அனைத்துலக வாசனை திரவிய அருங்காட்சியகம், க்ராஸ், பிரான்சு

முனைவர் சுபாஷிணி

The Perfume என்ற ஒரு திரைப்படம் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கலாம். அடிப்படையில் ஒரு நாவலைத் தழுவிய ஒரு திரைப்படைப்பு இது. இதில் பிரான்சின் க்ராஸ் நகரத்தில் நிகழும் ஒரு திகில் சம்பவத்தை கதையாக்கிக் காட்டியிருப்பார்கள். இலைகளிலிருந்தும், செடிகளிலிருந்தும், மரப்பட்டைகளிலிருந்தும் வாசனை திரவியங்களை உருவாக்கும் கலையையும் மிஞ்சியதாக அழகிய இளம் பெண்ணின் உடலிலிருந்து வாசனை திரவியம் எடுக்கும், சிந்தனை பேதலித்த ஒரு ஆராய்ச்சியாளனைப் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தத் திரைப்படம். இந்தக்கதையின் மையக்கரு ஒரு கற்பனைதான் என்றாலும், க்ராஸ் நகரின் உலகப்பிரசித்தி பெற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பு பற்றிய செய்திகளைப் பிரபலப்படுத்தி பேச வைத்தது இந்தத் திரைப்படம் எனலாம்.

as1

வாசனை திரவியங்கள் என்றாலே பலருக்கும் முகத்தில் மலர்ச்சி ஏற்படும். இயற்கையில் மலர்கள் ஏற்படுத்துகின்ற வாசனைகளை விரும்பாதார் யார்?

மலர்கள் இல்லாத வேளையில் ஊதுபத்தியை ஏற்றி வைத்து அது தரும் சுகந்தத்தை ரசிப்பதையும் பலரும் செய்கின்றோம். புறத்திலே வாசனையை விரும்பும் நாம் நம் உடலும் நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உடலுக்கு வாசனை திரவியங்களை வாங்கிப் பயன்படுத்துகின்றோம். வாசனை திரவியங்களில் உலகப்புகழ்பெற்றவை பிரான்சு நாட்டின் வாசனை திரவியங்களின் தயாரிப்பு எனலாம். பிரான்சில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் தயாரிப்பாளர்கள் இயங்கி வருகின்றார்கள். வாசனை திரவியங்கள் நம் வாழ்வில் பண்டைய காலந்தொட்டே முக்கியத்துவம் வகித்துவருகின்றன. மனித நாகரிகத்தின் ஒரு பகுதியாக வாசனை திரவியங்களின் பயன்பாடு இருந்திருக்கின்றது என்பதை பண்டைய சமுதாயங்களைப் பற்றி ஆராயும்போது அறிந்துகொள்ள முடிகின்றது. உதாரணமாக, எகிப்தில், இறந்தோரின் உடலை மம்மியாக்கி பதப்படுத்தி வைக்கும் வேளையில் வாசனை திரவியங்களை உடலில் பூசுவதும் ஒரு சடங்காகின்றது. எகிப்து மட்டுமல்ல. ஏனைய பண்டைய சமூகங்களிலும் வாசனை திரவியங்கள் நீண்ட நெடுங்காலம்தொட்டே வழக்கில் இருந்து வந்துள்ளன.

as

பிரான்சின் க்ராஸ் நகருக்கு நான் 2010ஆம் ஆண்டு சென்றிருந்தபோது அந்த நகரில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான ஒரு இடமாக இந்த அருங்காட்சியகத்தை எனது டைரியில் குறித்து வைத்திருந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. முதலில் வேறு விதமான ஒரு எண்ணமே மனதை ஆக்கிரமித்திருந்தது. வாசனை திரவியத்திற்குக்கூட ஒரு அருங்காட்சியகமா? ஒரு வேளை பிரான்சில் தயாராகும் எல்லா வாசனை திரவியங்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் இடமோ என்ற எண்ணமும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே சென்று கட்டணம் கட்டி டிக்கெட் பெற்றுக்கொண்டு நுழைந்த முதல் நிமிடமே ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் நிற்கின்ற உணர்வே எனக்கு மேலிட்டது.

இன்று நாம் காண்கின்ற இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது 1918ஆம் ஆண்டு. பிரான்சின் பிரபலமான நபர்களில் ஒருவரும் அப்போதைய பிரான்சின் ஜனாதிபதியின் மகனுமாகிய ஃப்ரான்சிஸ் கானோ (Francois Carnot) தனியார் அருங்காட்சியகம் ஒன்றினை ஆரம்பித்தார். பிறகு படிப்படியாக இது விரிவடைய ஆரம்பித்தது.

as2

க்ராஸ் நகர் வாசனை திரவியங்கள் உற்பத்திக்காக உலகப் புகழ்பெற்ற ஒரு நகரம். பிரான்சின் கிராஸ் நகரில் வயல்களில் விளையும் லவெண்டர் பூக்களைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும். வயல் முழுதும் ஊதா நிறக்கம்பளம் விரித்தார் போல விளைந்திருக்கும் லவெண்டர் செடிகளை விரிவாக இந்த நகரின் வயல்களில் காணலாம். லவெண்டர் பூக்கள் பெருவாரியாக வாசனை திரவிய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இங்கே விளையும் பல வகையான மலர்களிலிருந்தும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. பூக்கள் மட்டுமல்ல. மூலிகைச் செடிகளிலிருந்தும், சில மரங்களின் தோல் பட்டைகளிலிருந்தும் கூட வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

as3

இந்த அருங்காட்சியகத்தில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குடுவைகளும், இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை எவ்வாறு இயக்கப்படுகின்றன என்றும் விளக்கக் குறிப்புக்கள் கணினி வழி குறும்படங்களாகக் காட்டப்படுகின்றன. ஒரு தனிப்பகுதியில் பண்டைய காலத்தில் எவ்வாறு வாசனை திரவியங்கள் உருவாக்கப்பட்டன என்ற செய்திகள் படங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.முந்தைய நூற்றாண்டுகளில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட சில பழைய பாண்டங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒரு தனிப்பகுதியில் பிரான்சில் தயாரிக்கப்படும் பிரபலமான அனைத்து வாசனை திரவியங்களின் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளன. வண்ண வண்ண குடுவைகளில் இவற்றைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. வாசனை திரவியங்கள் மட்டுமன்றி மனிதர்கள் நாம் பயன்படுத்தும் சோப்பு, அலங்கார வாசனைப்பொருட்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கி விரிவான தகவல் களஞ்சியமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.

as4
இந்த அருங்காட்சியகம் தற்போது இருக்கும் இடத்தின் முகப்புப் பகுதியானது 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது இந்த நகரிலுள்ள 14ஆம் நூற்றாண்டு டோமினிக்கன் மடாலயத்தின் பின்புறச்சுவற்றை ஒட்டியதாக அமைந்திருக்கின்றது. வெவ்வேறு தளங்களில் கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். ஒரு தளத்தில் மூலிகைகள் தனித்தனியாக வகைப்படுத்தி வளர்க்கப்படுவதையும் காணலாம்.

யாருக்குத்தான் அழகாகவும் கவர்ச்சியாகவும் மனதைக் கவரும் நறுமணத்துடனும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது?
மனிதர்கள் நாம் எல்லோருமே அழகியலை விரும்புபவர்களாகத்தானே இருக்கின்றோம். அந்த மனித உள்ளத்தின் தேவையை படம் பிடித்துச் செயல்வடிவில் காட்டுகின்றது இந்த அருங்காட்சியகம்.

க்ராஸ் வாசனை திரவியங்கள் அருங்காட்சியகம், அருங்காட்சியகப் பிரியர்கள் அனைவருமே கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு அருங்காட்சியகமே!
.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *