Author: நிர்மலா ராகவன்

  • குற்ற உணர்ச்சியே கருணையாக…

    நிர்மலா ராகவன்

    “சாப்பிட்டு முடி, செல்லம்! சமர்த்தில்லே!”

    ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’ என்று, மானசீகமாக கைலாயத்திற்கே போய்விட்டிருந்த கமலநாதன் மனைவியின் குரலைக் கேட்டு நனவுலகிற்கு வந்தார்.

    இப்படியா பரிந்து, பரிந்து ஒரு பூனைக்குட்டிக்கு ஆகாரம் அளிப்பார்கள்?

    வீரம், பண்பாடு என்றெல்லாம் பேசுகிறவர்கள் `கருணை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இவளிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்தனை போக, சிரிப்பு வந்தது க.நா.விற்கு.

    ஒரு வேளை, அவளுடைய குற்ற உணர்ச்சிதான் இப்படி இன்னொரு வழியில் வடிகால் காண்கிறதோ?

    அன்று அழுதபடி வீட்டுக்குள் வந்தாள் விமலி. தன்னுடன் போட்டி போட்டு சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த மடிக்கணினி மீதிருந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார் க.நா.
    அவர் எதுவும் கேட்குமுன், “ஒரு பூனைக்குட்டிமேல காரை ஏத்திட்டேன். அது அப்படியே நசுங்கி..,” மேலே தொடரமுடியாது, விசும்பினாள்.

    `இதற்கா இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்!’ என்பதுபோல் புருவத்தைத் தூக்கினார் க.நா.

    அவர்கள் இருந்த பகுதியில் எப்போதும் ஏதாவது ஒரு பெரிய மாடி வீட்டை இடித்து, புதிதாக ஏதாவது கட்டிக் கொண்டிருப்பார்கள் சீனர்கள். `இவர்களுக்கெல்லாம் எங்கிருந்துதான் பணம் கொட்டுகிறதோ!’ என்று அதிசயித்திருக்கிறார் க.நா. ஒரு நண்பரை விசாரித்தபோது, `Feng Shui (ஃபெங் ஷ்வி — சீனர்களின் வாஸ்து) சரியாக இல்லை!’ என்றார்.

    கட்டுமானத் தொழிலாளிகள் வேலை செய்ய வரும்போது தமது உபகரணங்களுடன், எங்கிருந்தாவது ஒரு பூனைக்குட்டியையும் தூக்கி வருவது வழக்கமாக இருந்தது. சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் கழித்து, அங்கு வேலை முடிந்ததும், அவர்கள் போய்விடுவார்கள் — பூனையை விட்டுவிட்டு.
    இதனால், செல்வம் கொழித்த அந்த குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு தெருக்களிலும் கறுப்பு, வெள்ளை, பழுப்பு, சாம்பல் வண்ணங்களில் பூனைகள் உலவிக்கொண்டு, தங்கள் இனப்பெருக்கத்திற்குத் தம் கடமையைச் செம்மையாகச் செய்துகொண்டிருந்தன.

    `நீ நிதானமா பாத்து காரை ஓட்டியிருக்கணும், விமலி. நம்ப தெருவிலே எப்போ ஒரு பூனையோ, நாயோ குறுக்கே வரும்னு சொல்லவே முடியாது!’ என்றார், நிதானமாக.

    தன் துயரத்தில் பங்கு கொள்ளாது, புத்திவேறு சொல்கிறாரே! விமலியின் துக்கம் ஆத்திரமாக மாற, “ஒங்ககிட்ட போய் சொல்றேனே!” என்று இரைந்துவிட்டு, `இதயமே இல்லாத ஜன்மம்!’ என்று முணுமுணுத்தபடி அப்பால் போனாள்.

    “இங்கே வந்து பாருங்களேன்!” என்று வாசலிலிருந்தே உற்சாகமாகக் கூவிக்கொண்டு வந்தாள் விமலி.
    முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டார் க.நா. நிம்மதியாக ஆடுவோம் என்றால் விடுகிறாளா? கணினியை அருகிலிருந்த மேசைமேல் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

    மனைவி கையில் மூன்று நிறங்கள் கலந்த ஒரு பூனைக்குட்டி!

    “ஏது?”

    “பார்க்கிலே இருந்திச்சு. நடந்து போறப்போ பாத்தேனா! தூக்கிட்டு வந்துட்டேன்”.

    “திருடிக்கிட்டு வந்தேன்னு சொல்லு!” என்று திருத்தினார். “அதோட அம்மா தேடாதா?”

    அவள் முகம் இறுகியது. “ஒண்ணு காணாமப் போனா அம்மா பூனைக்குத் தெரியவா போகுது! மூணு, நாலு குட்டி போட்டிருக்கும்!” என்று தன் குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொள்ளப் பார்த்தாள்.

    பத்து குழந்தைகள் பெற்ற தாய்கூட ஒரு குழந்தை இறந்துவிட்டால், வாழ்நாளெல்லாம் துக்கத்தில் உழலுகிறாளே! பூனையும் தான் ஈன்றதைப் பால் கொடுத்து வளர்க்கும் ஜீவன்தானே? அதற்கு மட்டும் உணர்ச்சிகள் கிடையாதா? அல்லது, எத்தனை குட்டிகளை ஈன்றோம் என்பதுதான் தெரியாதா?

    இவளுக்கு ஏன் இந்த சின்ன விஷயம் புரியவில்லை?

    பெண்ணாக இருந்தால் மட்டும் போதாதோ? தாய்மை அடைந்தால்தான் இன்னொரு தாயின் வேதனை புரியுமோ?

    தான் ஏதாவது சொல்லப்போனால், அழுது ஆகாத்தியம் செய்வாள். அன்று சமையல் வாயில் வைக்க வழங்காது என்று வாயை மூடிக்கொண்டார் க.நா. எல்லாம் இருபது ஆண்டுகால இல்லற வாழ்க்கை கற்றுக்கொடுத்த விவேகம்தான்.

    பிள்ளை இல்லாவீட்டில் அந்த பூனைக்குட்டி துள்ளி விளையாடியது. தினசரியைக் குதறியது. சர்வசுதந்திரமாக சோபாவில் படுத்து, பகலெல்லாம் தூங்கியது. சாப்பாட்டு மேசையில் ஏறி, அதன்மேலிருந்தவற்றை முகர்ந்து பார்க்கவும் தவறவில்லை.

    `அடீ! அடீ!’ என்று அதன் பின்னாலேயே ஓடும் மனைவியைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது கமலநாதனுக்கு. பரிதாபமும் உடன் எழுந்தது.

    முன்பெல்லாம், பொழுதைப் போக்க வேறு வழி தெரியாமல், டி. வி. முன்னால் ஐக்கியமாகிவிடுவாள் விமலி.

    சும்மா கண்ணுக்கு மட்டும் வேலை கொடுத்துக்கொண்டு இருக்க முடியுமா? `நாங்களும் இருக்கிறோம்!’ என்பதுபோல, கையும், வாயும் தங்கள் பாட்டில் காலி செய்யும், கச்சாங் (மலாயில் கடலைக்காய்), மிக்ஸ்சர் போன்ற நொறுக்குத்தீனி அடங்கிய பிளாஸ்டிக் பைகளை.

    `உங்கள் உடம்பைக் கொஞ்சம் குறைக்கலாம். ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள்!’ என்று பல முறை மருத்துவர்கள் கூறியபின், அவ்வப்போது அருகிலிருந்த பூங்காவிற்கு உலாவச் செல்வாள்.

    அப்படித்தான் அந்தப் பூனைக்குட்டி அவளுடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக வந்து சேர்ந்திருந்தது.

    “ஒன் பூனைக்குப் பேர் கிடையாதா?” என்று ஒரு நாள் மனைவியைச் சீண்ட, “குட்டின்னு பேர் வெச்சிருக்கேன். நல்லா இருக்கில்லே?” என்றாள் அப்பாவித்தனமாக. அவர் தன் செல்லப்பிராணியின்மேல் அக்கறை வைத்திருக்கிறாரே என்ற மகிழ்ச்சி பிறந்தது அவளுக்கு.

    “ஒரிஜினலா இருக்கு!” என்றவரின் கேலியைப் புரிந்துகொள்ள முடியவில்லை அவளால். இன்னும் பூரித்தாள்.

    வேளை தவறாது தனக்கு ஆகாரமும், குடிநீரும் கொடுத்துவந்த விமலிக்கு ஏதோ தன்னால் ஆன உதவியாக, தான் மிதித்துக் கொன்ற பல்லியையும், கரப்பான் பூச்சியையும் அவள் செருப்பின்மேல் கொண்டுவந்து போட்டது குட்டி.

    அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. “நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேண்டா, குஞ்சு!” என்று கொஞ்சினாள்.

    தன் ஆசாரத்தைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்து, பேரங்காடிகளில் பூனைகளுக்கென பிரத்தியேகமாக விற்கும் உணவை வாங்கிவந்தாள்.

    “நாத்தம்!” என்று முகத்தைச் சுளித்த கணவரைப் பார்த்துச் சீறினாள். “பின்னே என்ன, பூனை தயிர் சாதமா சாப்பிடும்? மீன் வாசனை அப்படித்தான் இருக்கும். நீங்க ஒண்ணும் அதுக்குப் போட வேண்டாம்! நான் பாத்துக்கறேன்!”

    குட்டியின்மேல் தனக்கிருந்த பிடிப்பை கணவன் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்ற ஆதங்கம் சிறிது நேரத்தில் மறைந்தது — “இந்தக் குட்டி ரொம்ப அழகா இருக்கு, ஆன்ட்டி!” பக்கத்து வீட்டுக்கு வேலை நிமித்தம் வந்திருந்த தொழிலாளி கூறியபோது. வீட்டுக்கு வெளியே இருந்த செம்பருத்திச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த விமலிக்குப் பெருமை தாங்கவில்லை. “எந்த ஊரிலேருந்து வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள், மலாயில்.

    “வியட்நாம்!” என்று பதில் வந்தது. பிறகு, அவளுடைய அடுத்த கேள்வியை எதிர்பார்த்தவன்போல், “என் பேரு டாவ்!” என்று தெரிவித்தான். சோனியாக இருந்தான். ஆனால், கடினமான உழைப்பால் பெற்ற வலு கைகளில் தெரிந்தது.

    ரப்பர் குழாயிலிருந்து வெளிவந்த தண்ணீர் தன்மேல் தெறித்துவிடாமல் ஜாக்கிரதையாக, சற்றுத் தொலைவில் நின்று, வைத்த விழி வாங்காமல் எஜமானியம்மாளைப் பார்த்துகொண்டிருந்தது குட்டி.
    அதைப் பார்த்ததும் சிகரெட்டால் கறுத்திருந்த அவன் உதடுகள் சிரிப்பில் விரிந்தன. அதைத் தூக்கி அணைத்து, அதன் மென்மையான உடலை அருமையாகத் தடவிக்கொடுத்தான். “புசு புசுன்னு அழகா இருக்கு!”

    சில வாரங்கள் கடந்தன. டாவும் குட்டியும் நண்பர்களாகிப்போனார்கள்.

    “குட்டியைப் பாத்தீங்களா? நேத்து சாயந்திரத்திலேருந்து காணோமே! சாப்பிடக்கூட வரலே!” மனைவியின் கவலை தோய்ந்த குரலைக் கேட்டு நிமிர்ந்தார் க.நா.

    “பெரிசாப் போச்சில்ல? பாம்பு, தவளை எதையாவது பிடிச்சுத் தின்னிருக்கும்!” என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார். “தானே நாளைக்கு அதிகாலையில வந்து..,” சட்டென்று தன்னை அடக்கிக்கொண்டார். `மியாவ் மியாவ்னு கத்தி பிராணனை எடுக்கும், பாரு!’ என்று சொல்ல நினைத்ததைச் சொல்ல அவருக்கென்ன புத்தி மாறாட்டமா!

    ஆனால் மறுநாள் குட்டி வரவில்லை.

    இரண்டு நாட்களாகின. விமலியின் துயரம் ஆத்திரமாக மாறியது.

    “அந்த வியட்நாம் தடியன் குட்டிகிட்ட பாசமா இருக்கிறமாதிரி நடிக்கிறபோதே எனக்குச் சந்தேகம்தான்!” என்று பொரிந்தாள்.

    கெட்டவனுடைய உடல் எப்படி இருந்தால் என்ன? அவனைத் `தடியன்’ என்று திட்டியதும் மனம் சற்று சமாதானம் அடைந்தது.

    “அவன் எதுக்காக நடிக்கணும்?”

    “தெரியாதமாதிரி கேக்கறீங்களே! பஞ்சம் பிழைக்க மலேசியாவுக்கு வந்திருக்கிறவன்! சிக்கனும் மட்டனும் வாங்கக் கட்டுப்படியாகுமா? குட்டியோ கொழுகொழுன்னு இருக்கு!”

    “சீச்சீ!”

    பரிவுடன் அவன் குட்டியை அணைப்பதைப் பார்த்திருந்தவருக்கு அவள் சொல்வது அபத்தம் என்று பட்டது.

    `ஒரு வேளை, இவள் சொல்வதில் உண்மை இருக்குமோ?’ என்ற சந்தேகமும் உடன் எழாமலில்லை.

    `இந்தப் பூனையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு இனாம் தரப்படும்!’ என்று கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, தெருக்கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் துண்டுக் காகிதங்களின் ஒரே மாதிரியான வாசகம் நினைவில் எழுந்தது. சில சமயம், பூனை மட்டுமின்றி, அழகழகான நாய்களின் படங்களும் இருக்குமே!

    “விடு, போ! நாளைக்கு சனிக்கிழமை! லீவு! கடைக்குப் போய் அழகான பாரசீகப் பூனை வாங்கிக்கலாம்,” என்றார், சமாதானமாக.

    “எனக்கு குட்டிதான் வேணும்!”

    தாய்மை அடையாவிட்டால், ஒரு பெண் என்றுமே குழந்தைத்தனம் மாறாமல் இருந்துவிடுவாளோ என்று அவரது எண்ணம் ஓடியது.

    மறுநாள் காலை ஒன்பது மணிக்குச் சாவகாசமாகத் தூங்கி எழுந்த க.நா., பக்கத்து வீட்டிலிருந்து பெரிய இரைச்சல் கேட்க, வாசலுக்கு விரைந்தார்.

    சிறிது பொறுத்து, வீடு திரும்பியவர் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள். அவைகளை வெளியில் கொட்ட மனைவியைத் தேடி சமையலறைக்கு வந்தார். “ஒன்னோட குட்டியைத் தூக்கிவெச்சுட்டுக் கொஞ்சுவானே! அந்த வியட்நாம்காரன் அரைகுறையாக் கட்டியிருந்த மாடி பால்கனியிலேருந்து விழுந்துட்டான்!”

    நறுக்கிக்கொண்டிருந்த கீரையை அப்படியே வைத்தாள் விமலி. அவர் சொல்ல வந்தது இன்னும் சுவாரசியமாக இருக்கும்போலிருந்தது. “உசிரு போயிடுச்சா?” ஆவலுடன் கேட்டாள்.

    “சரியான அடி! வலி தாங்காம துடிக்கிறான், பாவம்! `ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போடா’ன்னு நான் மேஸ்திரிகிட்ட சொல்றேன், அவன், `அதெல்லாம் வேணாம், ஸார். சும்மா மசாஜ் செஞ்சா சரியாப்போயிடும்!’ அப்படிங்கிறான்”.

    கணவர் எவனோ ஒருவனுக்காக அவ்வளவு உணர்ச்சிவசப்படுவது அவளுக்கு அலுப்பாக இருந்தது.

    க.நா. தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார்: “அந்த ஆள் சட்டபூர்வமா இங்க வரலியாம். அதனால அவனை வேலைக்கு வெச்சிருந்த குத்தத்துக்காக இந்த மேஸ்திரியைத் தண்டிப்பாங்க. கொஞ்சமா கூலி குடுத்து, நிறைய வேலை வாங்கலாமேங்கிற பேராசை இவனுக்கு. சீனவங்க புத்தியைக் காட்டிட்டான்!” யார்மேலாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அவர்களுடைய இனத்தையே மொத்தமாகப் பழித்தால்தான் சிலருக்குத் திருப்தி.

    விமலிக்கும் திருப்தியாக இருந்தது. “என் குட்டியை வெட்டித் தின்னானே, படுபாவி! நான் எவ்வளவு துடிச்சிருப்பேன்! இப்போ அவனும் படட்டும்!” என்று சபித்தாள்.

    தன்னைப்போல ஓர் ஆணைப்பற்றி இவள் — என்னதான் மனைவியாக இருந்தாலும், ஒரு பெண் — தரக்குறைவாகப் பேசுவதா! க.நா.வின் ஆண்மை அவரை உசுப்பேற்றியது.

    “அவன் தின்னதைப் பார்த்தாப்போல பேசாதே, விமலி. சாப்பிட வழியில்லேன்னுதானே இப்படி சொந்தபந்தம் எல்லாரையும் விட்டுட்டு, நாடு விட்டு நாடு, இங்கே வந்திருக்கான்?” என்று கண்டித்தார். “இருபது முப்பது பேரோட ஒரே அறையிலே தங்கிக்கிட்டுத் திண்டாடறான், பாவம்!” மீண்டும் பரிதாபப்பட்டார்.

    அப்படியும் மனம் ஆறாது, “பூனைகிட்ட காட்டற பரிவில கொஞ்சமாவது இவங்கமேல இருக்கா ஒனக்கு?” என்று, அபூர்வமாக மனைவியை எதிர்த்தார், எதிர் விளைவுகளைப்பற்றி யோசிக்காது.

    இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை அற்ற நாட்கள் தொடர்ந்தன. அவரோ, அதைச் சற்றும் பொருட்படுத்தாது, மேஸ்திரியிடம் பேசிக்கொண்டிருந்தது அவள் காதிலும் விழாமல் போகவில்லை.
    அவனுடைய காலை வெட்டி எடுத்துவிட்டார்களாமே!

    `நன்றாக வேண்டும்!’ என்று கறுவினாள்.

    நள்ளிரவு.

    “மியாவ்!”

    விமலிக்கு உடனே விழிப்புக் கொடுத்தது. இந்த வேளையில் தனியாக வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போவதா! தனது கோபத்தை மறந்தவளாக, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பினாள்.

    “வாசல்லே பூனை கத்துது. நம்ப குட்டியாத்தான் இருக்கும். வாங்க, பாக்கலாம்!” என்று பெரிய எதிர்ப்புடன் மாடிப்படியின் கீழ் இறங்கி ஓடினாள்.

    இரவு வேளைகளில் வாசலில் போட்டிருக்கும் காலணிகளைக் களவாடுபவர்களைத் தவிர்க்கவெனப் போடப்பட்டிருந்த விளக்கு வெளியில் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது.

    அங்கே குட்டி மட்டுமில்லை, அதனுடன் இன்னொரு குட்டி, சிறிய பந்துமாதிரி!

    “இங்கே பாருங்களேன்! குட்டி அம்மாவா ஆகிடுச்சு!” பூரிப்புடன் விமலி கத்தியது அந்த நிசப்தமான இரவில் நாலைந்து வீடுகளுக்குக் கேட்டிருக்கும்.

    `இனிமேல் நம்மை எங்கே கவனிக்கப்போகிறாள்!’ என்ற சிறுபிள்ளைத்தனமான பொறாமையும் எழ, “அந்த வியட்நாம்காரனைச் சபிச்சியே!” என்று குத்திக் காட்டாமல் இருக்க முடியவில்லை க.நா.வால்.

    அவள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பெரிய குட்டி, சின்ன குட்டி என்று பெயர் வைக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்துபோனாள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (41)

    நிர்மலா ராகவன்

    தற்காப்புக் கலைகள்

    நலம்-2
    அந்தப் பையன் ஒரே படுத்தல்! இவ்வளவு மோசமாகவா வளர்ப்பார்கள்!’

    `பெண்ணா இது! ரொம்ப முரடு! எவன் மாட்டிக்கொண்டு திண்டாடப்போகிறானோ!’

    ஐந்தே வயதான குழந்தைகளுக்குக் கிடைத்த (வேண்டாத) விமர்சனங்கள் மேலே குறிப்பிட்டவை. குழந்தைகளும் பெரியவர்கள்போல் நடக்க வேண்டும் என்ற எதிர்ப்புதான் பிறரை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. `நல்லதற்குத்தானே சொல்கிறோம்!’ என்று அவர்கள் திருப்தி பட்டுக்கொண்டாலும், இத்தகைய ஓயாத கண்டனத்தால் குழந்தைகளை பலவீனர்களாக ஆக்குகிறோம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. அதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையும் கிடையாது. யாரோ பெற்ற குழந்தைதானே!

    அவரவர் குடும்பத்திலேயேகூட, தம் வயதுக்கேற்ப நடந்துகொள்வது சில குழந்தைகளுக்குப் பிரச்னையாக முடியலாம்.

    அம்மாவைப் படுத்துதல்

    எங்கள் உறவினர் குழந்தை அமெரிக்காவிலிருந்து என்னுடன் தொலைபேசியில் பேசினான். நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதே கிடையாது. இருந்தாலும், அவனுக்குத் தன் மனக்குறையை யாரிடமாவது சொல்லவேண்டும்போல இருந்தது போலும்!

    எடுத்த எடுப்பிலேயே, `நிம்மலா பாட்டி! அம்மா என்னைக் கோச்சுக்கறா!’ என்றான், வருத்தம் தோய்ந்த குரலில்.

    `நீ என்னப்பா பண்ணினே?’ என்று கேட்டதும், `படுத்தினேன்!’ என்றான் அந்த மூன்று வயதுக் குழந்தை.
    எனக்குச் சிரிப்புப் பொங்கியது.

    `படுத்தல்’ என்று பொதுவாகச் சொல்வது அதீத சுறுசுறுப்பான குழந்தை ஒன்றின் நடத்தையை. எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்பது குழந்தைகளின் இயல்பு.
    எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று புரியாததாலோ, `முக்கியம்’ என்று படும் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பதாலோ, பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அவனது இயற்கையான ஆர்வம் தவறு என்பதுபோல் திட்டுவார்கள், தண்டிப்பார்கள்.

    பல குழந்தைகளின் இயற்கையான ஆர்வம் தடைப்பட்டு, சற்றே மந்தமாகப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.

    சில சிமயம், வளர்ப்பு முறையால், அதாவது `அன்பு’ என்றெண்ணி பெரியவர்கள் பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்வது குழந்தைகளுக்கு எதிர்மறையான விளைவைத்தான் உண்டுபண்ணும்.

    `கடைசிக் குழந்தை (அல்லது ஒரே குழந்தை) என்று ரொம்ப செல்லம் கொடுத்ததில் தானாக எதுவும் செய்துகொள்ளத் தெரியவில்லை இவளுக்கு! சோம்பேறி!’

    குடும்பத்தில் கிடைக்காத கவனிப்பை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று சில சிறுவர்கள் பிற மாணவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும், தெரிந்தே தவறு செய்வதும் உண்டு. தவறு செய்தால் தண்டனை பெறும்போதாவது பிறர் கவனிக்கிறார்களே!

    பதின்ம வயதினருக்கு ஹார்மோன் மாற்றத்தால் அதிக சக்தி இருக்கும். தினசரி பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம் என்ற வாழ்க்கை சலிப்புதட்ட, தீய வழிகளில் மனம் செல்லும். பிறரை வீண்வம்புக்கு இழுக்கத் தோன்றும். `என்னைப் பாத்து ஏண்டா முறைக்கிறே?’ என்று காரணமே இல்லாது பிறருடன் சண்டைக்குப் போவார்களாம். (இப்படி நடந்துவந்த ஒரு மாணவன் பெருமையுடன் என்னிடம் தெரிவித்தது).

    எப்படிச் சமாளிப்பது?

    சுறுசுறுப்பான குழந்தையோ, பிறருடன் பழகத்தெரியாது வெட்கி ஒளிபவனோ, தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ள முயலாது பிறரது கையை எதிர்பார்ப்பவனோ அல்லது பிறரது கவனிப்பைத் தவறான வழிகளில் பெறத் துடிப்பவனோ இவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் வளர ஒரு சிறந்த வழி இருக்கிறது.

    தற்காப்புக் கலை

    அதிகபட்சமான சக்தியை நல்ல வழியில் செலுத்தும் வழி தற்காப்புக் கலையைப் பயிலுவது. ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் உடல் சோர்ந்து போகலாம். ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கும் உறுதி, அதை அடைந்தவுடன் கிடைக்கும் ஆனந்தம் இவைகளால் மனம் உற்சாகத்தை அடையும்.
    தற்காப்புக்கலை என்று பெயர்தான். கற்க ஆரம்பிக்கையிலேயே அநாவசியமாக இத்திறனைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. ஆனாலும், அவசியம் இருந்தால், தற்காத்துக்கொள்ளத்தானே வேண்டும்!

    கதை

    ஜூடோவில் முதல் பாடமாக, தன்னிடம் முறைகேடாக நடக்க முயலும் ஆணை எப்படி எதிர்ப்பது என்பதைக் கற்றாள் அப்பெண்.

    ஐந்து வருடங்களுக்குப்பின், அவளுடைய பதினேழாவது வயதில், ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்த ஒரு நகரில் ஒரு கயவன் அவளுடைய இடுப்பைப் பின்னாலிருந்து இரு கரங்களாலும் இறுகப் பிடிக்க, அவள் யோசிக்கவேயில்லை.

    திரும்பி அவனுடைய மர்ம பாகத்தில் ஓங்கி ஓர் உதை விட்டாளாம். அவன் அலறியபடி கீழே விழுந்தான். ஜூடோ போட்டிகளில் பரிசு பெற்றிருந்த அப்பெண் திரும்பிப் பாராது நடந்துவிட்டாள், அவனைச் சுற்றி ஒரு கும்பல் கூடியதைக் கண்டு திருப்தி அடைந்தவளாக.

    யாவரும் வெல்லலாம்

    பள்ளிக்கூடத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாக் குழந்தைகளும் வெற்றி பெற முடியுமா? ஆனால், ஜூடோ, கராத்தே, டேக்வான்டோ (Taekwando) போன்ற தற்காப்புக் கலைகளில் அவரவர் திறமைக்கு ஏற்ப முன்னேறலாம். எப்படியென்றால், வாராவாரம் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு வருடமாக, வெள்ளை, மஞ்சள் என்று வெவ்வேறு நிறங்களைக்கொண்ட இடுப்புப் பட்டியைப் பெறும் தகுதியை அடைகிறார்கள்.

    `முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!’ என்ற நிதரிசனம் ஒரு சிறுவனுக்குப் பெருமையை ஊட்டி, தன்னம்பிக்கையையும் வளரச் செய்கிறது.

    கதை

    சாங் என்ற பதினான்கு வயதுப் பையனுக்கு ஆடிசம். பிறருடன் பழகத் தெரியாது. தனி ஒரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பான். பிற பையன்கள் அவனை ஒரு கேலிப்பொருளாகக் கருதி, பலவாறாக வதைத்தனர்.

    அதைக் கண்ட ஆசிரியர் அவனை ஒரு கோடியில் உட்கார வைத்துவிட்டு, அவன் பக்கத்தில் தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்ற அர்ஜூனனை அமர்த்தினார். எதுவும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

    (கறுப்பு நிற இடுப்புப்பட்டி ஒருவன் தற்காப்புக்கலையில் நல்ல திறமையைப் பெற்றுவிட்டான் என்பதைக் குறிக்கும். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் இடைவிடாமல் மேற்பயிற்சி உண்டு. இந்தகையவர்கள் தமது ஆத்ம பலத்தைப் புரிந்துகொண்டுவிட்டதால், பார்க்க சாதுவாக இருப்பார்கள்).

    அர்ஜூனனது திறமையை பள்ளிக்கூட விளையாட்டுத் தினத்தன்று எல்லாருமே பார்த்து அயர்ந்திருந்தனர். `ஒரு கையால் மட்டும் கனமான மரக்கட்டையை ஒரே அடியில் சுக்குநூறாக உடைப்பவன் ஆயிற்றே! இவனுடன் மோதுவதா!’ என்றஞ்சி ஒதுங்கினர்.

    ஒரு பையன் மட்டும் அசட்டுத்துணிச்சலுடன் வம்புக்கு வந்துகொண்டே இருந்தான். ஒருவன் சாதுவாகத் தோற்றமளித்தால், வம்புக்கு இழுக்கும் உலகம் அல்லவா இது!

    அவனது தொல்லை பொறுக்க முடியாது போக, அர்ஜூனன் அவனுடைய மணிக்கட்டை இறுகப் பிடித்து ஒரு விதமாக அமுக்க, அப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பாராதவனின் முகம் அதிர்ச்சியாலும், உடல் வேதனையாலும் துடித்தது.

    அவன் கையை விட்டுவிட்டு, அமைதியாக, `So we understand each other!’ என்றானாம் அர்ஜூனன். மறைமுகமாக, `என் பலத்தைப் புரிந்துகொள்ளாது விளையாடாதே!’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறான்.

    `சமயம் வரும்போது நம்மையும் காப்பான்!’ என்ற நம்பிக்கை பிறருக்கு வந்துவிட, அதற்குப் பிறகு யாரும் அவனுடன் மோதவில்லை. ஆடிசத்தால் பாதிக்கப்பட்ட பையன் சாங் நிம்மதியாக இருக்க முடிந்தது.

    அர்ஜூனன் செய்ததுபோல், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க முடியும் என்ற உண்மை நிலை புரியும்போது, ஒருவன் தன்னுடைய சக்தியை உணர்கிறான். அமைதியாக எந்த பிரச்னையையும் அணுக முடிகிறது.

    மேலும் பல பலன்கள்

    யாருமே, `தற்காப்பு பயில்வது கடினம். என்னால் முடியாது!’ என்று அரைகுறையாக விலகி விடுவதில்லை.

    சுமார் நான்கு ஆண்டு தற்காப்புப் பயிற்சிக்குப்பின், குஸ்தியைப்போல இருவர் ஒருவரோடு ஒருவர் மோதுவர் (Sparring). ஆரம்பத்திலும், இறுதியிலும் தலை குனிந்து எதிராளியை வணங்குவர். பிறரை மதிக்கும் குணமும், நியாயமாகப் போராட வேண்டும் என்ற தன்மையும் வளர்கின்றன. அத்துடன், தன்னைவிடப் பெரிய உருவமோ, மிகுந்த பலமோ உடைய ஒருவனைக்கூட வீழ்த்தமுடியும் என்ற நிதரிசனம் புரிய, தன்னம்பிக்கை பெருகிறது. வீண் கர்வம் ஒழிகிறது.

    பல காலம் இடைவிடாது கடுமையாக உழைத்து பயிற்சி செய்து முன்னேறி இருப்பார்கள். அதனால், நன்கு உழைத்தால் எதிலும் பலன் கிடைக்கும் என்று தோன்றிப்போகிறது. தம்மை ஒத்த பலருடன் விட்டுக்கொடுத்துப் பழகும் குணம் வருகிறது.

    சாப்பிடப் பிடிக்குமா?

    பதின்ம வயதினருக்கு, முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு, உடல் வெகுவாக வளர்வதால், அப்பருவத்தில் உணவில் விருப்பம் அதிகரிக்கும். அளவு தெரியாமல் சாப்பிடுவார்கள். உடல் பருமனால் என்னென்னவோ உபாதைகள்!

    தற்காப்புக்கலை பயிலும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும் உடலில் சதை போடாது. அதனால் அவர்கள் ஆசைதீர சாப்பிட முடியும். (அளவுக்கு மீறி குண்டானால், `மாஸ்டர்’ கண்டித்துவிடுவார்). சில ஆண்டுகளில், தசைநார்கள் மெல்லியதாக, ஆனால் உறுதியாக ஆகும். அதனால், உடல் வலு, விரைவு, எதையும் தாங்கும் மன உறுதி போன்ற நல்ல `பக்கவிளைவுகளும்’ உண்டு.

    பிறரை நாம் அடிக்கும்போதோ, அடி வாங்கும்போதோ, அதை எப்படித் தடுப்பது என்று கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? இந்தப் பயிற்சியால் செறிவுடன் (Concentration) எதையும் செய்வது பழகிவிடுகிறது. கால் தடுக்கினாலும் கீழே விழாமல் சமாளிக்க முடியும்.

    பெரியவர்களுக்கு

    நான் பார்த்த டேக்வான்டோ வகுப்பில், ஒரு சிறுவனுடன் அவனுடைய தந்தையும் கற்க ஆரம்பித்தார்.
    `முன்பெல்லாம் என் மகனுக்குப் பிறருடன் பழகத் தெரியாது. இப்போது தன் வயதை ஒத்தவர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகுகிறான். பள்ளிக்கூடப் பாடங்களிலும் முனைப்பு அதிகமாகி இருக்கிறது!’ என்றார்.

    வேலைப்பளுவால் அவருக்கு ரத்த அழுத்தம் இருந்தது. போதிய பயிற்சி இல்லாததால் உடல் பருமனாகியது. எப்போதும் அயர்ச்சியாக இருந்ததாம்.

    `இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. உடலை வளைத்து, முன்பைவிட நிறைய காரியங்கள் செய்ய முடிகிறது!’ என்றார் மகிழ்ச்சியுடன். `என் மகன் மூன்றாவது. நான் முதல் வகுப்புதான்! ஆறு வயதுப் பையன்களுடன் சரிசமமாகக் கற்பது நானும் சிறுவனாகிவிட்டதுபோல் இருக்கிறது!’ என்று சிரிக்கிறார்.

    நம் வாழ்க்கையைச் சரியான பாதையில் செலுத்த வயது ஒரு பொருட்டா என்ன?

    தொடருவோம்

    Share
  • பரம்பரை பரம்பரையாக

    நிர்மலா ராகவன்

    கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவியது — வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர் படர்ந்தாற்போல்.

    அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த முக்காலிமேல் சுடுநீர் போத்தல், கோப்பை, `டிஷ்யூ’ பேப்பர். கீழே குப்பைக்கூடை. அந்தச் சிறிய அறை மலிவானதொரு ஆஸ்பத்திரியை நினைவுபடுத்தியது.

    அவளது கட்டிலின் மேல் அமர்ந்துகொண்ட முகுந்தன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான்.
    “பிள்ளை போனாப் போகட்டும்! ஒனக்கு ஏதாவது ஆகியிருந்தா! ஐயோ!”
    தன்மேல்தான் கணவருக்கு எவ்வளவு அன்பு! வேணிக்குப் பெருமிதமாக இருந்தது.

    `புருஷன் வீட்டிலே எல்லாரையும் அனுசரிச்சுக்கிட்டுப் போகணும், வேணி. வீட்டில நடக்கிறது எதுவும் நாலு சுவத்துக்குள்ளதான் இருக்கணும். எல்லாத்தையும், எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்காதே!’ திருமணம் ஆவதற்குமுன் அம்மா அளித்த அந்த உபதேசம் அனாவசியம் என்று தோன்றியது.

    கணவரைப்பற்றி தப்பாகச் சொல்ல என்ன இருக்கிறதாம்!

    எங்கிருந்தோ வந்த பெண், ஒருநாள் கூத்தில் தன்னை வாழ்நாள் முழுவதும் அவனுடன் இணைத்துக்கொண்டு, அதற்காகவே இப்பிறவி எடுத்ததுபோல் நடந்துகொண்டது முகுந்தன் தன்னைப்பற்றிக் கொண்டிருந்த மதிப்பை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியது.

    `ஆண் என்பவன்தான் எவ்வளவு மேலான பிறவி!’ என்று தோன்றிப் போயிற்று. தன் மனைவி, இதிகாச புராசங்களில் வரும் ரிஷிபத்தினிகள் மாதிரி தன் தேவைகளை எப்படி குறிப்பாலேயே நிறைவேற்றுகிறாள், எப்படித் தன் வாக்கையே வேதமாக எடுத்துக் கொள்கிறாள் என்று நண்பர்களிடம் பெருமை அடித்துக்கொண்டான்.

    அவர்களும், `ஒனக்கென்னப்பா! நீ கிழிச்ச கோட்டைத் தாண்டாத மனைவி! இப்படி அமைய புண்ணியம் பண்ணியிருக்கணும்,’ என்று மேலும் உசுப்பேற்றினார்கள்.

    அதிகாரமே அது ஒரு போதையாக, மனைவிக்கும் ஒரு மனம் இருக்கும், உணர்ச்சிகள் இருக்கும் என்பதெல்லாம் அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. வேணியும் கணவன் எப்படி ஆட்டுவித்தாலும், அதை பெரிதுபடுத்தாது அமைதியாக ஏற்றுக்கொண்டாள்.

    அவளுக்குக் குறைப்பிரசவம் ஆனது தன்னால்தான்; அவளது உடல்நிலையைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காது, தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் வளைந்து கொடுத்ததுதான் என்ற குற்ற உணர்வு அலைக்கழைக்க, அவளிடம் அன்பைப் பொழிவதுபோல் நடந்துகொண்டான் முகுந்தன்.
    உடல் தேறி, வேணி மறுபடியும் நடமாட ஆரம்பித்ததும், பழைய நிலை திரும்பியது. அவள் செய்தது எல்லாமே குற்றமாகப் பட்டது. ஓயாமல் அவளை விரட்ட ஆரம்பித்தான்.

    திடீரென கிடைத்த கணவரின் அன்பும், பரிவும் மாறியது ஏன் என்று வேணிக்குப் புரியவில்லை. அடிக்கடி ஆரோக்கியம் கெட்டது. அப்போதாவது கணவனின் அன்பு திரும்பாது?

    முகுந்தனுக்கோ, ஆத்திரம்தான் எழுந்தது. “அப்பவே எல்லாரும் தலைபாடா அடிச்சுக்கிட்டாங்க, ஒனக்கு இந்தப் பொண்ணு ஏத்ததே இல்லடான்னு. அதைக் கேட்டிருந்தா, இப்படி ஓயாம பொண்டாட்டிக்கு நர்சா ஆகவேண்டி இருக்குமா? வெளியழகைப் பாத்து மயங்கினதுக்கு எனக்கு நல்லா வேணும்!’ என்று அவன் தலையில் அடித்துக்கொண்டபோது, வேணிக்கு அவமானமாக இருந்தது.

    “என்னமோ, இப்பத்தான் இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணா வருது. கல்யாணத்துக்கு முந்தி நல்..லா இருந்தேன்!’ என்று ஈனஸ்வரத்தில் அவள் பதிலளித்தது அவனுடைய ஆத்திரத்தை அதிகரித்தது. “ஒன்னை என்ன, இங்க பட்டினி போட்டுக் கொல்றாங்களா?” என்று கத்திவிட்டு, “என்னை மாதிரி ஒரு நல்ல புருஷன் கிடைக்க நீ குடுத்து வெச்சிருக்கணும், தெரிஞ்சுக்க!” என்றபடி நகர்ந்தவனையே பார்த்தபடி இருந்தாள் வேணி. பணிவுக்குப் பதில் இப்போது அவனிடம் பயம் வந்தது.

    பாட்டியும், அத்தையும் அடிக்கடி அவளது நினைவில் வந்து போனார்கள்.

    `ஒங்க தாத்தாவுக்கு ஊரறிய நானும், இன்னொருத்தியும். அதைத் தவிர, பேட்டைக்கு ஒருத்தி. இதையெல்லாம் நான் பெரிசு பண்ணியிருந்தா, ஆறு பிள்ளைங்களை என் ஒருத்தியால எப்படி வளர்த்திருக்க முடியும்! பிச்சை எடுக்கத்தான் போயிருக்கணும்!’ என்று, தினம் ஒரு முறையாவது பாட்டி தன் பத்தினித்தனத்தை நிலைநாட்டிக் கொள்வாள்.

    இந்தமாதிரி நீதி போதனைகளைக் கேட்டு வளர்ந்திருந்த அத்தையோ, கட்டியவரின் சூதாட்டத்துக்கும், பெண் பித்துக்கும் கேட்டபோதெல்லாம் தயங்காது நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, அதற்குப் பரிசாக காம நோயைப் பெற்றுக்கொண்டவள். கணவர் அவளை அதிகம் சோதிக்காமல், அல்பாயுசில் போனபிறகு, அண்ணன் வீட்டுக்கே நிரந்தரமாக வந்துவிட்டிருந்தாள். தான் வாழ்ந்த விதம்தான் பெண்களுக்குப் பெருமை தேடித் தரும் என்பதுபோல், பிறருக்கும் உபதேசிக்க ஆரம்பித்தாள்.

    சிறு வயது முதலே அப்பெண்கள் இருவரும் ஓயாது பேசியதைக் கேட்டு வளர்ந்திருந்த வேணிக்கு, முதன்முறையாகச் சந்தேகம் வந்தது.

    கணவரைப் பிற பெண்களுடன் பங்கு போட்டுக்கொள்ள நேரிட்டதுபற்றி பாட்டிக்குக் கொஞ்சமேனும் வருத்தமோ, கோபமோ இருந்திருக்காதா?

    அத்தை மட்டுமென்ன! `நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்போது, மற்றவர்கள் மட்டும் ஏன் நன்றாக இருக்கவேண்டும்?’ என்ற வயிற்றெரிச்சலில்தான் தன்னை தியாகத்தின் சின்னமாகக் காட்டிக்கொண்டாளோ?

    படுத்தபடி ஓயாது யோசித்ததில், வேணிக்கு ஒன்று மட்டும் புரிந்தாற்போலிருந்தது. தங்கள் வாழ்க்கை மகிழ்வானதாக இல்லை என்று எவருமே ஏற்க விரும்புவதில்லை. அது தமது தோல்வியை ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே!

    பிற பெண்களும் இன்னல் அனுபவிப்பதை உணர்கையில், பாட்டி, அத்தை போன்ற பெண்களுக்கு தங்கள் கட்சி பலம் அடைந்துவிட்டதைப்போல ஒரு அல்ப சந்தோஷம். `பெண்ணாகப் பிறந்தாலே இப்படித்தான்!’ என்று நியாயம் கற்பிக்க முடியுமல்லவா!

    முகுந்தன் வேலை முடிந்து, வீடு திரும்பும் வேளை.

    `இன்று எதற்காக என்னிடம் ஆத்திரப்படப்போகிறாரோ!’ இருந்தாற்போலிருந்து, வேணிக்குப் படபடப்பாக இருந்தது. மூச்சு இளைத்தது.

    அந்த நிலையிலும் ஒரு தெளிவு: மனத்தின் இறுக்கத்திற்குக் காரணம் புரிந்தது.

    `கட்டினவன் சொன்னதுக்காக, நெருப்பிலகூட குதிச்சதாலதானே ராமாயணக் காலத்திலேருந்து இப்போவரைக்கும் சீதாவைக் கொண்டாடறாங்க!’ அசரீரிபோல் பாட்டியின் குரல் ஒலித்தது.

    அலட்சியமாக உதடுகளைச் சுழித்தாள் வேணி. ஸ்ரீராமச்சந்திரமூர்த்திமாதிரி கணவன் அமைந்தால் அப்படி நடக்கலாம்!

    மருந்து போத்தல்களைத் திரட்டி வீசினாள். பக்கத்திலேயே இருந்த குப்பைக்கூடையில் அவை ஐக்கியமாயின. சில உடைந்து, பல்வேறு நிறங்களில் திரவப்பொருட்கள் ஒழுகின.
    வேணி சிரிக்க ஆரம்பித்தாள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (40)

    நிர்மலா ராகவன்

    இடக்கைப் பழக்கம்
    தவறான போதனை?

    நலம்-2-1-1-1-1
    பண்டைய ரோமாபுரி ஆட்சி காலத்திலிருந்தே இவ்வுலகம் வலது கைப்பழக்கம் கொண்டவர்களுக்காகவே இயங்குகிறது.

    நூற்றில் பத்துபேருக்கும் குறைவானவர்கள்தாம் இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள். இவர்களால் உலகை எதிர்க்க முடியுமா? ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை.

    `நாம் பிறருக்கு எதைக் கொடுக்கும்போதும், அவர்களிடமிருந்து வாங்கும்போதும், வலது கையைத்தான் பயன்படுத்த வேண்டும்,’ என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்படுகிறது. ஆசிர்வதிக்கும்போதும் வலது கைதான். இதையெல்லாம் மத சம்பந்தமானதாக ஆக்கிவிட்டார்கள் — இதனால் விளையும் குழப்பங்களைப் புரிந்துகொள்ளாது.

    கதை :

    `வலது கைதான் உயர்த்தி!’ என்று கதாகாலட்சேபங்களில்கூட நான் அடிக்கடி கேட்டதால், இடது கையை உபயோகிப்பது என்னமோ பாபம் என்ற மனப்பான்மை சிறுவயதிலேயே தோன்றிவிட்டது. அதை உபயோகிப்பதைக் கூடியவரை தவிர்த்தேன். நாளடைவில், ஒரு கோப்பையைக்கூட இடது கையால் தூக்க முடியவில்லை — உபயோகிக்கப்படாததால், அவ்வளவுதூரம் வலுவிழந்திருந்தது.
    நாற்பது வயதுக்குமேல் சுயமாக நீச்சல் கற்க ஆரம்பித்தபோது, `உடல் ஒரு பக்கமாக சாய்கிறதே!’ என்று ஒருவர் விமர்சிக்க, மிகவும் பிரயாசைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இடது கரத்தை நீட்டப் பழக்கினேன். ஒரே வலி.

    இயற்கை நமக்கு இரண்டு கரங்கள் கொடுத்திருப்பது ஒன்றை மட்டும் உபயோகிக்க இல்லை என்று புரிந்தது.

    கதை

    என் மகள் இடது கைப்பழக்கம் இயற்கையாக, கருவிலேயே, அமையப் பெற்றவள். அவளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எங்கள் வீட்டில், `சாமிக்குப் பூ போடு!’ என்று நான் ஓர் அபிநயம் கற்றுக்கொடுக்க, `இடது கையால போடறா!’ என்று யாரோ வியந்தபோதுதான் நானே அதை உணர்ந்தேன்.

    பாலர் பள்ளிக்கு அனுப்பியபோது, அங்கிருந்த ஆசிரியை அவளை ஒரேயடியாக மிரட்டி, வலது கையால் எழுதச் சொல்லியிருக்கிறார். அது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் சுபாவத்தின்படி, அவளுக்கும் தன் குழப்பத்தை, அவதியை, வெளியில் சொல்லத் தெரியவில்லை.

    முதல் வகுப்பு படிக்கும்போது, எதையுமே குறித்த காலத்திற்குள் எழுதத் தெரியவில்லை என்று பள்ளியிலிருந்து வீட்டுக்குத் தகவல் வந்தது. நெடுநேரம் விசாரித்தபோது, `என்னால எழுத முடியலே!’ என்று கதறினாள்.

    அவளது இடக்கையைத் தூக்கி, `இந்தக் கை முடியுமா? உனக்கு எப்படி சௌகரியமாக இருக்கிறதோ, அப்படி எழுது!’ என்று நானும் என் கணவரும் அனுசரணையுடன் கூற, அவளுடைய அழுகை பலத்தது.
    `இடது கையால எழுதறது ஒண்ணும் தப்பில்லே,’ என்று ஆதரவளித்தேன். `டீச்சர் ஸ்டுபிட்!’
    வருட இறுதியில் வகுப்பில் முதல் மாணவியாக வந்தாள்.

    இப்போது, சாப்பிடுவதைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களும் இடது கையால்தான் செய்கிறாள். துரிதமாகச் செய்ய முடிகிறது.

    எதிர்விளைவுகள்

    ஒரு பூட்டைத் திறப்பதோ, மூடியிருக்கும் பாட்டிலைத் திறப்பதோ இடது கையால் முயலுவது முதலில் கடினமாக இருக்கும். கத்தரிக்கோலை உபயோகிப்பதுதான் இம்மாதிரியானவர்களுக்கு மிகக் கடினமானதாம்.

    அப்போதெல்லாம், `என்னால் ஏன் எதுவும் எளிதாகச் செய்ய முடியவில்லை?’ என்று வருத்தமோ அல்லது ஆத்திரமோ எழும். தான் ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவன் என்ற அவமானமும், குற்ற உணர்வும்கூட உண்டாகலாம்.

    `முடியாததை ஏற்க வேண்டியதுதான்!’ என்று சிலர் மிகுந்த பொறுமைசாலிகளாக ஆகிறார்கள். வேறு சிலர், `எல்லாமே நமக்கு எதிராக இருக்கிறதே!’ என்று எளிதாக ஆத்திரத்துக்கு உள்ளாகிறார்கள்.

    கதை

    மூன்று வயதிலேயே பாபு என்ற சிறுவன் எல்லாவற்றிற்கும் இடது கையை நாட, அவனுடைய தாய் மாமன் ஒரு கனமான பூட்சை அணிந்து, அக்கையை மிதிப்பார், `இது என்ன கெட்ட பழக்கம்! இனிமே இதை உபயோகிப்பாயா?’ என்று மிரட்டியபடி.

    `நான் செய்வது எல்லாமே ஏன் தவறாகப் போகிறது?’ என்ற குழப்பம் அக்குழந்தைக்கு ஏற்பட்டது. அளவற்ற அச்சமும், ஆத்திரமும் கொண்டு வளர்ந்தான். வலது கையால் எழுதும்போது தெளிவாக இருக்கவில்லை. எழுதுவதே பிடிக்காமல் போயிற்று.

    வளர்ந்தபின், யாராவது அவனிடம் ஏதாவது தப்பு கண்டுபிடித்து விட்டால் ருத்ரத் தாண்டவம்தான்.
    தான் சிறுவயதில் பட்ட துயரத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள, பாபுவிற்குச் சற்று தெளிவு உண்டாயிற்று. தான் செய்வது எல்லாமே தவறில்லை, அறியாக் குழந்தையிடம் வன்முறை பிரயோகித்த மாமாதான் உண்மையாகவே தவறிழைத்திருக்கிறார் என்று புரிந்தது.

    எல்லாம் நன்மைக்கே

    சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டான் பாபு. அநாவசியமான குற்ற உணர்வும், ஆத்திரமும் சற்று அடங்கின. டென்னிஸ், குத்துச்சண்டை எல்லாம் விரும்பிப் பயின்றபோது, வலது கைப்பழக்கம் கொண்ட எதிராளியை வீழ்த்துவது எளிதாக இருந்தது. `என்னால் சில காரியங்கள் இவர்களைவிடச் சிறப்பாகச் செய்யமுடியும்!’ என்ற பெருமிதம் உண்டாயிற்று.

    இடது கைப்பழக்கம் ஒரு விதத்தில் பெரிய நன்மை. அக்கரம் ஒன்றால் மட்டும் 3,400 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய முடியும். அதுவே, வலக்கையை மட்டும் பயன்படுத்தினால், நானூற்று ஐம்பது வார்த்தைகளை மட்டுமே தட்டச்சு செய்ய இயலுமாம்.

    தாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் வித்தியாசமான முறையில் அலசுவார்கள் இவர்கள். அதனால், பிறருக்கு இவர்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. சதுரங்க விளையாட்டில் இது மிகுந்த நன்மையை அளிக்கும்.

    கலைநயம்

    இடது கரப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் வலப்புறம் நன்கு செயல்படுவதால், அவர்கள் கலைநயம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். படிப்பது, கேட்பது எல்லாவற்றையும் காட்சியாகப் பார்க்கும் திறன் அமைந்திருப்பதால், சித்திரம் வரைவதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உதாரணம்: லியானார்டோ டாவின்சி, மைக்கலேஞ்சலோ.

    (என் மகள் வசதி குறைந்த மாணவிகளுக்காக நடத்தும் பரதநாட்டிய வகுப்பில் பெரும்பாலான மாணவிகள் இடக்கைப் பழக்கம் அமைந்தவர்கள். பல சமூக சேவகிகள் இவர்களுக்கு தமிழோ, இசையோ கற்றுக்கொடுக்க முன்வந்து, `இவர்களால் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை! முட்டாள்கள்!’ என்று பின்வாங்கி விட்டனராம் — அப்பெண்களில் ஒருத்தி தொலைகாட்சியில் தெரிவித்த சமாசாரம். `இந்த ஒரு டீச்சர்தான் எங்களைக் கைவிடவில்லை,’ என்று நன்றியுடன் குறிப்பிட்டாள்).

    ஜீனியஸ்!

    நாளடைவில், இயற்கையாக அமைந்த வலது பக்க மூளைத்திறனுடன், இவர்களும் 70% இடது பக்க மூளையைப் பயன்படுத்தப் பழகிவிடுகிறார்கள். இதனால் அறிவுக்கூர்மை மிகுந்து விடுகிறது.

    `இருபது வயதுவரைக்கும் திண்டாட்டமாக இருக்கும். அதன்பின், வலது கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலக வழக்கத்தைப் புரிந்துகொண்டுவிடுகிறோம். அதனால், எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாவிதப் பிரச்னைகளையும் எதிர்கொள்ள முடிகிறது,’ என்கிறார் ஒருவர்.

    தொடருவோம்

    Share
  • காத்திருந்தவன்

    -நிர்மலா ராகவன்

    “சங்கர் முந்திமாதிரி இல்லேம்மா. சிடுசிடுங்கிறாரு!”

    சங்கரை அனுபமா தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியபோது, தான் உண்மையை மறைக்காது  சொன்னது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது! காமாட்சிக்கு நிம்மதிப் பெருமூச்சுதான் வந்தது.

    ‘இவங்கப்பா காண்ட்ராக்டில வீடு கட்டற தொழிலாளியா இருந்தவரு. வேலை பாக்கிறப்போ ஒரு விபத்திலே போயிட்டாரு,’ என்று ஆரம்பித்து, வயிற்றுப் பிழைப்புக்காகத் தான் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை அப்போதே தெரிவித்திருந்தாள்.

    அனுபமாவின் அழகில் கிறங்கிப் போயிருந்தவனுக்கு அந்தஸ்து வித்தியாசம் ஒரு பொருட்டாகப் படாது என்று தான் எண்ணியது பொய்த்துவிட்டதே! இப்போது இவளால் தன் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள முடியாது என்று புரிந்துபோனதும், கழற்றிவிடப் பார்க்கிறானா!

    “விடுடி. ஏதோ, காதல், கீதல்னு நீதான் பேத்திக்கிட்டு இருந்தே! இப்பவாச்சும் புரிஞ்சுதா?” என்று மகளைச் சமாதானப்படுத்த முயன்றாலும், அத்தாயின் மனது துடித்தது.

    அடுத்த காரியத்தில் இறங்கினாள். “அமெரிக்காவில இருக்கிற அந்த டாக்டர் ஒன்மேல ஆசைப்பட்டு, வலிய வந்து கேட்டான். நீதான் பிடிகுடுத்துப் பேசல. இப்ப என்ன சொல்றே?”

    அனுபமாவுக்கும் அம்மா சொன்னபடி கேட்பதுதான் புத்திசாலித்தனம் என்று தோன்றிப்போயிற்று. ‘நீ சமையல்காரி மகள்தானே!’ என்று நாளைக்கே கொடுமைப்படுத்தி விட்டால்?

    எப்போதும் தன்னைப் புகழ்ந்தபடியே இருந்தபோது தேவைப்பட்ட காதலனுடைய இன்னொரு முகம் தெரிந்தபோது, அதை ஏற்கும் துணிவிருக்கவில்லை அவளுக்கு.

    “நான் என்ன செய்ய முடியும், சங்கர்? எனக்காகவே வாழறாங்க அம்மா. அவங்க காட்டற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட வேண்டியது  கடமை இல்லையா?” என்று வசனம் பேசி, துளிக்கூட சலனமில்லாது,  மூன்று வருடப் பிணைப்பைத் துண்டித்துக்கொண்டாள்.

    `இப்பவே இந்தக் கழுத்தை நெரிச்சுப் போட்டுடறேன். அப்புறம் எப்படி இன்னொருத்தனுக்கு அதை நீட்டுவே, பாக்கலாம்!’ துடித்த கரங்களையும், மனத்தையும் அடக்கினான் சங்கர்.

    “வாழ்த்துகள்! கோடீஸ்வரியா மேல்நாட்டிலே வாழப்போறே! அப்போ இந்த ஏழையை எப்பவாவது நினைச்சுப் பாத்துக்க!” அடைத்த குரலில் சொல்லிவிட்டு, தலையை அதீதமாகக் குனிந்தபடி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

    எத்தனை, எத்தனை கனவுகள்! எல்லாவற்றையுமே இல்லை குலைத்துவிட்டாள்!

    (நாம்ப ரெண்டு பேருமே நல்ல அழகு. இல்லே, அனு? நான் பகுதி நேர மாடல். நீ — கல்லூரியின் அழகு ராணி. நமக்குப் பிறக்கிற குழந்தையை அழகுப் போட்டிக்கு அனுப்பணும்!)

    அழகாவது, மண்ணாவது!

    அனுவின் பாராட்டுக்கென பார்த்துப் பார்த்து வளர்த்த மீசையையும், கிருதாவையும் வெறுப்புடன் பார்த்தான்.

    தோற்றத்தில் கவனம் குறைய, அது வேறு திசையில் திரும்பியது.

    என்னதான் படித்துப் பட்டம் வாங்கிவிட்டாலும், யோசிக்காமல் செலவழிக்க முடியாத தன் நிலையை எண்ணி, தன்னைத்தானே பார்த்துப் பரிதாபப்பட்டுக்  கொண்டான்.

    மகனைப் பார்த்து லட்சுமி கலங்கினாள். “முப்பத்தி மூணு வயசு ஆகிட்டதேடா. இப்ப இல்லாம, எப்ப கல்யாணம் செய்துக்கப்போறே?” என்று அரற்றினாள்.

    “எல்லாப் பொண்ணுங்களுக்கும் பணம்தாம்மா பெரிசு! அதான் ரெண்டு எடத்திலே வேலை பாத்து, குருவிபோல பணம் சேக்கறேன்!” தன்னை அழகால் மயக்கி, ஏமாற்றிய அனுபமாவைப்பற்றித் தாயிடம் தெரிவித்தான்.

    “நல்ல பிள்ளைடா, நீ! இதுக்காகவா சாமியார் வேஷம் போட்டே? அந்தமாதிரி பணப்பிசாசோட குடும்பம் நடத்தினா, நல்லாவா இருந்திருக்கும்? அட, இந்தப் பொண்ணு இல்லாட்டி, ஒலகத்திலே வேற பொண்ணே கிடையாதா?”

    சங்கர் சமாதானமடையவில்லை என்பதை அவன் தளர்ந்த உடலே காட்டிக்கொடுத்தது.

    விடாப்பிடியாகத் தாய் தொடர்ந்தாள்: “இந்தமட்டும் காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விட்டுச்சேன்னு கடவுளுக்கு ஒரு கும்பிடு போடுவியா! என்னமோ.., தேவதாஸ் கணக்கா ஆடறியே!”

    அவனுக்காக ஏதேதோ கூறினாலும், லட்சுமியின் மனமே ஆறுதல் அடையவில்லை.

    தன் மகனை ஒரு பெண் புறக்கணிப்பதா?

    வர வர, காலம் ரொம்பத்தான் கெட்டுவிட்டது. முன்பெல்லாம், `இதோ, இவர்தான் உன் புருஷன்!’ என்று கைகாட்டுவார்கள் பெரியவர்கள். முன்பின் தெரியாதவருடன், அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், சேர்ந்து வாழவில்லை நாங்களெல்லாம்?

    போகிறது! ஏதோ சிறு பெண். பகட்டுக்கு ஆசைப்பட்டிருக்கலாம். அவளுடைய தாய்க்கு புத்தி எங்கே போயிற்று? பெண்ணைக் கண்டித்து இருக்க வேண்டாம்?

    இப்போதிருக்கும் பெண்களுக்கு வெட்கம், மானம் எதுவும் கிடையாது. நாலு பேர் பார்க்க கைகோத்துக்கொண்டு, கண்டவனுடன் ஊர் சுற்றுவது, அவன் அலுத்தவுடன் வேறு ஒருத்தனை தேடிப்போவது! சீ!

    தான் பார்த்தேயிராத அனுபமாவின்மேல் துவேஷத்தை வளர்த்துக்கொண்டாள் லட்சுமி. மகனைத் தன்னிடமிருந்து பிரிக்கப் பார்த்தவள் என்ற குரோதமும் அதில் கலந்திருந்தது.

    மகனும் தன்னைப்போல் அவளை வெறுக்கத் தொடங்கியிருப்பான் என்று நம்பியிருந்தவளை அயரவைத்தான் சங்கர்.

    “அம்மா! இன்னிக்கு அனுவைப் பாத்தேன். அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே!” அவன் முகத்திலிருந்த பரவசம் அவளுக்கு ஆத்திரமூட்டியது.

    “அதைப்பத்தி நமக்கென்ன! ஒன்னை `வேணாம்’னு திமிராப் போனவ இல்லே! அவ பேச்சு இனிமே எதுக்கு?”

    சங்கருக்கு இருந்த மனநிலையில் தாயின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    “அந்தப் பணக்காரன் இருந்தானே, அவனுக்குக் குணமோ, அழகோ கிடையாதாம். அனு எங்கிட்ட, `அந்த ஆளு ஒங்க கால்தூசுகூட பெற மாட்டாரு, சங்கர்!’ அப்படின்னு அழமாட்டாக்குறையா சொன்னா!”

    “இப்பத்தான் புத்தி வந்திச்சாமா?”

    “கேளுங்களேன்! அவனோட காதலிங்களைப்பத்தி இவகிட்டேயே அளந்திருக்கான். இவ கலங்கிப்போயிருக்கா, பாவம்! `அங்க இதெல்லாம் சகஜம்! படிச்ச பொண்ணுங்கிறே, நீ என்ன இப்படி பத்தாம்பசலியா இருக்கியே!’ன்னு கேலி செஞ்சானாம்!”

    “இப்போ அவனையும் விட்டுட்டு நிக்கறாளா?” லட்சுமியின் குரலிலிருந்த ஏளனத்தை அவன் கவனிக்கவில்லை.

    “அதுவும் நல்லதுக்குத்தான். இல்லேம்மா? `நம்ப ரெண்டு பேருக்கும்தான் முடிபோட்டிருக்கு. அதை யாராலே மாத்த முடியும்?’ அப்படின்னு சொல்லிட்டு வந்தேன்”.

    லட்சுமிக்குப் எரிச்சல் பிறந்தது. `இந்த ஆம்பளைங்களுக்கே மானம், ரோஷம் எதுவும் கிடையாது. காணாமப்போன பந்து கிடைக்கிறமாதிரியான சமாசாரமா காதலும், கல்யாணமும்? வேணாம்னு போனவ, இப்ப இவன் கையில நாலு காசு சேர்ந்திருக்கிறது தெரிஞ்சு போய், திரும்பி வந்திருக்கா. இவனுக்கு எங்கே போச்சு புத்தி? நாளைக்கே கல்யாணமாகி, இதைவிடப் பணக்காரனா ஒருத்தனைப் பாத்தா, என்ன செய்வாளாம்? இவ நாலு வருஷம் சங்கரோட சுத்திட்டு, வேற  ஒருத்தனைக் கட்டிக்க சரிங்கலாம். அந்த ஆம்பளை மத்த பொண்ணுங்களோட பழகினது மட்டும் தப்பாப் போயிடுச்சா?’ என்று, பொதுவாக எல்லா ஆண்களையும், அனுபமாவையும் மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்.

    நீண்ட கைவிரல்களின் நுனியில் சிவப்புத்தொப்பிபோல் அழகாகச் சிவந்திருந்த மருதாணியைப் பார்த்தாள் அனுபமா. புன்னகை பிறந்தது.

    தனித்திருக்கும்போது சங்கர் என்ன சொல்வார்? அவளுடைய அழகை எவ்வளவு புகழ்ந்தாலும் அலுக்காதே அவருக்கு!

    பக்கத்தில் அமர்ந்திருந்த சங்கர், ஏதோ போட்டியில் வெற்றி பெற்றதுபோல் மிதப்பாக இருந்தான்.

    மாலையும், கழுத்துமாகக் கணவருடன் சேர்ந்து மாமியாரை முதலில் நமஸ்கரித்த அனுபமா, ஆசீர்வாதத்திற்காகக் காத்திருந்தாள்.

    அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில், “இன்னும் நீ சின்னப்பிள்ளை இல்ல. நிமிஷத்துக்கு நிமிஷம் எதை எதையோ நினைச்சு ஆசைப்படற புத்தியை இதோட விட்டுட்டு, பொறுப்பா நடந்துக்கப்பாரு!” என்ற வார்த்தைகள் வந்தன லட்சுமியின் உதட்டிலிருந்து.

    சற்றும் எதிர்பாராத அந்தக் கண்டனத்தைக் கேட்டு, அனு மயங்கி விழுந்தாள்.

    திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரே குழப்பம். காதல் கல்யாணம் என்றார்களே!  ஒரு வேளை, மசக்கையோ?

    `என்ன சீக்கோ உள்ளுக்குள்ளே! ஒடம்பு தளதளன்னு இருக்கிறதாலே மயங்கிட்டான்!’ என்று முணுமுணுத்தபடி, இரண்டு பெண்களின் உதவியோடு அனுபமாவைப் படுக்கையில் கிடத்தினாள் லட்சுமி.

    ஒன்றும் புரியாது, பிரமையாக நின்றிருந்த மகனைப் பார்த்ததும், `என் பேச்சைக் கேட்டானா? நன்றாகப் படட்டும்!’ என்று கறுவத்தான் முடிந்தது அவளால்.

    கசமுசா என்று எழுந்த குரல்கள் சங்கரின் காதிலும் விழாது போகவில்லை. அவனுக்குத் தலைகுனிவாய் இருந்தது.

    `நல்லா யோசிச்சியாப்பா?’ என்று, கல்யாணத்துக்குமுன் அம்மாதான் எத்தனை தடவை கேட்டாள்?

    அப்போதே யோசித்திருக்க வேண்டும். இனி என்ன செய்ய முடியும்!

    `செய்து காட்டுகிறேன்!’ என்று கறுவிக்கொண்டான்.

    அப்போது கண்விழித்த அவனது புது மனைவி, “மணிக்கணக்கில ஹோமப்புகையில ஒக்காந்திருந்தது! தலையை சுத்திக்கிட்டு வந்திடுச்சு!” என்றாள், மெல்லிய குரலில். கால் தடுக்கி, கீழே விழுந்த குழந்தை, அம்மா கவனிக்கிறார்கள் என்று தெரிந்ததும், பெரிதாக அழுதபடி இரக்கத்தைத் தேடுமே, அந்த மனப்பக்குவம்தான் அவளுக்கு இருந்தது.

    சங்கர் பல்லைக் கடித்துக்கொண்டான். எங்கே தான் அவளை நெருங்கிவிடுவோமோ என்று வந்த வார்த்தைகள்!

    “பெரிய பணக்காரனோட வாழப்போறோம்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தவ, இல்ல? யாரையோ மனசில வெச்சுக்கிட்டு, இன்னொருத்தனோட வாழ முடியுமா, என்ன!”

    சங்கர் தன்மேல் கொண்டிருந்த காதலோ, எதுவோ, இன்னொருவனை நாடித் தான் போனபோதே அழிந்துவிட்டது! இப்போது குரோதமும், பழிவாங்கும் எண்ணமும்தான் அவ்விடத்தில்!

    தன்மேலும் தவறு இல்லையா?

    மனம் இடித்துக்காட்ட, அனுபமாவின் இன்பக்கனவுகள் பொடிப்பொடியாக நொறுங்கின. நரகமாக இருக்கப்போகும் ஒரு வாழ்க்கையை எப்படித் தவிர்ப்பது என்று குழம்ப ஆரம்பித்தாள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (39)

    நிர்மலா ராகவன்

    இசை, ஸ்வரங்கள்

    நலம்-2-1-1-1

    இசை கேட்கப் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? அதைப்பற்றி கொஞ்சம்.

    ஏழு ஸ்வரங்கள்

    ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்கள் அனைத்தும் பறவை மற்றும் மிருகங்களின் ஒலியாகும். இவைகளின் அதிபதிகளுக்கு தனிப்பட்ட உரு இருக்கிறது. பிடித்த ஆடை ஆபரணங்கள், துணைவியர் எல்லாம் உண்டு.

    ஸ என்ற முதல் ஸ்வரத்தை ஷட்ஜம் என்பார்கள். இது மயிலின் குரலை ஒத்திருக்கும். மயில் கத்தும்போது கர்ணகடூரமாக இருக்கிறதே என்று யோசித்தேன். ஆனால், உற்றுக் கேட்டபோது அந்த ஸ்வரம் புலனாகியது.

    அடுத்து, ரி — ரிஷபம். எருதின் குரல்.
    க — காந்தாரம். ஆட்டின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டது.
    ம — மத்யமம். க்ரௌஞ்ச பறவை (நாரை).
    ப — பஞ்சமம். குயிலின் கூவல்.
    த — தைவதம். குதிரையின் கனைப்பு.
    நி — நிஷாதம். யானையின் பிளிறல்.

    இவைகளில் ஸ, ப இரண்டும் மாற்றமில்லாது, ஒரேமாதிரி இருக்கும். மற்றவைகளில் இரண்டு அல்லது மூன்று வகைகள் உண்டு. இவைகளை மாற்றி மாற்றி அமைக்கும்போது ராகங்கள் எழுகின்றன. நமது கர்னாடக இசையில் ஐந்து ஸ்வரங்களாவது இருந்தால்தான் அது ராகமாம்.

    நான் எழுதுவதா!

    `தமிழில் நாட்டியப் பாடல்கள் எழுதிக் கொடேன்!’ என்று என் மகள் கேட்டபோது, `அதெல்லாம் எனக்குத் தெரியாது!’ என்று முதலில் மறுத்தேன். கதை, கட்டுரை வேறு, கடவுள்மேல் பாடலமைப்பது வேறு. இல்லையா?

    அவள் விடாமல் தொணதொணக்க, `விடமாட்டியே! எதைப்பற்றி?’ என்று கேட்டேன்.

    பிரம்மாவால் உலகம் உருவான கதையை பல பக்கங்களில் தட்டச்சு செய்து, கெஞ்சும் பார்வையுடன் அளித்தாள்.

    விக்கினம் எதுவும் வராமல் இருக்கவேண்டும் என்று பிள்ளையாரையும், `நீயே எழுதிக் கொடு!’ என்று கல்விக் கடவுள் சரஸ்வதியையும் வேண்டிக்கொண்டு, குருவையும் மானசீகமாக நமஸ்கரித்தேன்.

    இரண்டு மணி நேரத்தில், யாரோ என் கையைப் பிடித்து எழுதுவதுபோல் பாதிப் பாட்டு, ஐந்து ராகங்களில், தயாராகிற்று.

    கலைஞர்களின் கர்வமும் இசைத் தேவதைகளும்

    எதையாவது கொஞ்சம் கற்றுவிட்டாலே பலருக்கும் கர்வம் வந்துவிடுகிறது. இசையில் ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் கர்வப்பட்டால் பாதிக்கப்படுகிறவர்கள் இசைத் தேவதைகள்தாம். (கற்க ஆரம்பித்தவர்கள் தவறு செய்வது இதில் சேர்த்தியில்லை).

    கற்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே எனக்கு உணர்த்தப்பட்டது: `யாராவது பாடச்சொல்லிக் கேட்டால், பிகு செய்துகொள்ளாமல் உடனே பாட வேண்டும். சாக்குபோக்கு சொல்வது அகம்பாவம். தலை கனத்துப்போனால், கலை நம்மை விட்டுப் போய்விடும்!’

    சற்றே புகழ்பெற்றபின், `எனக்கு எல்லாம் தெரியும்!’ என்ற கர்வத்துடன், அலட்சியமாகப் பாடுபவர்களுக்குத் திடீரென்று ஸ்ருதி இறங்கும். அல்லது தாளம் தப்பும். அதன் விளைவாக, ராகா, ராகினி என்ற பெயர்கொண்ட இசைத் தேவதைகளின் அங்கங்களில் சிறுகச் சிறுகக் குறைபாடுகள் உண்டாகும்.

    ராகம், ஸ்வரத்துக்குரிய இசைத் தேவதைகளைப்பற்றிய ஒரு பாடலுக்கான தகவல்கள் ஆங்கிலத்தில் தற்செயலாகக் கிடைக்க, என் மகள் என்னிடம் கொடுத்தாள். `கையின்றி, காலின்றி’ என்று ஆரம்பித்தது நான் எழுத ஆரம்பித்த அப்பாடல்.

    சில நாட்கள் கழித்து, கண்ணயர்ந்த உடனே, கண்பார்வை இல்லாது தடுமாறியபடி சிலர் என்முன் தோன்றுவதுபோல் ஒரு பயங்கரமான காட்சி. விழிப்பு வந்தது. இசைத் தேவதைகள்!

    மறுநாள் என் மகளிடம் தெரிவித்தபோது, `உடல் குறை என்றால் கை காலில் மட்டும் ஊனம் என்பது கிடையாதே! கண்ணையும் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டுமே என்று நானே நினைத்தேன்!’ என்றாள்.

    அதன்பின், யாராவது அலட்சியமாகப் பாடினாலோ, அரைகுறையாக நாட்டியம் ஆடினாலோ என் மனம் பதற, கண்ணை மூடிக்கொண்டு இந்த தேவதைகளுக்காகப் பிரார்த்திப்பது என் வழக்கமாயிற்று.

    ருத்திரன் வந்தான்

    அடுத்த வருடம் சிவராத்திரியின்போது அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கையில், `ருத்திரன் வந்தான்’ என்ற ஒரே வரி திரும்பத் திரும்ப இசையுடன் மனத்துள் கேட்க, விழிப்பு கொடுத்தது. `புதிய பாடல்!’ என்று உற்சாகத்துடன் எழுந்து, ஒரு நோட்டுப் புத்தக்கத்தை எடுத்து வந்து எழுத ஆரம்பித்தேன். அப்போது இரவு 11.50 மணி.

    மின்சாரத் தடை

    பத்து நிமிடங்கள் கழிந்து, சரியாக பன்னிரண்டு மணிக்கு எங்கள் பகுதியில் மின்சாரம் தடைபட்டது. பாட்டு என்னவோ வந்துகொண்டிருந்தது. விட்டால், காலையில் எதுவும் நினைவுக்கு வராது. ஆகவே, படுத்தபடி, அடுத்த வரி எங்கே ஆரம்பிக்கும் என்று உத்தேசமாக கட்டை விரலை அந்த இடத்தில் பதித்தபடி எழுதினேன்.

    நடுவில் உறக்கம் மீண்டும் அடுத்த வரி. இப்படியே நான் பாட்டை எழுதி முடித்தபின், மின்சாரம் சீராகியது. அப்போது மணி 2.40.

    நான் மனத்தெளிவுடன் இருந்தால், `இப்படி எழுதலாமே!’ என்ற எண்ணம் குறுக்கிட்டுக் கெடுத்திருக்கும். அந்த தடங்கல் எதுவும் இல்லாமல் இருக்க, முக்கால் தூக்கத்தில் எழுதியிருக்கிறேன்!
    மறுநாள் காலை நான் எழுதியதைப் பார்த்தால் சிரிப்பு வந்தது. ஒரு வரிக்கு மேலேயே இன்னொன்று — என்ன வார்த்தைகள் என்று பிடிபடாமல். சில சமயம் நான்கு அங்குல இடைவெளியில் அடுத்த வரி!

    கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் நல்லூரில் உள்ள காளி கோயிலில் நான் இதைப் பாடியபோது, `இந்த ஊரில் நடந்ததை யாரோ அப்படியே உங்களுக்குக் குடுத்திருக்கா!’ என்று வியந்தார் அர்ச்சகர்.
    அந்தப் பாடலில், எனது பெயரைக்கொண்ட முத்திரை கிடையாது. யாரோ கொடுத்தது அல்லவா?

    அடுத்தடுத்து வந்த நான்கு சிவராத்திரிகளில் ஒவ்வொரு முறையும் ஒரு சிவன் பாடல் வந்தது.

    முத்திரை

    பாட்டு வரும்போது வரும். என்ன ராகம் என்ற யோசனையெல்லாம் அப்போது எழாது. இசையுடன் வார்த்தைகள் தாமே வந்து விழும். `நான் எழுதுகிறேன்!’ என்ற பெருமைக்கே இடமில்லை. அதனால்தான், நான் வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, `முத்திரை போடு!’ என்று மறைந்த என் குருநாதரின் குரல் கேட்டபோது மிகவும் தயக்கமாக இருந்தது. பெருமையடித்துக் கொள்வது போலிருந்தது. (அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அவர் இயற்றிய பாடல்களை வேறொருவர் சொந்தம் கொண்டாடிய கதை எனக்குத் தெரியும்).

    பிள்ளையாருக்கு PERFECTION வேண்டும்

    சிறு வயதிலிருந்தே இந்துக் கடவுள்கள்தாம் எனக்குப் பரிச்சயம். ஒரு பாடலை எழுதி முடிக்க இருபது நிமிடங்கள் ஆகலாம், அல்லது ஒன்றரை மாதங்கள் பிடிக்கலாம்.

    என் அனுபவப்படி, முருகன் பாடல் சில நிமிடங்களில் பூர்த்தியாகும். (சமர்த்து!) தமிழ்க்கடவுள் அல்லவா?

    அம்மன் பாடல்கள் என்னை அதிகம் யோசிக்கவிடாமல் எளிதாக, ஆனால் மிக நன்றாக அமையும். பதிவு செய்வதும் எளிது. சிவன் பாடல்கள் வேலை வாங்கும். பிள்ளையார்மேல் அமைந்த பாடல்களைத் திருத்தி, பதிவு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பதினோரு வருடங்களுக்குமுன் எழுதிய விநாயகர் பாடல் ஒன்று இந்த வாரம்தான் சரியாகியது.

    முழுப்பாடலும் சரியாக அமைந்தது என்பதற்கு அடையாளமாக மயிர்க்கூச்செறியும்.

    புரியாததைப் புரியவைக்க

    கோலாலம்பூரிலுள்ள ஒரு பெரிய மளிகைக் கடைக்குப் போயிருந்தபோது நடந்த சம்பவம் அது. யாரோ என்னைப் பின்னாலிருந்து தள்ளியதுபோன்ற ஓர் உணர்வு. திரும்பினேன். யாரும் இருக்கவில்லை. வேகமாக வழுக்கியபடி நகர்ந்து, பின் இடது புறம் திரும்பி அதே வேகத்தில் சற்றுத் தூரம் சென்றபின் கீழே விழுந்து, தரையில் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டியின்மேல் நெற்றி மோத, அப்படியே உட்கார்ந்துவிட்டேன். இரண்டு பேர் என்னைக் கைத்தாங்கலாகத் தூக்கி நாற்காலியில் உட்காரவைக்க, கல்லாவில் உட்கார்ந்திருந்த பெண்மணி `ஐஸ் வாங்கிட்டு வா!’ என்று அலறியது கேட்டது.

    மூன்று நாட்கள் படுத்த படுக்கை. நெற்றியில் பெரிய வீக்கம். வலி உயிர் போயிற்று. எதுவும் யோசிக்க இயலாத நிலை.

    அந்நாட்களில் யாரோ எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அதன்பின், ஸ்வரங்களின் பேதங்களைப்பற்றி பல விஷயங்கள் புரிந்தன.

    இன்னொரு விபத்து

    ஒரு முறை லிஃப்டில் ஏறும்போது, திறந்திருந்த அதன் கதவு வேகமாக மூடி, என் நெற்றிப்பொட்டின் இரு புறங்களிலும் இடிக்க, வலி தாங்காது அலறினேன். இன்னும் வடு இருக்கிறது. (சாதாரணமாக, நாம் பாதி ஏறும்போது மூடிக்கொள்ளும் கதவு மீண்டும் திறந்து வழிவிடும்).

    விளைவு: இசையைப்பற்றி மேலும் சற்றுத் தெளிவும், ஒரு நல்ல பாடலும் அமைந்தன. ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் பிரசவ வேதனை போல்தான்.

    `இப்படியெல்லாம் என்னைக் கஷ்டப்படுத்தினால், இனிமே எழுத மாட்டேன், பார்!’ என்று முகமோ, உருவமோ அற்ற யாரையோ உரக்கத் திட்டினேன்!

    `இப்படித்தான் வரும்!’ என்கிறார்கள், விஷயம் புரிந்தவர்கள்.

    மணக்குள விநாயகர்

    ஒரு முறை புதுச்சேரிக்குப் போயிருந்த அன்று மத்தியான உணவிற்குப்பின் `மணக்குள விநாயகா’ என்று பாடலொன்று மனதில் எழுந்தது.

    அது என்ன வார்த்தை, `மணக்குள’ என்று?

    அன்று மாலையே வங்கக் கடலருகே இருக்கும், (பாரதியார் எழுதியிருக்கும்) அந்தக் கோயிலுக்குப் போய் தலபுராணத்தைப் படித்தபோது, மணல், குளம் என்ற இரு வார்த்தைகள் மருவி இப்படி ஒரு புதிய வார்த்தையாக உருவெடுத்திருக்கிறது என்று புரிந்தது.

    கதை

    சில நூற்றாண்டுகளுக்குமுன்னர், பாண்டிச்சேரியை ஆண்டுகொண்டிருந்த பிரான்சு நாட்டு அதிகாரிக்கு வேலையாட்கள் கோயிலுக்குப் போய் கடவுளைக் கும்பிட்டு வருவதால் வேலைக்குத் தாமதமாக வருகிறார்கள் என்ற ஆத்திரம் எழுந்தது. அருகிலிருந்த கோயிலில் குடியிருந்த விநாயகர் கருங்கல் சிலையை கடலில் எறியும்படி கட்டளை பிறப்பித்தார். ஆனால், பிள்ளையார் மூழ்க மறுத்துவிட்டார்! பல முறை எறிந்தும், அச்சிலை மீண்டும் மீண்டும் மேலே எழுந்ததாம்.

    அந்தப் பாடலும் ஜதி, பாதியில் வரும் சிட்டை ஸ்வரங்களுடன் சரியாக அமைய பத்து வருடங்களாகின.

    எங்கு, எப்போது

    கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்குப் போய் திரும்புகையிலேயே என் மனத்துள் பாட்டு எழும். அனேகமாக நடுநிசியில் அயர்ந்து உறங்குகையில், கனவில்போல் பாடல் கேட்கும். (நானே வலிய எழுதும் பாடல்கள் அவ்வளவு நன்றாக அமைவதில்லை).

    புதிய ராகங்கள்

    சில சமயம் தெரியாத, நான் கற்காத ராகத்தில்கூட பாடல்கள் அமையும்.

    `அதெப்படி குரு சொல்லிக்கொடுக்காத ராகத்தில் பாட்டு எழுத முடியும்?’ என்று இசை வல்லுனர் ஒருவர் அதிசயப்பட்டார்.

    யாரோ கொடுக்கிறார்கள். நான் கருவிதானே!

    தொடருவோம்

    Share
  • ஒரு கிளை, இரு மலர்கள்

    நிர்மலா ராகவன்

    “நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்துட்டு நிக்கறே? ஏண்டி? உனக்கென்ன பைத்தியமா? இல்ல, கேக்கறேன். ஒங்கம்மாவை அடைச்சு வெச்சிருக்கிற இடத்துக்கே நீயும் போயிடணுமா?”

    கண்களில் பெருகிய நீரை அடக்கப் பாடுபட்டாள் சாந்தி. கண்ணீரைப் பார்த்தால், `இப்போ என்ன சொல்லிட்டேன், இப்படி மாய்மாலம் பண்ணறே?’ என்று அதற்கும் திட்டுவாள் பாட்டி.

    “ராமுவுக்கு பெரிய கிளாசில மைலோ குடுத்துட்டு, நீ சின்னதை எடுத்துக்கன்னு சொல்லல?” வசவு தொடர்ந்தது.

    அது ஏன் தான் எது செய்தாலும், பாட்டிக்கு அது தப்பாகவே தெரிகிறது? அந்த குழந்தைக்குப் புரியத்தானில்லை.

    பரிதாபகரமாக விழித்தாள். “அண்ணன்தான் சின்னதை எடுத்துக்கிட்டான்,” ஈனஸ்வரத்தில் அவள் முடிப்பதற்குள் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.

    கன்னத்தைத் தடவியபடி, ராமுவைத் தேடி வந்தாள் சாந்தி. “அம்மா எங்கே போயிட்டாங்கண்ணே?”
    பெருமையாக நின்றிருந்தான் பையன். பாட்டியின் தொணதொணப்புக்கு, அவனுடைய ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்துப் பூர்த்தி செய்த பாட்டியின் `அன்பு’க்கு அவன் மட்டும்தான் பாத்திரமானவன்!

    அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். “தம்பிப்பாப்பா செத்துப் போச்சில்ல? அன்னிக்கும் அப்பா குடிச்சுட்டு வந்தாரு..!” என்று தனக்குத் தெரிந்த விதத்தில் விளக்க ஆரம்பித்தான்.
    கைக்குழந்தையைத் தன் மார்புடன் அணைத்து, பாலூட்டியபடி அமர்ந்திருந்த மனைவியின் பரவசத் தோற்றம் ஆத்திரத்தைத் தூண்டிவிட, “இந்தப் பிள்ளைமேல அப்படி என்னாடி ஆசை ஒனக்கு? நானும் பாக்கறேன், வர வர, நீ என்னைக் கவனிக்கிறதுகூட இல்லே!” என்று கத்த ஆரம்பித்தான் ரத்னம்.

    இன்று என்ன, அடியா, உதையா, இல்லை பெல்டால் விளாசப்போகிறாரா என்று பயம் எழுந்தது. குழந்தையை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள் அவள்.

    “அந்தச் சனியனைக் கீழே போடு, சொல்றேன்! புருஷன் இல்லாம, பிள்ளை மட்டும் எப்படி வந்திச்சாம்?” என்று கொச்சையாகத் திட்டியபடி, ஓங்கிய கரத்துடன் அவன் அவளை நெருங்கவும், அவசரமாக எழுந்தவளின் கால் அவிழ்ந்த கைலியில் தடுக்க, அதே தருணம் குறி தப்பாது ரத்னம் விட்ட அறை அவள் கன்னத்தைத் தாக்கியது. நிலைகுலைந்து போனவளாக, குழந்தையைக் கைதவற விட்டாள்.

    அந்த மகவின் தலையில்தான் அடிபட்டதோ, இல்லை, பால் குடித்துக்கொண்டிருந்தபோதே தாயின் இறுகிய அணைப்பில் மூச்சு முட்டிப் போயிற்றோ, குழந்தையை மீண்டும் கையிலெடுத்தபோதுதான் உணர்ந்தாள் — இனி அதற்குப் பாலூட்ட வேண்டிய அவசியமே இருக்காதென்று. அலறவோ, அழவோ இயலாதவளாய், பிரமையாக நின்றாள்.

    “சரோ..!” தன் செய்கையின் பாதகமான விளைவைப் புரிந்துகொண்டு, அந்த அதிர்ச்சியே அவனை நடைமுறைக்கு மீட்டுவர, குழைவுடன் அழைத்தபடி, மனைவியை நெருங்கினான் ரத்னம்.

    “இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சீங்க, இன்னொரு கொலை விழும் இந்த இடத்திலே!” அவளுடைய ஆங்காரமான குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது. பயந்து பின்வாங்கியவன், அவசரமாக வெளியே போனான் — இன்னும் குடித்து, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள.

    `தம்பிப்பாப்பா இனிமே பெரியவனா ஆகவே மாட்டானா! அவனோட விளையாட முடியாது?’ என்ற சிறியதொரு ஏமாற்றம் எழுந்தது, எப்போதும் தாயின் அருகில் அமர்ந்து, அம்மா பாப்பாவுக்குப் பாலுட்டுவதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த சாந்திக்கு. ஆனாலும், `முன்போல், அம்மாவின் முழுக்கவனமும் இனி தன்மேல் திரும்பும்” என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி பிறந்தது.

    தானும் மெல்ல எழுந்து, தாயின் கையைப்பற்றி இழுத்தாள். அவளோ, சுற்றுப்புறத்தையே மறந்தவளாக, வெறிப்பார்வையுடன் நின்றாள்.

    “ரத்னம்! இவளை வெச்சுக்கிட்டு என்னால இனியும் சமாளிக்க முடியாது. அவ கண்ணைப் பாரு! எந்த நேரம் நம்பளை என்ன செய்துடுவாளோன்னு பயமா இருக்கு எனக்கு! இந்த அழுகையும், அலறலும்! பத்தாத குறைக்கு, பாக்கறவங்ககிட்டே எல்லாம், `நான் கொலைகாரி! என் பிள்ளையை நான் கொன்னுட்டேன்!’னு வேற பேத்தல்!” என்ற பாட்டியின் பேச்சைக் கேட்டுத்தான் அப்பா அம்மாவை எங்கோ கொண்டுபோய் விட்டிருக்க வேண்டும்.

    இப்போது அம்மாவின் முகம்கூட சரியாக நினைவில்லை சாந்திக்கு. ஆனால், தன் பருத்த வயிற்றின்மேல் அவளுடைய பிஞ்சுக்கரத்தை வைத்து, `பாப்பா எப்படி குதிக்குது, பாரு!’ என்று சிரித்ததும், `அப்பா கோபமா வர்றாரு போலயிருக்கு கண்ணை மூடிட்டு, தூங்கறமாதிரி படுத்துக்க!’ என்று அவளைப் பாதுகாத்ததும், மறக்கக்கூடிய நினைவுகளா!

    “அம்மாவா?” பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தவளைப் பார்த்துவிட்டு, ரகசியக்குரலில் அண்ணனிடம் கேட்டாள் சாந்தி.

    “அவங்க அக்கா. நம்ப பெரியம்மா. அமெரிக்காவில இருக்காங்களாம்!”
    அதற்குள் சிறுமியைக் கவனித்தவள், “சாந்திக் குட்டியா? அப்படியே சரோ ஜாடை!” என்று, அவளை வாரியெடுத்து, அலாக்காகத் தூக்கிக்கொண்ட பெரியம்மாவுடன் ஒன்றிப்போனாள் அன்புக்கு ஏங்கியிருந்தவள்.

    `என்னையும் கவனிக்கலியே!” என்று ராமுவின் முகம் வாடியதை பாட்டி கவனித்தாள். அசுவாரசியமாகச் சூள் கொட்டினாள். “ஒன் தங்கச்சிமாதிரி பைத்தியமா இல்லாம இருந்தா சரிதான்!”
    பெரியம்மா அவசரமாகப் பேசினாள். “ஒங்களுக்குத் தெரியும், எனக்கு ஒரே மகன்தான். அவனும் ஒரு தங்கச்சி வேணும்னு நச்சரிச்சுக்கிட்டே இருக்கான். நாப்பத்தஞ்சு வயசுக்குமேல எனக்கு எதுக்கு இன்னொரு கைப்பிள்ளை? அதான் சாந்தியை தத்து எடுத்துக்கலாம்னு..!”

    ”ஒனக்கில்லாத உரிமையா! அவ நல்லா இருந்தா சரி,” என்றாள் பாட்டி, தன் சுமை குறைந்துவிடப்போகும் மகிழ்வில்.

    “வராதவ வந்திருக்கே! ரெண்டு நாள் தங்கிட்டுப் போகக்கூடாதா!” என்ற பாட்டியின் வாய்சாலகத்தில் பெரியம்மா மயங்கிவிடப்போகிறாளே என்ற பயம் பிடித்துக்கொண்டது சாந்திக்கு.

    ஆனால், பெரியம்மா ஏமாறவில்லை. நாசூக்காக மறுத்தாள்.

    “போயிட்டு வரேண்ணே! அப்புறம் நீயும் வருவேயில்ல?” களங்கமின்றிக் கேட்ட தங்கையை அலட்சியமாகப் பார்த்தான் ராமு.

    “பாட்டி என்னை விடமாட்டாங்க. என்மேல ரொம்ப பிரியம்!” என்று உதடுகள் சொன்னாலும், தன்னுடன் நாலு வார்த்தைகூடப் பேசாது, தானும் அதே அம்மாவுக்குப் பிறந்தவள்தான் என்பதையே உணராதவள்போல், சாந்தியை மட்டும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருந்த பெரியம்மாவின்மேல் ஆத்திரப்படத்தான் அவனால் முடிந்தது. தானும் ஏன் அம்மா ஜாடையாக இல்லை, அப்பாவைப்போல் இருக்கிறோம் என்ற வருத்தம் எழுந்தது.

    அந்த புறம்போக்கு இடத்துக்குப் பொருத்தமில்லாது, வாசலில் நின்ற பளபளப்பான, பெரிய வாடகைக் காரில் அமர்ந்து, குதிக்காத குறையாகக் கையை ஆட்டிய சாந்தியைப் பார்த்தபடி நின்றான் ராமு.

    “ஒன் தங்கச்சிக்கு வந்த வாழ்வைப் பாத்தியா! ஒங்கப்பன் குடிச்சே எல்லாத்தையும் அழிக்கிறான். இல்லாட்டி, நீயும் எப்படி எப்படியோ இருக்கலாம்!” என்றா பாட்டியின் அனுதாபம் அவனுக்கு வேண்டித்தான் இருக்கவில்லை. வளரத் தொடங்கியிருக்கும் மீசையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

    வருடங்கள் சில கடந்தன. அவனை இன்னும் சின்னப் பையனாகவே பாவித்து, பாட்டி அவனைத் தானே பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுவிடுவதும், `கூட்டாளிங்க சகவாசமே வேணாம். நீயும் ஒங்கப்பன்மாதிரி கெட்டுப்போயிடுவே!’ என்று அவன் வயதினர் ஓடியாடும் நேரத்தில், வலுக்கட்டாயமாக அவனை வீட்டிலேயே தங்க வைப்பதும் பிறருடன் ஒட்டாத அவனை ஒரு கேலிப்பொருளாக ஆக்கிய பாட்டியின்மேல் வெறுப்பு கிளர்ந்தது.

    எப்போதாவது தங்கையின் நினைவு எழும். மூர்க்கத்தனமாக அதைத் தள்ளுவான்.

    `அண்ணனுக்கு என்னை அடையாளம் தெரியுதோ, என்னவோ! அண்ணனும் என்னைப்போல பெரிசா வளர்ந்திருப்பானில்ல!’ என்றெல்லாம் துள்ளிக்கொண்டு வந்த சாந்தி, அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தாள்.

    செல்வச் செழிப்பு மின்னிய அவளுடைய உடலைப் பார்த்து ராமு பிரமித்தானோ, இல்லையோ, அவனைக் கண்டதும் சாந்தி அடைந்த ஏமாற்றம், வருத்தம்!

    முகமெங்கும் வியாபித்திருந்த சிறு சிறு கட்டிகளைக் கிள்ளியபடி நின்றிருந்த சோனி உருவமா அவள் அன்புக்குரிய அண்ணன்? அவனுடைய பரட்டைத்தலையும், கலங்கிய சிவந்த கண்ணும்! அருகில் வரும்போதே அது என்ன நாற்றம்?

    நடனமும், நீச்சலும் கற்று, தான் மட்டும் முன்னுக்கு வந்திருப்பது குறித்து அவளுக்குக் குற்ற உணர்வு உந்த, விமானதளத்துக்குப் போகையில், அவள் பக்கத்தில் உட்கார்ந்து, கரிசனத்துடன் அவளையே பார்த்தபடியிருந்த வளர்ப்புத்தாயின் பக்கம் திரும்பினாள் சாந்தி. “அண்ணனையும் நீங்க எடுத்துக்க பாட்டி விட்டிருக்க மாட்டாங்க. இல்லம்மா?” தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்ளும் முயற்சியில் எழுந்தது அக்கேள்வி.

    “என்னண்ணே இப்படிப் போயிட்டேன்னு கேட்டேன். அண்ணன் சொன்னான்..,” பெரிதாக மூச்சை இழுத்துக்கொண்டாள். “அண்ணன் சொன்னான், `எங்கப்பா குடிகாரரு. அம்மாவோ பைத்தியம்! அது மட்டுமில்ல. நான் எங்கேயாவது என் நிலையை மறந்து, வயசான காலத்திலே அவங்களை விட்டுட்டுப் போயிடுவேனோன்னு பயந்து, இதையெல்லாம் நாள் தவறாம சொல்லிக்காட்டற பாட்டி! நான் வேற எப்படி இருக்க முடியும்?’அப்படின்னு என்னையே திருப்பிக் கேட்டாம்மா!” சாந்தியின் குரல் விக்கியது.
    அவளுடைய இடுப்பில் கைகொடுத்து அணைத்துக்கொண்டாள் பெரியவள். அவர்களுக்கு முன்னால், எவரையோ இறுதி யாத்திரைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த்து ஒரு கறுப்பு நிற ஊர்தி.

    “அந்த `வேனு’க்குள்ளே பாத்தியா, சாந்தி? அழகழகா, எவ்வளவு மலர் வளையங்கள்!” என்று பேச்சை மாற்றப்பார்த்தாள்.

    சாந்தியின் மனம் வேறு ஏதோ யோசித்த்து. எங்கோ ஒரு பூக்கடையில் மிகுந்திருந்த பூக்கள் இருக்கும். இதோ, இந்த மலர் வளையங்களில் உள்ள மலர்களுடன் ஒரே கிளையில் பூத்தனவாகவும் இருக்கலாம். அவைகளில் சில பூசைக்கோ, அல்லது திருமண விழாக்களுக்கோ உபயோகம் ஆகும்.

    இன்னும் சிறிது நேரத்தில், பெட்டியிலிருக்கும் உயிரற்ற உடலுடன் தாமும் மின்சாரத்துக்கு இரையாகி, சாம்பலாகிவிடப்போவதை அறியாது, கண்கவர் வண்ணங்களுடன் மிளிரும் பூக்களைப் பார்த்து, மெல்ல விசும்ப ஆரம்பித்தாள் சாந்தி.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (38)

    நிர்மலா ராகவன்

    என்றோ செய்த பாவபுண்ணியங்கள்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2-1-1

    பள்ளி விடுமுறை வந்தால், எங்கள் பாட்டி வீட்டில் குழந்தைகளும் பெரியவர்களுமாக வெளியூர்களிலிருந்து பலர் வந்து தங்கிவிடுவோம்.

    முப்பது, நாற்பது பேருக்கு வேண்டுமே என்று வழக்கத்தைவிட முப்பது மடங்கு பால் வாங்க முடியுமா? தயிரில் நிறைய தண்ணீர்விட்டு, நீர்மோராக்கிவிடுவார்கள். `மோர்தான்!’ என்று சத்தியம் செய்தால்தான் நம்ப முடியும். அப்படி ஒரு திரவமாக இருக்கும்.

    அதைச் சாப்பிடப் பிடிக்காமல், நான் ஒருமுறை துணிந்து, `பாட்டி! இன்னிக்கு ஒரே ஒரு நாள் எனக்கு மட்டும் கெட்டியா தயிர் குத்த முடியுமா?’ என்று கெஞ்சிக் கேட்டுவிட்டேன்.

    பாட்டியின் பதில் உடனடியாக வந்தது: `நான் மாட்டேம்பா. பாரபட்சம் காட்டினா, அப்புறம் கடைசி காலத்திலே கை கால் விளங்காமப் போயிடும்!’

    இப்படி ஏதாவது பயமுறுத்தி வைத்தால்தான் மனிதர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்று யாராவது கட்டிவிட்ட கதையோ என்று அப்போது தோன்றியது. ஆனால், இறக்கும்வரை சமையல், தோட்ட வேலை என்று பாட்டி நன்றாகத்தான் இருந்தார்கள்.

    வாழும்போது ஒருவரின் நடத்தை எப்படி இருக்கிறதோ, சாகும்வரை, இன்னும் சொல்லப்போனால், இறப்பிற்குப் பின்னும் அதன் பாதிப்பு இருக்கிறது. அதாவது, ஒருவருடைய சந்ததிகள் மூத்தவர்களின் செயலின் விளைவுகளை அனுபவிக்க நேர்கிறது.

    நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தபோது, இளம் பெண்பாடகி ஒருத்தியின் இசைப்புலமையைப் பாராட்டினேன்.

    “எல்லாம் ஒங்க ஆசிர்வாதம்,” என்றாள்.

    `பெரியவர்களின் நல்வாழ்த்துகள் நன்மையை விளைவிக்கும் என்றால், ஒருவர் தீங்கு செய்தால்?’ என்று என் யோசனை போயிற்று.

    கதை 1

    `உங்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தபின், எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டீர்கள்?” என்று வயது முதிர்ந்த உறவினர் ஒருவரைக் கேட்டேன்.

    (நான் யாரைப் பார்த்தாலும், கன்னாபின்னாவென்று கேள்விகள் கேட்பேன். அனேகமாக, எவரும் பதிலளிக்கத் தயங்கியதில்லை. வெகு சிலரே ஆத்திரப்பட்டிருக்கிறார்கள்).

    `ஆரஞ்சு பழத்தின் சக்கையை உறிஞ்சிவிட்டேன். சக்கையைத் தூக்கித்தானே போடணும்?” என்றார் அலட்சியமாக.

    `சக்கை’ என்று அவர் வர்ணித்த முதல் மனைவி அவரை வெறுத்ததில் ஆச்சரியமில்லை. தான் ஒருத்தியாகவே பாடுபட்டு குழந்தைகளை வளர்க்க நேரிட்டபோது, தந்தையைப்பற்றி பெருமையாக எதுவும் சொல்ல முடியவில்லை. குழந்தைகளும் தான்தோன்றித்தனமாக வளர்ந்தார்கள். தாய் கவலைப்படவில்லை. `பெரியவர்கள் ஒழுங்காக இருந்தால்தானே அதைப் பார்த்து, அவர்கள் குழந்தைகளும் சரியாக வளர்வார்கள்!’ என்று அலட்சியமாகச் சொன்னார்.

    வயதானபின், இரண்டாவது மனைவியையும் நிராதரவாக விடத் தயங்கவில்லை மனிதர்.

    இப்படி சுயநலத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்நாள் முழுவதையும் கழித்துவிட்டவர்களின் அடுத்த தலைமுறைகள் பாவ மூட்டையைச் சுமக்கிறார்கள்.

