது? எதனால் லண்டனிலிருந்து வரமுடியாது என 10 காரணங்களைச் சொல்லி அவளை அனுப்பி வைத்திருக்கின்றார் இந்த ரோமியோ. அந்த 10 காரணங்கள் அடங்கிய பட்டியல் மனதை உறுத்தி வருத்தியிருக்கும் போல. அதனால் அதனை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டார்.

    இன்னொரு பெண்மணி.. தனது ஒரு வருடக் காதல் அனுபவம் .. பின் ஏற்பட்ட காதல் முறிவு ஆகியவற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறுகிறார்.

    as4

    “ஒரு முறை போதைப் பொருளுக்கு அடிமையானவன் மீண்டும் அதிலிருந்து தப்பவே முடியாது. போதைக்கு அடிமையானவன் வாழ் நாள் முழுதும் போதைப்பொருளுக்கு அடிமைதான். ஆனால் முதலில் என் நண்பர்கள் இதனைக்கூறியபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன் வாழ்க்கையில் மறு வாய்ப்பு வழங்கப்படும் போது மாறிக் கொள்ள மாட்டானா? என் காதல் அவனை மாற்றும் என என் நண்பர்களிடம் வாதிட்டு அவனுடன் காதல் நட்பினைத் தொடங்கினேன். அவன் என்னை அதிகம் காதலித்தான். நானும் அவனை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். எனக்குச் சிரமம் ஏற்படும் போதெல்லாம் துணையாக இருந்தான். அதனால் என் நண்பர்களிடமிருந்தும் கூட விலகி விட்டேன். நாங்கள் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினோம். வியாபாரத்தைத் தொடங்கினோம் . குடும்பம் அமைப்பது பற்றி அதிகமாகப் பேசினோம். ஒருநாள் திடீரென்று அவனிடம் மாறுதலைக் கண்டேன். எனக்குத் தெரியாமல் போதைப் பொருளை உட்கொள்வதை மீண்டும் தொடங்கியிருந்தான். சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. ஆறு மாதங்கள் போராடிப் பார்த்தேன். அவன் மாறவில்லை. நான் அவனிடமிருந்து பிரிந்து வந்து என் வாழ்க்கையைத் தொடர்கின்றேன். அவன் நினைவாகக் போதைப்பொருள் சோதனைக்கருவி ஒன்றினை சான்றாக அனுப்பி, இக்கடிதத்தையும் அனுப்பியிருக்கின்றார். “

    இப்படிப் பல பல கதைகள்.. நின்று வாசித்தால் பெருமூச்சு ஏற்படும். ஆனாலும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பிறருக்கு புது வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இத்தகைய தகவல்களை அனுப்பியிருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்தத்தான் வேண்டும்.

    as5

    காதலில் தோல்வி ஏற்பட்டு மனம் வருந்திக் கொண்டிருப்பவர்கள் முதலில் அக்காதலை நினைவூட்டும் எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி விடுவதே நல்லது. பழைய நினைவுகள் நிகழ்கால வாழ்க்கையைப் பாதிக்க நாமே இடம் கொடுக்கக் கூடாது., ஆக, காதலில் தோல்வி அடைந்தோர் ஏதேனும் நினைவுப் பொருட்கள் வைத்திருந்தால் உங்கள் காதலை விவரித்து அப்பொருளையும் சேர்த்து இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடலாம். இதன் முகவரி,

    Museum of Broken Relationships,
    Ćirilometodska ul. 2, 10000, Zagreb, Croatia

    வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. முதல் தோல்வி என்றும் தோல்வியல்ல. ஒருமுறை காதலில் தோல்வியடைந்தால் மனம் உடைந்து போக வேண்டாம் தோழர்களே. வாழ்க்கையில் நல்ல துணையைக் காதலித்துக் கைகோர்த்து நலமுடன் காதல் செய்து மகிழ்ந்து வாழ்வீர். முடிந்தால், சாக்ரெப் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அப்படியே ஒரு முறை இந்த அருங்காட்சியகத்திற்கும் சென்று இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுயவாழ்க்கை அனுபவக் காதல் தோல்விச் சான்றுகளையும் பார்த்துச் செல்லுங்கள்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 9​7

    தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா

    முனைவர் சுபாஷிணி

    ​மலேசியா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் தேசிய அருங்காட்சியகத்தினைப் பற்றி இந்தப் பதிவில் சில செய்திகள் பகிர்ந்து கொள்கிறேன்.

    கோலாலம்பூரின் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு அருகே, டாமான்சாரா சாலையில் அமைந்திருக்கின்றது மலேசிய தேசிய அருங்காட்சியகம். மலேசிய மக்கள், வரலாறு, மன்னர்கள், பேரரசுகள், காலனித்துவ ஆட்சிக்கால செய்திகள், கலாச்சாரம், அகழாய்வு என மலேசியாவைப் பற்றி பொதுவாக ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில், மிக நேர்த்தியான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சிலாங்கூர் அருங்காட்சியகம் சிதிலமடைந்த பிறகு இந்த புதிய கட்டிடத்தை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 21 ஆகஸ்ட் 1963ஆம் ஆண்டு இப்புதிய கட்டிடம் திறப்பு விழா கண்டது. பாரம்பரிய மீனாங்கபாவ் கட்டுமான வடிவத்தில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

    as4

    அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் இருக்கும் வரவேற்பு வளையம் கெடா மாநிலத்திலிருக்கும் குவாலா கெடா கோட்டையின் முகப்பில் இருந்த வரவேற்பு வளையமாகும். அதனை பெயர்த்தெடுத்து வந்து இந்த அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியாக அது​ இங்கு​ இணைக்கப்பட்டிருக்கின்றது. கெடா மாநிலத்திலிருக்கும் அக்கோட்டைப் போர்த்துக்கீசியர்கள் மலாயாவைக் கைப்பற்ற 1611ம் ஆண்டில் நிகழ்த்திய போரின் போது பெருமளவு சேதமடைந்தது. மீண்டும் 1771ம் ஆண்டு அக்கோட்டை அப்போதைய கெடா மன்னர் சுல்தான் முகமது ஜீவா ஜைனல் அசீலீன் முஆஸாம் ஷா (1778 – 1797) அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. மலாயாவை ஆட்சி செய்த மன்னர்களின் பலத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாக இந்தக் கோட்டையின் வாயில் பகுதி திகழ்வதால்​,​ அது இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு முன் வாயிலில் பொருத்தப்பட்டு சிறப்பளிக்கப்பட்டுள்ளது.

    as3
    வாசல் பகுதியிலேயே அன்றைய மலாயாவில் செயல்பாட்டில் இருந்த ரயில்பெட்டிகள் சில வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ரயில்பெட்டி 121,600,00 மலேசிய ரிங்கி​ட்டிற்கு இங்கிலாந்திலிருந்து வாங்கப்பட்டதாகும். 1921ம் ஆண்டு இது​ தன்​ சேவையைத் தொடங்கியது. இதன் எடை 88 1/2 டன் ஆகும். Kitson and Co. என்ற இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் இதனைத் தயாரித்தது. நவம்பர் மாதம் 1969ம் ஆண்டு இது தன் சேவையை நிறுத்திக் கொண்டது என்றும் தனது சேவைக் காலத்தில் இந்த ரயில் மலாயா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் சேவையில் இருந்ததாகவும், ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் ரயில் மைல்கள் இது பயணித்துள்ளது என்றும் அறிய முடிகின்றது. இதைப் போல இன்னும் சில ரயில்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பினாங்கு மலை உச்சிக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட பழைய கேபிள் ரயில் ஒன்றின் பகுதி ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றது.

    as2
    ​அன்றைய மலாயா உட்பட கிழக்காசிய நாடுகள்​ அனைத்தும் புத்தமதம் செழித்துப் பரவிய நாடுகள் எனலாம். கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள் வணிகம் செய்யவந்து பின்னர் இந்த​ புதிய நிலப்பகுதியிலேயே தங்கி​,​ இங்கே பௌத்த மதம் செழிக்கவும் காரணமாக இருந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட பௌத்த மத வழிபாட்டினைக் கடைபிடிப்போராகவே தங்கள் பண்பாட்டினைத் தொடர்ந்தனர் என்பதை அறியமுடிகின்றது. கி.பி.6ஆம்​,​ 7ஆம் நூற்றாண்டு கோயில்களின் பகுதிகள்​ ஆங்காங்கே நிகழ்த்தப்பட்ட ​ அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கெடா மாநிலத்திலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு இன்றளவும் இந்திய பழம் பண்பாட்டின் தாக்கத்தைக் காட்டும் உதாரணமாகத் திகழ்கின்றது எனலாம். அந்த வகையில் பேராக் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அவலோகிதர் சிற்பம் ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 1936ஆம் ஆண்டில் ஈயம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினருக்கு இந்தச் சிற்பம் கிட்டியது. இது செம்பினால் செய்யப்பட்ட சிற்பம். இதன் காலம் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனக்கணக்கிடுகின்றனர். இக்காலகட்டத்தில் இந்து சமயமும் பௌத்த சமயமும் இப்பகுதிகளில் மிகச் செழிப்புற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    as1

    மலேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என்றால் அது 31 ஆகஸ்ட் 1957ஆம் ஆண்டினைத்தான் குறிப்பிட வேண்டும். சுதந்திரம் வேண்டிய உள்ளூர் மக்கள் இங்கிலாந்தின் காலணித்துவ அரசை எதிர்த்து அகிம்சைப் போராட்டத்தை நடத்தினர். 1955ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1955ஆம் ஆண்டும் சட்டப்பேரவைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாகச் செயல்பட்ட அம்னோ, எம்.ஐ.சி, எம்.சி.எ ஆகிய மூன்று கட்சிகளும் மலாயாவின் பெரும்பான்மை சமூகத்தினைப் பிரதிநிதித்து தேர்தல் களத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டாண்டுகளில் படிப்படியாக நிகழ்ந்த முன்னேற்றம் மலேசியா விடுதலைப் பெற்ற சுதந்திர நாடாக வலம் வர வழிவகுத்தது. சுதந்திர மலேசியாவின் முதல் பிரதமராக துன் அப்துல் ரகுமான் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள் மலேசிய வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பதில் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி மலேசிய சுதந்திரம் தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது.

    as

    இப்படி இங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விவரித்துக் கொண்டே போகலாம். பெருங்கற்காலக்கருவிகள், மரப்பட்டை ஆடைகள், மனித எலும்புக்கூடுகள், விவசாயக் கருவிகள், மன்னர்களின் வரலாறுகள், பேரரசர்களின் வரலாறுகள் என சுவாரசியம் குறையாமல் இந்த அருங்காட்சியகத்தில் நேரத்தைச் செலவிடலாம். ஒவ்வொரு பகுதியும் வருகை தருவோருக்குத் தேவையான தகவல்களை​ குறையாமல் வழங்குகின்றன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வருபவர்கள் தவறாமல் வந்து பார்த்து செல்ல வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த தேசிய அருங்காட்சியகத்தை நான் கருதுகிறேன்.

    சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?​

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 96

    தேசிய அகழாய்வு அருங்காட்சியகம் , ஏதன்சு, கிரேக்கம்.

    முனைவர் சுபாஷிணி

    கிரேக்கம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனதில் எழும் அதிர்வுகள் அதன் பழமையின் பெருமையைக் குறிப்பதாகத்தான் இருக்கும். இன்றைய கிரேக்கமும் பழமையான நாகரிகத்தின் எச்சங்களைப் போற்றும், அதன் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் தான் உள்ளன. கிரேக்கத்தின் ஏறக்குறைய எல்லாப் பகுதிகளுமே அகழ்வாராய்ச்சி நடத்தினால் தோண்டத் தோண்ட புராதனச் சான்றுகள் கிடைக்கும் வகையில் தான் உள்ளன. அகழ்வாராய்ச்சியின் வழியாகத் தான் வரலாற்றுப் பழமை சொல்லும் சான்றுகளைத் தேட வேண்டும் என்ற வரையறை இன்றி நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த நாடு தான் கிரேக்கம். அதில் குறிப்பாகச் சொல்வதென்றால் கிரேக்கத்தின் தலைநகரமாக விளங்கும் ஏதன்ஸ் நகரைக் குறிப்பிட வேண்டும். இதில் முதன்மையாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது அக்ரோபோலிஸ். ஒரு தனி கட்டிடம் அல்லது ஊர் என்றில்லாது, ஒரு சிறு நகரமே தொல்லியல் அகழாய்வுச் சிறப்பு பெற்ற உலகின் மிக முக்கிய வரலாற்றுப் பகுதியாக கருதப்படுகின்றது . அக்ரோபோலிஸ் வகை கட்டிட கட்டுமான அமைப்பைச் சார்ந்து கட்டப்படாத உலக நாடுகளின் கட்டிடங்கள் மிகக் குறைவே எனலாம். அதிலும் குறிப்பாக, வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் ஏனைய அனைத்து நாடுகளின் கட்டிட அமைப்பு பாணி பெரும்பாலும் அக்ரோபோலிஸ் வகை அமைப்பாக இருப்பதே இதற்குச் சான்று.

    அக்ரபோலிஸ் போன்றே அகோரா, அசுப்ரோசாலிகொ, ப்ரவுரன், கிரேட்ட, டெலொச், டெல்ஃபி, டிமினி, எப்பிடவுரஸ் ​டொடோனா, ​ மாரத்தோன், ஒலிம்பியா போன்ற அகழாய்வு நகரங்களையும் நாம் குறிப்பிடலாம். நிலத்துக்கு மேல் உள்ள சான்றுகளும், நிலத்துக்கு அடியில் அகழ்ந்து தோண்டி கண்டெடுத்த சான்றுகளும் சொல்லும் வரலாற்றினை மேலும் வளப்படுத்தும் வகையில் கிரேக்கத்தின் கடற்கரையோர அகழாய்வுகளும் தீவுகளில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழாய்வுகளும் புதிய வரலாற்றுச் சான்றுகளை வழங்கியவாறு இருக்கின்றன.

    2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏதன்ஸ் நகருக்கு சில நாட்கள் பயணம் சென்றிருந்தேன். இந்தப் பயணத்தின் போது ஏதன்ஸ் நகரைச் சுற்றிலுமுள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பார்வையிடுவதிலும் அங்குள்ள சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று பார்த்து அங்கு ஆய்வுகளைச் செய்வதாகவும் எனது நாட்கள் கடந்தன. அந்தப் பயணத்தில் நான் சென்று வந்த அருங்காட்சியகங்களில் ஒன்று ஏதன்ஸ் தேசிய அருங்காட்சியகம்.

    as1

    19ம் நூற்றாண்டு வாக்கில் ஏதன்ஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளைச் சேகரித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் இது. ஆயினும் பின்னர் ஏதன்ஸ் நகருக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் கிரேக்கத்தின் மிகப் பெரிய அருங்காட்சியகம் என்ற சிறப்பு பெற்ற அருங்காட்சியகம் இது என்பதோடு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இது என அறியப்படுகின்றது. 11,000க்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் போது இது எவ்வளவு பெரிய ஒரு அருங்காட்சியகம் என்பதை ஓரளவு வாசிப்போரால் ஊகிக்க முடியுமல்லவா?

    1866ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. எலனி டொசொடா என்பவர் வழங்கிய நிலத்தில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் கட்டப்பட்டது. இங்குள்ள சேகரிப்புக்களை நான்கு பெரும் பகுப்புக்களாகப் பிரித்து விடலாம்.
    வரலாற்றுக் காலத்துக்கும் முந்திய நாகரிகத்தின் தொல்லியல் சான்றுகள் – கி.மு 6000 லிருந்து கி.மு. 1050 வரையிலான தொல்லியல் சான்றுகளின் சேகரிப்புத் தொகுப்புக்கள்.

    சிற்பத் தொகுதி – கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 5 வரையிலான சிற்பக் கலை வடிவங்களின் சேகரிப்புக்கள்.

    குடுவைகளும் பானைகளும் – பண்டைய கிரேக்க நாகரிகத்தின் சான்றாகத் திகழும் பானை வடிவங்களின் தொகுப்பு. இந்தப் பானை வடிவங்களின் மேல் கீறப்பட்டுள்ள ஓவியங்களும் காட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களின் வரலாற்றுச் செய்திகளைத் தருகின்ற ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த சேகரிப்பில் இவற்றில் பெரும்பாலானவை கி.மு 11ம் நூற்றாண்டு தொடங்கி ரோமானிய பேரரசின் காலம் வரையிலான சேகரிப்புக்களே.
    இரும்புக்கால சேகரிப்புக்கள் – வெவ்வேறு வகையான சிற்பங்கள், சிறிய கைவினைப் பொருட்களின் வடிவங்கள் ஆகியவற்றின் சேகரிப்புக்கள்.

    இவை தவிர உலக நாகரிகங்களில் புகழ்பெற்ற பழம்பெருமை கொண்ட எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் சேகரிப்புக்களுடன் சைப்ரஸ் தீவின் சேகரிப்புக்களும் இடம்பெறுகின்றன.

    இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் ஏராளம். ஒவ்வொன்றுமே தனித்துவம் பெற்றவையே என்றாலும் வரலாற்றுப் புகழ் மிக்க சில அரும்பொருட்களை மட்டும் ஓரளவு விளக்குவது அவசியம் எனக் கருதுகிறேன்.

    as2

    இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் முதலில் நுழைந்ததும் நம்மை வரவேற்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்து தொல்பொருட்களின் சேகரிப்பு. அங்கு மிக நேர்த்தியாக முதலில் நம் பார்வையில் தென்படுவது “Thinker” சிற்பம். கி.மு. 4500லிருந்து கி.மு. 3300 பழமையானது என அறியப்படுகின்றது இந்தச் சிற்பம். சிந்தனையில் ஒரு மனிதன் ஆழ்ந்திருப்பது போல இதன் வடிவம் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தச் சிந்திக்கும் மனிதனின் சிற்பம் என்பது கிரேக்கத்தினை உருவகப்படுத்தும் மிகச் சிறந்த ஒரு சிற்பம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது. உலக சிந்தனையாளர்கள் வரிசையில் நீங்கா இடம்பெற்ற சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோரின் சிற்பங்கள் ஏறக்குறைய இவ்வகையில் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் நாம் தொடர்புப்படுத்திக் காணலாம். ஐரோப்பாவின் பெரும் நகரங்களில் ஆங்காங்கே உள்ள சிற்பங்களில் சிந்திக்கும் மனிதனின் வடிவம் செம்பிலும் கருங்கல்லிலும் சற்றே வேறு வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த வடிவமே இதுவரை கண்டெடுக்கப்பட்ட சிந்திக்கும் மனிதனின் ஆரம்பக்கால மிகப் பழமையான சிற்ப வடிவமாக அறியப்படுகின்றது.

    as3
    “The Nurse” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் சற்றே நுணுக்கமானது. இச்சிற்பத்தில் தலைப்பகுதி துண்டிக்கப்பட்ட வகையில் இது அமைந்துள்ளது. கி.மு.4800 லிருந்து கி.மு.4500 ஆண்டு வாக்கில் செய்யப்பட்ட சிற்பம் என இதனை வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஒரு பெண் ஒரு குழந்தையை மிகுந்த வாஞ்சையுடன் அணைத்துப் பாதுகாப்பது போல அமைக்கப்பட்ட சிற்பம் இது. நாற்காலி பயன்பாடு என்பது இக்கால கட்டத்தில் ஏதன்ஸ் பகுதியில் இருந்தது என்பதற்குச் சான்றாகவும் இச்சிற்பம் இருக்கின்றது.

    as4
    டான் ப்ரவுனின் இன்ஃபெர்னோ நாவலைப் படித்தவர்களோ அல்லது அதன் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தவர்களோ Death Mask என்பதைப் பற்றி அறிந்திருக்கலாம். கி.பி. 14ம் நூற்றாண்டு வாக்கில் ப்ளேக் நோயினால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததை குறியீடாகக் காட்டும் இன்ஃபெர்னோவின் இறப்பு முகமூடி. அது மெழுகால் செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் மைசேனியன் நாகரிகத்து மக்களால் செய்யப்பட்ட Death Mask ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த முகமூடியோ முழுதும் தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி. கி.மு.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகமூடி என இது அறியப்படுகின்றது. தாடியுடன் கூடிய ஒரு மனிதனின் முகமாக இது அமைந்துள்ளது. காதுப் பகுதியில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இறந்து போல ஒரு அரச குலத்தவர் அல்லது பிரபுவின் முகத்தின் மீது வைத்து மூடப்பட்ட வகையில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது. இன்று இந்தத் தங்க முகமூடி ஆண்டுகள் பல கழிந்தாலும், தான் அழியாமல் ஏதன்ஸ் அகழாய்வு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஒவ்வொரு அரும்பொருட்களையும் பற்றி விளக்கிக் கொண்டே செல்லலாம். மனிதர்கள் இறந்தவுடன் அவர்களது உடலைப் பானைக்குள் வைத்து அதனைப் புதைக்கும் முதுமக்கள் தாழி எனப்படும் பானைகள் இந்த அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. அவை மட்டுமன்றி அக்ரபோலிஸ், ஒலிம்பியா போன்ற மிகப்பெரிய தொல்லியல் அகழ்வாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமானச் சான்றுகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    as5
    இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நூலகமும் இருக்கின்றது. 25,000க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன. பெரும்பாலானவை அகழ்வாராய்ச்சி தொடர்பானவை. சில நூல்கள் 17ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை 19ம், 20ம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்லியல் துறை சார்ந்த நூல்களே.

    பணடைய கிரேக்கத்த்க்கும் தமிழகத்துக்கும் நீண்ட நெடிஅ கடல்வழித் தொடர்புகள் இருந்தன. கிரேக்கத்திலிருந்து வணிகர்களும் பண்டைய தமிழகத்திலுரிந்து வணிகர்களும் இரு நாடுகளிலும் வணிகம் செய்தனர் என்பதை மறந்து விடலாகாது. இதனைக் குறிக்கும் வகையிலான குறியீடுகளைக் கொண்ட பானைகளும் சிற்பங்களும் இங்கே கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அந்த சிந்தனையோடு காணும் போது தமிழக வரலாற்றாய்வாளர்கள் இந்த அருங்காட்சியகம் சென்றும் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வது மிகப் பயணளிக்கும் என்பதில் ஐயமில்லை.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 95

    குவா கெலாம் குகை அருங்காட்சியகம், பெர்லிஸ், மலேசியா

    முனைவர் சுபாஷிணி

    ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை நாம் வரலாற்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மாநிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உருக்கும் தன்மை வாய்ந்தது.

    1s

    உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும், சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் தேடுதல்களின் பலனாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களின் தேடுதல் முயற்சியினாலா, அல்லது வணிகம் செய்ய மலாயா வந்த சீனர்களின் தேடுதல் முயற்சியா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்ததுமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவியத் தொடங்கினர். இது நிகழ்ந்தது 19ம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் எனலாம்.

    குகைகளுக்குள் சென்று, ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வெளியே வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று உள்ளே குழிகளைத் தோண்டி, அங்கே ஈயத்தை கண்டெடுத்துத் தூய்மை செய்து, அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடினமான ஒரு தொழில். இதனைச் சீன ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலர் இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கின்றது.

    இந்த குவா கெலாம் குகைப்பகுதியின் ஒரு பகுதியில் இப்பகுதியின் வரலாற்றைக் கூறும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தக் குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குகைக்குள்ளேயே உள்ளே இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு மட்டும் வெளியே வருவார்களாம். சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். நம்மால் இதனை இப்போது நினைத்துப் பார்க்க முடிகின்றதா? இங்கு பணி செய்தோரில் பலர் குகைக்குள் இருக்கும் போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஈயம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவம் தொழில்மயமாக்கத்திற்கு அவசியமான தேவையாகியதால், இப்பகுதி சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளைத் தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காகப் பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்து வந்திருக்கின்றனர். எப்படி மரக்காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களையும் செம்பனைத் தோட்டங்களையும் உருவாக்க தென் தமிழகத்திலிருந்துத் தமிழ் மக்களைக் கப்பல்களில் ஆங்கில காலணித்துவ அதிகாரிகள் கொண்டு வந்தார்களோ அதே போன்ற ஒரு காரணம் தான் ஈயம் தோண்டுதல் தொழில் அடிப்படையில் சீனர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர காரணமாகியிருக்கின்றது.

    2s

    உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து இப்பகுதியைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று விட்டார். ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்றார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

    இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனது உடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்நிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.

    3s

    தற்சமயம் இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை எத்தனை பேர் இதுவரை பார்த்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது கேள்விதான். ஆக, பெர்லிஸ் சென்றிருந்தபோது இக்குகையை நேரில் பார்த்து பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. இங்கு செல்வதற்குக் குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டும். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.

    4s

    ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார். மிக வியப்பாகவும் இருந்தது.

    5s

    இவற்றையெல்லாம் நேரில் பார்த்து விளக்கங்களையும் கேட்டு பின்னர் மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தேன். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து என் மனம் கனத்தது.

    இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள சிறு உணவகத்தில் காப்பி அருந்தி அவற்றோடு சுவையான மலாய் பலகாரங்களையும் சுவைத்து வர சுற்றுப்பயணிகள் மறக்கக் கூடாது.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 94

    டனூப் நதி அருங்காட்சியகம், டோனாவேஷிங்கன், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    நதிகள் பார்ப்போர் மனதை அமைதி கொள்ளச் செய்யும் பண்பு கொண்டவை. நதிகளின் பிரமாண்டம் காண்போரைத் தன்னிலை இழக்கச் செய்யும் தன்மையுடையது. தமிழகச் சூழலில் தாமிரபரணி, வைகை, காவேரி, கொசத்தலை, பெண்ணையாறு போன்ற நதிகள் புகழ்பெற்றவை.

    ரஷ்யாவின் வோல்கா நதிக்கு அடுத்து இப்பிராந்தியத்தில் மிக நீளமான நதி என்ற சிறப்பைப் பெறுவது டனூப் நதி. ஜெர்மனியை மட்டும் எடுத்துக் கொண்டால் இங்கு பிரபலமான மூன்று நதிகளில் ஒன்று என டனூபை குறிப்பிடலாம். ரைன், நெக்கார் ஆகிய இரண்டிற்கும் அடுத்து டனூப் நதி சிறப்புடன் காணப்படும் நதியாக விளங்குகின்றது எனலாம். ஜெர்மனியின் கருங்காட்டில் (Blackforest) ஊற்றாகி அங்கிருந்து வளர்ந்து ஏனைய சிறு ஓடைகளையும் கிளை நதிகளையும் இணைத்துக் கொண்டு ஐரோப்பாவின் பத்து நாடுகளைக் கடந்து செல்கின்றது இந்த டனூப் நதி. இதன் நீளம் 2800 கிமீட்டர் ஆகும் ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆஸ்திரியா, சுலோவாக்கியா, ஹங்கெரி, குரோஷியா, செர்பியா, ரொமானியா, புல்கேரியா, மொல்டோவா, உக்ரேயின் ஆகிய பத்து நாடுகளில் பாய்ந்து கடந்து கருங்கடலில் கலக்கின்றது டனூப். டனூபின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி ஹங்கெரி நாட்டில் ஓடும் பகுதியாக அமைந்திருக்கின்றது. ஜெர்மனியின் டோய்ச் மொழியில் இந்த நதி டோனாவ் என அழைக்கப்படுகின்றது.

    unnamed (4)
    ​டனூப் நதி பாயும் நாடுகள்

    கோடைகாலத்தில் சுற்றுப்பயணிகளைக் கவரும் படகுச் சவாரிகள் டனூப் நதியில், அதிலும் குறிப்பாக நாடுகளின் தலைநகரங்களை டனூப் கடக்கும் பகுதிகளிலெல்லாம் காணலாம். ஐரோப்பாவில் இடம்பெறும் இந்தப் பத்து நாடுகளில் நான்கின் தலைநகரங்களும் டனூப் நதிக்கரையை அண்டியவாறு அமைந்துள்ளன. நதிக்கரையோரங்களில்தானே மனித குலங்களின் நாகரிகம் வளர்ந்து செழித்தது. சிந்து சமவெளி, நைல் போல டனூப் நதியும் இதற்குச் சான்றாகவே விளங்குகின்றது.

    unnamed (5)

    ஹங்கெரியின் தலைநகர் பூடாபெஷ்டில் டனூப்

    டனூப் நதியில் இணையும் கிளை நதிகள் ஏறக்குறைய 300 ஆகும். இவற்றில் ஏறக்குறைய 30 கிளை நதிகளில் படகுப் பயணமும் செல்லலாம். இந்த நதியின் கரையோரங்களிலும் இவை உருவாகிவரும் பகுதிகளிலும் வாழும் தாவர வகை, பறவைகள் மற்றும் விலங்கு வகை உயிரினங்களின் எண்ணிக்கை 5000 வகைகளுக்கும் குறை யாது உள்ளன.

    unnamed (4)
    ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் டனூப்

    நதிகள் என்றாலே மனித குல நாகரிகங்கள் தம் இருப்பிடங்களை அமைத்து, விவசாயத்தை வளர்த்து விரிவாக்கி கலைகள் செழித்து வளர்ந்த செய்திகளை வரலாற்றில் காண்கின்றோம். டனூப் நதி ஐரோப்பாவின் பழமையான கெல்ட் இன மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக வரலாற்று ஆய்வாளர்களால் அறியப்படுகின்றது. இந்த நதி ஓடும் கரையின் பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ப்ராட்டிஸ்லாவா ஆகிய பகுதிகளில் கெல்ட் இன மக்கள் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்ததாக கெல்ட் இன மக்கள் தொடர்பான வரலாற்றுச் செய்திகளை அறியலாம். கி.மு. 7ம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்க கடலோடிகள் இந்த நதியில் பயணித்த விபரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பின்னர் ரோமானியப் பேரரசு தன் ஆளுமையை விரிவாக்கிய சமயத்தில், போர் வீரர்கள் இந்த நதி மார்க்கமாக பயணித்து வந்து தங்கள் ஆளுமைக்கு உட்படாத நிலப்பகுதிகளைக் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினர்.

    இந்தப் பத்து நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் இந்த நதியை எந்த தங்கு தடையுமின்றி பயன்படுத்துகின்றனர். இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்கான நதிப்பயணம் என்பது 19ம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கியது. இன்றோ டனூப் நதிக்கரை பயணம் என்பது உலகளாவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவரும் ஒரு பயணமாகத் திகழ்கின்றது.

    unnamed (6)

    டோனாவ்குவெல்ல – ​டனூப் தொடங்கும் ஊற்று

    டனூப்/ டோனாவ் ஊற்றெடுக்கும் பகுதி அமைந்திருக்கும் சிற்றூரின் பெயர் டோனாவேஷிங்கன். ப்ரெக், ப்ரிகாக் என்ற இரு பகுதிகளிலிருந்து ஊற்றெடுத்து ஒன்றாகிப் பின்னர் 300க்கும் மேற்பட்ட கிளை நதிகள் இணைந்து இது உருவாக்கம் பெறுகின்றது. டோனாவ்குவெல்ல ( Donauquelle) என்பதன் பொருள் டோனாவ் நதியின் ஊற்று தொடங்கும் இடம் என்பதாகும். இந்தப் பகுதியில் தான் டனூப் நதியின் ஆரம்பப்புள்ளி தொடங்குகின்றது. இங்குதான் மிகச் சிறிய வடிவிலான டனூப் நதி அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கே டனூப் நதியைப் பற்றிய அடிப்படை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் கருங்காடு சூழ்ந்த இப்பகுதியில் கருங்காட்டினுள், பசுமை அழகு கண்களையும் மனதையும் கொள்ளைக்கொள்ளும் சூழலில் இந்த நீரூற்று அமைந்திருக்கின்றது.

    unnamed (7)

    இந்த நதி ஊற்றெடுக்கும் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் தான் நான் வசிக்கின்றேன். இந்த மாநிலத்தின் குடிநீர் டனூப் நதியிலிருந்து பெறப்படுகின்றது என்பதும் இந்த நதிநீரைத்தான் நான் தினமும் பருகி வாழ்கின்றேன் என நினைக்கும் போது எனக்குள் இந்த நதியின் மீது மிக ஆழமான பற்றுதல் ஏற்படுகின்றது. தாய் போலத்தான் நதியும் நம்மை வாழ்விக்கின்றது, அல்லவா?

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 93

    தேசிய அருங்காட்சியகம், கிப்ரால்ட்டார்

    முனைவர் சுபாஷிணி

    ஸ்பெயின் நாட்டின் தெற்கில், ஆப்பிரிக்க கண்டத்தின் மொரோக்கோ நாட்டின் வடக்கில், அல்போரான் கடல் பிரிக்கும் இடத்தில் இருப்பதுதான் கிப்ரால்ட்டார். ஸ்பேனிஷ் தாக்கத்துடன் கூடிய அரேபிய சொல் – ஜபால் தாரிக் – அதாவது தாரிக் மலைகள் எனப்படுவது கிப்ரால்ட்டார் என வழக்கில் வந்தது. ஸ்பெயின் நாட்டின் தெற்கு எல்லையில் தொங்கிக்கொண்டிருக்கும் இப்பகுதி ஸ்பெயினுக்குச் சொந்தமானதாக இருக்குமோ என சிலர் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. இது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு பகுதி என்பது ஆச்சரியப்படுத்தலாம்.

    1

    நான் 2011ம் ஆண்டு தெற்கு ஸ்பெயின் பகுதிகளில் சுற்றுலா சென்றிருந்த சமயம் அங்குள்ள சில பகுதிகளுக்குச் சென்றுவர சுற்றுலாத்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது ஒரு பட்டியலை அளித்திருந்தார்கள். கிப்ரால்ட்டாரின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. ஸ்பெயினின் கடற்கரை நகரமான மலாகாவிலிருந்து கிப்ரால்டா வாகன பயணத்தில் சென்றடையலாம். மலாகாவிலிருந்து ஏறக்குறைய 100 கிமீ தூரம். வாகனத்தில் செல்லும்போது ஸ்பெயின் எல்லையிலிருந்து கிப்ரால்ட்டாவிற்குச் செல்ல ஒரு பாலம் அமைத்திருப்பதைக் காணலாம். கிப்ரால்ட்டாரின் உள்ளே நுழையும் போது ஒவ்வொருவரும் கட்டாயமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம். பாஸ்போர்ட் சோதனைக்குப் பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாகச் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது.

    கிப்ரால்ட்டாவை முழுமையாக இரண்டே நாட்களில் சுற்றிப்பார்த்து விடலாம். அங்கே வட இந்தியர்கள் கட்டியிருக்கும் ஒரு சிறிய ராமர் கோயிலும் இருக்கின்றது. சிறிய எண்ணிக்கை அளவில் தமிழ் மக்களும் இத்தீவில் வசிக்கின்றார்கள்.

    2

    கிப்ரால்ட்டாரின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம். மக்கள் தொகை மொத்தம் 39,000 தான். இங்கு பயன்படுத்தப்படுவது இங்கிலாந்து அரசியாரின் படம் பதித்த பவுண்டு காசுகள் தாம்.

    கிப்ரால்ட்டாரின் புகழ் பெற்ற ஒரு அருங்காட்சியகமாக இங்கே இருப்பது தேசிய அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தைப்பற்றிய சில தகவல்களை அறியுமுன்னர் இங்கு கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தால் மனிதரின் மண்டை ஓட்டினைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

    3

    கிப்ரால்ட்டர் பாறைக்குன்றுகள் இருக்கும் பகுதியில் அமைந்திருப்பது ஃபோர்பெஸ் குவாரி. இங்குள்ள கோர்ஹாம் குகைகளில் தான் நியாண்டர்தால் மனிதர்களின் எலும்புக்கூடு மண்டை ஓடு ஒன்று கிட்டியது, இது ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தால் மனித மண்டை ஓட்டிற்குப் பின் கிடைத்த இரண்டாவது நியாண்டர்தால் மண்டை ஓடு என்ற சிறப்பைக் கொண்டது. 1848ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தேசிய கடற்படையைச் சேர்ந்த கேப்டன் எட்முண்ட் ஃப்லிண்ட் இந்த மண்டை ஓட்டைக் கண்டுபிடித்தார். தான் கண்டுபிடித்த இந்த மண்டை ஓட்டின் பழமை, அதன் சிறப்பு என்ன என்பதை அறியாத நிலையிலேயே அவர் இதனை கிப்ரால்ட்டார் சைண்டிஃபிக் சொசைட்டிக்கு அளித்தார். 1864 வரை இதன் சிறப்பு யாராலும் அறியப்படவில்லை. 1856ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் நியாண்டர்தால் எலும்புக்கூடுகள் ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், அது ஹோமோ நியாண்டர்தால் வகை மனிதனின் எலும்புக்கூடு என அடையாளப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கிப்ரால்ட்டாரில் கிடைத்த மனித மண்டை ஓட்டினை ஆராயும் ஆர்வம் இங்கிலாந்தில் தொடங்கியது.

    4

    பரிணாம விதி தத்துவக் கொள்கையை விவரித்து எழுதிய சார்ல்ஸ் டார்வின் இந்த மண்டை ஓட்டினை ஆராய்ச்சி செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டார். உடல் நலமில்லாத நிலையில் அவரால் ஆராய்ச்சி மாநாட்டில் சென்று கலந்து கொண்டு இந்த மண்டைஓட்டினை விரிவாக ஆராய இயலாமல் போனது. ஆயினும் அவரது நண்பர்கள் சார்ல்ஸ் லயல், ஹூ ஃபல்கோனர் ஆகிய இருவரும் இந்த மண்டை ஓட்டை அவர் இருக்கும் இடத்திற்கு எடுத்து வர ஏற்பாடு செய்தனர். அதனைப் பார்த்த சார்ல்ஸ் டார்வின் அதிசயப் பொருள் என அதனை வர்ணித்தார். ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

    இந்த மனித மண்டை ஓடு நியாண்டர்தால் மனித இனத்தில் ஒரு பெண்ணின் உடல் என அறியப்பட்டது. 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணின் உடல் இது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்தனர். இதன் வயது 30,000 லிருந்து 50,000 வரை இருக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் தெளிவு படுத்தின.

    இந்த மண்டை ஓட்டினை “கிப்ரால்ட்டர் 1” எனப் பெயரிட்டு இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் நாச்சரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் இதனைப் பாதுகாத்து வருகின்றனர். லண்டனில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் இதனை நான் நேரில் ஒரு முறை பார்த்திருக்கின்றேன்.

