நலம் .. நலமறிய ஆவல் – (41)
நிர்மலா ராகவன்
தற்காப்புக் கலைகள்
அந்தப் பையன் ஒரே படுத்தல்! இவ்வளவு மோசமாகவா வளர்ப்பார்கள்!’
`பெண்ணா இது! ரொம்ப முரடு! எவன் மாட்டிக்கொண்டு திண்டாடப்போகிறானோ!’
ஐந்தே வயதான குழந்தைகளுக்குக் கிடைத்த (வேண்டாத) விமர்சனங்கள் மேலே குறிப்பிட்டவை. குழந்தைகளும் பெரியவர்கள்போல் நடக்க வேண்டும் என்ற எதிர்ப்புதான் பிறரை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. `நல்லதற்குத்தானே சொல்கிறோம்!’ என்று அவர்கள் திருப்தி பட்டுக்கொண்டாலும், இத்தகைய ஓயாத கண்டனத்தால் குழந்தைகளை பலவீனர்களாக ஆக்குகிறோம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. அதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையும் கிடையாது. யாரோ பெற்ற குழந்தைதானே!
அவரவர் குடும்பத்திலேயேகூட, தம் வயதுக்கேற்ப நடந்துகொள்வது சில குழந்தைகளுக்குப் பிரச்னையாக முடியலாம்.
அம்மாவைப் படுத்துதல்
எங்கள் உறவினர் குழந்தை அமெரிக்காவிலிருந்து என்னுடன் தொலைபேசியில் பேசினான். நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதே கிடையாது. இருந்தாலும், அவனுக்குத் தன் மனக்குறையை யாரிடமாவது சொல்லவேண்டும்போல இருந்தது போலும்!
எடுத்த எடுப்பிலேயே, `நிம்மலா பாட்டி! அம்மா என்னைக் கோச்சுக்கறா!’ என்றான், வருத்தம் தோய்ந்த குரலில்.
`நீ என்னப்பா பண்ணினே?’ என்று கேட்டதும், `படுத்தினேன்!’ என்றான் அந்த மூன்று வயதுக் குழந்தை.
எனக்குச் சிரிப்புப் பொங்கியது.
`படுத்தல்’ என்று பொதுவாகச் சொல்வது அதீத சுறுசுறுப்பான குழந்தை ஒன்றின் நடத்தையை. எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்பது குழந்தைகளின் இயல்பு.
எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று புரியாததாலோ, `முக்கியம்’ என்று படும் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பதாலோ, பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அவனது இயற்கையான ஆர்வம் தவறு என்பதுபோல் திட்டுவார்கள், தண்டிப்பார்கள்.
பல குழந்தைகளின் இயற்கையான ஆர்வம் தடைப்பட்டு, சற்றே மந்தமாகப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.
சில சிமயம், வளர்ப்பு முறையால், அதாவது `அன்பு’ என்றெண்ணி பெரியவர்கள் பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்வது குழந்தைகளுக்கு எதிர்மறையான விளைவைத்தான் உண்டுபண்ணும்.
`கடைசிக் குழந்தை (அல்லது ஒரே குழந்தை) என்று ரொம்ப செல்லம் கொடுத்ததில் தானாக எதுவும் செய்துகொள்ளத் தெரியவில்லை இவளுக்கு! சோம்பேறி!’
குடும்பத்தில் கிடைக்காத கவனிப்பை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று சில சிறுவர்கள் பிற மாணவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும், தெரிந்தே தவறு செய்வதும் உண்டு. தவறு செய்தால் தண்டனை பெறும்போதாவது பிறர் கவனிக்கிறார்களே!
பதின்ம வயதினருக்கு ஹார்மோன் மாற்றத்தால் அதிக சக்தி இருக்கும். தினசரி பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம் என்ற வாழ்க்கை சலிப்புதட்ட, தீய வழிகளில் மனம் செல்லும். பிறரை வீண்வம்புக்கு இழுக்கத் தோன்றும். `என்னைப் பாத்து ஏண்டா முறைக்கிறே?’ என்று காரணமே இல்லாது பிறருடன் சண்டைக்குப் போவார்களாம். (இப்படி நடந்துவந்த ஒரு மாணவன் பெருமையுடன் என்னிடம் தெரிவித்தது).
எப்படிச் சமாளிப்பது?
சுறுசுறுப்பான குழந்தையோ, பிறருடன் பழகத்தெரியாது வெட்கி ஒளிபவனோ, தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ள முயலாது பிறரது கையை எதிர்பார்ப்பவனோ அல்லது பிறரது கவனிப்பைத் தவறான வழிகளில் பெறத் துடிப்பவனோ இவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் வளர ஒரு சிறந்த வழி இருக்கிறது.
தற்காப்புக் கலை
அதிகபட்சமான சக்தியை நல்ல வழியில் செலுத்தும் வழி தற்காப்புக் கலையைப் பயிலுவது. ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் உடல் சோர்ந்து போகலாம். ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கும் உறுதி, அதை அடைந்தவுடன் கிடைக்கும் ஆனந்தம் இவைகளால் மனம் உற்சாகத்தை அடையும்.
தற்காப்புக்கலை என்று பெயர்தான். கற்க ஆரம்பிக்கையிலேயே அநாவசியமாக இத்திறனைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. ஆனாலும், அவசியம் இருந்தால், தற்காத்துக்கொள்ளத்தானே வேண்டும்!
கதை
ஜூடோவில் முதல் பாடமாக, தன்னிடம் முறைகேடாக நடக்க முயலும் ஆணை எப்படி எதிர்ப்பது என்பதைக் கற்றாள் அப்பெண்.
ஐந்து வருடங்களுக்குப்பின், அவளுடைய பதினேழாவது வயதில், ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்த ஒரு நகரில் ஒரு கயவன் அவளுடைய இடுப்பைப் பின்னாலிருந்து இரு கரங்களாலும் இறுகப் பிடிக்க, அவள் யோசிக்கவேயில்லை.
திரும்பி அவனுடைய மர்ம பாகத்தில் ஓங்கி ஓர் உதை விட்டாளாம். அவன் அலறியபடி கீழே விழுந்தான். ஜூடோ போட்டிகளில் பரிசு பெற்றிருந்த அப்பெண் திரும்பிப் பாராது நடந்துவிட்டாள், அவனைச் சுற்றி ஒரு கும்பல் கூடியதைக் கண்டு திருப்தி அடைந்தவளாக.
யாவரும் வெல்லலாம்
பள்ளிக்கூடத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாக் குழந்தைகளும் வெற்றி பெற முடியுமா? ஆனால், ஜூடோ, கராத்தே, டேக்வான்டோ (Taekwando) போன்ற தற்காப்புக் கலைகளில் அவரவர் திறமைக்கு ஏற்ப முன்னேறலாம். எப்படியென்றால், வாராவாரம் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு வருடமாக, வெள்ளை, மஞ்சள் என்று வெவ்வேறு நிறங்களைக்கொண்ட இடுப்புப் பட்டியைப் பெறும் தகுதியை அடைகிறார்கள்.
`முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!’ என்ற நிதரிசனம் ஒரு சிறுவனுக்குப் பெருமையை ஊட்டி, தன்னம்பிக்கையையும் வளரச் செய்கிறது.
கதை
சாங் என்ற பதினான்கு வயதுப் பையனுக்கு ஆடிசம். பிறருடன் பழகத் தெரியாது. தனி ஒரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பான். பிற பையன்கள் அவனை ஒரு கேலிப்பொருளாகக் கருதி, பலவாறாக வதைத்தனர்.
அதைக் கண்ட ஆசிரியர் அவனை ஒரு கோடியில் உட்கார வைத்துவிட்டு, அவன் பக்கத்தில் தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்ற அர்ஜூனனை அமர்த்தினார். எதுவும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
(கறுப்பு நிற இடுப்புப்பட்டி ஒருவன் தற்காப்புக்கலையில் நல்ல திறமையைப் பெற்றுவிட்டான் என்பதைக் குறிக்கும். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் இடைவிடாமல் மேற்பயிற்சி உண்டு. இந்தகையவர்கள் தமது ஆத்ம பலத்தைப் புரிந்துகொண்டுவிட்டதால், பார்க்க சாதுவாக இருப்பார்கள்).
அர்ஜூனனது திறமையை பள்ளிக்கூட விளையாட்டுத் தினத்தன்று எல்லாருமே பார்த்து அயர்ந்திருந்தனர். `ஒரு கையால் மட்டும் கனமான மரக்கட்டையை ஒரே அடியில் சுக்குநூறாக உடைப்பவன் ஆயிற்றே! இவனுடன் மோதுவதா!’ என்றஞ்சி ஒதுங்கினர்.
ஒரு பையன் மட்டும் அசட்டுத்துணிச்சலுடன் வம்புக்கு வந்துகொண்டே இருந்தான். ஒருவன் சாதுவாகத் தோற்றமளித்தால், வம்புக்கு இழுக்கும் உலகம் அல்லவா இது!
அவனது தொல்லை பொறுக்க முடியாது போக, அர்ஜூனன் அவனுடைய மணிக்கட்டை இறுகப் பிடித்து ஒரு விதமாக அமுக்க, அப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பாராதவனின் முகம் அதிர்ச்சியாலும், உடல் வேதனையாலும் துடித்தது.
அவன் கையை விட்டுவிட்டு, அமைதியாக, `So we understand each other!’ என்றானாம் அர்ஜூனன். மறைமுகமாக, `என் பலத்தைப் புரிந்துகொள்ளாது விளையாடாதே!’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறான்.
`சமயம் வரும்போது நம்மையும் காப்பான்!’ என்ற நம்பிக்கை பிறருக்கு வந்துவிட, அதற்குப் பிறகு யாரும் அவனுடன் மோதவில்லை. ஆடிசத்தால் பாதிக்கப்பட்ட பையன் சாங் நிம்மதியாக இருக்க முடிந்தது.
அர்ஜூனன் செய்ததுபோல், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க முடியும் என்ற உண்மை நிலை புரியும்போது, ஒருவன் தன்னுடைய சக்தியை உணர்கிறான். அமைதியாக எந்த பிரச்னையையும் அணுக முடிகிறது.
மேலும் பல பலன்கள்
யாருமே, `தற்காப்பு பயில்வது கடினம். என்னால் முடியாது!’ என்று அரைகுறையாக விலகி விடுவதில்லை.
சுமார் நான்கு ஆண்டு தற்காப்புப் பயிற்சிக்குப்பின், குஸ்தியைப்போல இருவர் ஒருவரோடு ஒருவர் மோதுவர் (Sparring). ஆரம்பத்திலும், இறுதியிலும் தலை குனிந்து எதிராளியை வணங்குவர். பிறரை மதிக்கும் குணமும், நியாயமாகப் போராட வேண்டும் என்ற தன்மையும் வளர்கின்றன. அத்துடன், தன்னைவிடப் பெரிய உருவமோ, மிகுந்த பலமோ உடைய ஒருவனைக்கூட வீழ்த்தமுடியும் என்ற நிதரிசனம் புரிய, தன்னம்பிக்கை பெருகிறது. வீண் கர்வம் ஒழிகிறது.
பல காலம் இடைவிடாது கடுமையாக உழைத்து பயிற்சி செய்து முன்னேறி இருப்பார்கள். அதனால், நன்கு உழைத்தால் எதிலும் பலன் கிடைக்கும் என்று தோன்றிப்போகிறது. தம்மை ஒத்த பலருடன் விட்டுக்கொடுத்துப் பழகும் குணம் வருகிறது.
சாப்பிடப் பிடிக்குமா?
பதின்ம வயதினருக்கு, முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு, உடல் வெகுவாக வளர்வதால், அப்பருவத்தில் உணவில் விருப்பம் அதிகரிக்கும். அளவு தெரியாமல் சாப்பிடுவார்கள். உடல் பருமனால் என்னென்னவோ உபாதைகள்!
தற்காப்புக்கலை பயிலும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும் உடலில் சதை போடாது. அதனால் அவர்கள் ஆசைதீர சாப்பிட முடியும். (அளவுக்கு மீறி குண்டானால், `மாஸ்டர்’ கண்டித்துவிடுவார்). சில ஆண்டுகளில், தசைநார்கள் மெல்லியதாக, ஆனால் உறுதியாக ஆகும். அதனால், உடல் வலு, விரைவு, எதையும் தாங்கும் மன உறுதி போன்ற நல்ல `பக்கவிளைவுகளும்’ உண்டு.
பிறரை நாம் அடிக்கும்போதோ, அடி வாங்கும்போதோ, அதை எப்படித் தடுப்பது என்று கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? இந்தப் பயிற்சியால் செறிவுடன் (Concentration) எதையும் செய்வது பழகிவிடுகிறது. கால் தடுக்கினாலும் கீழே விழாமல் சமாளிக்க முடியும்.
பெரியவர்களுக்கு
நான் பார்த்த டேக்வான்டோ வகுப்பில், ஒரு சிறுவனுடன் அவனுடைய தந்தையும் கற்க ஆரம்பித்தார்.
`முன்பெல்லாம் என் மகனுக்குப் பிறருடன் பழகத் தெரியாது. இப்போது தன் வயதை ஒத்தவர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகுகிறான். பள்ளிக்கூடப் பாடங்களிலும் முனைப்பு அதிகமாகி இருக்கிறது!’ என்றார்.
வேலைப்பளுவால் அவருக்கு ரத்த அழுத்தம் இருந்தது. போதிய பயிற்சி இல்லாததால் உடல் பருமனாகியது. எப்போதும் அயர்ச்சியாக இருந்ததாம்.
`இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. உடலை வளைத்து, முன்பைவிட நிறைய காரியங்கள் செய்ய முடிகிறது!’ என்றார் மகிழ்ச்சியுடன். `என் மகன் மூன்றாவது. நான் முதல் வகுப்புதான்! ஆறு வயதுப் பையன்களுடன் சரிசமமாகக் கற்பது நானும் சிறுவனாகிவிட்டதுபோல் இருக்கிறது!’ என்று சிரிக்கிறார்.
நம் வாழ்க்கையைச் சரியான பாதையில் செலுத்த வயது ஒரு பொருட்டா என்ன?
தொடருவோம்