    கதை 2

    பதின்ம வயதான தன் மகள்களை ஒத்த பெண்களை சிரிப்பும், வேடிக்கையுமாகப் பேசிக் கவர்வதே தான் ஆணாகப் பிறந்ததன் பலன் என்பதுபோல் நடந்துகொண்டார் அந்த மனிதர். பெண்களைச் சிரிக்க வைத்தால், அவர்களது எதிர்ப்பு குறைந்துவிடும், எளிதில் தன் வலையில் விழுந்துவிடுவார்கள் என்று அவர் போட்ட கணக்கு தப்பவில்லை. பெற்ற மகள்களே அவமானத்துடன் குறுகும்படி இருந்தது, `எல்லாப் பெண்களும் என் காதலிகள்தாம்!’ எனபது போலிருந்த அவரது நடத்தை. உறவினர்கள் அவரைத் தம் வீட்டில் சேர்க்கவே அஞ்சினார்கள்.

    (மேல் நாடுகளில் இந்த சமாசாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்களோ, என்னவோ! ஆனால், இந்தியாவில் இப்படி நடப்பது அறியாப்பெண்களின் மனநிலையை, அவர்களது எதிர்காலத்தை, பெரிதும் பாதிக்கும்).

    அவரது காலம் முடிவதற்குள் தன் லீலைகளின் விளைவுகளை அவர் காணவேண்டிவந்தது. `தகாது’ என்று தெரிந்தே அடுக்கடுக்காக தவறு செய்வது எத்தனை தீய காரியம்!

    மூன்று குழந்தைகளுக்குப் பிள்ளைப்பேறே கிட்டவில்லை. ஒருவனுக்கு ஆண்மை இல்லை. தப்பிப் பிறந்த பேரக்குழந்தைகளையும் அவரது வினை தொடர்ந்தது. பிறக்கும்போதே நோய். ஒருவனுக்குக் கல்யாணமான அன்றே மனைவி அவனுடன் வாழ மறுத்துப் போய்விட்டாள்.

    `அப்பாவியான குழந்தைகள் எப்படித் துயர்ப்படுகிறார்கள்!’ என்று உறவினர்கள் பரிதாபப்பட்டாலும், அவர்களுக்கும் காரணம் தெரிந்தே இருந்தது. பல தாய்மார்களின் சாபம் சும்மா விடுமா!

    வேறு சிலர், தம் நடத்தையில் மி்கக் கவனமாக இருப்பார்கள். `என்னைப்பற்றித் தவறாகப் பேச என்ன இருக்கிறது!’ என்ற மிதப்புடன், பிறரை ஓயாது விமர்சிப்பார்கள்.

    கதை 3

    விவரம் அறியாத வயதில் வத்சலாவை சற்று வயதானவருக்கு மணமுடித்தார்கள். அதனால் விளைந்த கலக்கமோ, குழப்பமோ, அவளுக்கு ஆண்-பெண் உறவைப்பற்றி கண்டபடி பேசுவதில் அளப்பற்ற ஆர்வம். அண்ணன்-தங்கை அன்பாக இருந்தால்கூட அவர்களுக்குள் தகாத உறவு இருக்கவேண்டும் என்று பேசுவாள்.

    விளைவு: தன் இறுதிக்காலத்தில் இருபது ஆண்டுகள் படுத்த படுக்கையாக, அத்தியாவசியத் தேவைக்காக பேசக்கூட இயலாத நிலை ஏற்பட்டது. நாவைச் சரியான முறையில் பயன்படுத்தாத பாவமோ!

    அம்மா இப்படிப் பேசுவதைக் கேட்டே வளர்ந்த ஆண்குழந்தைகள் பதின்ம வயதிலேயே `செக்ஸ்’ என்ற விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டி, பல சிறுமைகளுக்கு உள்ளாகி, நோய்வாய்ப்பட்டுப்போனார்கள். அதற்கு அடுத்த தலைமுறையிலும் பல கோளாறுகள்.

    வயதானவர்களே போர்!

    பெரும்பாலான இளைஞர்களுக்கு முதியோர் என்றால் இளக்காரம். தாம் என்றும் இளமையாகவேதான் இருக்கப்போகிறோம் என்ற மிதப்புடன் நடந்துகொள்வார்கள்.

    அவர்களே மூப்படைந்ததும், அவர்கள் நடந்துகொண்டதைப்போலவே இளைஞர்கள் அவர்களை அலட்சியப்படுத்த, அதை மாற்றத் தெரியாது, வருத்தத்துடன் ஏற்பதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்?

    சிறு வயதிலிருந்தே எனக்கு முதியவர்களுடன் பேசுவதும் பழகுவதும் பிடித்த சமாசாரம். `இவர்களுக்குத்தான் எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது!’ என்று பிரமிப்பாக இருக்கும்.

    ஒரு முறை என் தாயின் அத்தை சென்னையிலிருந்த எங்கள் பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். அவரை எப்படித் தனியாக ரயில் நிலையத்துக்கு அனுப்புவது என்ற பிரச்னை எழுந்தது. பதினைந்து நிமிடத்துக்குமேல் நடந்து போகவேண்டும். (அந்தக் காலத்தில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது)

    என் பாட்டி பதின்ம வயதாக இருந்த என்னைச் சிபாரிசு செய்தார், `நிரு கையைப் பிடிச்சுண்டு போய், மெதுவா எல்லாத்தையும் காட்டி அழைச்சிண்டு போகும்!’ என்று.

    நான் உடனே சம்மதித்தேன். வெளியில் அதிகம் போய்வர உடல் வலுவோ, வாய்ப்போ இல்லாதவர்கள், பாவம்!

    என் வழக்கம்போல், சிறு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல்,  பார்ப்பதையெல்லாம் விளக்கினேன்.

    அத்தை பாட்டி அந்நாளை, அந்தச் சில நிமிடங்களை எவ்வளவு தூரம் மதித்தார்கள் என்று பதினேழு வருடங்களுக்குப்பின் தெரிந்தது.

    “நீ அத்தைக்கு என்ன பண்ணினே? என்னை எப்போ பார்க்கிறபோதும், `நிர்மலாவுக்குக் கல்யாணமாகி, பதினோரு வருஷத்துக்கு அப்புறம் ஒரு பிள்ளைக்குழந்தை (ஆண்) பிறந்து, அதுவும் அல்பாயுசில போயிடுத்தாடி?’ன்னு அழறா!” என்று என் தாய் கேட்டபோதுதான் எனக்கு அந்தச் சம்பவமே நினைவில் வந்தது.

    `எவ்வளவு அனாதரவாக உணர்ந்தால், இதைப்போய் நினைவு வைத்திருப்பார்கள்!’ என்ற பரிதாபம் ஏற்பட்டது.

    முற்பகல் செய்யின்

    சமீபத்தில் ஒரு மருத்துவர், `உங்களுக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகியும் ஒரு பல்கூட ஆடவில்லையா? ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற எந்த வியாதியும் கிடையாதா?’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, `என்றோ பெரியவர்கள் செய்த ஆசிர்வாதம்!’ என்றுதான் சொல்லத் தோன்றியது.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (37)

    நிர்மலா ராகவன்

    பூனைகள் பலவிதம்

    பூனையே கடவுள்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2-1-1

    பண்டைய எகிப்தில் பூனை வடிவிலிருந்த கடவுளைத் தொழுதுவந்தார்கள். ஏனெனில், உயிருக்கு அபாயம் விளைவிக்கும் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களைக் கொல்லும் ஆற்றல் பூனைக்கு இருந்தது. அதன்பின், ஒரு குடும்பத்தின் மக்கள் பெருக்கம், அமைதி ஆகியவைகளுக்கான தெய்வமாக மாறியது.

    இப்போது எல்லா நாடுகளிலும், வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக பூனைகள் இருந்து வருகின்றன.

    மனிதர்களைப்போலவே பிராணிகளுக்கும் உணர்வுகள், திறமைகள் எல்லாம் இருக்கின்றன. அது புரியாதவர்கள்தாம், `எனக்கு நாய், பூனையெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. சூ, சூன்னு விரட்டுவேன்!’ என்கிறார்கள்.

    பூனைகள் மக்கு!

    முன்பொருமுறை ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கேலிப்படம் பார்த்தேன். `நில், படு, கைகுலுக்கு!’ என்று என்ன ஆணை பிறப்பித்தாலும் ஒரு பூனை எதுவும் புரியாது, அப்படியே உட்கார்ந்திருப்பதுபோல் வரையப்பட்டிருந்தது. இறுதியில், `சமர்த்துப் பூனை!’ என்று பாராட்டுவார் கட்டளையிட்டவர். அப்போது வேடிக்கையாக இருந்தது.

    ஆனால், நாய்களைப்போல் பூனைகளுக்கு எதுவும் புரியாது, மனிதர்கள் சொன்ன சொல் கேட்டு நடக்காது என்ற கருத்து எவ்வளவு தவறு என்று பூனைகளுடன் நெருங்கிப் பழகியபின் புரிகிறது.

    பூனைக்குட்டிகளின் வரவு

    ஒரு தாய்ப்பூனை வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பிரசவிக்கும். ஒரே சமயத்தில் மூன்று குட்டிகளை ஈனும்போது, அவைகளைப் பார்த்துக்கொள்ளும் சக்தி இல்லாவிட்டால், எங்காவது கொண்டு விட்டுவிடும்.

    அப்படி எங்கள் வீட்டுக்கு ஐந்து முறை பூனைக்குட்டிகள் வந்திருக்கின்றன.

    பாவம் வரும்!

    எங்கள் பாட்டி வீட்டில் பூனைகள் சர்வசாதாரணமாக நடக்கும். சிறு வயதில், `பூனைகளைத் தொடாதே! அதன் ஒரு ரோமம் உதிர்ந்தால், ஏழேழு ஜன்மங்களிலும் துயர்ப்படுவாய்!’ என்று பயமுறுத்தி இருந்தார்கள். அத்துடன், `பூனை பிராண்டிவிடும்!’ என்ற மிரட்டல் வேறு. அதனால், பூனைகளைப் பார்த்தாலும் பாராததுபோல் நடந்துவிடுவேன்.

    முதலாம் குட்டி

    பதின்மூன்று வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம் அது. எங்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியிலிருந்து ஒரு பூனைக்குட்டியின் மெல்லிய குரல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. `ஐந்து நாட்களே ஆன குட்டி!’ என்றார் மிருக வைத்தியர். அக்குட்டியின் உடல் ரோமம் இல்லாது வழவழவென்று இருந்தது. `யாரோ அதைக் கொல்ல முயற்சித்து, சுடுநீரை அதன்மேல் கொட்டியிருக்கவேண்டும்!’ என்று அவர் மேலும் கூற, அதிர்ந்தோம்.

    அந்தக் குட்டியின் வாயில் பாலில் தோய்த்த பஞ்சைப் பிழிய ஒருவர், மடியில் போட்டுக் கொஞ்ச சிறுவர்கள் என்று சிலர் எங்கள் குடும்பத்தில் இருந்ததால், எனக்கு வேடிக்கை பார்க்கும் வேலைதான் கிட்டியது. ஆனால், அடிக்கடி இடியோசை கேட்கும்போதெல்லாம் குட்டி (அந்தப் பெயரே நிலைத்துவிட்டது) என் மடியில் வந்து உட்கார்ந்துகொள்ளும். நான் விறைத்துப்போவேன்.

    அதைத் தொடப் பிடிக்காது, `யாராவது இதைக் கீழே போடுங்களேன்!’ என்று கத்துவேன்.

    `பாவம்! அது உன்னை அம்மாவா நினைக்கிறதும்மா. விரட்டாதே!’ என்று என் மகள் கூற, சற்று இளகினேன்.

    அதுவரைக்கும் சில பூனைக்குட்டிகள் எங்கள் வீட்டில் கொண்டுவிடப்பட்டிருந்தாலும், அவைகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்ததால், மார்க்கெட்டில் கொண்டு விட்டுவிடுவோம்.

    இந்தக் குட்டிக்கோ சரியாக நடக்கத் தெரியவில்லை. தடுமாறி விழுந்துகொண்டே இருந்தது. மருத்துவரின் உதவி தேவைப்பட்டது. `நாமே கவனிக்காவிட்டால், என்ன பண்ணும், பாவம்!’ என்று, அது தங்கலாம் என்று பெரிய மனது பண்ணினேன்.

    காலையில் என் அறைக்கு வெளியே குட்டி கத்தியதால், ஆகாரம் அளிக்கும் பொறுப்பு என்னுடையதாயிற்று. `உள்ளே வாயேன்!’ என்று நான் அழைக்கும்வரை கதவுக்கு வெளியே காத்து நிற்கும்.

    எல்லாருடைய அன்புக்கும் உகந்ததாக ஆன குட்டி, எட்டு மாதங்களுக்குப்பின் காணாமல் போயிற்று. அதன் உடல்நிலை சீராக ஆகாததால், எங்காவது தனியாகப் போய் இறந்திருக்கும்.

    அந்த துக்கம் மறைய சில மாதங்களாயின.

    அம்மா பூனை

    சில வருடங்களுக்குப் பிறகு வெள்ளையும் கறுப்புமான ஒரு தாய்ப்பூனை தன் குட்டி ஒன்றுடன் வாசலில் நின்று எதையோ வேண்டுவதுபோலக் குரல் எழுப்பியது. `பசி!’ என்று அதை உள்ளே அழைத்து உணவு அளிக்கப்பட்டது. அதுவும் தங்கிவிட்டது. ஆனால் வீட்டுக்குள் வரக்கூடாது என்ற தடையை மீறவேயில்லை. நான் தமிழில் என்ன பேசினாலும் உடனே புரிந்துகொண்டது.

    `தட்டில் தண்ணி விடறேன். நகர்ந்துக்கோ,’ என்றால் விலகும். `இப்போ குடி!’ என்று நான் சொல்லும்வரை ஒதுங்கி நிற்கும்.

    சில நாட்களுக்குப்பின் அதன் குட்டி காணாமல் போய்விட, தாய் துடிதுடித்தது. என் காலைச் சுற்றி சுற்றி வந்தது. அதன் வேதனை எனக்குப் புரிய, அருமையாகத் தடவிக்கொடுத்தேன். இப்போது பயமோ, அருவருப்போ இருக்கவில்லை.

    மாஞ்சா

    அதே சமயத்தில் இன்னொரு குட்டி பின்பக்கத்திலிருந்த கதவின்வழி எட்டிப்பார்த்து, தீனமான குரலில் கத்தியது. குழந்தைகள் குதூகலமாக அதைத் தேட, பயந்துபோய் எங்கோ ஒளிந்துகொண்டது. `வேண்டாம்!’ என்று பெற்ற தாயே எங்கோ கொண்டுவிட்டபிறகு, யாரை நம்புவது!

    அம்மா பூனையிடம், `எங்கே அந்த இஞ்சி நிறக் குட்டி?’ என்று கேட்க, அது புதரிடையே ஒளிந்திருந்ததைக் காட்டிக்கொடுத்தது.

    இருந்தாலும் பெரிய பூனைக்கு அந்தப் புதிய வரவு பிடிக்கவில்லை. தனக்கு ஆகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம். `ஸ்..’ என்று அதனருகில் போய் சீறும். குட்டி நடுங்கும்.

    இந்தப் புதிய குட்டி எல்லாரிடமும் மிகவும் அன்பாக இருந்தது. அதன் அன்பைக் கண்ணிலேயே காட்டும். என் பேரன் உடலெல்லாம் ஏறி விளையாடும். `ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறது! மாஞ்சா!’ (MANJA – மலாய் மொழியில் செல்லம்) என நாங்கள் கேலி செய்ததால், அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

    ஓயாத கர்ப்பம்

    குட்டிகள் பிறந்த உடனே தாய்ப்பூனை மீண்டும் கருவுற்றுவிடும். மூன்றே மாதங்களில் மற்றொரு பிரசவம்.

    அம்மா பூனையும் இந்த விதிக்கு விலக்கில்லை.பருத்த வயிற்றுடன் அது தள்ளாடியபடி நடக்க, மாஞ்சா அதைத் துரத்தியது!

    மூன்று குட்டிகள்! அவை தாய்ப்பால் குடிக்கும்போது, மாஞ்சாவும் குடிக்க ஆரம்பித்தது. தடுக்காமல், அம்மா பூனை அதைத் தான் பெற்றதாகவே ஏற்று, அருமையாக நக்கும். ஒரு குட்டியைத் தானே எங்கோ கொண்டுபோய்விட, மிஞ்சியிருந்த இரண்டில் ஒன்று காரில் நசுங்கி இறந்தது. மிஞ்சியிருந்த `கறுப்புக்குட்டி’க்கு சுவற்றின்மேல் தாவுவது, ஒரு மெல்லிய சுவற்றின்மீது நடப்பது போன்ற வித்தைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கும் பொறுப்பை மாஞ்சா விரும்பி ஏற்றுக்கொண்டது.

    மீண்டும் கருவுற்ற அம்மா பூனை எங்கோ போய் இறந்துவிட, மாஞ்சாதான் மிகவும் துக்கப்பட்டது. இரண்டு முறை, பெற்ற தாயையும், பாலூட்டி வளர்த்த தாயையும் இழந்த துயரம் அதற்கு. சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்தது. ரொம்ப இளைத்தது. உடல் உபாதைகள் வர ஆரம்பித்தன.

    ஆதரவாக ஒரு அண்ணன் இருந்ததால், கறுப்புக்குட்டிக்குத் தாயின் இழப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதற்கோ சாப்பிடுவதுதான் உலகமே. தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, மாஞ்சாவின் தட்டுக்குப் போகும். அதைத் தவிர்க்க, அதைக் குண்டுக்கட்டாக வீட்டுக்குள் தூக்கிப்போய், கதவைச் சாத்திவிடுவோம். வெளியே மாஞ்சா சாவதானமாகச் சாப்பிடும்.

    ஒரு முறை, `மாஞ்சா பாவம், குட்டி! அதைச் சாப்பிட விடு! நீதான் சாப்பிட்டாச்சே!’ என்று நான் சொல்ல, தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதுபோல வீட்டுக்குள் போய் உட்கார்ந்துகொண்டது!

    சங்கீதம்

    சாயந்திர வேளைகளில் பூனைகளுக்கு ஆகாரம் போட்டுவிட்டு, என் பேத்தி என்னிடம் இசை கற்க வருவாள். அப்போது இரண்டு பூனைகளும் உள்ளே வரும்.

    `எப்படி ஒலி எழும்புகிறது?’ என்று ஸ்ருதிப்பெட்டியை கடித்துப் பார்த்து, திட்டு வாங்கியது மாஞ்சா! `அடிப்பேன்!’ என்று நான் ஆள்காட்டி விரலைக் காட்டி மிரட்ட, அதற்குப்பின், விட்டுவிட்டது.

    இசைஞானமுள்ள பூனைக்குட்டி

    ஒரு நாள், நான் எங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள் நடந்துகொண்டிருந்தேன். அப்போது, அங்கு ஒரு மேசைமேல் கண்ணை மூடியபடி படுத்துக்கொண்டிருந்த கறுப்புக்குட்டி ஒரு நீண்ட மூச்சை இழுத்து, `ஸா’ என்ற ஸ்வரத்தை நீண்ட நேரம் மூச்சுப்பிடித்துப் பாடியது!

    எனக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் பொங்கின. நான் யாருக்கோ கற்றுக்கொடுப்பதை இந்தப் பூனைக்குட்டி சரியாகக் கற்றுக்கொண்டுவிட்டதே!

    `அட சமர்த்து! இன்னொரு தடவை பாடு!’ என்றதும், மிகக் குறுகிய காலம் அதையே பாடிவிட்டு, தூங்கிவிட்டது!

    அதன்பின், சில நாட்கள் நான் ஒவ்வொரு ஸ்வரமாகப் பாடிக் காட்டி, `எங்கே பாடு! சமத்து!’ என்று கொஞ்ச, திரும்ப இசைக்கும். உச்சரிப்பு சீனர்களுடையதைப்போல. அதாவது, `கா’ என்றால், `ங்கா!’ என்று கேட்கும். `மா’ என்ற ஸ்வரம் `ம்வா’ என்று கேட்கும். ஸ்ருதி சுத்தமாகப் பாடி, கேட்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும். என்னைத் தவிர வேறு யார் பாடச் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாது இருந்துவிடும்.

    குரு வந்தனம்

    ஒரு முறை, கறுப்புக்குட்டி தன் நெற்றியால் என் காலைத் தேய்த்து, அதன்பின் நக்கியது.
    `என்ன பண்றது?’ என்று நான் அதிசயப்பட்டபோது, பேத்தி விளக்கினாள்: `பாடி முடிந்ததும் நான் உன் காலைத் தொட்டு வணங்குவதுபோல் இதுவும் செய்கிறது!’

    தீனிப்போத்தி

    தீபாவளிக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் பேச்சும், சிரிப்புமாகப் பலகாரங்களை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்க, `தீனிப்போத்தி’யான (பாலக்காட்டு பிராமணர்களிடம் நான் கற்ற சொல்) கறுப்புக்குட்டி, அங்கேயே வட்டமிட்டது.

    `நீ பாடு, மொதல்லே!’ என்று நான் ஒவ்வொரு ஸ்வரமாகப் பாட, அதுவும் உணவு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் பாடிக் காட்ட, விருந்தினர் பிரமித்தார்கள். பரிசாக, அன்று சாப்பாட்டு நேரத்திற்கு முன்னரே குட்டிக்கு உணவு.

    யாரோ மாஞ்சாவைக் காட்டி, `இது பாடாதா?’ என்று கேட்டார்கள்.

    விட்டுக்கொடுக்காமல், `இது வேட்டைத்திறன் மிக்கது!’ என்று பதிலளித்தேன்.

    பல்லி, கரப்பான் பூச்சி, தவளை, வெட்டுக்கிளி, போன்றவைகளை எங்கள் காலணிமேல் கொண்டுவந்து அர்ப்பணித்திருக்கிறது மாஞ்சா — `நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கிறீர்கள். பிரதிபலனாக, நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அளிக்கிறேன்!’ என்பதுபோல்.

    ஒரு முறை, இரண்டு பூனைகளும் என் காலணியைச் சுற்றி உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. அருகில் போய் பார்த்தால், ஓரடி நீளத்தில் உயிருள்ள பாம்பு! (அருகே இருந்த செம்பனைத் தோட்டங்களை நாசம் செய்யும் எலிகளைக் கொல்ல பாம்புகளை வளர்ப்பார்கள்).

    `நான் பாம்பெல்லாம் சாப்பிடுவதில்லை. தாங்க்ஸ், மாஞ்சா!’ என்றேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு இறந்ததும், அதை வீட்டுக்கு வெளியே எறியலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். மாஞ்சாவுக்கு அது புரியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    துடைப்பத்துடன் வந்தபோது, பாம்பைக் காணோம். தேடியபின், மாஞ்சா அதைக் காரின் அடியில் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது. அரைமணி நேரம் அதனுடன் போராடி, அந்தப் பாம்பை வெளியே எடுத்து, வாசலில் தூக்கிப்போட்டோம். மீண்டும் மீண்டும் தூக்கிக்கொண்டு வந்தது!

    இன்னொரு முறை ஒரு குருவிக் குஞ்சைக் கொண்டுவந்தது.

    `அதைத் தூக்கி எறியணும். வீட்டு வாசலெல்லாம் இறகும், ரத்தக்களறியுமாக ஆகிவிடும்,’ என்று நாங்கள் பேசியபடி உள்ளே போய்விட்டு வந்தபோது, குருவியைக் காணோம்.

    `GOOD BOY, MANJA!”

    `எங்கே போட்டே, மாஞ்சா?’ என்று நைச்சியமாகக் கேட்டதும், ஒளித்த இடத்திலிருந்து கொண்டு வந்து காட்டியது!

    பெரியவர்களால் ஏமாற்றப்படும் குழந்தைக்கும், இந்தப் பூனைக்கும் என்ன வித்தியாசம்?

    பூனைகளால் விளையும் நன்மைகள்

    பூனைகள் ரத்த அழுத்தத்தையும், ஒவ்வாமையையும் குறைக்கும். ஒரு முறை பூனையைத் தடவினாலே நம் மனது அமைதிப்பட்டுவிடும். மாரடைப்பு வரும் சாத்தியக்கூறும் குறைவுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    இதெல்லாம் நானும் அனுபவத்தில் கண்ட உண்மை.

    தொடருவோம்

    Share
  • ஆண் துணை

    நிர்மலா ராகவன்

    ஆண் துணை



    தெருவெல்லாம் ஒரே புகை. வழக்கம்போல் குப்பை கூளத்தை வீட்டு வாசலில் எரிந்ததால் அல்ல. சுவாசிக்கும்போது மூக்கிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்திய பட்டாசுப் புகை தீபாவளி நெருங்கி விட்டதை நினைவுபடுத்தியது.

    நாசித் துவாரத்தினருகே ஒரு கையால் விசிறியபடி நடந்தான் சாமிநாதன். ஒருவழியாக வீட்டை அடைந்தபோது, உள்ளே கேட்ட ஆண்குரல் அவனைக் குழப்பியது.

    யாராக இருக்கும்?

    தங்கைகளில் யாராவது வந்துவிட்டார்களா, குடும்பத்துடன்? அவர்களைத் தவிர எவரும் அவ்வீட்டுக்குள் நுழைந்ததில்லை. எல்லாம், தலைவன் இல்லாத குடும்பம்தானே என்ற அலட்சியம்!

    `நம்பளையெல்லாம் விட்டுட்டு எங்கேயோ போயிட்டாருடா அந்த மனுசன்!’ துக்கத்தில் ஸ்ருதி மேலே போக, அம்மா தெரிவித்தபோது பதினாறு வயதுக்கு இன்னும் இரண்டு மாதங்களிருந்தன.

    முதல் நாள், வழக்கத்துக்கு மாறாக, அப்பாவுடன் அம்மா சண்டை பிடித்துக்கொண்டிருந்தது நினைவில் எழ, அலுப்பாக இருந்தது. தெரிந்த சமாசாரம்தான். மனைவியும், பிள்ளைகளும் இருக்கிறபோது, ஒரு மனிதனுக்கு இன்னொரு பெண்ணுடன் என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது!

    தலைச்சன் பிள்ளையாகப் பிறந்துவிட்ட பாவம், படிக்கும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குடும்பச் சுமையை ஏற்க வேண்டியிருந்தது.

    அவர் தங்கள் குடும்பத்துக்கு இழைத்த துரோகத்திற்குப் பரிகாரமாக, தனக்குப் பெண்வாடையே கூடாது என்று முடிவு செய்தான்.

    `அந்த மனிதர்’ ஒரு வழியாக செத்துத் தொலைந்திருந்தால், நிம்மதியாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வான். இந்த இருபது வருடங்களாக, அவன் எவ்வளவோ முயன்றும் அம்மாவின் முகத்தில் சிரிப்பை மட்டும் வரவழைக்க முடியவில்லை.

    நாள் தவறாது, தாலிக்கயிற்றில் மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்பவளிடம் எரிச்சல்தான் மூளும் சாமிநாதனுக்கு. அத்தாலியைக் கட்டியவனே இல்லையென்று ஆகிவிட்டது. இன்னும் என்ன பதிபக்தி வேண்டியிருக்கிறதாம்!

    ஆனால், வாய்திறந்து அவன் எதுவும் சொன்னதில்லை. பாவம், ஏற்கெனவே நொந்து போயிருக்கிறாள்! தான்வேறு அவள் மனத்தை மேலும் ரணமாக்க வேண்டுமா?

    திறந்திருந்த கதவின்வழி உள்ளே நுழைந்தவனுடைய கால்கள் பூமியிலேயே புதைந்து போயின.

    “யாரு வந்திருக்காங்க, பாத்தியா சாமிநாதா?” அம்மாவின் புலம்பல்களையே கேட்டு வளர்ந்திருந்தவனுக்கு, அன்று அக்குரலில் தொனித்த பெருமையும், பூரிப்பும் வித்தியாசமாகக் கேட்டன.

    “நம்ப சாமிநாதனா! என்னைவிட அதிகமா தலையெல்லாம் நரைச்சுப் போயிருக்கே!” என்று அட்டகாசமாகச் சிரித்தவரைக் குரோதமாகப் பார்த்தான்.

    `ஒங்க பொறுப்பையெல்லாம் என் தலையில கட்டிட்டுப் போயிட்டு, கேக்க மாட்டீங்க?’ என்று சுடச்சுட கேட்க நா துடித்தது.

    இவ்வளவு காலமாகப் பேசுவதையே மறந்தவனாக, கடமையிலேயே கடவுளைக் கண்டவன்போல் வாழ்ந்தாகிவிட்டது. இந்த உபயோகமற்ற மனிதருக்காக அந்தத் தவத்திலிருந்து பிறழுவானேன்! தொலைந்து போகிறார்!

    அவர்களிருவரையும் பார்க்கவும் விரும்பாதவனாக, உள்ளே நடந்தான் விறுவிறுவென்று.

    குளியலறைக்குள் நுழைந்தபின் தோன்றிற்று, அப்படியே வெளியே நடந்திருக்க வேண்டுமென்று.
    தனக்கு நினைவு தெரிந்த நாளாய், கஷ்டத்தைத் தவிர வேறு எதுவும் அனுபவித்து அறியாத அம்மா மேலும் நோகக்கூடாது என்று தான் சின்ன வயதிலேயே வேலைக்குப் போனதென்ன, பொறுப்பாகத் தம்பி தங்கைகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டு, அம்மாவுக்குக் காவல்நாயாய் தன்னை மாற்றிக்கொண்டு, அதற்காகவே பிறவி எடுத்ததுபோல் வாழ்ந்து வந்ததென்ன! எல்லாவற்றுக்கும் அர்த்தமே இல்லாது போய்விட்டதே!

    இனி தான் எதற்கு? அதுதான் வேறொரு ஆண்துணை கிடைத்துவிட்டதே! இப்படி ஒரு சமயத்திற்காகத்தான் அம்மா காத்திருந்தாளோ?

    தலையை அளவுக்கு மீறி குனிந்துகொண்டு வெளியே வந்து, வாயிலை நோக்கி நடந்தான் சாமிநாதன்.
    அம்மா எழுந்து ஓடி வந்தாள். “திரும்ப எங்கேப்பா போறே? அப்பா ஒனக்காக சாப்பிடாம காத்துக்கிட்டு இருக்காரு, பாரு!”

    அம்மாவின் பரிதவிப்பான முகத்தால் சற்றே இளகிய மனத்தை இரும்பாக்கிக்கொண்டு, ஒரு தீர்மானத்துடன் வெளியே போனான்.

    எல்லாரும் தூங்கியிருப்பார்கள் என்று உறுதியானதும், மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தான்.
    கதவு திறக்கும் சப்தத்திற்காகவே காத்திருந்ததுபோல் அம்மா ஓடி வந்தாள். “சாமிநாதா..!” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.

    அவளைப் பார்க்கவும் மனம் இடங்கொடுக்காது, “தூக்கம் வருது!” என்று முணுமுணுத்தபடி, தன் அறைக்கு ஓடாதகுறையாகப் போய், கதவைத் தாளிட்டுக்கொண்டான் சாமிநாதன்.

    சட்டையைக் கழற்றும்போது யோசனை வந்தது. அழையா விருந்தாளியாக வந்தவர் போய்விட்டாரா, இல்லை, அம்மாவின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டாரா?
    அப்படியென்றால்.., இப்போது எங்கே படுத்திருப்பார்?

    அந்த எண்ணம் எழுகையிலேயே உடலெல்லாம் எரிந்தது.

    வெட்கம் கெட்டவர்கள்!

    இந்த அம்மாதான், `இத்தனை வருஷங்களாக எங்கே, எவளுடன் இருந்தீர்களோ, அங்கேயே போய்த் தொலையுங்கள்!’ என்று முகத்தில் அடித்தமாதிரி சொல்லிவிட்டு, அப்படியே கதவை அவர் முகத்தில் அறைந்து சாத்தியிருக்க வேண்டாம்?

    `எனக்கு நீங்கள் யாரும் தேவையில்லை!’ என்பதுபோல், சுயநலமே பெரிதென ஓடிப்போனவரை வரவேற்று, நடுக்கூடத்தில் உட்காரவைத்து உபசாரம் என்ன வேண்டியிருக்கிறது!

    ஐம்பது வயதுக்கு மேலும் இந்தக் கிழவிக்குப் புருஷ சுகம் கேட்கிறதோ?

    சே! தனக்கு எப்படி இவ்வளவு கேவலமான அம்மாவும், அப்பாவும் வாய்த்தார்கள்!

    கஷ்டப்பட்டபோது எல்லாம் ஏதோ வைராக்கியத்துடன் இருந்து விட்டவனுக்கு அன்று முதன்முறையாகத் தன்மீதே கழிவிரக்கம் பிறந்து, அது கண்ணீராகக் கொட்டியது.

    சுமார் பத்து வருஷங்களுக்குமுன் ஒரு கோடீஸ்வரர், `உங்களைமாதிரி பொறுப்பான மாப்பிள்ளையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,’ என்று, அவர் மகளை ஏற்று, வீட்டோடு தங்கும்படி காலில் விழாத குறையாகக் கெஞ்சியபோது, அவர் பின்னாலேயே போயிருக்க வேண்டும், `விட்டது சனி’ என்று. அவர் சொன்னபடி கேட்டு நடப்பது `துரோகம்’ என்று அப்போது நினைத்தது மடத்தனம். அது என்னவோ, இந்த உலகில் சுயநலம் உள்ளவர்கள்தாம் பிழைக்கிறார்கள்.

    முடிவற்ற யோசனையில், எப்போது கண்ணயர்ந்தோம், எப்போது விழித்தோம் என்று ஒன்றும் புரியவில்லை சாமிநாதனுக்கு.

    மறுநாள் காலையில், அறைக்கு வெளியே வருவதற்குக்கூடத் தயக்கமாக இருந்தது. விடிந்ததும் விடியாததுமாக, அந்தப் பாவி மனிதரின் முகத்தில் விழிக்க வேண்டுமா?
    அயோக்கியத்தனம்!

    இளமை இருந்த நாளெல்லாம் பொறுப்புக்குப் பயந்தோடி, இப்போது முடியாத காலத்தில் ஆதரவு நாடி, சம்பாதிக்கும் மகனிடம் வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கிறார்!

    என் ரத்தம்தானே, என்னைப்போலவே ரோஷம் கெட்டவனாகத்தான் இருப்பான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது!

    நான் யாரென்று இவர்களுக்கெல்லாம் காட்டுகிறேன்!

    வழக்கத்துக்கு மாறாக, நீர்யானை உள்ளே புகுந்ததுபோல் மிகுதியாகச் சத்தப்படுத்தினான் குளிக்கும்போது. வேண்டுமென்றே தண்ணீர் மொள்ளும் சொம்பை இரண்டு முறை கீழே தவறவிட்டான்.

    துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம்போல் சமையலறைக்குப் போய், பசியாற உட்காருவதா, வேண்டாமா என்று யோசித்தபடி நின்றபோது, அம்மா வெளிப்பட்டாள்.

    “நீ பயப்படாம சாப்பிடு, வா. அவர் இல்ல. போயிட்டாரு!”

    அக்குரலில் சிறிதும் கோபமிருக்கவில்லை. ஆனால், அவன் இதுவரை என்றுமே கேட்டிராத சோகம் — நிராசை — சாமிநாதனை என்னவோ செய்தது. பரிதாபகரமாய் நின்றவளைத் தான் ஏதேதோ அசிங்கமாக நினைத்ததை எண்ணி அவமானம் ஏற்பட்டது.

    நேற்று என்றுமில்லாத கலகலப்புடன் பேசிய தாய் ஒரே இரவில் இவ்வளவு மூப்படைந்து போனது எதனால்? யாரால்?

    “இத்தனை காலமா நீ போட்ட உப்பைத் தின்னுட்டு, ஒன் மனசுக்குப் பிடிக்காத காரியத்தை எதுக்குச் செய்யறது? அதான்..!” எதுவுமே நடக்காததுமாதிரி, ஒப்பிப்பதுபோல் பேசினாள் அம்மா.

    அவனை அறைந்திருந்தால்கூட அவ்வளவு வேதனையாக இருந்திருக்காது என்று தோன்றியது.

    அம்மாவின் முகத்தில் எப்படியாவது சிரிப்பைப் பார்த்துவிட வேண்டும் என்று முன்பு எப்போதோ தைப்பூசத்தின்போது பத்து மலையில் ராட்டினத்தில் உட்காரும்படி வற்புறுத்தியதும், இன்னொரு முறை தன் சக்திக்கு மீறி, விலையுயர்ந்த புடவை ஒன்றை வாங்கி வந்ததும் ஞாபகம் வந்தது.

    எதுவுமே பலனளிக்காது போனபின், அம்மாவைப் போலவே தானும் சிரிப்பை மறந்து வாழக் கற்றுக்கொண்டதை நினைத்துக்கொண்டான்.

    அம்மாவின் முகத்தில் இனியும் மலர்ச்சியை வரவழைக்க முடியுமென்றால், அது ஒருவரால்தான் முடியும். அவர் போக்கியதை அவரேதான் மீட்டுத் தர முடியும். இது புரிந்தோ, புரியாமலோ, அவர் கட்டிய தாலியை அவராகவே பாவித்து, அவ்வளவு அக்கறையாகப் பாதுகாத்து வந்திருக்கிறாள்!

    கணவனால்தான் ஒரு பெண்ணின் அந்தஸ்து சமூகத்தில் நிர்ணயிக்கப்படுகிறது என்று நம் பெண்களுக்கு யார் விதித்தார்கள்? கோபம் எழுந்தது சாமிநாதனுக்கு.

    அதை மீறி மேலெழுந்தது, அம்மாவின் நலத்தையே நாடிய கடமை உணர்வு.

    “அப்பா எங்கே தங்கி இருக்காராம்? போய் கூட்டிட்டு வரேன்!” என்றபடி புறப்பட ஆயத்தமானான்.
    `வெடி’ என்று பயந்திருந்தது புஸ்வாணமாகப் போன நிம்மதி அம்மாவின் முகமெல்லாம் பரவியது.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (36)

    நிர்மலா ராகவன்

    ஐ லவ் யு சொன்னால்தான் அன்பா?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2-1

    திருமணத்திற்குமுன் அண்ணனைத் தவிர வேறு எந்த ஆணுடனும் பழகியிராத பெண்கள் பலர் உண்டு. `அப்பா’ என்பவரிடம் மரியாதை மட்டும்தான். அவருடன்கூட அதிகம் பேசியது கிடையாது என்று பெருமிதம் கொள்வார்கள். அதனாலேயே ஆண்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகும் பெண்களையும், அவர்களுடன் கலந்து உரையாடும் ஆண்களையும் ஏளனமாக, ஒருவித சந்தேகத்துடன் பார்ப்பவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்களின் மனோபாவம் எப்படிப் புரியும்? அதனால் சில எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன.

    கதை

    ஒரு அண்ணனும் தங்கையும் முறையே இன்னொரு குடும்பத்தின் மகளையும் மகனையும் மணந்தனர்.

    சில வருடங்கள் ஆனதும், அவர்களுள் ஒருத்தி என்னிடம் அலுத்துக்கொண்டாள்: `நான் என் கணவருடன் என்ன பேசினாலும், அது சண்டையில் முடிகிறது. அதனால், அவருடன் பேசுவதையே குறைத்துவிட்டேன்.  ஆனால், என் அண்ணனுடன் நிறைய பேச முடிகிறது,’ என்றபடி சிறிது யோசித்தவள், `அவனுடைய மனைவிக்கும் இதே பிரச்னைதான்!’ என்றாள் அதிசயப்பட்டவளாக.

    `அதாவது, உன் கணவருடன் அண்ணிக்கு எந்தவிதத் தடங்கலுமின்றி பேச முடியும். ஆனால், உன் அண்ணன், அதுதான் அவள் கணவருடன், பேச முடிவதில்லையாக்கும்!’ என்று குறுக்கிட்டேன்.

    வருத்தத்துடன் சற்று மௌனம் சாதித்துவிட்டு, `அண்ணன் தங்கையையே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றிருக்க வேண்டும்!’ என்றாள்.

    இது நடைமுறைக்கு ஒத்துவராது; ஏனெனில் பிறக்கும் குழந்தைகள் உடற்குறையோடு பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பது அவளுக்கும் தெரியும். இருந்தாலும், `இந்த பொறுக்க முடியாத இல்லறம் இன்னும் எத்தனை காலமோ!’ என்ற அயர்ச்சி அவளை அப்படிப் பேசவைத்தது.

    தம் தாய் தந்தையர் ஏனோ நெருக்கமாக இல்லையே என்று குழம்பும் இளவயதுப் பெண்கள் இதற்கு நிவர்த்தி தம் வயதொத்த ஆண்களுடன் சரிசமமாகப் பழகுவதுதான் என்று கருதுவதுபோல் நடக்கிறார்கள். இதில் பிரச்னை என்னவென்றால், பழகுவதன் எல்லை என்னவென்று அந்த இருபாலருக்கும் புரியாததுதான்.

    இன்றைய நாகரிகம்!

    ஈராண்டுகளுக்குமுன், சென்னையில் ஒரு விழாவிற்குச் சென்றிருந்தேன். பதினெட்டு வயதான பெண் ஒருத்தி, ஓடி வந்து அவளைவிடச் சற்று பெரியவனாக இருந்த பையனைக் கட்டி அணைத்தாள். அவனும் அவளுடைய தோளில் கை போட்டுக்கொண்டான். `காதலர்களோ?’ என்று நினைக்கவைத்தது அவர்களது நெருக்கம்.

    சற்று பொறுத்து இன்னொரு நண்பன் நுழைய, அதே பெண் அவனருகே ஓடி, சிறுகுழந்தைபோல் தாவினாள். அவளுடைய கால்கள் அவனுடைய இடுப்பைச் சுற்றிக்கொண்டன. கைகள் கழுத்தைச் சுற்றின. இப்படியெல்லாம் நடப்பதுதான் இன்றைய நாகரீகம் என்று கருதினாளோ?

    `உங்களைப் பார்த்ததில் எனக்குப் பேரானந்தம்!’ என்று உணர்த்த நினைப்பவள்போல அவள் நடந்துகொண்டது அந்த இளைஞர்கள் மனதில் எந்தவிதக் கிலேசத்தை உண்டுபண்ணி இருக்குமோ!

    தமிழ்ப்படங்களின் தாக்கம், அல்லது மேல்நாட்டு நாகரிகத்தின் சில (வேண்டாத) அம்சங்களை மட்டும் காப்பி அடிப்பது இப்போக்கின் அடிப்படை.

    இதெல்லாம் காதலா!

    தான் எப்படி நடந்தாலும் இப்பெண் பொறுத்துப்போவாள் என்ற நம்பிக்கையை உண்டாக்கும் பெண்ணை ஒருவன் விரும்பி மணக்கிறான். யோசித்துச் செய்யும் காரியம் இல்லை அது.`இவள்தான் எனக்குச் சரியானவள்!’ என்று தோன்றும்போது,`காதல்’ என்ற பிரமை ஏற்படுகிறது.

    பெண்களும் இக்கலையில் சளைத்தவர்களல்ல. ஒருவன் என்ன பேசினாலும் அதை உன்னிப்பாகக் கவனித்து, குறுக்கே பேசாது, அதற்கு மயங்குவதுபோல் நடித்து, அவன் சொல்வதற்கெல்லாம் சிரித்துவைத்தால் அவனுடைய தற்பெருமை அதிகரித்துவிடுகிறது என்று விரைவில் புரிந்துகொள்கிறார்கள். தன்னைத்தானே உயர்வாக நினைக்கவைக்கும் பெண்ணிடம் எவனும் காதலில் வீழ்ந்துவிடுகிறான்.

    இப்படி எதையாவது இலக்கு வைத்து ஒருவரையொருவர் வசப்படுத்துவது காதலா? இப்படிப்பட்டவர்கள் கல்யாணம் செய்துகொண்டாலும், இரண்டே ஆண்டுகளில் அவர்களது நெருக்கம் பிசுபிசுத்துவிடுகிறதே!

    கதை

    “இப்போதெல்லாம் பதினேழு வயதாகிவிட்டால், காதலிக்க ஒருவர் கண்டிப்பாக இருக்கவேண்டும்!” என்று என்னிடம் ஒரு தமிழகப் பேராசிரியை கூறினார், கேலிச்சிரிப்புடன்.

    அப்படிக் காதலித்த கல்லூரி மாணவி ஒருத்தி அடுத்த ஆண்டே இரு தரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் தன் காதலனை மணந்தாள்.

    ஐந்து வருடங்கள் கழித்து அவள் தன் பேராசிரியைச் சந்தித்தபோது,`அவனை விவாகரத்து செய்துவிட்டேன். ரொம்பக் குடித்துவிட்டு அடிக்கிறான்!’ என்று தெரிவித்தாளாம். `படிக்க வேண்டிய வயசில் புத்தி தடுமாறிவிட்டது! படிப்பும் அரைகுறையாப் போச்சு!’காலங்கடந்து புத்தி வந்ததில் வருத்தம்தான் மிஞ்சியது.

    சுதந்திரமான சேர்க்கை

    கல்யாணத்திற்குப்பின் ஒருவரது குணாதிசயங்களும்,`பராக்கிரமும்’  ஒத்துப்போகாவிட்டால் என்ன செய்வது என்று சிலர் முதலிலேயே கணவன் மனைவிபோல் சேர்ந்து வாழ்கிறார்கள்.

    ஒருவரது சுதந்திரத்தில் மற்றவர் குறுக்கிடக்கூடாது, அதெல்லாம் கல்யாணமானவர்கள் செய்வது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டது இந்த ஏற்பாடு.

    `வேண்டாம்’ என்றால் எளிதாகப் பிரிந்துவிடலாம் என்று அவர்கள் முதலில் போட்ட ஒப்பந்தம் தப்பாகிவிடும். ஏனெனில், ஒன்றாக இன்பதுன்பங்களைப் பகிர்ந்துவிட்டபிறகு, பிரிவு துயரத்தை உண்டுபண்ணிவிடுகிறது. (இம்மாதிரியான உறவை முறித்துக்கொண்ட ஒரு பெண்மணி என்னடம் கூறியது இது).

    பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

    நான் மூன்று வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகள் நாம் இயல்பாக ஏற்கும் இந்த  விஷயத்தை மிக சுவாரசியத்துடன் விவாதிக்கக் கேட்டிருக்கிறேன்.

    `அதெப்படி முதலிரவில் முன்பின் தெரியாதவருடன் உடலுறவு கொள்ள உங்களால் முடியும்? காதலிக்க வேண்டாம்?’ காதல் திருமணம்தான் இல்லற வாழ்க்கைக்கு ஏற்றது என்று வாதாடும் பெண்கள். (இவ்வளவு வெளிப்படையாகக் கேட்கவில்லை. சுற்றி வளைத்து, கண்களை உருட்டி, தடுமாற்றத்துடன்தான் கேட்டார்கள்!)

    பெண்களும் விட்டுக்கொடுக்காது பதிலளிப்பார்கள்:

    `நாங்கள் கல்யாணத்திற்குப் பிறகு காதலிப்போம்!’

    `எங்களை மணப்பவருக்கும் அது புதிய அனுபவம்தானே?’

    கல்யாணத்துக்குமுன் வருவது ROMANTIC LOVE. அதில் இளமையின் துள்ளல், ரகசியமாக வைத்திருப்பதால் ஒரு த்ரில் எல்லாம் இருக்கும். எப்போதோதான் சந்திக்கிறார்கள், இல்லையா? மீதி நேரங்களில் மற்றவரைப்பற்றிய கனவிலேயே திளைத்து இன்பம் அடைகிறார்கள்.

    இப்படிப்பட்ட இருவர் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றவருக்கு என்ன பிடிக்குமோ, அந்தத் தன்மையை மட்டும் வெளிக்காட்டுவர் இருவரும். பின் எப்படித்தான் காதலைத் தக்கவைப்பது!

    அவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்தாலும், அதற்குப்பின் பிற குணங்கள் வெளிப்பட, ஏமாற்றம் அல்லது மனக்கசப்பு தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.

    காதல் திருமணம் புரிந்துகொண்ட அலெக்சாண்ட்ரா என்னிடம் கூறினாள்: `காதல் எல்லாம் கல்யாணமாகி ரெண்டு வருஷத்துக்குத்தான்! அதுக்கப்புறம், உவ்வே!’ (இவள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவள். கணவர் மிக நல்லவர். நான் இருவருடனும் பழகியிருக்கிறேன்).

    ஐ லவ் யு சொன்னால்தான் அன்பா?

    பெரியவர்கள் நிச்சயித்ததோ அல்லது காதல் கல்யாணமோ, கல்யாணத்திற்குப் பின்னரும் நிலைக்கும் காதலானது ஒருவர்மேல் மற்றவர் காட்டும் அன்பு, அக்கறை, மரியாதை இதையெல்லாம் பொறுத்தது. இதுதான் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.

    இது அருவிபோல் கொட்டுவதில்லை. ஆழமாக, அதிகச் சலசலப்பின்றி சீராக ஓடும் நதி போன்றது.

    இந்த உறவில், பார்க்கும்போதெல்லாம் சிரித்த முகத்துடன், `ஐ லவ் யு’ சொல்ல வேண்டிய அவசியமில்லை. பிறந்தநாளையும், திருமணத்தேதியையும் மறக்காது பரிசுப்பொருட்கள் வாங்கித்தர வேண்டியதில்லை. மனதால் புரிந்துகொள்ள வேண்டிய நெருக்கம் இது.

    தொடருவோம்

    Share
  • பெயர் போன எழுத்தாளர்

    நிர்மலா ராகவன்

    எழுத்தாளர் கார்மேக வண்ணன் எழுத்தாளர் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர்கள்.
    ‘கருப்பண்ணசாமி’ என்று அவர்கள் வைத்த பெயரால் சிறுவயதில் நண்பர்கள் செய்த கேலியும், அதனால் தான் அடைந்த துயரும் பொறுக்காதுதானே அவர் வாழ்வில் உயர்ந்தார்?

    இப்படியெல்லாம் சொன்னால் உங்களுக்குப் புரியாது. முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம், வாருங்கள்.

    அப்போது வெறும் கருப்பண்ணசாமியாக இருந்த நம் கதாநாயகனுக்கு ஆறு வயது. தன்னை ஒத்த நண்பர்கள், ஆறுமுகத்தை ‘ஆறு’ என்றும், ஏழுமலையை ‘ஏழு’ என்றும் அழைக்கும்போது, தன்னைக் ‘கருப்பு’ என்று விளித்ததை வித்தியாசமாக நினைக்கத் தோன்றாத பருவம்.

    அவன் பள்ளியில் சேர்ந்த சில வருடங்களுக்குப்பின், இலக்கணப் பாடத்தை நடத்திய ஆசிரியர் ‘காரணப் பெயர்’, ‘இடுகுறிப் பெயர்’ என்ற பதங்களை விளக்க முயன்றபோதுதான் வினை பிறந்தது.

    “ஊறும் காய் என்பது ஊறுகாய் ஆயிற்று,” என்று புத்தகத்திலிருந்த உதாரணத்தை விளக்கியதோடு நில்லாமல், தன் சொந்தக் கற்பனையையும் சிறிது கலந்துகொண்டார் அவர். “இதோ நம்ப கருப்பண்ணசாமியை எடுத்துக் கொண்டால், பிறந்தபோது இவன் கருப்பாக இருந்ததால், இந்தப் பெயரை இவனுக்குச் சூட்டி இருக்கிறார்கள். ஆக, இதுவும் ஒரு காரணப் பெயர்தான்!”

    என்னமோ தானே நேரில் வந்து, அவனுடைய பெயர்சூட்டு விழாவை நடத்தி வைத்திருந்ததுபோல் அளந்தார் வாத்தியார். தனக்கே தெரியாமல் தன்னுள் இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறதே என்ற பூரிப்பில் அவர் தொந்தி குலுங்கச் சிரித்தார்.

    அவருடைய அடிவயிற்றை இறுக்கியிருந்த பெல்ட் எந்த வினாடியும் அறுந்து, நடக்கக்கூடாதது நடந்துவிடும் என்று பயந்தபடி இருந்த மாணவர்கள், அக்கற்பனையிலும், வாத்தியாரே சிரிக்கும்போது நாமும் சிரிக்காவிட்டால் மரியாதை இல்லை என்ற உசிதத்தாலும் பலக்கச் சிரித்துவைத்தார்கள்.

    அவர்களில் பலரும் கறுப்புத்தான் என்பதால், ‘நல்லவேளை! நம்ப வீட்டில நமக்கு இப்படி ஒரு பேரை வெக்காம போனாங்களே!’ என்ற நிம்மதி அச்சிரிப்புடன் வெளிப்பட்டது.

    கருப்பண்ணசாமிக்குள் வைராக்கியம் பிறந்தது அன்றுதான்.

    ‘நான் தோத்துட்டா, என் பேரை மாத்தி வெச்சுக்கறேண்டா!’ என்று எந்த ஒரு சிறு பந்தயமாக இருந்தாலும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சவால் விடுவதை உண்மை ஆக்கிவிட்டால் என்ன?

    ஆனாலும், பணங்காசு செலவழித்து, உற்றார், உறவினர் முன்னிலையில் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற எண்ணுவதே அவர்களுக்குத் துரோகம் இழைப்பதைப்போல் பட்டது.

    உடன்படித்தவர்கள் ‘டேய் கருப்பு!’ என்று விளித்தபோது, முன்போல் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உலகமெல்லாம் கூடி தன்னை மட்டம் தட்டுவதுபோல் இருந்தது.

    பிறருடன் பேசிப் பழகினால், அவர்கள் தன்னை அந்த பாழாய்ப்போன பெயரால் கூப்பிட்டு விடுவார்களே என்று பயந்தவனாகத் தனிமையில் இருக்கத் தலைப்பட்டான்.

    எதுவும் செய்யாமல் இருந்ததில் விசனம் அதிகமாகவே, அந்நேரங்களில் எல்லாம் கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான்.

    அதிகம் படித்திராத அம்மா, “கண்ட புஸ்தகங்ககளைப் படிச்சுக் கெட்டுப் போகாதேடா!” என்று ஓயாது கண்டித்ததில், அவன் வயதுக்கு மீறிய புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் வந்தது.

    புத்தகத்தைக் கையில் எடுத்தாலே தூக்கம் வந்துவிடும், அல்லது கவனம் திசைமாறிவிடும் என்ற பொது நிலை அவன்வரை பொய்த்துப்போய், யாருமே எதிர்பாராதபடி, வகுப்பில் முதல் மாணவனாக வர ஆரம்பித்தான்.

    சகமாணவர்கள் பொறாமை தாங்காது, “காரணப் பெயருன்னா என்னடா?” என்று அவன் காதுபட கேட்டபோதுதான் அவனுக்கு அந்த யோசனை உதித்தது.

    தான் ஒரு எழுத்தாளனாகிவிட வேண்டும்!

    அப்பா, அம்மா வைத்த பெயரை மாற்றி வைத்துக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி கிடையாது. யாரும், எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். தனக்கும் குற்ற உணர்வு தோன்றாது.

    இந்த எண்ணம் எழுந்தவுடனேயே ஏதோ பெரிய பாவத்தைத் தொலைத்துவிட்டமாதிரி ஒரு நிம்மதி பிறந்தது அவனுக்குள்.

    ‘எதை எழுதுவது?’ என்று யோசித்து, ஒன்றும் பிடிபடாமல், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு முக்கியமான விஷயம் புனைப்பெயர்தான் என்று தீர்மானித்தான். புனைப்பெயரில் இன்னொரு சௌகரியம். எழுதுவது சற்று முன்னே பின்னே இருந்தாலும், தான்தான் அது என்று பிறருக்குத் தெரியாமல் போய்விடும்.

    அடுத்த சில மாதங்களை வாசகசாலையில் கழித்தான் கருப்பண்ணசாமி. கேட்டவர்களிடம், ‘ஆராய்ச்சி,’ என்றான்.

    எல்லாம் புனைப்பெயர் ஆராய்ச்சிதான். அந்தத் தேடுதலில் சில உண்மைகளைக் கண்டுபிடித்தான்.

    சில எழுத்தாளர்கள் தம் மனைவியின் பெயரில் ஒளிந்திருந்தார்கள். ‘பாவம், பெண்!’ என்று பத்திரிகை ஆசிரியர்கள் சற்றே மட்டமான படைப்பையும் வெளியிட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையோ, என்னவோ!

    ஒருவேளை, மனைவியின் விருப்பு வெறுப்பில் அவ்வளவு தூரம் ஒன்றிப்போய், தாம் வேறு, அவள் வேறு என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவோ என்னவோ என்றுகூட அவன் நினைத்தான்.

    தன்னால் அப்படிச் செய்ய முடியாது, தனக்கு ஒரு மனைவி வருவதற்குப் பல வருடங்கள் இருக்கின்றன என்பதோடு, ‘மிஸஸ். கருப்பண்ணசாமி’ என்பதாகத் தன் பெயரை மாற்றிக்கொள்ள எவளும் வலிய வரமாட்டாள் என்று தோன்றியது. அப்படி வருபவள் அவனுக்கு வேண்டவும் வேண்டாம். சுயகௌரவம் உள்ளவளாக இருக்கவேண்டும் அவனுக்கு வாய்ப்பவள்.

    இன்னும் சிலர், ‘நான் ஆண்மை பொருந்தியவன், என் மனைவியை நேசிப்பவன்’ என்று தங்கள் புனைப்பெயரால் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். அதாவது, கொண்டவள் ஜானகியாக இருந்தால், இவன் ‘ஜானகிமணாளன்’ அல்லது ‘ஜானகிப்ரியா’ என்று மாறினான்.

    இலக்கியத் துறையில் புகழ் வாய்ந்தவர்கள் மறைந்தபிறகு, பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறலாமே என்ற நப்பாசையுடன் தத்தம் பெயருடன் ‘தாசன்’ என்று இணைத்து, அந்த இரவல் சுகத்தில் புகழ் தேடியவர்கள் கண்ணில் பட்டார்கள். இப்படியாகத்தானே கருப்பண்ணசாமியின் ஆராய்ச்சி தொடர்ந்தது.

    ‘அது ஏன் ஒளவையாருடன் எந்தப் பெண் எழுத்தாளரும் ஒட்டிக்கொள்ளவில்லை?’ என்ற் சிலகாலம் யோசித்ததில், ‘தாசன்’ என்ற வார்த்தைக்குப் பெண்பால் ‘தாசி’. அது அவ்வளவு மரியாதைப்பட்டதாக இருக்காது என்பது புரிந்தது.

    இந்த ரீதியில் எழுத்தாளர்களுடைய பெயர் வண்ணங்களை ஆராய்ச்சி செய்துவந்ததிலும், ஓயாது படித்ததிலும் கருப்பண்ணசாமியின் வயதும், அறிவும் கூடின. ஆனால், தன் பெயரைப்பற்றிய ஏக்கம் என்னவோ சற்றும் குறையவில்லை.

    இயற்பெயர் பிடிக்காது போனாலும், கன்னத்தில் இருந்த மச்சத்தைப்போல் அதுவும் அவனுடைய ஒரு அங்கமாகிவிட்டது. ‘விரைவில் அதை இழக்கப் போகிறோம்’ என்ற நினைவு எழும்போது சற்று வருத்தம்கூட வந்தது.

    பெயருக்குச் சம்பந்தம் இல்லாத இன்னெரு பெயரை எங்கேயாவது போய்த் தேடுவானேன் என்ற ஞானோதயம் அப்போதுதான் உதித்தது.

    இந்தமாதிரி வேண்டாத ஆராய்ச்சியும், யோசனையும் செய்துகொண்டே இருந்தால், தன் பெயருக்கு ஒரு விமோசனமே கிட்டாது என்று ஒரு நாள் உறைக்க, அண்மையில் இறந்துவிட்ட அவனது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய, ‘கருப்பு’ என்ற பொருளில் ஏதாவது புனைப்பெயர் வைத்துக் கொள்வதுதான் நியாயம் என்று தோன்றிப் போயிற்று.

    ஒரு விடுமுறை நாளன்று பகலில் அயர்ந்த தூக்கத்தில் இருந்தவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.
    ‘படபட’வென்று நிறையபேர் கைதட்ட, “நம்ப கார்மேகவண்ணன் இன்னும் அனேக எழுத்துப் படிவங்களைப் படைத்து நம்மை நீண்ட காலம் மகிழ்விக்க வேண்டும்!” என்று யாரோ ஒருவர் சொல்லி, பொன்னாடை போர்த்துகிறார். இன்னொருவர் முன்னால் வந்து, “நமது கார்மேகவண்ணனின் புகழில் பாதி அவருடைய மனைவிக்குச் சேரவேண்டும். இரவும், பகலுமாக அவர் இலக்கியச் சேவையில் ஈடுபட்டிருப்பது மனைவியின் புரிந்துணர்வால்தான்!” என்று மெச்சுகிறார்.

    இம்மாதிரி பல பாராட்டு விழாக்களில் தான் பேசி இருப்பது நினைவுக்கு வந்தது. தன்னைப் போலவே, விழா நாயகன் தலைமறைந்ததும், ‘இவனெல்லாம் பெரிய எழுத்தாளனாம்! இவனுக்கு ஒரு விழா எடுக்கறாங்களாம், வேலையத்தவங்க!’ என்று அனேகமாகச் சொல்லக்கூடும் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.

    பொன்னாடைமேல் ஒரு மலர்மாலை விழுகிறது. அதன் கனமானது எழுதி, எழுதி வலிகண்டிருக்கும் அவனுடைய கழுத்தை மேலும் அழுத்த, அந்தப் நோவைப் பெரிதாக மதிக்காது, ஒரு பெரிய எழுத்தாளனுக்கே உரிய அடக்கத்துடனும், கம்பீரத்துடனும், “உங்களைமாதிரி தரமான வாசகர்கள் அமையாவிட்டால் நான் ஏது!” என்று பற்கள் (அவை வெகு வெண்மை) தெரியப் புன்னகைத்து…

    இந்த இடத்தில் கருப்பண்ணசாமி விழித்துக்கொண்டான். சற்றும் எதிர்பாராவிதமாக புனைப்பெயர் அமைந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

    கார்மேகம். அதாவது கரிய மேகம். அந்த மேகத்தின் வண்ணத்தைக் கொண்டவன் கண்ணன்.

    நினைவுதெரிந்த நாளாகத் தன்னை அவமானப்படுத்திவந்த பெயரை மாற்றினாற்போலவும் ஆயிற்று, கடவுள் பெயரை அடிக்கடி எழுதினால் புண்ணியத்திற்குப் புண்ணியமும் ஆயிற்று.

    நிம்மதி பிறந்தவுடனேயே மறைந்தும் போயிற்று. புனைப்பெயரெல்லாம் சரிதான், அதை வைத்துக்கொண்டு ஏதாவது எழுதித் தொலைக்க வேண்டுமே!

    தன் பெயர் மாற்றத்துக்காக செய்த ஆராய்ச்சிகள், கழித்த ஆண்டுகளையெல்லாம் நினைவில் கொண்டுவர முயற்சித்தான். நாற்பது, ஐம்பது கதைகளைப் படித்து, அதன்பின் அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என்று நிரவினால், ஒன்றாவது தேறாது!

    இந்தக் கற்பனை அளித்த உற்சாகத்தில், ‘கருப்பண்ணசாமி’ விரைவில் மறைந்து, அந்த இடத்தை ‘கார்மேகவண்ணன்’ பிடித்துக் கொள்வதை மானசீகமாகக் கண்டு மகிழ்ந்தான் அவன்.

    பி.கு: இக்கதையால் எவரையும் நோகடிக்க எண்ணமில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

    (தமிழ் நேசன், 1992)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (35)

    நிர்மலா ராகவன்

    பெண்ணியம் என்பது

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2

    `பெண்ணியம் என்றால் என்ன?’ என்று தமிழ்நாட்டிலுள்ள ஒரு கல்லூரி மாணவன் கேட்டான்.

    `அது என்ன இல்லை என்பதைச் சொல்கிறேன்,’ என்றுவிட்டு, `ஆண்கள் ப்ரா அணிகிறார்களா? நாங்கள் மட்டும் எதற்கு அணியவேண்டும் என்று உள்ளாடையைக் கொளுத்துவது பெண்ணியம் இல்லை!’ என்று நான் கூறியதும், அந்த `கெட்ட’ வார்த்தையைக் கேட்டோ, என்னவோ, அரங்கத்திலிருந்த எல்லா இளவயதினரும் உரக்கச் சிரித்தார்கள்.

    ஆண்களும் பெண்களும் சமூகத்தில், கல்வியில், பொருளாதாரத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பெண்ணியம்.

    பெண்ணியவாதியான ஒரு பெண், ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டு வாழ்பவள், ஆண்களை வெறுக்கிறாள் என்று அர்த்தமில்லை. தன்னை மதித்து நடக்கும் ஆண்களிடம் நட்பாகப் பழகுவாள். தானும் ஒரு பொருட்டுதான் என்று எண்ணி, பிறர் தன்னை நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவ்வளவுதான்.

    `நாங்கள் பெண்ணியவாதிகள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை!’ என்ற மமதையுடன் சிகரெட் புகைப்பதும், விஸ்கி குடிப்பதும், பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும்தான் சுதந்திரம் என்று முதலில் நினைப்பவர்கள்கூட முப்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்டால், ஒரு வெறுமையை உணர்கிறார்கள்.

    `ஆண்கள் இல்லாமலே நாங்கள் வாழ்ந்து காட்ட முடியும்!’ என்ற சவால் அர்த்தமற்றது. ஏதோ காரணத்திற்காகத்தானே இருபாலரும் இவ்வுலகில் பிறந்திருக்கிறார்கள்?

    நாற்பத்தைந்து வயதுக்குட்பட்ட பல பெண்கள், “சிறு வயதில், ஆசிரியை அடித்தார், `நன்றாகப் படி!’ என்று. குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால் அப்பா கோபித்தார். படிப்பு, போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றால் அம்மா மகிழ்ந்தாள். ஆனால், அவர்கள் சொற்படியெல்லாம் கேட்டு, மிக நன்றாகப் படித்து, ஆண்களுக்குச் சரிசமமாக பெரிய உத்தியோகம் அமைந்தாலும், சுதந்திரமாக இருந்தால் பழிச்சொல் வருகிறதே!” என்று என்னிடம் அரற்றியிருக்கிறார்கள்.

    சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை உண்டே!

    கதை: ஒரு பெண்ணியவாதியுடன் நெடுநேரம்

    என்னுடன் பள்ளியில் படித்த கஸ்தூரி மேற்கூறியபடி — மனம் போனபடியெல்லாம் — நடந்தபோது, நெருங்கிய உறவினர்கள்கூட அவளைத் தம் வீட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதித்தார்கள். தந்தையோ, அவளுடன் பேசுவதையே விட்டார். அவருடைய உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தாய் மட்டும் அன்பாக இருந்தாள்.

    எனக்குத் திருமணமானபின் அவளைச் சந்தித்து நெடுநேரம் அவள் வாழ்க்கைமுறையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஆரம்பப்பள்ளியிலிருந்தே இருவருக்கும் பழக்கம். அவள் சொல்வதையெல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, `என்றாவது உன் கதையை எழுதுவேன்!’ என்றதும், பலக்கச் சிரித்தாள்.

    `உன்னிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தோன்றுகிறது!’ என்றவளிடம், `உன் அம்மாவுக்கு உன் நடத்தையால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதை யோசித்தாயா?’ என்று கேட்டேன்.

    `வாய்ப்பு இருந்திருந்தால், அம்மாவும் இப்படித்தான் நடந்திருப்பார்கள்!’ என்றாள் கஸ்தூரி, அலட்சியமாக.

    உயர்கல்வி மற்றும் உத்தியோக நிமித்தம் தனித்து வாழும் வாய்ப்பு கிடைத்தால் யார் குறுக்கீடும் இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்றெண்ணும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. சமூகத்தின் எதிர்ப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

    `எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த ஆண்கள் கல்யாணமாகி, தம் மனைவியுடன் எங்காவது செல்லும்போது நான் எதிர்ப்பட்டால், தெரியாதமாதிரி நடப்பார்கள். அது ஏன்?’ என்று கேட்டாள் கஸ்தூரி.

    நான் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் ஆண். சற்று முன்னேபின்னே நடக்க அவர்களுக்குச் சமூக அங்கீகாரம் இருக்கிறது. ஆனால், `சுதந்திரம்’ என்ற மயக்கத்துடன் ஒரு பெண் தான்தோன்றித்தனமாக நடக்கத் துணிந்தால், அவளுக்குத்தான் அவப்பெயர்.

    பெண்களை மதியுங்கள்

    ஒரு பெண் எப்படி நடக்கவேண்டும் என்று யார் யார் தீர்மானிக்கிறார்கள்?

    பதில்: சமூகத்தை ஒட்டி நடக்கும் குடும்பத்துப் பெரியவர்கள், இலக்கியம் மற்றும் திரைப்படங்கள்.

    பெரும்பாலான தமிழ்ப்படங்களில் அப்பா என்பவர் மகனைக் கரித்துக் கொண்டிருப்பார். அம்மா பின்னால் சோகமாக நின்று, அவனுக்குப் பரிவாள். ஏனெனில் அவன் ஆண்மகன். அவனைப் பெற்றெடுத்ததால் சமூகத்தில் அவளுடைய மதிப்பும் உயர்ந்துவிட்டது என எண்ணுகிறாள்.

    அந்த மகனுக்குக் கல்யாண வயது வரும்போது, தனக்கு வாய்ப்பவளும் தன் தாய்போல் தன்னை எந்த நிலையிலும் ஆதரிப்பவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுகிறது. அதற்கு அவனுக்கு அடங்கியவளாக இருக்கவேண்டும்.

    பொதுவாக, ஆண்கள் எப்படி நடக்கவேண்டும் என்று அவர்களுக்கு இன்னொரு விதமாகவும் கற்பிக்கப்படுகிறது. `பொம்பளைமாதிரி அழாதே!’ என்று ஒரு சிறுவனைக் கண்டிக்கும்போது, பெண்களைவிட தான் உயர்த்தி என்று அவன் எண்ண வழிகோலுகிறோம்.

    அதனாலேயே தங்களைவிட அதிகமான தன்னம்பிக்கையோ, அறிவுத்திறனோ ஒரு பெண்ணுக்கு இருந்தால், `இனிமே நாங்கதான் புடவை கட்டிக்கணும்!’ என்று அயர்வார்கள் சிலர். பெண்களின் உயர்வு அவர்களை அச்சவைக்கும், குறுகவைக்கும், தன்மையா?

    கதை: தேவை –_கல்யாணம்

    வினுதா கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தவள். அவளுடைய படிப்பைவிட உயர்ந்த கல்வி கற்றிருந்த மணமகன் அமைவது கடினமாகப்போக, தனக்கும் திருமணம் என்று ஒன்று நடக்குமா!’ என்ற ஏக்கம் பிறந்திருக்க வேண்டும்.

    இறுதியில் ஒருவர் அமைந்தார் — அவள் தன் உத்தியோகத்தை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். பெண் என்றால் இல்லற வாழ்க்கை, குழந்தைகள், சமையல் என்று தன் தாயைப் பார்த்துக் கற்றிருந்தவளுக்கு அது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. மகிழ்ச்சியுடன் உடன்பட்டாள்.
    `நான் சம்பாதிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்லே. அவரே கைநிறையச் சம்பாதிக்கிறார்!’ என்று பெருமை பேசிக்கொண்டாள்.

    செக்கு மாடு

    திருமணமானபின்னரும் நான் வேலைக்குப் போகிறேன் என்று நான் சொல்லக் கேட்ட ஒரு முதியவள், `ஆக, ஒன் ஆத்துக்காரர் சம்பாதிச்சு ஒனக்கு சாப்பாடு போடலே?’ என்று கேட்டாள், கேலியாக.

    இவர்களைப் போன்றவர்களுக்கு, எந்த ஒரு தேவைக்கும் ஆணின் கையை எதிர்பார்ப்பது பெருமை; அதனாலேயே உயர்கல்வி பெண்களுக்குக் கூடாத ஒன்று. ஏனெனில் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து, `உரிமை’ என்று ஏடாகூடமாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சமூகத்தில் இதுவரை கடைப்பிடித்தது எல்லாவற்றிற்கும் அர்த்தம் இல்லாது போய்விடுமே!

    பெண்கள் வீட்டிலேயே இருந்த காலத்தில், தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் கணவனை எதிர்பார்த்திருந்ததால், முடிந்ததோ, இல்லையோ, எல்லா வேலைகளையும் தாமே செய்தார்கள்.

    அவர்களிலும் சிந்திக்க அஞ்சாத ஓரிருவர், `இது என்ன வாழ்க்கை! எல்லா நாட்களும் ஒரேபோல!’ என்று அலுத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், `இப்படித்தான் நடக்க வேண்டும்,’ என்ற கட்டாயம் இருந்ததால், சுயவிருப்பம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போயிற்று. தனித்துவம் என்ற வார்த்தைக்கே அவர்கள் அகராதியில் இடமில்லை. புதுமையாகச் சிந்தித்தால் பழி வருமோ என்ற அச்சம் வேறு. அப்படி நடந்துவந்த ஒரு பெண்மணி கூறினார், `நாங்க செக்கு மாடு மாதிரி ஒரே இடத்திலே சுத்திச் சுத்தி வரோம்!’

    பெண்ணிய ஆண்கள்

    `நாள்பூராவும் வேலை செய்துவிட்டு வந்து எனக்கு அசதியா இருக்கு,’ என்று மனைவி கூற, அன்றையிலிருந்து துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போடுவதைத் தன் வழக்கமாக ஏற்றார் கணவர். குழந்தை வளர்ப்பிலும் மகிழ்ச்சி கொண்டார். `பெண்டாட்டி தாசன்!’ என்று பிறர் கேலி செய்தார்கள். அவர்கள் புரியாதவர்கள். எப்போதும் பெண்களைவிட உயர்ந்த நிலையிலேயே இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஆண்களின் நிம்மதியைத்தான் பறித்துவிடாதா?

    இருவரும் உயரலாம்

    வாழ்க்கை என்னும் தராசில், ஆணோ, பெண்ணோ கீழேயே இருக்க நேர்ந்தால், அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? இல்லை, `நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?’ என்று ஆராயும் துணிவுதான் அவர்களிடம் இருக்க முடியுமா? `நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லை?’ என்று அடிக்கடி பிறரிடம் கேட்பார்கள் இவர்கள்.

    `நீயும் மேலே வா!’ என்று ஒரு பெண்ணை, அவள் மனைவியோ, மகளோ, முன்னுக்கு வர வழிவகுக்கும்போது உடன் இருக்கும் ஆணும் உயர்கிறான்.

    இதிலும் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. அவனிடமிருந்து மாறுபட்டிருக்கும் பிறர், `பெண்களுக்கு ரொம்ப இடம் கொடுத்தால், தலைக்குமேல் ஏறுவார்கள்!’ என்று பயமுறுத்துவார்கள்.

    யோசித்தால், இதுவும் உண்மைதான் என்றே தோன்றுகிறது. அபூர்வமாகத் தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளால், பிற பெண்களிலிருந்து அவள் வித்தியாசப்பட்டிருப்பதால், அவளுடைய சுயமதிப்பு கூடிவிட, எல்லோர்மேலும் அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கிறாள்.

    ஆனால், அவ்வப்போது அப்பெண்கள் செய்வது ஏதாவது ஏன் சரியில்லை என்று சொன்னால், சிந்தித்து, தம் தவற்றைத் திருத்திக்கொள்வார்கள்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (34)

    நிர்மலா ராகவன்

    சமமாக நடத்த முடியுமா?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2
    சில பெற்றோர் , `நான் என் குழந்தைகள் மூவரையும் சமமாக நடத்துகிறேன்!’ என்று பெருமையாகக் கூறுவது நடக்காத காரியம். ஏனெனில், முதலாவதாகப் பிறந்த குழந்தையின் குணாதிசயங்கள் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளிடமிருந்து வேறுபடும். இது இயற்கை நியதி. அத்துடன், வயதுக்குத் தகுந்தாற்போல் திறமைகளும் இருக்குமே! இவர்கள் அனைவரையும் சமமாக நடத்த எப்படி முடியும்?

    வயதுக்கேற்ற வேலை

    ஒரு குடும்பத்தில் குழந்தைகளை நடத்துவது — வீட்டு வேலையோ, பாராட்டோ, தண்டனையோ –அவரவர் வயதுக்கும் திறமைக்கும் ஏற்றபடி இருக்கவேண்டும். உதாரணமாக, எட்டு வயதான மகன் தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது அவன் வேலை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவனுடைய மூன்று வயது தம்பிக்கோ, தங்கைக்கோ அது கடினமான வேலை. அதற்குப் பதிலாக, அவர்களால் எளிதில் செய்யக்கூடிய வேலைகளைக் கொடுத்தால், அவர்களுக்கும் சுயமதிப்பு பெருகும்.

    `அப்படி என்ன வேலை இருக்கிறது?’ என்கிறீர்களா? காலணிகளை வரிசையாக அடுக்கிவைப்பது, சப்பாத்தி, தோசை போன்றவற்றை ஒரு தட்டில் போட்டு அவர்களிடம் கொடுத்து, பிறருக்குப் `பரிமாற’ச் செய்வது இப்படி எதையாவது கொடுத்தால், மிகப் பெருமையுடன் செய்வார்கள். `எவ்வளவு சமர்த்தா வேலை செய்யறது, பார்!’ என்று பாராட்டிவைத்தால், எந்த வயதிலும் பொறுப்பு, வேலை என்றால் அஞ்சி ஓடமாட்டார்கள்.

    பாராட்டால் மனவலிமை

    வயதுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லாத பொறுப்புகளைச் சிறுவர்களுக்குக் கொடுக்கும்போது தவறுகள் நிகழலாம். தவற்றைப் பெரிதுபண்ணாது, அல்லது குற்றம் சாட்டாது, அடுத்த முறை அதே காரியத்தை எப்படிச் செய்தால் சரியாக அமையும் என்று விளக்கினால், தவறோ, ஏமாற்றமோ விளைந்தால் தாங்கும் மனவலிமை வரும். பொறுப்பாக முனைந்து செய்ததற்காகப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

    பாரபட்சம் ஏன்?

    ஆண், பெண் என்ற பாரபட்சம் காட்டாமல் வளர்த்தல் அவர்களுடைய பிற்காலத்திற்கு நல்லது.
    பல இல்லங்களில், `என்ன இருந்தாலும், நீ ஒரு பொண்ணு! ஒன் தம்பி ஆம்பளை! அவனோட நீ போட்டி போடலாமா?’ என்று கூறிக் கூறியே பெண் குழந்தைகளை வளர்த்துவிடுகிறார்கள்.

    இதனால், தாங்கள் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மை பெண்கள் மனதில் சிறுவயதிலேயே விதைக்கப்பட்டு விடுகிறது. துணிச்சலாக எந்தக் காரியத்தைச் செய்யவும் தயங்கி, `இப்படிச் செய்வதால் நமக்கு அவப்பெயர் வந்துவிடுமோ?’ என்று யோசிக்க முனைகிறார்கள்.

    வேறு சில இல்லங்களில் இதற்கு நேர் எதிரிடையான வளர்ப்புமுறை. `சில காலம்தான் நம்முடன் இருக்கப்போகிறாள். கல்யாணமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமோ!’ என்று, பெண்களுக்கு நிறைய சுதந்திரமும் சலுகையும் கொடுத்து வளர்ப்பார்கள்.

    ஆனால், திருமணமானபின்னரும் அவள் விரும்பியதெல்லாம் கிடைக்கும், அவளது தனித்துவத்திற்கு மதிப்பு கிடைக்கும் என்பது உறுதியில்லை.

    பிறர் பாராட்டியபோது பல வெற்றிகளைப் பெற்றவள், இப்போது அடுக்கடுக்காக தோல்வியைச் சந்திக்கிறாள். அப்போது, `பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தோமே! இப்போது என்ன ஆகிவிட்டது?’ என்ற குழப்பமும் வருத்தமும்தான் மிஞ்சும். இளம் வயதில் குடும்பத்தினர் அளித்த துணிவு கைகொடுக்க, மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது.

    வேலையில் என்ன வேற்றுமை?

    `இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை’ என்ற பாகுபாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல. இருவருமே கல்வி பயில்கிறார்கள், வெளிவேலைக்குப் போகிறார்கள். ஆகையால், சிறுவயதிலிருந்தே எளிதான வீட்டுக்காரியங்களில் இருபாலரையும் ஈடுபடுத்தினால், அவர்கள் சுதந்திரமாக வாழப் பழகிக்கொள்வார்கள்.

    சில சமயம், `நான்தான் வேலைக்காரியா?’ என்று முரண்டு செய்வார்கள் சிறுவர்கள்.
    `நான்தானே தினமும் சமைக்கிறேன்! நான் என்ன, சமையல்காரியா?’ என்று கேட்டு அவர்களைச் சிரிக்க வைத்துவிட்டு, `நம் வீட்டில் வேலை செய்தால் அதில் தவறோ, கேவலமோ இல்லை,’ என்று புரிய வைக்கலாம்.

    இதனாலெல்லாம் பெரியவர்கள் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கு நன்மையாகத்தான் முடியும்.

    கதை 1

    எங்கள் குடும்ப நண்பரான இஸ்மாயில் குழந்தை வளர்ப்பை மனைவிடம் விட்டிருந்தார். அசிரத்தையால் அல்ல; அது அவளுடைய பொறுப்பு, நாம் குறுக்கிடுவது நாகரீகமாகாது என்ற பெரிய மனதுடன்.

    இஸ்மாயில் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. மனைவியோ அதிகம் படிப்போ, குழந்தைகளின் மனோபாவத்தைப் புரிந்துகொள்ளும் திறமையோ இல்லாதவள். `என் குழந்தைகளெல்லாம் ரொம்ப வீக்!’ என்று, என்னைப் பார்க்கும்போதெல்லாம் அரற்றுவார் நண்பர்.

    `எதை ஆரம்பித்தாலும் பாதியில் விட்டுவிடுகிறான்!’ என்று பதினேழு வயதான கைருல்லை என்னிடம் அனுப்பினார். ஏதாவது வேலை கொடுத்தால், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துகொள்வான். ஈராண்டுகள் அவனுக்குப் பாடங்களைப் போதிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு.
    கைருல் ஒரு வழியாக பள்ளி இறுதியாண்டுப் படிப்பை முடித்ததும், `அவனுக்கு படிப்பில் கொஞ்சங்கூட பிடிப்பில்லை. சித்திரம் வரைய மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல திறமையும் இருக்கிறது. அத்துறையில் ஈடுபடுத்தினால், நன்றாக முன்னுக்கு வருவான்,’ என்றேன். என் வார்த்தைகளை மதித்து, மகனை ஃபிரான்சு நாட்டிற்கு அனுப்பினார், அத்துறையில் சிறக்க.

    துணிச்சலான பெண்கள்

    நான் பார்த்தவரை, தற்காப்புப் பயிற்சியைப் பயின்ற பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள்.

    கதை 2

    எனது பதின்ம வயது மாணவிகளில் ஒருத்தியான ராபியா பிற பெண்களைவிட வெளிப்படையாகப் பேசுவாள். பிற பெண்கள் தம் உடலைக் குறித்து வீண் வெட்கம் கொள்வது ஏன் என்று என்னுடன் கலந்து பேசியிருக்கிறாள். அவள் சிலாட் (SILAT) என்னும் தற்காப்புக்கலையில் சிறந்தவள் என்று பிறகு அறிந்தேன்.

    இம்மாதிரிப் பெண்கள் நளினமாக, ஒரு காலின் முன்னால் இன்னொன்றை வைத்து, நடக்கமாட்டார்கள். தம் வயதொத்த பையன்களுடன் சரிசமமாகப் பழகுவார்கள். இதனால் எல்லாம் பிற பெண்களின் கேலிக்கு ஆளானாலும், அதைப் பொருட்படுத்தமாட்டார்கள்.

    கதை 3

    சுயநம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட ஒரு தமிழ்ப்பெண் உயர்கல்வி கற்று, ஓர் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள்.

    அவளைவிட அனுபவம் முதிர்ந்த சீனப்பெண்மணி, “இந்தமாதிரி ஆடைகளையெல்லாம் நீ உடுத்தி வரக்கூடாது!” என்று கண்டித்தாள்.

    “நான் அணிந்திருப்பது பஞ்சாபி ஆடை. இந்தியப் பாரம்பரிய உடை. இது தவறு என்று எழுதப்பட்ட ஏதாவது சட்டம் இங்கு இருக்கிறதா? எனக்கு அதைக் காட்டு!” என்று கேட்க, மற்றவள் வாயடைத்துப்போனாளாம்.

    இச்செய்தி பிற இந்தியப் பெண்களிடம் பரவ, வழக்கமாக குட்டைப்பாவாடையோ, கவுனோ அணிபவர்கள் அதன்பின், `சௌகரியமாக இருக்கிறது!’ என்று ஸல்வார், சூடிதார் போன்ற உடைகளை அதிகம் வாங்கி அலுவலகத்திற்கு அணிந்துவந்தார்களாம்!

    பெண்களை வதைக்கும் ஆண்கள்

    ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டால், எதையோ பெரிதாகச் சாதித்துவிட்டதுபோல் நினைத்துக்கொள்ளும் தாய்மார்கள் தவறு செய்யும்போது அவர்களைக் கண்டித்து வளர்க்கமாட்டார்கள்.

    வேறு சில பெற்றோர் குழந்தை வளர்ப்பில் அசிரத்தையாக இருந்துவிடுகிறார்கள்.
    இப்படி வளர்க்கப்பட்டவர்கள் தாம் என்ன செய்தாலும் சரிதான் என்ற மனப்போக்குடன் வளர்வதால், பெண்களை வம்புக்கு இழுக்கிறார்கள். அல்லது, பாலியல் ரீதியில் வதை செய்யத் துணிகிறார்கள்.

    கதை 4

    பதினான்கு வயதான மாணவர்கள் தம் நீலப்படப் பழக்கத்தை (!) என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, வகுப்பில் மாணவர் தலைவன் மட்டும் ஏனோ அவைகளைப் பார்க்க விரும்புவதில்லை என்று அதிசயப்பட்டார்கள். அவனை அழைத்து விசாரித்தேன்.

    `எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன!’ என்றான்.

    நான் முகமலர்ச்சியுடன், `உனக்கு உன் தாயை ரொம்பப் பிடிக்குமோ?’ என்று கேட்டேன்.
    ஒரு தாய் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால், எந்தப் பிள்ளையும் கெட்டுப்போகமாட்டான்.

    கதை 5

    மலேசியாவில், விவாகரத்து சம்பந்தமான புள்ளி விவரங்களைச் சேகரிக்கவென சம்பந்தப்பட்ட அரசாங்கத்துறைக்குச் சென்றிருந்தேன்.

    அங்கு வேலை செய்த ஒரு மலாய்ப்பெண், `நானும்தான் வேலைக்குப் போகிறேன். ஆனால், வீட்டுக்கு வந்ததும், சமையல், துணி தோய்த்தல், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொடுத்தல் — இவை எல்லாவற்றையும் நானேதான் செய்யவேண்டும். என் கணவரோ, டி.வி பார்ப்பார். இல்லாவிட்டால், தினசரியில் மூழ்கிவிடுவார்,’ என்று என்னிடம் பொரிந்தாள். அப்படியும் மனம் ஆறாது, `அதுதான் என் கணவர்!’ என்றாள் அழுத்தமாக.

    `எல்லாக் கணவன்மார்களும் அதே லட்சணம்தான்!’ என்றாள் பக்கத்திலிருந்தவள், நிராசையுடன் கூடிய பெருமூச்சுடன்.

    இப்படிப்பட்ட மனக்கசப்புடன் இருக்கும் பெண்ணிடம் அவள் கணவன் எப்படி அன்பை எதிர்பார்க்க முடியும்?

    இனி பேச என்ன இருக்கிறது!

    பல இல்லங்களில் முப்பது, நாற்பது வருட இல்லற வாழ்க்கைக்குப்பின், கணவனோ, மனைவியோ, `நாங்க ரெண்டு பேரும் அதிகமா பேசிக்கிறதே கிடையாது!’ என்று சொல்லிக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது.

    உடலுறவுக்கும், பிள்ளை பெறுவதற்கும்தானா திருமண பந்தம்?

    பெண்களை மதிக்கக் கற்றவர்கள் மனைவியை உற்ற தோழியாக நடத்துவதால், வயதானபின்னரும் அவர்களால் கலந்து பேச முடிகிறது. மனைவியின் வேலைப்பளுவைப் புரிந்து அதைக் குறைக்க தம்மால் ஆனதைச் செய்கிறார்கள். வீட்டுவேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் விரும்பிப் பங்கெடுக்கிறார்கள்.

    அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு விஷயங்களைப்பற்றிப் பேசினால்தானே உறவு பலப்படும்?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (33)

    சகோதரச் சண்டைகள்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d

    கல்யாணமாகியிருந்த ஓர் இளம்பெண்ணிடம், `உன் சிறுவயதில் நடந்ததில் ஏதாவது ஒன்று மீண்டும் நடக்காதா என்று நீ ஆசைப்படுவது எது?’ என்று கேட்டேன்.

    யோசிக்காது வந்தது அவள் பதில்: `என் அண்ணனுடன் பிடித்த சண்டைகள்!’ பிறகு, சற்று ஏக்கத்துடன் தொடர்ந்தாள் `இப்போது சண்டையே போட மாட்டேன் என்கிறான். விட்டுக்கொடுத்து விடுகிறான்!’
    கூடப்பிறந்தவர்களுடன் சண்டை போடாத குழந்தை இருக்கிறதா? சந்தேகம்தான்.

    போட்டி

    பெற்றோரின் அன்பில் தனக்குப் போட்டியாக வந்துவிட்டதே என்று மூத்தவனும், `நான்தான் அம்மா வயத்திலேருந்து முதல்லே வந்திருக்கணும். அண்ணாவுக்குத்தான் எல்லாம் நிறையக் கிடைக்கிறது!’ என்று சிறியவனும் பொருமுகிறார்கள்.

    கதை: கத்திச்சண்டை

    சிறு குழந்தைகள் சண்டை போடுவதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. நீண்ட காம்பைக்கொண்ட ஒரு பழுத்த இலையை கத்தியாகவே பாவித்து அதற்காகச் சண்டை போடுவார்கள்.

    `இது என் இலை! நான்தானே பறித்தேன்? என்னுடையதுதான்!’

    `நான்தான் முதலில் பார்த்தேன்? எனக்குத்தான் சொந்தம்!’

    இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு இளம் தாய் முழிப்பாள். “இப்படி எல்லாவற்றிற்கும் சண்டைதான்! இரண்டுபேருமே குழந்தைகள்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடிக்கவும் மனம் வரவில்லை,” என்றாள். “`உனக்கும் ஒரு கத்தி பறித்து தருகிறேன்,’ என்று சிறியவனைச் சமாதானப்படுத்தினால் தீர்ந்தது கதை!” என்றேன் சிரிப்புடன்.

    அவளும் சிரித்தாள். “அவ்வளவுதானா?”

    சிறிது நேரத்தில் இரு சிறுவர்களும் முதலில் போட்ட வாய்ச்சண்டையை மறந்து, `கத்திச்சண்டையில்’ தீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் வாயிலிருந்தும், அடித்தொண்டையிலிருந்தும் கார்ட்டூன் படங்களில் பார்த்திருந்த ஒலிகள் எழும்பிக்கொண்டிருந்தன! கத்தி உடையும்வரை அவர்கள் விளையாட்டு நீடித்தது. சிறிது நேரம் கழித்து, வேறு எதற்காவது சண்டை போடுவார்கள்.

    இப்படிச் சமாதானம் செய்யாமல், `அவன் சின்னவன்! அவனோடு உனக்கென்ன சண்டை? அழவிடாதே. குடு!’ என்று தாய் கூறியிருந்தால், அம்மாவுக்கு என்னைவிட தம்பிதான் உயர்த்தி என்ற எண்ணம் எழும் மூத்தவனுக்கு.

    இளையவனோ, அம்மா தன்பக்கம்தான் பேசுவாள், எது வேண்டுமானாலும் அழுது சாதிக்கலாம் என்று எண்ணிவிடுவான்.

    ஐந்து வயதுக்குள் பிறருடன் பழகும் தன்மை புரியாததால் சண்டை வருகிறது. குடும்பத்தினர் அவர்களது சண்டையில் குறுக்கிட்டு தக்கபடி வழிநடத்தாவிட்டால், அப்போது எழும் மனக்கசப்பு எல்லா வயதிலும் நிலைத்திருக்கும்.

    என்னையும் கவனியேன்!

    குடும்பத்தில் கடைக்குட்டி தாயிடம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுபோல்தான், நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தையும். அதன் அண்ணனோ, அக்காளோ தனக்கும் தாயின் பிரத்தியேக கவனிப்பு கிடைக்கவேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக்கொள்வார்கள். இது நல்லதல்ல. ஒரு தாய் எல்லாக் குழந்தைகளையும் அவரவர் தேவைக்கு ஏற்றபடி கவனித்துத்தான் ஆகவேண்டும்.

    அம்மாவின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பவும் சில குழந்தைகள் சண்டையில் ஈடுபடலாம். அம்மாதிரித் தருணங்களில், அவர்களைக் கவனிக்காது விடுவதுதான் சரி.

    தன் ஒவ்வொரு நிமிடத்தையும் குழந்தைகளுக்காகவே செலவழிக்க நேரிட்டால், தாய்க்குத்தான் நிம்மதி பறிபோய், மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். (இதேபோல், வீட்டில் போதிய கவனிப்பு இல்லாத சிறுமிகள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையின் கவனத்தைப் பெறவேண்டி, வேண்டுமென்றே ஏதாவது தவறிழைப்பார்கள். அவர்களைக் கவனிக்காமல், அலட்சியப்படுத்துவதுதான் அவர்களுக்கு அளிக்கக்கூடிய பெரிய தண்டனை).

    இது உன் வேலை!

    சற்றுப் பெரியவர்களாக ஆனதும், வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது சண்டைக்கு முக்கியமான காரணமாக அமையும். இதைத் தவிர்க்க, காலையில் ஒருவர், மாலையில் ஒருவர், அல்லது வாரத்தில் சில நாட்கள் ஒருவருக்கு என்றெல்லாம் பகிர்ந்துவிடலாம். வயதுக்கு ஏற்றபடி அவர்களுக்கு அளிக்கப்படும் வேலையை அவரவர்தான் தவறாது செய்ய வேண்டும் என்று வகுத்துவிட்டால், முணுமுணுக்காமல் செய்வார்கள்.

    வசவு கற்றுக்கொடுப்பது

    ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால், அவர்களைப்போல் நடக்கத்தானே குழந்தைகளும் கற்பார்கள்? இதற்குத்தான் பெரியவர்கள் பேசும்போது குழந்தைகள் அங்கு இருக்கக்கூடாது என்று விலக்கி வைப்பது. வயதுக்கு மீறிய வளர்ச்சி வேண்டாமே!

    திரைப்படங்களைப் பார்த்தும் வேண்டாத வசவுகளைக் கற்கிறார்கள் குழந்தைகள்.

    நானும் அப்படித்தான்.

    சொந்தக்கதை

    நான் சிறியவளாக இருந்தபோது பார்த்த படங்களில், வில்லன் தன் மனைவியைத் திட்டுவான். (கெட்டவன் என்றால் துளிக்கூட நல்ல குணம் இருக்கக்கூடாது என்பது திரைப்பட விதி). `பாவி, துரோகி, சண்டாளி, நயவஞ்சகி,’ என்று அடுக்கிக்கொண்டே போவான். ஒவ்வொரு சொல்லுக்கு அடுத்தும், `நானா!’ என்று நெஞ்சில் கைவைத்து அதிர்பவள்தான் நல்ல மனைவி.

    இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லாப் படங்களிலும் இதே வரிசையில், இதே வார்த்தைகள்தாம் வரும்.

    எங்கள் வீட்டில் இந்தமாதிரி வார்த்தைகள் எல்லாம் உபயோகிக்கப்படாததால், இப்புதிய வார்த்தைகளை ஆர்வத்துடன் கற்றேன். எப்போது, எவ்வாறு உபயோகிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

    எட்டு வயதுக்குட்பட்ட எனக்கும், என் தங்கைக்கும் சண்டை வரும்போது, நான் `பாவி!’ என்று ஆரம்பிக்க, அவள் அடுத்த வார்த்தையைப் பிரயோகிப்பாள். இருவருக்கும் எதற்கும் அர்த்தம் தெரியாது என்பது ஒருபுறமிருக்க, அவற்றை உச்சரிக்கும்போதே பலம் பெருகி, எதிராளியை வீழ்த்திவிட்டதுபோல் உணர்வோம். முடிந்தவரை உரக்கக் கத்துவோம் — அம்மா, `ஏய்! என்ன அசிங்கம் இது?’ என்று எங்கிருந்தாவது குரல் கொடுக்கும்வரை.

    இரண்டுபேரும் ஒரே சமயத்தில் ஒற்றுமையாகி, `ஒண்ணுமில்லேம்மா,’ என்று குரல் கொடுப்போம். ஒருவரையொருவர் பார்த்துப் பெருமையுடன் சிரித்துக்கொள்வோம்.

    பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிட, அவ்வார்த்தைகள் மனதில் பதிந்துவிட்டன. எதற்குச் சண்டை போட்டோம் என்று நினைவில்லை.

    சமீபத்தில் ஏதோ அரதல் பழசான படத்தில் வில்லன், `பாவி!’ என்று ஆரம்பிக்க, நான் மகிழ்ச்சியுடன், மீதி வார்த்தைகளைப் பூர்த்தி செய்தேன்! வீட்டில் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

    சண்டை அவசியம்

    சகோதர சகோதரிகள் சண்டை போடுவது பிற்கால வாழ்க்கைக்கு அவசியம். எப்படி என்கிறீர்களா?
    பிறரது எண்ணப்போக்கைப் புரிந்துகொண்டு, அனுசரணையாக நடந்துகொள்ளவும், நல்லவிதமாகப் பழகவும் சிறுவயதில் நாம் போடும் சண்டைகள் உதவுகின்றன.

    `இந்தப் பொம்மையை நீ வெச்சுக்கோ, அதை நான் எடுத்துக்கறேன்,’ என்று சமாதானம் பேசும் குழந்தை தகறாறின்போது பேச்சுவார்த்தை நடத்தக் கற்கிறது. முரட்டுத்தனமாக நடப்பது நன்மையில் முடிவதில்லை என்று புரிந்து, அதை அடக்கிக்கொள்ள முயல்கிறது.

    எப்போதும் சிறிய மகனையோ, மகளையோ பெரிய குழந்தைக்கு எதிராக ஆதரித்துப் பேசும் தாய் தன்னையுமறியது அதற்குக் கேடு விளைவிக்கிறாள்.

    எல்லாருமே எப்போதுமே விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்களா, என்ன! சண்டை போடவும் தைரியம் இல்லாது, சமாளிக்கும் வழியும் புரியாது விழிப்பார்கள் அப்படி வளர்க்கப்பட்ட சிலர்.

    `என்னையும் அடிச்சு வளர்த்திருக்கணும்!’ என்று தாயிடமே குறைகூறுவார்கள்.

    வேறு சிலர் எல்லாவற்றிற்கும் பிறருடன் சண்டை போடுவார்கள்.

    கதை: வளர்ந்த செல்லக்குழந்தை

    என்னுடன் உத்தியோகம் பார்த்த ஓர் ஆசிரியை விஞ்ஞானப் பாடத்தை என்னுடன் பகிர்ந்து கற்பித்தாள். நான் பௌதிகம் மற்றும் ரசாயனம் மட்டும்.

    ஒரு பரீட்சைக்கு, `நீ உன் பாடத்தில் கேள்வித்தாளை அமைக்க வேண்டுமாம். உன்னிடம் தெரிவிக்கும்படி தலைமை ஆசிரியர் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்,’ என்று நான் அவளிடம் கூறினேன்.

    `நான் பண்ணமாட்டேன், போ! நீ என்ன சொல்வது?’ என்று அவள் முரண்டுசெய்தது பிற ஆசிரியர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

    எனக்கோ ஒரே எரிச்சல். `என்னவோ பண்ணிக்கொள்!’ என்றேன்.

    அவள் போய் தலைமை ஆசிரியரைச் சந்தித்தாள். அவர் என்ன `டோஸ்’ விட்டாரோ!

    தோல்வியடைந்தவள்போல் முகத்தை வைத்துக்கொண்டு, `சரி. நானே செய்யறேன்!’ என்று என்னிடம் வந்து கூறினாள், எனக்காக ஏதோ பெரிய தியாகம் செய்வதுபோல. நான் எதுவும் பேசவில்லை.

    அவள் அப்பால் சென்றதும், `இவளுக்கு ஆறு அண்ணன்மார்கள். இவள் ஒருத்திதான் பெண். வீட்டில் செல்லக்குழந்தையாக இருந்திருக்கலாம். அதற்காக எப்போதுமே எல்லாருமே அருமையாக நடத்தவேண்டும் என்றால் நடக்கிற காரியமா?’ என்றார் முதிர்ச்சியுடைய ஆசிரியை ஒருவர். அதை ஒப்புக்கொண்டு, எல்லாரும் நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம்.

    உங்கள் குழந்தைகள் சண்டை போடுகிறார்களா? ஒருவர் பக்கமும் சாயாமல், அவர்களை ரசியுங்கள். அடிதடியில் இறங்கினால் மட்டும் குறுக்கிடலாம். தானே பெரியவர்களானதும், ஒற்றுமையாகிவிடுவார்கள். அப்போது அவர்கள் போட்ட சண்டைகளையெல்லாம் நினைவுகூர்ந்து சிரிக்கலாம். அவர்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள், `எவ்வளவு வேடிக்கை! இப்போ சண்டையே போடறதில்லையே!’ என்று ஏங்கும் அளவுக்கு!

    தொடருவோம்

    Share