நிர்மலா ராகவன்

பூனைகள் பலவிதம்

பூனையே கடவுள்

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2-1-1

பண்டைய எகிப்தில் பூனை வடிவிலிருந்த கடவுளைத் தொழுதுவந்தார்கள். ஏனெனில், உயிருக்கு அபாயம் விளைவிக்கும் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களைக் கொல்லும் ஆற்றல் பூனைக்கு இருந்தது. அதன்பின், ஒரு குடும்பத்தின் மக்கள் பெருக்கம், அமைதி ஆகியவைகளுக்கான தெய்வமாக மாறியது.

இப்போது எல்லா நாடுகளிலும், வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக பூனைகள் இருந்து வருகின்றன.

மனிதர்களைப்போலவே பிராணிகளுக்கும் உணர்வுகள், திறமைகள் எல்லாம் இருக்கின்றன. அது புரியாதவர்கள்தாம், `எனக்கு நாய், பூனையெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. சூ, சூன்னு விரட்டுவேன்!’ என்கிறார்கள்.

பூனைகள் மக்கு!

முன்பொருமுறை ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கேலிப்படம் பார்த்தேன். `நில், படு, கைகுலுக்கு!’ என்று என்ன ஆணை பிறப்பித்தாலும் ஒரு பூனை எதுவும் புரியாது, அப்படியே உட்கார்ந்திருப்பதுபோல் வரையப்பட்டிருந்தது. இறுதியில், `சமர்த்துப் பூனை!’ என்று பாராட்டுவார் கட்டளையிட்டவர். அப்போது வேடிக்கையாக இருந்தது.

ஆனால், நாய்களைப்போல் பூனைகளுக்கு எதுவும் புரியாது, மனிதர்கள் சொன்ன சொல் கேட்டு நடக்காது என்ற கருத்து எவ்வளவு தவறு என்று பூனைகளுடன் நெருங்கிப் பழகியபின் புரிகிறது.

பூனைக்குட்டிகளின் வரவு

ஒரு தாய்ப்பூனை வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பிரசவிக்கும். ஒரே சமயத்தில் மூன்று குட்டிகளை ஈனும்போது, அவைகளைப் பார்த்துக்கொள்ளும் சக்தி இல்லாவிட்டால், எங்காவது கொண்டு விட்டுவிடும்.

அப்படி எங்கள் வீட்டுக்கு ஐந்து முறை பூனைக்குட்டிகள் வந்திருக்கின்றன.

பாவம் வரும்!

எங்கள் பாட்டி வீட்டில் பூனைகள் சர்வசாதாரணமாக நடக்கும். சிறு வயதில், `பூனைகளைத் தொடாதே! அதன் ஒரு ரோமம் உதிர்ந்தால், ஏழேழு ஜன்மங்களிலும் துயர்ப்படுவாய்!’ என்று பயமுறுத்தி இருந்தார்கள். அத்துடன், `பூனை பிராண்டிவிடும்!’ என்ற மிரட்டல் வேறு. அதனால், பூனைகளைப் பார்த்தாலும் பாராததுபோல் நடந்துவிடுவேன்.

முதலாம் குட்டி

பதின்மூன்று வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம் அது. எங்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியிலிருந்து ஒரு பூனைக்குட்டியின் மெல்லிய குரல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. `ஐந்து நாட்களே ஆன குட்டி!’ என்றார் மிருக வைத்தியர். அக்குட்டியின் உடல் ரோமம் இல்லாது வழவழவென்று இருந்தது. `யாரோ அதைக் கொல்ல முயற்சித்து, சுடுநீரை அதன்மேல் கொட்டியிருக்கவேண்டும்!’ என்று அவர் மேலும் கூற, அதிர்ந்தோம்.

அந்தக் குட்டியின் வாயில் பாலில் தோய்த்த பஞ்சைப் பிழிய ஒருவர், மடியில் போட்டுக் கொஞ்ச சிறுவர்கள் என்று சிலர் எங்கள் குடும்பத்தில் இருந்ததால், எனக்கு வேடிக்கை பார்க்கும் வேலைதான் கிட்டியது. ஆனால், அடிக்கடி இடியோசை கேட்கும்போதெல்லாம் குட்டி (அந்தப் பெயரே நிலைத்துவிட்டது) என் மடியில் வந்து உட்கார்ந்துகொள்ளும். நான் விறைத்துப்போவேன்.

அதைத் தொடப் பிடிக்காது, `யாராவது இதைக் கீழே போடுங்களேன்!’ என்று கத்துவேன்.

`பாவம்! அது உன்னை அம்மாவா நினைக்கிறதும்மா. விரட்டாதே!’ என்று என் மகள் கூற, சற்று இளகினேன்.

அதுவரைக்கும் சில பூனைக்குட்டிகள் எங்கள் வீட்டில் கொண்டுவிடப்பட்டிருந்தாலும், அவைகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்ததால், மார்க்கெட்டில் கொண்டு விட்டுவிடுவோம்.

இந்தக் குட்டிக்கோ சரியாக நடக்கத் தெரியவில்லை. தடுமாறி விழுந்துகொண்டே இருந்தது. மருத்துவரின் உதவி தேவைப்பட்டது. `நாமே கவனிக்காவிட்டால், என்ன பண்ணும், பாவம்!’ என்று, அது தங்கலாம் என்று பெரிய மனது பண்ணினேன்.

காலையில் என் அறைக்கு வெளியே குட்டி கத்தியதால், ஆகாரம் அளிக்கும் பொறுப்பு என்னுடையதாயிற்று. `உள்ளே வாயேன்!’ என்று நான் அழைக்கும்வரை கதவுக்கு வெளியே காத்து நிற்கும்.

எல்லாருடைய அன்புக்கும் உகந்ததாக ஆன குட்டி, எட்டு மாதங்களுக்குப்பின் காணாமல் போயிற்று. அதன் உடல்நிலை சீராக ஆகாததால், எங்காவது தனியாகப் போய் இறந்திருக்கும்.

அந்த துக்கம் மறைய சில மாதங்களாயின.

அம்மா பூனை

சில வருடங்களுக்குப் பிறகு வெள்ளையும் கறுப்புமான ஒரு தாய்ப்பூனை தன் குட்டி ஒன்றுடன் வாசலில் நின்று எதையோ வேண்டுவதுபோலக் குரல் எழுப்பியது. `பசி!’ என்று அதை உள்ளே அழைத்து உணவு அளிக்கப்பட்டது. அதுவும் தங்கிவிட்டது. ஆனால் வீட்டுக்குள் வரக்கூடாது என்ற தடையை மீறவேயில்லை. நான் தமிழில் என்ன பேசினாலும் உடனே புரிந்துகொண்டது.

`தட்டில் தண்ணி விடறேன். நகர்ந்துக்கோ,’ என்றால் விலகும். `இப்போ குடி!’ என்று நான் சொல்லும்வரை ஒதுங்கி நிற்கும்.

சில நாட்களுக்குப்பின் அதன் குட்டி காணாமல் போய்விட, தாய் துடிதுடித்தது. என் காலைச் சுற்றி சுற்றி வந்தது. அதன் வேதனை எனக்குப் புரிய, அருமையாகத் தடவிக்கொடுத்தேன். இப்போது பயமோ, அருவருப்போ இருக்கவில்லை.

மாஞ்சா

அதே சமயத்தில் இன்னொரு குட்டி பின்பக்கத்திலிருந்த கதவின்வழி எட்டிப்பார்த்து, தீனமான குரலில் கத்தியது. குழந்தைகள் குதூகலமாக அதைத் தேட, பயந்துபோய் எங்கோ ஒளிந்துகொண்டது. `வேண்டாம்!’ என்று பெற்ற தாயே எங்கோ கொண்டுவிட்டபிறகு, யாரை நம்புவது!

அம்மா பூனையிடம், `எங்கே அந்த இஞ்சி நிறக் குட்டி?’ என்று கேட்க, அது புதரிடையே ஒளிந்திருந்ததைக் காட்டிக்கொடுத்தது.