    இந்த மண்டை ஓட்டின் மாதிரி, அதாவது ரெப்ளிக்காவை கிப்ரால்ட்டார் தேசிய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள். இந்த அருங்காட்சியகம் 1930ஆம் ஆண்டு அப்போதைய கிப்ரால்டார் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மண்டை ஓட்டின் மாதிரியோடு கிப்ரால்ட்டார் குன்றுகளில் அகழ்வாய்வின் போதும் குவாரி பணிகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட பல அரும்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். இங்கே கி.பி.14ஆம் நூற்றாண்டு அரேபிய குளியல் அறை ஒன்றும் பாதுகாக்கப்படுகின்றது. இது இன்று பார்க்கும் போதும் அதன் பழமை சிறப்பை எடுத்துக்கூறும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது அதுமட்டுமன்றி பண்டைய கிரேக்க ஆட்சி இங்கு விரிவடைந்திருந்த போது அமைக்கப்பட்ட கட்டுமானங்களின் சில பகுதிகள் இன்னமும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.

    5

    இது மிகப்பெரிய ஒரு அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. உள்ளே நுழைந்தால் அனைத்து அரும்பொருட்களையும் பார்க்கக் குறைந்தது 4 மணி நேரங்களாவது தேவைப்படும். வெவ்வேறு அறைகளில் தனித்தனியாக கிப்ரால்ட்டார் தொடர்பில் அமைந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சம்பவங்களை நினைவுகூரும் வகையிலான செய்திகளும் அரும்பொருட்களும், இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்று என கிப்ரால்ட்டார் அருங்காட்சியகத்தையும் குறிப்பிடலாம். கிப்ரால்ட்டார் தீவு முழுமையுமே வரலாற்று ஆர்வலர்களுக்குப் பல சுவாரசியமான தகவல்களை வழங்கக்கூடிய ஒரு தீவு தான். அதில் இந்த அருங்காட்சியகம் தனிச் சிறப்புடன் அமைந்துள்ளது.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 92

    தேசிய அருங்காட்சியகம் டப்லின், அயர்லாந்து

    முனைவர் சுபாஷிணி

    ​கெல்ஸ் நூல் (The book of Kells) எனப்படும் கிறிஸ்துவ கோஸ்பல் பாடல்கள் கொண்ட நூல் பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இது 9ஆம் நூற்றாண்டில் முழுதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நூல். எழுதிய நூல் என்று சொல்வதை விட வடிவமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நூல் என்று சொல்வது இதற்கு மிகப் பொருந்தும். இந்நூலில் இலத்தீன் மொழியில் புதிய டெஸ்டமனில் உள்ள நான்கு கோஸ்பல்கள் அடங்கியுள்ளன. இவற்றுடன் பல வாசகங்களும் ஓவியங்களும் நிறைந்துள்ள ஒரு கலைநயம் மிக்க நூல் இது.

    1

    இந்த நூல் கெல்ட்டிக் பாரம்பரியத்தில் தோன்றி பின்னர் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது. இந்த நூலின் காலம் ஏறக்குறை கி.பி 800 அல்லது அதற்கும் முந்தைய ஆண்டுகளாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இந்த நூலின் சிறப்பு என்னவென்றால், கோஸ்பல் பாடல்களையும் விளக்கங்களையும் வாசகங்களையும் சுற்றி தீட்டப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள் தாம் எனலாம். இவை செல்ட்டிக் பாரம்பரியத்தின் தாக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக உள்ளமையே இதன் சிறப்பு.

    புக் ஆஃப் கெல்ஸில் அடங்கியுள்ள ஓவியங்கள் கிறித்துவ பாரம்பரிய சின்னங்களை உள்ளடக்கியதாகவும் அதே வேளை கெல்ட்டிக் பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னங்களான மனித உருவங்கள், மிருகங்கள், சுற்றி வளைத்து சூழும் பாம்பு, மாய உருவங்கள் ஆகியனவற்றையும் கொண்டிருக்கின்றது. அதோடு கெல்ட் பாரம்பரியத்தின் அடிப்படை சின்னமான கெல்ட்டிக் முடிச்சு மிகத் தெளிவான கவர்ச்சியான வர்ணங்களில் நூல் முழுவதும் இடம் பெறுகின்றது. அயர்லாந்துக்கு ஆறாம் நூற்றாண்டில் புதிதாக நுழைந்த கிறிஸ்துவ சமயம் அயர்லாந்தின் பாரம்பரிய செல்ட்டிக் வழக்கங்களை ஏற்றுக்கொண்டு எவ்வாறு புதிய வகையில் வளம் பெற்று வளர்ந்தது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றது.

    2

    நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த நூல் தற்சமயம் டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் (Trinity College Library) பாதுகாக்கப்படு வருகின்றது. இந்த நூலகம் இருக்கும் அருங்காட்சியகம் தான் அயர்லாந்து தேசிய அருங்காட்சியகம்.

    அயர்லாந்தின் மிகப் பெரிய பொக்கிஷமாக இந்த நூல் இன்று கருதப்படுகின்றது. புக் ஆஃப் கெல்ஸ் நூல் மிகப் பிரபலமானதாகவும், மிக நுணுக்கமாகவும் தயாரிக்கப்பட்ட ஒரு நூல் என்பதும் முக்கிய குறிப்பாகும். ஐயோனா தீவு, மற்றும் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் மடம் அமைத்து இங்கு கிறுத்துவ மதத்தைப் பரவச் செய்த பாதிரிமார்களின் அரிய ஒரு கலைப்படைப்பு இந்த நூல்.

    3

    இந்தாருங்காட்சியகத்திலேயே உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் இந்த நூலின் அசல் இருந்தாலும் இந்த நூலின் அச்சுப் பிரதிகளும் வெளியிடப்பட்டன என்பதும் ஒரு செய்திதான். மிகக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மட்டுமே இவை பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. 1990ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் உள்ள செய்தியின் அடிப்படையில் 1990 ஆம்ஆண்டில் இந்த அச்சு நூல் ஒன்றின் விலை $18,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இன்னூலின் விலை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பலாம்.

    இந்த நூல் எப்படி ட்ரினிட்டி கோலேஜ்க்கு வந்தது என பார்ப்போம்.

    அடிப்படையில் இது கையால் வர்ணம் தீட்டி எழுத்துக்களைக் கோர்த்து வடிக்கப்பட்ட ஒரு நூல். இதன் பக்கங்கள் அனைத்திலும் இருக்கும் வர்ண ஓவிய வேலைப்பாடுகளை மூன்று பாதிரிமார்கள் செய்திருக்கின்றனர். எழுத்துக்களை நான்கு பாதிரிமார்கள் வடித்திருக்கின்றனர். கி.பி 800ம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்ட இந்த நூல் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் நிறைவு செய்யப்பட்டதால் அந்த நகரின் பெயரிலே வழங்கப்படுகிறது. அயர்லாந்துக்கும் ஸ்கோட்லண்டுக்கும் இடையில் உள்ள ஐயோனா (Iona) என்ற தீவில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் இதன் ஆரம்ப கட்ட உருவாக்கப்பணிகள் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

    4

    ஐயோனா (Iona) வில் கொள்ளையர்கள் மடத்தில் நுழைந்து தாக்கி அங்கிருந்த பொருட்களைச் சூறையாடிச் சென்று மடத்தையும் தீவைத்து கொளுத்தி நாசப்படுத்திய போது பாதிரிமார்கள் அங்கிருந்து சில முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கடல் வழி பயணித்து அயர்லாந்தின் கெல்ஸ் நகருக்கு வந்திருக்கின்றனர்.

    அங்கு கெல்ஸ் மடத்தில் இப்பணியைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றி முழு நூலையும் முடித்திருக்கின்றனர். இந்த நூலில் ஆக மொத்தம் 680 பக்கங்கள் உள்ளன. அதில் இரண்டு பக்கங்களில் மட்டும் தான் வர்ணம் இல்லை. ஏனையவை முழுக்க முழுக்க செல்ட்டிக் கலாச்சார ஓவியங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    1661ம் ஆண்டு தொடங்கி இந்த நூல் ட்ரினிடி கோலேஜில் (Library of Trinity College – Dublin) ல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டாலும் பாதுகாப்பு முறைகள் சரியாக அமைந்திருக்கவில்லை. ஆக 1953ம் ஆண்டில் இந்த நூல் முறையாக தூய்மை செய்யப்பட்டு அசல் நூல் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிறிதாக்கப்பட்டு வைக்கப்பட்டது. இந்த நூலின் அசலின் 2 பாகங்கள் ட்ரினிடி கோலேஜின் நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதன் மேலும் இரண்டு பாகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதில்லையென்றாலும் அவை முக்கிய ஆய்வாளர்களின் பார்வைக்கு மட்டும் என்ர வகையில் அனுமதி வழங்கப்படுகின்றது. ட்ரினிடி கோலேஜில் உள்ள 2 பாகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் திருப்பப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதனால் தினம் நூலகத்துக்கு வந்து இந்த நூலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தை வாசித்துச் செல்லலாம்.

    இந்த நூலை மறுபதிப்பு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சுவிஸர்லாந்தின் Faksimile Verlag (Fine Art Facsimile Publishers) நிறுவனத்தினர் இந்த நூலை கையில் தொடாமல் ட்ரினிடி காலேஜிலிருந்து வெளியே எடுக்காமல் ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி இதன் பக்கங்களைத் தொடாமலேயே காமெராவில் பதிவு செய்து இந்த நூலினை மின்னாக்கம் செய்து எண்மப் பதிவாக்கி முழுமைபடுத்தினர். ட்ரினிடி காலேஜ் சிறு எண்ணிக்கையில் இந்த நூலை சிறப்பு வெளியீடு செய்தனர். இந்தப் பதிப்பு நிறுவனத்துக்கு இந்தக் கருவியை உருவாக்க கால் 1/4 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் தேவைப்பட்டதாம். இந்தக் கருவி கொண்டு 1986ம் ஆண்டில் சில நாட்கள் தொடர்ந்து இப்பணி செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது.

    5

    இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த நூலை இந்த அருங்காட்சியகத்தில் நேரில் பார்க்க முடிந்த நாளில் என் மனம் அடைந்த ஆச்சரியத்தை இன்றும் உணர்கின்றேன். இந்த அருங்காட்சியகத்தில் இந்த அரிய பொக்கிஷமான கெல்ஸ் நூல் மட்டுமல்ல, ஏராளமான் ஆஅய்வுக் கருவிகள், அதிலும் குறிப்பாக உடற்கூறு சம்பந்தமான மருத்துவ சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு அறுவைச் சிகிச்சை கருவிகள், அறிவியல் துரை சார்ந்த குறிப்பிடத்தக்க சாதனக்கள் என வருவோரை பிரமிக்க வைக்கும் ஒரு அருங்காட்சியகமே இது. டப்ளின் செல்பவர்கள் கட்டாயம் தவறவிடாமல் நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்து வரவேண்டும்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 91

    பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி

    முனைவர் சுபாஷிணி

    உலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகைக்கும் கட்டிடம் என்று அடையாளம் காணப்படும் பீசா கோபுரம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.

    1

    பீசா சாய்ந்த கோபுரம் அடிப்படையில் ஒரு மணிக்கூண்டு என்று தான் சொல்ல வேண்டும். பீசா நகரின் தேவாலயத்தின் ஆலய மணிகள் கட்டப்பட்ட கூண்டு தான் இது. கி.பி.1152ம் ஆண்டில் பீசா தேவாலயத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டு கி.பி.1363ம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்தத் தேவாலயத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, அதன் மணிக்கூண்டு உள்ள இந்த பீசா சாய்ந்த கோபுரம், அதன் சாய்வான கட்டிட அமைப்பிற்காகவே உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    2

    பீசா சாய்ந்த கோபுரத்தின் அடித்தளத்தில் தான் பீசா கோபுர அருங்காட்சியகப் பகுதி இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் இந்தக் கோபுரத்தின் கட்டுமான விபரங்களை அளிக்கும் ஒரு அருங்காட்சியகம் மட்டுமே. இச்சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்பான விபரங்களும் குறிப்புக்களும் புகைப்படங்களாகவும் விபரக்குறிப்புக்களாகவும் இப்பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் இக்குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    3

    கோபுரம் சாய்ந்துகொண்டிருப்பதை பார்ப்போருக்கு அதற்குள் மனிதர்கள் சென்று வரலாமா ? அப்படிச் செல்லும் போது சாய்ந்த கோபுரம் சாய்ந்து விடுமா? என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம்.ஆனால் நாம் அஞ்சத்தேவையில்லை. பீசா சாய்ந்த கோபுரத்தின் உள்ளே சென்று மேல் மாடி வரை நடந்து சென்று அங்கிருந்து எழில் மிகும் பீசா நகரைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்து மகிழலாம். இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தேவாலயத்தைக் கட்டியபோது, அதன் பின்னால் இருப்பது போல இந்த மணிக்கூண்டு கட்டிடத்தை அமைத்தனர். கட்ட ஆரம்பித்தபோது அடித்தளம் மென்மையானதாக இருந்தமையால் ஒரு பக்கம் தாழ்ந்த நிலையில் கட்டிடம் இறங்கிவிட்டது. கோபுரத்தைக் கட்டி முடித்தபோது, அதாவது கி.பி.13ம் நூற்றாண்டில் இந்தக் கோபுரம் இன்று நாம் பார்ப்பதற்கும் அதிகமாகச் சாய்ந்த நிலையில் இருந்தது. 20ம் நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டிலும் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதன் வழி இந்தக்கட்டிடத்தை ஓரளவு நிமிர்த்தியிருக்கின்றார்கள். ஆனாலும் இன்றும் இது சாய்ந்துதான் இருக்கின்றது. இந்தத் தன்மையே இதற்குத் தனிச்சிறப்பையும் அளித்திருக்கின்றது எனலாம்.

    4

    ஒரு பக்கம் சாய்ந்த வகையிலிருப்பதால் சாய்ந்த பக்கம் 55.86 மீட்டர் உயரமும் நேராக இருக்கும் பக்கத்திலிருந்து 56.67மீட்டர் உயரமும் கொண்டது பீசா கோபுரம். கோபுரத்தின் மொத்த எடை 14,500 மெட்ரிக் டன் ஆகும். தற்சமயம் இதன் சாய்ந்தபகுதி 3.99 பாகைச் சரிந்த வகையில் உள்ளது.

    இந்தக் கோபுரத்தை வடிவமத்த கட்டிடக்கலைஞர் யார் என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் சில குழப்பங்கள் இருந்தன. டியோட்டிசால்வி (Diotisalvi) என்ற கட்டுமானக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கிபி.12ம் நூற்றாண்டு அரிய கலைப்படைப்புதான் இந்த பீசா கோபுரம் என்பது ஆய்வுகளுக்குப் பின்னர் நிரூபணமானது. பீசா நகரிலிருக்கும் சான் நிக்கோலா கட்டிடத்தையும் இங்கிருக்கும் பாப்டிஸ்ட்ரியையும் வடிவமைத்தவரும் இவரே. கி.பி. 1173ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தான் முதலில் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கி.பி. 1198ம் ஆண்டில் இக்கோபுரம் கட்டப்பட்டு முதல் ஆலயமணி கோபுரத்தில் பொருத்தப்பட்டது. கி.பி. 1272ம் ஆண்டில் கியோவான்னி டி சிமோன் என்ற கட்டுமானக் கலைஞரின் மேற்பார்வையில் கட்டுமானப் பணி மேலும் தொடரப்பட்டது. ஆறு தளங்களைக் கடந்து ஏழாவது தளத்தையும் கட்டு முடித்து இந்தக் கோபுரம் 1319ம் ஆண்டில் இன்றிருக்கும் வடிவத்தைப் பெற்றது. கீழ்த் தளத்திலிருந்து மேல் தளம் வரை செல்ல 251 படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறுகலான பளிங்குப்படிக்கட்டுக்களில் ஏறித்தான் ஒவ்வொரு தளமாகச் சென்று கண்டு வரமுடியும்.

    5

    இன்றைய நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வந்து கூடுகின்றனர். ஆண்டில் 365 நாளும் இங்குச் சுற்றுப்பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். மிக அதிகமாக உலக மக்களால் வந்து பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்லப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று இது என்றால் அது மிகையல்ல. பீசா கோபுரத்தின் உள்ளே சென்று வரக் கட்டணம் கட்டி டிக்கட் பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டுமே காவல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கின்றனர். கோபுரத்தின் அளவு சிறியதாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

    இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கட்டுமானப் பணிகள் நடந்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கின்றது. இத்தாலியின் பீசா நகருக்குச் சிறப்பு சேர்க்கின்ற ஓர் அம்சம் என்று மட்டுமில்லாமல், இத்தாலிக்கும் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் புகழ் சேர்க்கும் சிறப்புச் சின்னமாக பீசா சாய்ந்த கோபுரம் திகழ்கின்றது.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 90

    அக்வின்க்கும் பண்டைய ரோமானிய நகரம், அதன் அருங்காட்சியகம் – பூடாபெஷ்ட், ஹங்கேரி

    முனைவர் சுபாஷிணி

    பண்டைய ரோமானிய பேரரசு தெற்கே மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஐரோப்பா முழுமைக்கும், இங்கிலாந்து, அயர்லாந்து என விரிந்த மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்தது. தன் ஆட்சி காலத்தில் ரோமானியப் பேரரசு தனது எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகளில் நகரங்களை நிர்மானித்தது. பண்டைய ரோமானிய நகரங்களின் எச்சங்களை ஐரோப்பாவின் நாடுகளில் இன்றும் ஆங்காங்கே காணலாம். அத்தகைய சிதலமடைந்த ஒரு பண்டைய நகரமே ஹங்கேரியின் தலைநகரமான பூடாபெஷ்ட் நகரிலிருக்கும் அக்வின்க்கும் (Aquincum).

    as

    அக்வின்க்கும் ரோமானியப் பேரரசின் போர்த்தளவாடங்கள் நிறைந்திருந்த ஒரு பகுதி. இங்கே வீரர்களின் குடியிருப்புப்பகுதியோடு மக்களின் வாழ்விடங்களும் இணைந்த வகையில் இந்த நகரில் அமைக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டே செல்லும் போது எல்லைப்பகுதி நகரங்களாக அமைந்த நகரங்களில் ஒன்று என்றும் அக்வின்க்கும் நகரைக் குறிப்பிடலாம். ரோமானியப் படை வருவதற்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் கெல்ட்டிக் இனக்குழுவின் ஏராவாசி (Eravisci) சமூக மக்கள். கி.பி.41 வாக்கில் இங்கு 6000 பேர் கொண்ட ரோமானியப் படைகள் இங்கு வந்து, நகரை அமைத்து, கி.பி.89 முதல் இங்கு ரோமானியப் படைவீரர்களின் குடும்பங்கள் தங்கும் நகரமாக இது உருவெடுத்தது. சிறு நகரமாக இருந்த இந்த ஊர் பனோனியா வெற்றிக்குப் பிறகு பனோனியா நிலப்பகுதியின் தலைநகராமக உருவெடுத்தது. இது நிகழ்ந்தது கி.பி 106ம் ஆண்டில். அச்சமயத்தில் இந்த நகரில் 30,000லிருந்து 40,000 மக்கள் வாழ்ந்ததாக குறிப்புக்கள் சொல்கின்றன.

    அக்வின்க்கும் அருங்காட்சியகம் 1894ம் ஆண்டில் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. இதனை முதன் முதலில் 1778ம் ஆண்டில் பூடாபெஷ்ட் நகரில் திராட்சை தோட்டம் போடுவதற்காக நிலத்தை சீர்செய்யத் தொடங்கிய ஒரு விவசாயிதான், இப்பகுதியில் நிலத்துக்குக்கீழே தோண்டும் போது, ஒரு கட்டுமானப் பகுதி இருப்பதைக் கண்டுபிடித்து அரசுக்கு அறிவித்தார். பின்னர் இந்த நகரத்தின் ஏனைய பகுதிகள் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும் இவை எதைச் சார்ந்தவை என அறியப்படாமலேயே இருந்தது. 1820ல் தான் இப்பகுதியில் முறையான தொல்லியல் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது. 1860 வாக்கில் ரோமானிய குளிக்கும் குளங்கள், நீர்த்தொட்டிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. 1876ல் அப்போதைய இளவரசர் இந்த அகழ்வாய்வுப் பகுதிக்கு வந்து இதனை பார்வையிட்டுச் சென்றிருக்கின்றார். 1881ல் இங்குள்ள அம்பிதியேட்டர் பகுதி முழுமையாக அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்டது. 1889ல் அக்வின்க்கும் அகழ்வாய்வு அறிக்கை முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டு உலகுக்கு இந்த நகர் பற்றிய செய்தி விரிவாக அறிமுகமானது. 1936ம் ஆண்டு ஒரு அருங்காட்சியகமும் இணைக்கப்பட்டு இங்கு கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

    as1

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த பின்னர் வலது புறத்தில் காணப்படுவது ஒரு ஓவியனின் வீடு. இன்று காணப்படும் வடிவிலேயே கி.பி.2லும் பின்னர் மேலும் கி.பி.3லும் கட்டப்பட்ட வீடு இது. வீட்டின் வெளிப்புறம் தற்சமயம் புதுப்பிக்கப்பட்டு அக்காலத்தில் வீடு எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் காட்டப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே இது கட்டப்பட்ட, அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தரைப்பகுதி, அறைகள், தரையில் அமைக்கப்பட்டுள்ள மொசைக் கல்வடிவம் ஆகியன இன்றும் அதன் நிலை கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஓவியனின் வீட்டில் வாசலில் நிலைப்பகுதி, உட்காரும் திண்ணை, உள்ளே நுழைந்ததும் வரவேற்பரை, வெவ்வேறு அறைகள், சமயலறை, உணவருந்தும் அறை, வெளிப்பகுதி என பிரித்து பிரித்துக் கட்டியிருக்கின்றார்கள். இன்று எப்படி ஒரு வீடு அமைந்திருக்கின்றதோ அதே வடிவில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாத வீட்டின் கட்டுமானத்தை இந்த கி.பி.2ம் நூற்றாண்டு ஓவியனின் வீடு காட்டுகின்றது.

    ரோமானிய வரலாற்றை பின் நோக்கிப் பார்க்கும் போது இந்த நாகரிகம் ஏராளமான தெய்வ வடிவங்களையும் புராணங்களையும் தன்னுள்ளே கொண்டிருப்பதை விலக்கிப் பார்க்க முடியாது. வீனஸ், மார்ஸ், நெப்டியூன், டயானா, அப்போலொ, வோல்கானூஸ் என பல தெய்வங்கள் பண்டைய ரோமானிய பண்பாட்டை அலங்கரித்தன. அரக்கர்களும், தேவர்களும், தேவதைகளும் குட்டி பூதங்களும் கொடிய விலங்குகளும் நிறைந்தவையே ரோமானியப் புராணக் கதைகள். கற்பனைக்கு எல்லையே ஏற்படுத்திக் கொள்ளாத ஏராளமான புராணக் கதைகள் மக்களின் வழிபாட்டிலும் அங்கம் வகித்தன எனக் குறிப்பிடும் அதே வேளையில் மன்னனையும் ஒரு கடவுளாக ஏற்றி வைத்துப் புகழ்பாடி வழிபடும் வழக்கமும் ரோமானிய பண்பாட்டில் இருந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ரோமானிய பண்டைய புராணக்கதைகளை நினைவு படுத்தும் வகையில் ஒரு விளையாட்டு மைதானமும், புராணக்கதைமாந்தர்களின் நினைவினை ஏற்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியக வளாகத்திற்கு வரும் குழந்தைகள் மட்டுமன்றி பெரியோரும் இந்த விளையாட்டு மைதானத்தில் சற்று ஓய்வெடுக்கலாம்.

    as2

    இந்த ரோமானிய குடியிருப்புப் பகுதியில் ஒரு பகுதியில் கசாப்புக் கடைக்காரரின் வீட்டின் அடித்தளம் அமைந்திருக்கின்றது. அதன் மறுபுறத்தில் மளிகைக்கடைக்காரரின் இல்லப்பகுதி இருக்கின்றது. ஒரு வீடு போன்ற வடிவமைப்பின் அடித்தளம் தான் இங்கு நாம் காண்பது. இந்த அடித்தளத்தைக் காணும் போது இந்த கடையின் முன்வாசல் பகுதி தெற்குப்புறமாகவும், மேற்குப் பகுதியில் சிறு கூடம் ஒன்று இருப்பது போலவும் அமைக்கப்பட்டதைக் காணமுடிகின்றது. வருகையாளர்களும் வாடிக்கையாளர்களும் சாலையிலிருந்து வரும் போது தெற்குப்புற வாசலின் வழியாக வந்து உள்ளே உள்ள பெரிய பகுதியில் தான் பொருட்களை வாங்கிச் சென்றிருக்க வேண்டும். கடையும் வீடும் ஒரே கட்டிடத்திற்குள் இருப்பது போல அமைந்திருக்கின்றார்கள். இம்மாதிரியான தொழில் செய்யும் இடமும் இல்லமும் ஒரே இடத்தில் இருப்பது பண்டைய நாகரிகங்களில் பொதுவாகக் காணப்படக் கூடிய ஒரு அம்சம் தான். ஆக, முன்புறம் உள்ள கடைப்பகுதியை அடுத்து தொடர்ந்தார்போல வருவது இல்லப்பகுதி. இங்கே சிறிய சிறிய அறைகள், சமயலறை போன்றவற்றைக் காணலாம். உடைந்தும் மிஞ்சி இருக்கும் சுவர்களில் இன்னமும் கூட ஆங்காங்கே சுவர் ஓவியங்களின் சில பகுதிகள் காணக்கிடைக்கின்றன.

    as3

    ரோமானிய பண்டைய நகரங்களில் நாம் காணக்கூடிய ஒரு பொது அம்சமாகத் திகழ்வது அம்பிதியேட்டர். கிரேக்கர்களைப் போலவே ரோமானிய பண்பாட்டிலும் கலையும் இசையும் பிரிக்கப்பட முடியாத அம்சங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. இதனைப் பிரதிபலிக்கும் சான்றுதான் அம்பிதியேட்டர் என்பது. அம்பிதியேட்டர் என்பது திறந்த வெளி மைதானத்தில் அடுக்கடுக்காக மேலே எழும்பும் வகையில் பார்வையாளர்கள் அமர செய்விக்கப்பட்ட அடுக்குகள் கொண்ட அறைவட்ட வடிவிலான மேடை. இந்த அறைவட்ட வடிவு இருக்கும் பகுதியில் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்னால் மேடையில் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோ, நாடகமோ, நடனமோ, மல்யுத்தமோ ஏதாகினும் ஒன்று நடைபெறும் . இன்று நாம் பார்க்கும் காற்பந்து வளாகங்களின் முன்னோடிதான் அம்பிதியேட்டர் என்பது. அக்வின்க்கும் நகரிலும் ஒரு அம்பிதியேட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அது இன்றும் நன்றாகப் பயன்படுத்தகூடிய வகையில் வெள்ளை நிறப்பளிங்கினால் வடிக்கப்பட்ட தளங்களுடன் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. ஆகா.. என்ன கலைப்பாடு.. என பார்ப்போரை வியக்க வைக்கின்றது இதன் அமைப்பு.

    as4

    பண்டைய ரோமானிய நகரங்களின் மற்றுமொரு சிறப்பு அம்சம் பொதுக்குளியல் இடங்கள் எனலாம். சற்றே பெரிய நகரங்களில் மிகப்பெரிய குளங்களைக் காணமுடியும். அக்வின்க்கும் நகரிலும் இரண்டு குளியல் குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நீர் இல்லாத நிலையில் இக்குளங்கள் இருந்தாலும், எவ்வாறு நீர் உள்ளே விடப்பட்டும் என்றும், எவ்வாறு நீர் வெளியே செல்லும், என்பதையும் நன்கு காணமுடிகின்றது. குளிர் நீருக்கு ஒரு குளமும் வெந்நீருக்கு ஒரு குளமும் என இரண்டு குளங்கள் இங்குள்ளன.

    இவை மட்டுமன்றி இந்த பண்டைய ரோமானிய நகரில் வீரவிளையாட்டுக்கான மைதானம், இசைப்பள்ளி, பயிற்சிக்கூடங்கள் பூங்காக்கள் போன்றவையும் இருக்கின்றன. இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையான ஒரு நகரை நேரில் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பினை அக்வின்க்கும் அருங்காட்சியகமும் இந்த நகரின் வளாகமும் நமக்கு அளிக்கின்றன.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 89

     பிரித்தானிய அருங்காட்சியகம், லண்டன், இங்கிலாந்து

    முனைவர் சுபாஷிணி

    உலகின் மிகப் பிரசித்தி பெற்ற பத்து அருங்காட்சியகங்களைப் பட்டியலிட்டால் அதில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்திருக்கின்ற பிரித்தானிய அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தினுள் நுழைந்ததும் நமக்கு ஏற்படும் முதல் எண்ணம், ஒரு நாள் போதுமா? என்பதுதான். போதாது என நம் மனம் சொன்னாலும், சில வேளைகளில் நம்மை வேறு அலுவல்கள் இழுப்பதால் அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வருவது நிகழகத்தான் செய்யும். லண்டனுக்கான பயணங்களில் மூன்று வெவ்வேறு சமயங்களில் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் கண்களுக்கு அங்குள்ள பொருட்கள் தெரியாத கேள்விப்பட்டிராத செய்திகளைத்தான் சொல்கின்றன. மீண்டும் சென்றாலும் இதுவரை நான் அறிந்திராதா ஏதாவது ஒரு புதிய செய்தியை அறிந்து கொள்வேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இந்த அருங்காட்சியகம் மிகப் பழமையானது. சர் ஹான்ஸ் ஸ்லோன் (Sir Hans Sloane, 1660–1753) என்னும் மருத்துவர் ஒருவரது வாழ்நாள் சேகரிப்புகளான 71,000 அரும்பொருட்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அருங்காட்சியகம். தனது மறைவுக்குப் பின்னர் தான் சேகரித்த அரும்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இவர் விரும்பினார். அதனால் அன்றைய மன்னர் 2ஆம் ஜோர்ஸ் அவர்களை அணுகி இந்த அரும்பொருட்களை இங்கிலாந்து பவுண்டு £20,000 ஐப் பெற்றுக் கொண்டு கொடுத்தார். இது 1753ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்தது. அதிகாரப்பூர்வமாக அன்று பிரித்தானிய அருங்காட்சியகம் உருவானது.

    asu1
    ஆரம்பத்தில் இதில் ஏராளமான நூல்கள், ஆவணங்கள், காசுகள், பட்டயங்கள், வரைபடங்கள் தொடர்பான பொருட்கள் நிறைந்திருந்தன. 1757ஆம் ஆண்டு மன்னர் 2ஆம் ஜோர்ஜ் பழைய அரச நூலகத்தை இங்கிலாந்து அரசுக்கு தன் நினைவாகப் பரிசளித்தார். 1759ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆரம்பகாலகட்டத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இன்று நுழைவுக்கட்டணம் செலுத்தித்தான் உள்ளே சென்று காண முடியும். அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட நாள் முதல் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டாலும் முதலாம், இரண்டாம் உலகப்போர் காலங்களில் இது மூடியே வைக்கப்பட்டிருந்தது என்பதை அறியமுடிகிறது.

    18ஆம் நூற்றாண்டிலும் அதற்கடுத்த நூற்றாண்டிலும் இந்த அருங்காட்சியகம் விரிவடைந்தது. இது விரிவடைந்ததற்கு முக்கியக் காரணம் இங்கே வாங்கி குவிக்கப்பட்ட அரும்பொருட்களே.

    18ஆம், 19ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் இங்கிலாந்தின் தொல்லியல் துறையினர் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டனர். இக்காலகட்டங்களில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் பல இங்கே கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல. இங்கிலாந்து தனது காலணித்துவ ஆட்சியை விரிவாக்கியிருந்த நாடுகளிலிருந்து ஏராளமான விலைமதிப்பற்ற பொருட்களைத்தன் நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. அவற்றில் சில தனியார் சேகரிப்புகளும் அடங்கும். இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளில் தமது காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏராளமான வரலாற்று அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் சற்று பார்ப்போம்.

    1826ஆம் ஆண்டு சார்ல்ஸ் மேசன் என்ற ஆங்கிலேய சுற்றுப்பயணி ஒருவர் தனது பயணத்தின் போது ஓரிடத்தில் பழமையான அரண்மனை போன்ற ஒரு அமைப்பினைக் கண்டு அது பற்றி குறிப்பெழுதி வைத்தார். அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 1856இல் ரயில் பாதை அமைக்கும் வேளையில் பொறியியலாளர்கள் அங்கு மேலும் பல கட்டுமான அமைப்புகள் இருப்பதைக் கண்டனர். 1920ஆம் ஆண்டில் ஆங்கிலேய தொல்லியல் அறிஞர்கள் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சியினை நிகழ்த்தத் தொடங்கினர். மறைந்து போன சிந்து சமவெளி நாகரிகம் உலகில் வெளிச்சத்திற்கு வந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டன. அந்த அகழ்வாராய்ச்சியில் ஏறக்குறைய 3,500 முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முத்திரைகளை இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்தின் ஆரம்ப நிலை என்ற வகையில் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் இன்று வளர்ந்து வந்திருக்கின்றன. தமிழ் மொழியின் திராவிட மொழிக்குடும்பத்தோடு தொடர்புடைய பண்டைய எழுத்து வடிவமாக இது இருக்கலாம் என்ற குறிப்பிடத்தக்க ஆய்வுகளும் மொழியியல் ஆராய்ச்சித் துறையில் பேசப்பட்டு வருகின்றன என்பதை அறிவோம். இந்த பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் இந்த அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய சதுர வடிவில் அமைந்த முத்திரைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இங்கே கண்ணாடி அலமாரியில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
    asu2

    எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துருவை வாசிக்க முடியாது ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ஆய்வுலக அதிசயமாகக் கிடைத்ததுதான் ரொசேட்டா கல் (Rosetta Stone). எகிப்தின் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் எழுத்து ஹீரோக்ளிப்ஸ். ஓவியங்களே எழுத்துக்கள் என்ற வகையில் இவை அமைந்திருக்கும். எத்தனையோ ஆண்டுகளாக ஹீரோக்ளிப்ஸ் எழுத்துகளை வாசிக்க முடியாமையினால் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்றே அறியமுடியாமல் ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனைக்கு வடிகாலாக அமைந்தது இந்த ரொசேட்டா கல். பார்ப்பதற்கு அது ஒரு பெரும் பாறை போன்ற கல் தான். ஆனால் அதில் இருப்பதோ உலகின் மிக முக்கிய ஆவணம். இதில் உள்ள செய்தி மிக சாமானியமானதுதான் ஆனால் அதில் உள்ள எழுத்துருதான் சிறப்பு பெற்றது. ஏனெனில் மூன்று மொழிகளின் எழுத்துருக்கள் ஒரே கல்லில் ஒரே செய்தியை வழங்கும் வகையில் இந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 196இல் 5ஆம் தாலமி முடிசூடிக்கொண்ட நிகழ்வை இந்தக் கல் ஹீரோக்ளிப்ஸ், எகிப்திய டெமோட்டிக் எழுத்துரு, கிரேக்கம் ஆகிய மூன்று மொழி எழுத்துருக்களில் காட்டுகின்றது. இதில் உள்ள கிரேக்க, எகிப்திய டெமோட்டிக் எழுத்துருக்களைக் கொண்டு ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களை ஆய்வாளர்கள் உடனே மொழிபெயர்த்து ஒலியை அறிந்தனர். இதுவே விடைகாணாது இருந்த பல எகிப்திய ஆராய்ச்சிகளுக்கு விடையளிக்கும் மந்திரக்கோலாக அமைந்தது. இந்த ரொசேட்டா கல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் தான் உள்ளது.

    asu3
    இறந்தோர் புதைக்கப்படுவர் அல்லது எரிக்கப்படுவர். ஆனால் எகிப்திய நாகரிகமோ அரச குடும்பத்தினரையும் முக்கியஸ்தர்களையும் பாடம் செய்து மம்மியாக்கி அவர்களது உடலை நீண்ட காலம் பாதுகாக்க வழி செய்தது. அந்த வகையில் இந்த பிரித்தானிய அருங்காட்சியகத்தில் கி.மு 1250ஆம் ஆண்டில் எகிப்தில் புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்ந்த கத்தேபெத் (Katebet) என்ற பெண்மணியின் உடல் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 3250 ஆண்டுகள் பழமையான இந்த மனித உடல் இந்த அருங்காட்சியகத்திற்குப் புகழ்சேர்க்கும் அரும்பொருட்களில் ஒன்றாக இருக்கின்றது.

    asu4

    கிரேக்க சிற்பக்கலை வியக்கத்தக்கது. மேற்குலகின் எல்லா பெரிய அருங்காட்சியகங்களிலும் கிரேக்க சிற்பங்கள் இல்லாத காட்சிப்பகுதி இருக்காது என உறுதியாகச் சொல்லலாம். ஆக, பிரித்தானிய அருங்காட்சியகம் மட்டும் விதிவிலக்கா என்ன? கிரேக்கத்தில் செதுக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள், சிதைக்கப்பட்ட சிலைகளின் எச்சங்கள் ஆகியவற்றோடு, கட்டப்பட்ட ஒரு கோயிலையும் அருங்காட்சியகத்தின் உள்ளே நாம் காணலாம். கி.மு.5ஆம் நூற்றாண்டில் ஏதன்ஸ் நகரின் அக்ரோபோலிஸ் பகுதியில் சிதைந்த பார்தேனோன் (Parthenon) கோயிலின் சுவர்களும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரான கிரேக்க மனிதர்களின் தத்ரூபமான வடிவங்களை இந்த சுவர் சிற்பங்கள் நமக்கு வழங்குகின்றன.

    asu5

    மேலே குறிப்பிட்ட அரும்பொருட்கள் மட்டுமன்றி இந்திய, சீன, கிழக்காசிய, ஐரோப்பிய, தென் அமெரிக்க அரும்பொருட்கள் ஏராளமாக இந்த அருங்காட்சியகத்திற்குள் உள்ளன. வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு பிரித்தானிய அருங்காட்சியகம் ஒரு சுவர்க்கலோகம் தான். ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல. பொது மக்களுக்கும் ஏராளமான தகவல்களை வழங்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இது திகழ்கின்றது. என்றென்றும் மக்கள் கூட்டம் வெள்ளமெனத் திகழும் ஒரு அருங்காட்சியகம் இது. நுழைவுக்கட்டணம் பெருவதற்கு நிற்கின்ற நீண்ட வரிசையைப் பார்த்தாலே நமக்கு தலைசுற்றிவிடும் என்றாலும் வரிசையில் நின்று கட்டணம் கட்டி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும்போது உலக நாகரிகத்தின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டு வந்த மன திருப்தி நிச்சயம் ஏற்படும்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  88

    -முனைவர் சுபாஷிணி

    டெ வாக் விண்ட்மீல் அருங்காட்சியகம், லைடன், நெதர்லாந்து

    விண்ட்மில் என்பவை காற்றின் மூலம் கிடைக்கக்கூடிய சக்தியைக் காற்றாடிகளின் சுழற்சியின் வழி உருவாக்கி, அதன் வழி கிடைக்கும் சக்தியை ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. பண்டைய காலத்தில் விண்ட்மில்கள் பயிர்களை அரைத்துத் தூளாக்கி மாவாக்கவும் தேங்கிய தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் விண்ட்மில்கள் உருவாக்கும் சக்தியை மின்சார சக்தியாக மாற்றலாம் என்பதை அறிவியல் துறை ஆய்வுகள் கண்டுபிடித்ததன் விளைவாகப் பெருவாரியாக விண்ட்மில்கள் உலகளாவிய அளவில் மின்சார உற்பத்திக்குப் பயன்படுகின்றன. 

    விண்ட்மில் ஒன்றினை நம் மனக்கண்ணில் நாம் நிறுத்திப் பார்த்தால் உடனே நம் சிந்தனைக்கு வரும் நாடு நெதர்லாந்து தானே. நெதர்லாந்து நாட்டை ஹோலந்து என்ற பெயரிலும் அழைப்பது வழக்கம். இதற்குக் காரணம் உண்டு. தாழ்மையான நிலப்பரப்பு என்பதைப் பிரதிபலிப்பதாகவே இந்தப் பெயர் அமைந்தது. நெதர்லாந்துக்குச் சென்றிருப்பவர்கள் இந்த நாட்டின் நில அமைப்பினை நன்கு கவனித்திருந்தால், நிலப்பகுதி தாழ்வாக இருப்பதையும் எங்கெங்கு காணினும் குட்டைகளும், குளங்களும், ஏரிகளும், ஆறுகளும் என ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஆக, இப்படித் தேங்கிப் போய் இருக்கும் நீரை வெளியேற்றி நிலத்தைச் சமப்படுத்தும் கருவியாகப் பெரும்பாலான விண்ட்மில்கள் முன்னர் அமைக்கப்பட்டன. இது மட்டுமல்ல… விளை நிலங்களில் விவசாயத்தின் வழி கிடைக்கின்ற தானியங்களை உடைத்து மாவாக்கும் இயந்திரத்தை விண்ட்மில்லுடன் பொருத்தி அதனை மாவு அரைக்கும் இயந்திர ஆலையாகவும் நெதர்லாந்து நாட்டில் புழக்கத்தில் கொண்டு வந்தனர். இன்றளவும் நெதர்லாந்தில் தானியங்களை மாவாக அரைக்கவும், நீரைத் தாழ் நிலங்களிலிருந்து வெளியேற்றவும் விண்ட்மில்கள் பயன்படுத்தப் படுகின்றன. 

    suba1

    இதே முறை ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் புழக்கத்தில் இருந்தன, இன்றும் இருக்கின்றன. உதாரணமாக ஜெர்மனியின் லியோன்பெர்க்கில் எனது இல்லம் இருக்கும் பகுதியில் ஓடும் க்ளெம்ஸ் நதி பாயும் பகுதியில் இந்த ஆற்று நீரில் இத்தகைய இயந்திரங்களை அமைத்து தானியங்கள் அரைக்கும் ஆலைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மாவு அரைக்கும் ஆலைகள் இவை. இப்படி ஆற்றங்கரையோரத்தில் ஐரோப்பாவின் பல இடங்களில் இவ்வகை இயந்திரங்களையோ அல்லது பழமையான விண்ட்மில்களையோ காணலாம். இன்று பரவலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் விண்ட்மில்கள் ஏராளமாக வந்துவிட்டன. ஆயினும் இந்தப் பழமையான மரத்தால் ஆன விண்ட்மில்களுக்குள்ள அழகும் நேர்த்தியும் அந்த இயந்திரத்தன்மை கொண்ட விண்ட்மில்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். 

    நெதர்லாந்தை எடுத்துக் கொண்டால், அந்தச் சிறிய நாட்டில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ட்மில்கள் இருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? இந்த விண்ட்மில்களில் ஒன்றுதான் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. ’டெ வாக் விண்ட்மில்’ என அழைக்கப்படும் இந்த விண்ட்மில் நெதர்லாந்தின் தெற்குப் பகுதி நகரான லைடன் நகரில் அமைந்துள்ளது. நீராவி எந்திரம் 19ம் நூற்றாண்டில் பரவலான பயன்பாட்டிற்கு வந்த பின்னர் விண்ட்மில் இயந்திரத்தைப் பயன்படுத்தி தானியங்களை அரைப்பது என்பது குறைந்து விட்டது. லைடன் நகரை எடுத்துக் கொண்டால், நீராவி இயந்திரங்களின் வருகைக்குப் பின்னர் எஞ்சி நிற்கும் ஒரே ஒரு பழமையான, பயன்பாட்டில் இருந்த ஒரு விண்ட்மில் இது எனச் சொல்லலாம். 

    1883ம் ஆண்டில் லைடன் நகரில் De Sleutels என்ற பெயர் கொண்ட மாவு உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவர் இந்த டெ வாக் விண்ட்மில்லின் உரிமையாளராவார். இந்த De Sleutels தான் லைடனிலேயே மிகப் பெரிய மாவு உற்பத்திசாலை என்ற சிறப்புடன் திகழ்வது. 

    லைடன் நகரை எடுத்துக் கொண்டால் 16ம் நூற்றாண்டு தொடக்கம் வரை விண்ட்மில் மாவு ஆலைகள் அனைத்தும் நகருக்கு வெளிப்புறத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஆக, மாவு அரைத்துக் கொண்டு வருவதற்கோ அல்லது வாங்குவதற்கோ மக்கள் நகருக்கு வெளியே சென்று வாங்கி வரும் நிலையே இருந்தது. பின்னர் 1573 வாக்கில் நகருக்கு உள்ளேயே புதிய விண்ட்மில்கள் கட்டப்பட்டன. இதற்கு மக்களின் பாதுகாப்பு அம்சங்களே முக்கியக் காரணமாக அமைந்தன. லைடன் நகர் போரில் வெற்றிபெற்றுத் தனி நகரமாக வளரத் தொடங்கிய 1574ம் ஆண்டில் இந்த நகரம் புதுப் பொலிவுடன் வளர்ச்சியைக் காணத்துவங்கியது. சோள மாவு ஆலை, தானிய ஆலை எனப் பல தொழிற்கூடங்கள் முளைக்கத் தொடங்கின. ஆலைகளுடன் துணிகளும் ஆடைகளும் தயாரிக்கும் தொழிற்கூடங்களும் உருவாக்கம் கண்டன. 

    suba2

    1611ம் ஆண்டில் லைடன் மாநகரம் சீரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட சமயத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த டெ வாக் விண்ட்மில். பயன்பாட்டில் இருந்த இந்த விண்ட்மில் 1743ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட விண்ட்மில் காற்றாடிகள் மட்டும் இருக்க, அதன் உடல் பகுதி முழுமையும் மரத்திற்குப் பதிலாக கற்களைக் கொண்டு கட்டப்பட்டன. இப்பணி இரண்டரை மாதத்தில் நிறைவு பெற்றது. 1869ம் ஆண்டு வரை இரண்டு குடும்பங்கள் இந்த விண்ட்மில்லின் உரிமையாளராக இருந்திருக்கின்றனர். அதன் பின்னர் இது வான் ரெயின் குடும்பத்தாருக்குச் சொந்தமாகியது. பீட்டர் வான் ரெயின் இந்த ஆலையைத் திறமையுடன் நடத்தி வந்தார். இங்கு முக்கியமாகச் சோளம் உடைத்து மாவாகச் செய்யும் பணி நடந்து வந்தது. அவரது மேற்பார்வையில் இருந்த சமயத்தில், அதாவது 1869 முதல் 1889 வரை மிகுந்த லாபத்தை ஈட்டித்தந்த மாவு ஆலையாக இந்த விண்ட்மில் இருந்தது. 

    suba3

    இந்தக் காலகட்டத்தில் தான் மாவு உற்பத்தி செய்யும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் பல நிறுவப்பட்டன. இது டெ வாக் போன்ற விண்ட்மில் மாவு அரைக்கும் இயந்திரங்களுக்குப் போட்டியை உருவாக்க ஆரம்பித்தது. இந்தப் போட்டியைச் சமாளிக்க எலெக்ட்ரிக் இயந்திரங்கள் இந்த டெ வாக் மாவு இயந்திரத்தில் 1923ம் ஆண்டு முதல் இணைக்கப்பட்டது. ஆனால் அது நல்ல பலனை உருவாக்கவில்லை. 

    முழுமையான புது வடிவமைப்புப் பணிகள் 1947ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் இந்த மாவு ஆலை பயன்பாட்டில் இருந்து வந்தது. 1965ம் ஆண்டு இதன் உரிமையாளர் வில்ஹெல்ம் வான் ரெயின் காலமான பின்னர் இந்த டெ வாக் விண்ட்மில் அருங்காட்சியகமாக உருபெற்றது. 

    suba4

    ஆறு தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. உள்ளே நுழைந்தால் முதலில் வருவது அலுவலகம். அங்குக் கட்டணம் செலுத்திவிட்டு டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு தளமாக மரப்படிகளில் ஏறிச் சென்று இதனை முழுமையாகக் காணலாம். முதல் தளத்தில் நல்லதொரு தங்கும் விடுதி அறை போல ஓர் அறை அமைந்திருக்கின்றது. ஒரு விண்ட்மில்லின் உள்ளே இருக்கின்றோம் என்ற சிந்தனையே எழாதவாறு இந்தத் தளத்தின் அமைப்பு அமைந்துள்ளது. மேசை நாற்காலிகள், சுவர் சித்திரங்கள், அதன் உரிமையாளரின் பழைய புகைப்படங்கள் என இங்குள்ள அனைத்துமே இத்தகைய சிந்தனையை எழுப்புவதாக உள்ளன. 

    suba5

    அடுத்தடுத்த தளங்களில் இந்த அருங்காட்சியகத்தில் மாவு அரைக்கப் பயன்படுத்தப்பட்ட கல் இயந்திரங்கள், மற்றும் பல கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படியே படிப்படியாக விளக்கக்குறிப்புக்களை வாசித்துக் கொண்டே ஆறாவது தளத்தைக் கடந்து சென்றால் விண்ட்மில் காற்றாடி இருக்கும் தளத்தின் வெளிப்புறத்திற்கு அங்குள்ள கதவினைத் திறந்து அதன் வழியே வரலாம். வெளியே நின்று காற்றாடியின் முழுப் பரிமாணத்தையும் மிக அண்மையில் நின்று நாம் காண முடியும். காற்றின் வேகத்தைப் பொறுத்து காற்றாடிச் சுற்றிக்கொண்டிருப்பதை மிக அண்மையில் இருந்தவாறு நாம் பார்த்து ரசிக்கலாம். மேலிருந்து நோக்கும் போது லைடன் நகரையும் கண்களுக்கு எட்டிய தூரம் வரைப் பார்த்து ரசிக்கலாம். 

    நெதர்லாந்து நாட்டிற்கு வருபவர்கள் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய ஓர் அருங்காட்சியகம் இது என்று சொல்வேன். ஏனெனில் நெதர்லாந்துக்கே சின்னமாகத் திகழும் விண்ட்மில் பற்றிய தெளிவான விளக்கங்களைத் தரக்கூடிய, இன்றைக்கு ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  87

    செயிண்ட் தோமஸ் கல்லறை அருங்காட்சியகம், சென்னை, தமிழகம், இந்தியா

    -முனைவர் சுபாஷிணி

    ஏசு நாதருடன் துணையாக இருந்த 12 இறை தூதர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செயிண்ட் தோமஸ் அவர்கள். செயிண்ட் தோமஸ் அன்றைய ஜெருசலத்தின்  ரோமானியப் பேரரசிலிருந்து வெளியேறி ஆசிய நாடுகள் பக்கம் வந்ததாகவும், அவர் தமிழகத்தில் வந்திறங்கி வாழ்ந்து பின் மறைந்ததாகக் கிறித்துவ மதத்தினரால் நம்பப்படுகின்றது.   இன்று நமக்குக் கிடைக்கின்ற பாரம்பரியச் செய்திகளின் தொடர்பில் பார்க்கும்போது, செயிண்ட் தோமஸ் அவர்கள், அன்று தென் இந்தியாவின் மிக முக்கிய மேற்குக் கடற்கரை துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்த முசிறிக்கு கி.பி.52ம் ஆண்டில் வந்ததாகவும், அங்கே ஏசு கிறித்துவின் பொன்மொழிகளைக் கூறி அங்கு வாழ்ந்த உள்ளூர் மக்களுக்கு ஞானஸ்நானம் அளித்ததாகவும் நம்பப்படுகின்றது. அப்படி அவரால் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டவர்கள் செயிண்ட் தோமஸ் கிறித்துவர்கள், அல்லது நஸ்ரானியர்கள் என அறியப்படுகின்றார்கள்.

    ‰
    ‰

    இன்று நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி அன்றைய தமிழகத்தில் வாழ்ந்து வந்த செயிண்ட் தோமஸ் சிலரால் கொலை செய்யப்பட்டதாக அறிகின்றோம். மக்களால் பரங்கிமலை என அழைக்கப்படும் செயிண்ட் தோமஸ் குன்றில் இன்று மிக அழகான தேவாலயம் ஒன்று கட்டப்பட்டிருப்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி எல்லோரும் சென்று பார்த்து வழிபட்டு வரும் தலமாக இந்தத் தேவாலயம் அமைந்திருக்கின்றது.  தேவாலய அமைப்பு  மட்டுமன்றி இந்தத் தேவாலயம் அமைந்திருக்கும் மலைப்பாங்கான சூழலும் இயற்கைக் காட்சிகளும் இந்த இடத்தின் சிறப்பினைக்கூட்டும் வகையில் உள்ளன.

    இந்தத் தேவாலயத்தின் ஒரு பகுதியில் செயிண்ட் தோமஸ் அவர்கள் கொல்லப்பட்டதாக அறியப்படும் இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. செயிண்ட் தோமஸ் அவர்கள் அக்குறிப்பிட்ட இடத்தில் கொல்லப்பட்டார் என்றபோதிலும், அவரது உடல் புதைக்கப்பட்ட கல்லறை சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் செயிண்ட் தோமஸ் தேவாலயத்தின் பின்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் இருக்கின்றது. பொது மக்களால் பேச்சு வழக்கில் ‘சாந்தோம் சர்ச்’ என அழைக்கப்படும் இந்தத் தேவாலயத்தின் சரியான பெயர் செயிண்ட் தோமஸ் பசிலிக்கா என்பதாகும். செயிண்ட் தோமஸ் என்பதே பேச்சு வழக்கில் மருவி சாந்தோம் என மாற்றம் பெற்றுவிட்டது.

    கி.பி.16ம் நூற்றாண்டு முதல் எல்லா மதத்தைச் சார்ந்தோரும் வந்து வழிபட்டுச் செல்லும் வழிபாட்டுத்தலமாக பரங்கிமலை செயிண்ட் தோமஸ் குன்று இருந்து வருகின்றது. இன்று செயிண்ட் தோமஸ் கல்லறை இருக்கும் இடத்தில்  அமைக்கப்பட்ட தேவாலம் கி.பி 16ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும். இதனை போர்த்துக்கீசியர்கள் கட்டி அமைத்தார்கள். இந்த தேவாலயத்தின் பின்பகுதியில்  ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

    ®

    இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சான்றுகள் பல மிக நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள், இலத்தீன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் ஆகியனவற்றோடு கிறித்துவ வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பல சின்னங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செயின்ட் தோமஸ் அவர்களின் இறைத்தன்மைகளை விளக்கும் சித்திரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள தமிழ்க் கல்வெட்டு ஒன்று கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரம சோழன் காலத்து கல்வெட்டாகும்.

    இன்று நாம் காண்கின்ற செயிண்ட் தோமஸ் தேவாலயம் 19ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். இதன் முந்தைய, அதாவது அது முதன் முதலில் போர்த்துக்கிசியர்களால் கட்டப்பட்டபோது இருந்த தோற்றத்தைக் காட்டும் ஓவியம் ஒன்றும் இங்குள்ளது.

    d

    முதல் தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், வரைப்படங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தின் கீழ்ப்பகுதியில், அதாவது நிலத்துக்கு அடியில் தான் செயின்ட் தோமஸ் அவர்களின் கல்லறை உள்ள பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் காண, படிகளில் இறங்கி இந்த அடித்தளப்பகுதிக்குச் செல்லவேண்டும். அங்கு இருபக்கமும் இந்தக் கல்லறைக்கு வந்து வழிபட்டு மரியாதைச் செலுத்திச் சென்ற முக்கியமானவர்களது புகைப்படங்கள்  சுவரில் மாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். மரியாதைக்குரிய போப்  2ம் ஜோன் பவுல்  அவர்கள் இங்குவந்து வழிபட்டுச் சென்றமையைக் குறிக்கும் புகைப்படங்களும் அவற்றில் அடங்கும். அதனைத் தாண்டி உள்ளே சென்றால் அங்கே செயிண்ட் தோமஸ் சமாதியைக் காணலாம்.

    bty

    செயிண்ட் தோமஸ் தேவாலயம் 1956ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சிறிய பசிலிக்கா என்ற நிலைக்கு மரியாதைக்குரிய போப்  2ம் ஜோன் பவுல்  அவர்களால் உயர்த்தப்பட்டது. இந்த பசிலிக்காவின் கருவரையில் அன்னை மேரியின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.  Our Lady of Mylapore  என இந்த பசிலிக்காவின்  புனித மேரியார் அழைக்கப்படுகின்றார்.

    à

    பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வரலாற்று ஆர்வலர்கள் வந்து சென்று காண ஒரு சிறந்த அருங்காட்சியகம் எனக் கூறலாம். சென்னையின் மத்தியிலேயே தேவாலயத்தின் பின் இப்படி ஓர் அருங்காட்சியகமா என என்னை வியக்கவைத்த அருங்காட்சியகம் இது. சென்னையிலே வசித்தாலும், மயிலாப்பூரின் வீதிகளில் தினம் தினம் சுற்றி வந்தாலும் கூட இத்தகைய ஓர் அருங்காட்சியகம் இருக்கின்றது எனப் பலர் அறியாமல் இருக்கலாம். உள்ளேசென்று பார்க்க இங்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 86

    அனைத்துலக வாசனை திரவிய அருங்காட்சியகம், க்ராஸ், பிரான்சு

    முனைவர் சுபாஷிணி

    The Perfume என்ற ஒரு திரைப்படம் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கலாம். அடிப்படையில் ஒரு நாவலைத் தழுவிய ஒரு திரைப்படைப்பு இது. இதில் பிரான்சின் க்ராஸ் நகரத்தில் நிகழும் ஒரு திகில் சம்பவத்தை கதையாக்கிக் காட்டியிருப்பார்கள். இலைகளிலிருந்தும், செடிகளிலிருந்தும், மரப்பட்டைகளிலிருந்தும் வாசனை திரவியங்களை உருவாக்கும் கலையையும் மிஞ்சியதாக அழகிய இளம் பெண்ணின் உடலிலிருந்து வாசனை திரவியம் எடுக்கும், சிந்தனை பேதலித்த ஒரு ஆராய்ச்சியாளனைப் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தத் திரைப்படம். இந்தக்கதையின் மையக்கரு ஒரு கற்பனைதான் என்றாலும், க்ராஸ் நகரின் உலகப்பிரசித்தி பெற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பு பற்றிய செய்திகளைப் பிரபலப்படுத்தி பேச வைத்தது இந்தத் திரைப்படம் எனலாம்.

    as1

    வாசனை திரவியங்கள் என்றாலே பலருக்கும் முகத்தில் மலர்ச்சி ஏற்படும். இயற்கையில் மலர்கள் ஏற்படுத்துகின்ற வாசனைகளை விரும்பாதார் யார்?

    மலர்கள் இல்லாத வேளையில் ஊதுபத்தியை ஏற்றி வைத்து அது தரும் சுகந்தத்தை ரசிப்பதையும் பலரும் செய்கின்றோம். புறத்திலே வாசனையை விரும்பும் நாம் நம் உடலும் நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உடலுக்கு வாசனை திரவியங்களை வாங்கிப் பயன்படுத்துகின்றோம். வாசனை திரவியங்களில் உலகப்புகழ்பெற்றவை பிரான்சு நாட்டின் வாசனை திரவியங்களின் தயாரிப்பு எனலாம். பிரான்சில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் தயாரிப்பாளர்கள் இயங்கி வருகின்றார்கள். வாசனை திரவியங்கள் நம் வாழ்வில் பண்டைய காலந்தொட்டே முக்கியத்துவம் வகித்துவருகின்றன. மனித நாகரிகத்தின் ஒரு பகுதியாக வாசனை திரவியங்களின் பயன்பாடு இருந்திருக்கின்றது என்பதை பண்டைய சமுதாயங்களைப் பற்றி ஆராயும்போது அறிந்துகொள்ள முடிகின்றது. உதாரணமாக, எகிப்தில், இறந்தோரின் உடலை மம்மியாக்கி பதப்படுத்தி வைக்கும் வேளையில் வாசனை திரவியங்களை உடலில் பூசுவதும் ஒரு சடங்காகின்றது. எகிப்து மட்டுமல்ல. ஏனைய பண்டைய சமூகங்களிலும் வாசனை திரவியங்கள் நீண்ட நெடுங்காலம்தொட்டே வழக்கில் இருந்து வந்துள்ளன.

    as

    பிரான்சின் க்ராஸ் நகருக்கு நான் 2010ஆம் ஆண்டு சென்றிருந்தபோது அந்த நகரில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான ஒரு இடமாக இந்த அருங்காட்சியகத்தை எனது டைரியில் குறித்து வைத்திருந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. முதலில் வேறு விதமான ஒரு எண்ணமே மனதை ஆக்கிரமித்திருந்தது. வாசனை திரவியத்திற்குக்கூட ஒரு அருங்காட்சியகமா? ஒரு வேளை பிரான்சில் தயாராகும் எல்லா வாசனை திரவியங்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் இடமோ என்ற எண்ணமும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே சென்று கட்டணம் கட்டி டிக்கெட் பெற்றுக்கொண்டு நுழைந்த முதல் நிமிடமே ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் நிற்கின்ற உணர்வே எனக்கு மேலிட்டது.

    இன்று நாம் காண்கின்ற இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது 1918ஆம் ஆண்டு. பிரான்சின் பிரபலமான நபர்களில் ஒருவரும் அப்போதைய பிரான்சின் ஜனாதிபதியின் மகனுமாகிய ஃப்ரான்சிஸ் கானோ (Francois Carnot) தனியார் அருங்காட்சியகம் ஒன்றினை ஆரம்பித்தார். பிறகு படிப்படியாக இது விரிவடைய ஆரம்பித்தது.

    as2

    க்ராஸ் நகர் வாசனை திரவியங்கள் உற்பத்திக்காக உலகப் புகழ்பெற்ற ஒரு நகரம். பிரான்சின் கிராஸ் நகரில் வயல்களில் விளையும் லவெண்டர் பூக்களைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும். வயல் முழுதும் ஊதா நிறக்கம்பளம் விரித்தார் போல விளைந்திருக்கும் லவெண்டர் செடிகளை விரிவாக இந்த நகரின் வயல்களில் காணலாம். லவெண்டர் பூக்கள் பெருவாரியாக வாசனை திரவிய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இங்கே விளையும் பல வகையான மலர்களிலிருந்தும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. பூக்கள் மட்டுமல்ல. மூலிகைச் செடிகளிலிருந்தும், சில மரங்களின் தோல் பட்டைகளிலிருந்தும் கூட வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

    as3

    இந்த அருங்காட்சியகத்தில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குடுவைகளும், இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை எவ்வாறு இயக்கப்படுகின்றன என்றும் விளக்கக் குறிப்புக்கள் கணினி வழி குறும்படங்களாகக் காட்டப்படுகின்றன. ஒரு தனிப்பகுதியில் பண்டைய காலத்தில் எவ்வாறு வாசனை திரவியங்கள் உருவாக்கப்பட்டன என்ற செய்திகள் படங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.முந்தைய நூற்றாண்டுகளில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட சில பழைய பாண்டங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    ஒரு தனிப்பகுதியில் பிரான்சில் தயாரிக்கப்படும் பிரபலமான அனைத்து வாசனை திரவியங்களின் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளன. வண்ண வண்ண குடுவைகளில் இவற்றைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. வாசனை திரவியங்கள் மட்டுமன்றி மனிதர்கள் நாம் பயன்படுத்தும் சோப்பு, அலங்கார வாசனைப்பொருட்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கி விரிவான தகவல் களஞ்சியமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.

    as4
    இந்த அருங்காட்சியகம் தற்போது இருக்கும் இடத்தின் முகப்புப் பகுதியானது 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது இந்த நகரிலுள்ள 14ஆம் நூற்றாண்டு டோமினிக்கன் மடாலயத்தின் பின்புறச்சுவற்றை ஒட்டியதாக அமைந்திருக்கின்றது. வெவ்வேறு தளங்களில் கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். ஒரு தளத்தில் மூலிகைகள் தனித்தனியாக வகைப்படுத்தி வளர்க்கப்படுவதையும் காணலாம்.

    யாருக்குத்தான் அழகாகவும் கவர்ச்சியாகவும் மனதைக் கவரும் நறுமணத்துடனும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது?
    மனிதர்கள் நாம் எல்லோருமே அழகியலை விரும்புபவர்களாகத்தானே இருக்கின்றோம். அந்த மனித உள்ளத்தின் தேவையை படம் பிடித்துச் செயல்வடிவில் காட்டுகின்றது இந்த அருங்காட்சியகம்.

    க்ராஸ் வாசனை திரவியங்கள் அருங்காட்சியகம், அருங்காட்சியகப் பிரியர்கள் அனைவருமே கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு அருங்காட்சியகமே!
    .

    Share