இருந்தாலும் பெரிய பூனைக்கு அந்தப் புதிய வரவு பிடிக்கவில்லை. தனக்கு ஆகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம். `ஸ்..’ என்று அதனருகில் போய் சீறும். குட்டி நடுங்கும்.

இந்தப் புதிய குட்டி எல்லாரிடமும் மிகவும் அன்பாக இருந்தது. அதன் அன்பைக் கண்ணிலேயே காட்டும். என் பேரன் உடலெல்லாம் ஏறி விளையாடும். `ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறது! மாஞ்சா!’ (MANJA – மலாய் மொழியில் செல்லம்) என நாங்கள் கேலி செய்ததால், அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

ஓயாத கர்ப்பம்

குட்டிகள் பிறந்த உடனே தாய்ப்பூனை மீண்டும் கருவுற்றுவிடும். மூன்றே மாதங்களில் மற்றொரு பிரசவம்.

அம்மா பூனையும் இந்த விதிக்கு விலக்கில்லை.பருத்த வயிற்றுடன் அது தள்ளாடியபடி நடக்க, மாஞ்சா அதைத் துரத்தியது!

மூன்று குட்டிகள்! அவை தாய்ப்பால் குடிக்கும்போது, மாஞ்சாவும் குடிக்க ஆரம்பித்தது. தடுக்காமல், அம்மா பூனை அதைத் தான் பெற்றதாகவே ஏற்று, அருமையாக நக்கும். ஒரு குட்டியைத் தானே எங்கோ கொண்டுபோய்விட, மிஞ்சியிருந்த இரண்டில் ஒன்று காரில் நசுங்கி இறந்தது. மிஞ்சியிருந்த `கறுப்புக்குட்டி’க்கு சுவற்றின்மேல் தாவுவது, ஒரு மெல்லிய சுவற்றின்மீது நடப்பது போன்ற வித்தைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கும் பொறுப்பை மாஞ்சா விரும்பி ஏற்றுக்கொண்டது.

மீண்டும் கருவுற்ற அம்மா பூனை எங்கோ போய் இறந்துவிட, மாஞ்சாதான் மிகவும் துக்கப்பட்டது. இரண்டு முறை, பெற்ற தாயையும், பாலூட்டி வளர்த்த தாயையும் இழந்த துயரம் அதற்கு. சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்தது. ரொம்ப இளைத்தது. உடல் உபாதைகள் வர ஆரம்பித்தன.

ஆதரவாக ஒரு அண்ணன் இருந்ததால், கறுப்புக்குட்டிக்குத் தாயின் இழப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதற்கோ சாப்பிடுவதுதான் உலகமே. தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, மாஞ்சாவின் தட்டுக்குப் போகும். அதைத் தவிர்க்க, அதைக் குண்டுக்கட்டாக வீட்டுக்குள் தூக்கிப்போய், கதவைச் சாத்திவிடுவோம். வெளியே மாஞ்சா சாவதானமாகச் சாப்பிடும்.

ஒரு முறை, `மாஞ்சா பாவம், குட்டி! அதைச் சாப்பிட விடு! நீதான் சாப்பிட்டாச்சே!’ என்று நான் சொல்ல, தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதுபோல வீட்டுக்குள் போய் உட்கார்ந்துகொண்டது!

சங்கீதம்

சாயந்திர வேளைகளில் பூனைகளுக்கு ஆகாரம் போட்டுவிட்டு, என் பேத்தி என்னிடம் இசை கற்க வருவாள். அப்போது இரண்டு பூனைகளும் உள்ளே வரும்.

`எப்படி ஒலி எழும்புகிறது?’ என்று ஸ்ருதிப்பெட்டியை கடித்துப் பார்த்து, திட்டு வாங்கியது மாஞ்சா! `அடிப்பேன்!’ என்று நான் ஆள்காட்டி விரலைக் காட்டி மிரட்ட, அதற்குப்பின், விட்டுவிட்டது.

இசைஞானமுள்ள பூனைக்குட்டி

ஒரு நாள், நான் எங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள் நடந்துகொண்டிருந்தேன். அப்போது, அங்கு ஒரு மேசைமேல் கண்ணை மூடியபடி படுத்துக்கொண்டிருந்த கறுப்புக்குட்டி ஒரு நீண்ட மூச்சை இழுத்து, `ஸா’ என்ற ஸ்வரத்தை நீண்ட நேரம் மூச்சுப்பிடித்துப் பாடியது!

எனக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் பொங்கின. நான் யாருக்கோ கற்றுக்கொடுப்பதை இந்தப் பூனைக்குட்டி சரியாகக் கற்றுக்கொண்டுவிட்டதே!

`அட சமர்த்து! இன்னொரு தடவை பாடு!’ என்றதும், மிகக் குறுகிய காலம் அதையே பாடிவிட்டு, தூங்கிவிட்டது!

அதன்பின், சில நாட்கள் நான் ஒவ்வொரு ஸ்வரமாகப் பாடிக் காட்டி, `எங்கே பாடு! சமத்து!’ என்று கொஞ்ச, திரும்ப இசைக்கும். உச்சரிப்பு சீனர்களுடையதைப்போல. அதாவது, `கா’ என்றால், `ங்கா!’ என்று கேட்கும். `மா’ என்ற ஸ்வரம் `ம்வா’ என்று கேட்கும். ஸ்ருதி சுத்தமாகப் பாடி, கேட்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும். என்னைத் தவிர வேறு யார் பாடச் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாது இருந்துவிடும்.

குரு வந்தனம்

ஒரு முறை, கறுப்புக்குட்டி தன் நெற்றியால் என் காலைத் தேய்த்து, அதன்பின் நக்கியது.
`என்ன பண்றது?’ என்று நான் அதிசயப்பட்டபோது, பேத்தி விளக்கினாள்: `பாடி முடிந்ததும் நான் உன் காலைத் தொட்டு வணங்குவதுபோல் இதுவும் செய்கிறது!’

தீனிப்போத்தி

தீபாவளிக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் பேச்சும், சிரிப்புமாகப் பலகாரங்களை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்க, `தீனிப்போத்தி’யான (பாலக்காட்டு பிராமணர்களிடம் நான் கற்ற சொல்) கறுப்புக்குட்டி, அங்கேயே வட்டமிட்டது.

`நீ பாடு, மொதல்லே!’ என்று நான் ஒவ்வொரு ஸ்வரமாகப் பாட, அதுவும் உணவு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் பாடிக் காட்ட, விருந்தினர் பிரமித்தார்கள். பரிசாக, அன்று சாப்பாட்டு நேரத்திற்கு முன்னரே குட்டிக்கு உணவு.

யாரோ மாஞ்சாவைக் காட்டி, `இது பாடாதா?’ என்று கேட்டார்கள்.

விட்டுக்கொடுக்காமல், `இது வேட்டைத்திறன் மிக்கது!’ என்று பதிலளித்தேன்.

பல்லி, கரப்பான் பூச்சி, தவளை, வெட்டுக்கிளி, போன்றவைகளை எங்கள் காலணிமேல் கொண்டுவந்து அர்ப்பணித்திருக்கிறது மாஞ்சா — `நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கிறீர்கள். பிரதிபலனாக, நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அளிக்கிறேன்!’ என்பதுபோல்.

ஒரு முறை, இரண்டு பூனைகளும் என் காலணியைச் சுற்றி உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. அருகில் போய் பார்த்தால், ஓரடி நீளத்தில் உயிருள்ள பாம்பு! (அருகே இருந்த செம்பனைத் தோட்டங்களை நாசம் செய்யும் எலிகளைக் கொல்ல பாம்புகளை வளர்ப்பார்கள்).

`நான் பாம்பெல்லாம் சாப்பிடுவதில்லை. தாங்க்ஸ், மாஞ்சா!’ என்றேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு இறந்ததும், அதை வீட்டுக்கு வெளியே எறியலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். மாஞ்சாவுக்கு அது புரியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

துடைப்பத்துடன் வந்தபோது, பாம்பைக் காணோம். தேடியபின், மாஞ்சா அதைக் காரின் அடியில் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது. அரைமணி நேரம் அதனுடன் போராடி, அந்தப் பாம்பை வெளியே எடுத்து, வாசலில் தூக்கிப்போட்டோம். மீண்டும் மீண்டும் தூக்கிக்கொண்டு வந்தது!

இன்னொரு முறை ஒரு குருவிக் குஞ்சைக் கொண்டுவந்தது.

`அதைத் தூக்கி எறியணும். வீட்டு வாசலெல்லாம் இறகும், ரத்தக்களறியுமாக ஆகிவிடும்,’ என்று நாங்கள் பேசியபடி உள்ளே போய்விட்டு வந்தபோது, குருவியைக் காணோம்.

`GOOD BOY, MANJA!”

`எங்கே போட்டே, மாஞ்சா?’ என்று நைச்சியமாகக் கேட்டதும், ஒளித்த இடத்திலிருந்து கொண்டு வந்து காட்டியது!

பெரியவர்களால் ஏமாற்றப்படும் குழந்தைக்கும், இந்தப் பூனைக்கும் என்ன வித்தியாசம்?

பூனைகளால் விளையும் நன்மைகள்

பூனைகள் ரத்த அழுத்தத்தையும், ஒவ்வாமையையும் குறைக்கும். ஒரு முறை பூனையைத் தடவினாலே நம் மனது அமைதிப்பட்டுவிடும். மாரடைப்பு வரும் சாத்தியக்கூறும் குறைவுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதெல்லாம் நானும் அனுபவத்தில் கண்ட உண்மை.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நலம் .. நலமறிய ஆவல் … (37)

  1. அருமை ! உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட வரைவு ! பல ஆண்டுகளுக்கு முன் என்னுடைய வீட்டில் பதிமூன்று பூனைக்குட்டிகள் இருந்தன. ஒரு குடும்பமே ! ஒரு முறை பிறந்து சில நாட்களே ஆன பூனைக்குட்டி எனது காரின் சக்கரத்தின் மேலே உள்ள பகுதியில் அமர்ந்து கொள்ள, கார் சென்று பல மணித்துளிகளுக்குப் பின் அதை எனது ஓட்டுநர் கவனிக்க, மாலை வரை அதை பாதுகாத்து பத்திரமாகக் காப்பாற்றி அதை அதன் தாயிடம் கொண்டு சேர்க்கும் வரை பட்ட பாடு எனக்குத் தெரியும் !உயிரினங்கள் அத்தனைக்கும் உணர்வுகள் உண்டு.. புரிந்துகொள்ள முயன்றால் அது மனிதத்தின் வெற்றி !

  2. தங்கள் விமரிசனத்திற்கு மிக்க நன்றி.
    நீங்கள் எழுதியது போலவே ஒரு பூனைக்குட்டி கார் சக்கரத்தின்மேல் உட்கார்ந்திருந்ததைக் கவனியாது, என் கணவர் ஓட்ட ஆரம்பித்து, ஓரிரு வினாடிகளில் நிறுத்திவிட்டார். அடிபட்டுத் துடித்துக்கொண்டிருந்த குட்டியை ஒரு கூண்டில் போட்டு மிருக வைத்தியரிடம் கொண்டுபோனோம். அன்றிரவு அது ஓயாமல் கத்த, தாய்பபால் குடித்தால் சிறிது நிம்மதி அடையும் என்று வெளியில் விட்டோம். வீட்டுக்கு வெளியே அன்றிரவே இறந்துவிட்டது. இரவெல்லாம் மாஞ்சா என் அறைக்கு வெளியே கத்தியது ஏனென்று பிறகுதான் புரிந்தது.
    மீதி இருந்த கறுப்புக்குட்டி மனிதர்களை நெருங்கவே விடாது ஓட்டம் பிடிக்கும். என்னிடம் பாட்டு `கற்க’ ஆரம்பித்ததும், என் காலைச் சுற்றிக் கொஞ்சும். வேறு யாரும் தூக்கினாலும் குதித்து ஓடிவிடும். இன்றுவரை என் கணவர் இதுதான் அரைபட்ட குட்டி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *