நலம் .. நலமறிய ஆவல் … (34)
நிர்மலா ராகவன்
சமமாக நடத்த முடியுமா?
சில பெற்றோர் , `நான் என் குழந்தைகள் மூவரையும் சமமாக நடத்துகிறேன்!’ என்று பெருமையாகக் கூறுவது நடக்காத காரியம். ஏனெனில், முதலாவதாகப் பிறந்த குழந்தையின் குணாதிசயங்கள் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளிடமிருந்து வேறுபடும். இது இயற்கை நியதி. அத்துடன், வயதுக்குத் தகுந்தாற்போல் திறமைகளும் இருக்குமே! இவர்கள் அனைவரையும் சமமாக நடத்த எப்படி முடியும்?
வயதுக்கேற்ற வேலை
ஒரு குடும்பத்தில் குழந்தைகளை நடத்துவது — வீட்டு வேலையோ, பாராட்டோ, தண்டனையோ –அவரவர் வயதுக்கும் திறமைக்கும் ஏற்றபடி இருக்கவேண்டும். உதாரணமாக, எட்டு வயதான மகன் தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது அவன் வேலை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவனுடைய மூன்று வயது தம்பிக்கோ, தங்கைக்கோ அது கடினமான வேலை. அதற்குப் பதிலாக, அவர்களால் எளிதில் செய்யக்கூடிய வேலைகளைக் கொடுத்தால், அவர்களுக்கும் சுயமதிப்பு பெருகும்.
`அப்படி என்ன வேலை இருக்கிறது?’ என்கிறீர்களா? காலணிகளை வரிசையாக அடுக்கிவைப்பது, சப்பாத்தி, தோசை போன்றவற்றை ஒரு தட்டில் போட்டு அவர்களிடம் கொடுத்து, பிறருக்குப் `பரிமாற’ச் செய்வது இப்படி எதையாவது கொடுத்தால், மிகப் பெருமையுடன் செய்வார்கள். `எவ்வளவு சமர்த்தா வேலை செய்யறது, பார்!’ என்று பாராட்டிவைத்தால், எந்த வயதிலும் பொறுப்பு, வேலை என்றால் அஞ்சி ஓடமாட்டார்கள்.
பாராட்டால் மனவலிமை
வயதுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லாத பொறுப்புகளைச் சிறுவர்களுக்குக் கொடுக்கும்போது தவறுகள் நிகழலாம். தவற்றைப் பெரிதுபண்ணாது, அல்லது குற்றம் சாட்டாது, அடுத்த முறை அதே காரியத்தை எப்படிச் செய்தால் சரியாக அமையும் என்று விளக்கினால், தவறோ, ஏமாற்றமோ விளைந்தால் தாங்கும் மனவலிமை வரும். பொறுப்பாக முனைந்து செய்ததற்காகப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
பாரபட்சம் ஏன்?
ஆண், பெண் என்ற பாரபட்சம் காட்டாமல் வளர்த்தல் அவர்களுடைய பிற்காலத்திற்கு நல்லது.
பல இல்லங்களில், `என்ன இருந்தாலும், நீ ஒரு பொண்ணு! ஒன் தம்பி ஆம்பளை! அவனோட நீ போட்டி போடலாமா?’ என்று கூறிக் கூறியே பெண் குழந்தைகளை வளர்த்துவிடுகிறார்கள்.
இதனால், தாங்கள் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மை பெண்கள் மனதில் சிறுவயதிலேயே விதைக்கப்பட்டு விடுகிறது. துணிச்சலாக எந்தக் காரியத்தைச் செய்யவும் தயங்கி, `இப்படிச் செய்வதால் நமக்கு அவப்பெயர் வந்துவிடுமோ?’ என்று யோசிக்க முனைகிறார்கள்.
வேறு சில இல்லங்களில் இதற்கு நேர் எதிரிடையான வளர்ப்புமுறை. `சில காலம்தான் நம்முடன் இருக்கப்போகிறாள். கல்யாணமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமோ!’ என்று, பெண்களுக்கு நிறைய சுதந்திரமும் சலுகையும் கொடுத்து வளர்ப்பார்கள்.
ஆனால், திருமணமானபின்னரும் அவள் விரும்பியதெல்லாம் கிடைக்கும், அவளது தனித்துவத்திற்கு மதிப்பு கிடைக்கும் என்பது உறுதியில்லை.
பிறர் பாராட்டியபோது பல வெற்றிகளைப் பெற்றவள், இப்போது அடுக்கடுக்காக தோல்வியைச் சந்திக்கிறாள். அப்போது, `பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தோமே! இப்போது என்ன ஆகிவிட்டது?’ என்ற குழப்பமும் வருத்தமும்தான் மிஞ்சும். இளம் வயதில் குடும்பத்தினர் அளித்த துணிவு கைகொடுக்க, மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது.
வேலையில் என்ன வேற்றுமை?
`இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை’ என்ற பாகுபாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல. இருவருமே கல்வி பயில்கிறார்கள், வெளிவேலைக்குப் போகிறார்கள். ஆகையால், சிறுவயதிலிருந்தே எளிதான வீட்டுக்காரியங்களில் இருபாலரையும் ஈடுபடுத்தினால், அவர்கள் சுதந்திரமாக வாழப் பழகிக்கொள்வார்கள்.
சில சமயம், `நான்தான் வேலைக்காரியா?’ என்று முரண்டு செய்வார்கள் சிறுவர்கள்.
`நான்தானே தினமும் சமைக்கிறேன்! நான் என்ன, சமையல்காரியா?’ என்று கேட்டு அவர்களைச் சிரிக்க வைத்துவிட்டு, `நம் வீட்டில் வேலை செய்தால் அதில் தவறோ, கேவலமோ இல்லை,’ என்று புரிய வைக்கலாம்.
இதனாலெல்லாம் பெரியவர்கள் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கு நன்மையாகத்தான் முடியும்.
கதை 1
எங்கள் குடும்ப நண்பரான இஸ்மாயில் குழந்தை வளர்ப்பை மனைவிடம் விட்டிருந்தார். அசிரத்தையால் அல்ல; அது அவளுடைய பொறுப்பு, நாம் குறுக்கிடுவது நாகரீகமாகாது என்ற பெரிய மனதுடன்.
இஸ்மாயில் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. மனைவியோ அதிகம் படிப்போ, குழந்தைகளின் மனோபாவத்தைப் புரிந்துகொள்ளும் திறமையோ இல்லாதவள். `என் குழந்தைகளெல்லாம் ரொம்ப வீக்!’ என்று, என்னைப் பார்க்கும்போதெல்லாம் அரற்றுவார் நண்பர்.
`எதை ஆரம்பித்தாலும் பாதியில் விட்டுவிடுகிறான்!’ என்று பதினேழு வயதான கைருல்லை என்னிடம் அனுப்பினார். ஏதாவது வேலை கொடுத்தால், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துகொள்வான். ஈராண்டுகள் அவனுக்குப் பாடங்களைப் போதிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு.
கைருல் ஒரு வழியாக பள்ளி இறுதியாண்டுப் படிப்பை முடித்ததும், `அவனுக்கு படிப்பில் கொஞ்சங்கூட பிடிப்பில்லை. சித்திரம் வரைய மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல திறமையும் இருக்கிறது. அத்துறையில் ஈடுபடுத்தினால், நன்றாக முன்னுக்கு வருவான்,’ என்றேன். என் வார்த்தைகளை மதித்து, மகனை ஃபிரான்சு நாட்டிற்கு அனுப்பினார், அத்துறையில் சிறக்க.
துணிச்சலான பெண்கள்
நான் பார்த்தவரை, தற்காப்புப் பயிற்சியைப் பயின்ற பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள்.
கதை 2
எனது பதின்ம வயது மாணவிகளில் ஒருத்தியான ராபியா பிற பெண்களைவிட வெளிப்படையாகப் பேசுவாள். பிற பெண்கள் தம் உடலைக் குறித்து வீண் வெட்கம் கொள்வது ஏன் என்று என்னுடன் கலந்து பேசியிருக்கிறாள். அவள் சிலாட் (SILAT) என்னும் தற்காப்புக்கலையில் சிறந்தவள் என்று பிறகு அறிந்தேன்.
இம்மாதிரிப் பெண்கள் நளினமாக, ஒரு காலின் முன்னால் இன்னொன்றை வைத்து, நடக்கமாட்டார்கள். தம் வயதொத்த பையன்களுடன் சரிசமமாகப் பழகுவார்கள். இதனால் எல்லாம் பிற பெண்களின் கேலிக்கு ஆளானாலும், அதைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
கதை 3
சுயநம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட ஒரு தமிழ்ப்பெண் உயர்கல்வி கற்று, ஓர் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள்.
அவளைவிட அனுபவம் முதிர்ந்த சீனப்பெண்மணி, “இந்தமாதிரி ஆடைகளையெல்லாம் நீ உடுத்தி வரக்கூடாது!” என்று கண்டித்தாள்.
“நான் அணிந்திருப்பது பஞ்சாபி ஆடை. இந்தியப் பாரம்பரிய உடை. இது தவறு என்று எழுதப்பட்ட ஏதாவது சட்டம் இங்கு இருக்கிறதா? எனக்கு அதைக் காட்டு!” என்று கேட்க, மற்றவள் வாயடைத்துப்போனாளாம்.
இச்செய்தி பிற இந்தியப் பெண்களிடம் பரவ, வழக்கமாக குட்டைப்பாவாடையோ, கவுனோ அணிபவர்கள் அதன்பின், `சௌகரியமாக இருக்கிறது!’ என்று ஸல்வார், சூடிதார் போன்ற உடைகளை அதிகம் வாங்கி அலுவலகத்திற்கு அணிந்துவந்தார்களாம்!
பெண்களை வதைக்கும் ஆண்கள்
ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டால், எதையோ பெரிதாகச் சாதித்துவிட்டதுபோல் நினைத்துக்கொள்ளும் தாய்மார்கள் தவறு செய்யும்போது அவர்களைக் கண்டித்து வளர்க்கமாட்டார்கள்.
வேறு சில பெற்றோர் குழந்தை வளர்ப்பில் அசிரத்தையாக இருந்துவிடுகிறார்கள்.
இப்படி வளர்க்கப்பட்டவர்கள் தாம் என்ன செய்தாலும் சரிதான் என்ற மனப்போக்குடன் வளர்வதால், பெண்களை வம்புக்கு இழுக்கிறார்கள். அல்லது, பாலியல் ரீதியில் வதை செய்யத் துணிகிறார்கள்.
கதை 4
பதினான்கு வயதான மாணவர்கள் தம் நீலப்படப் பழக்கத்தை (!) என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, வகுப்பில் மாணவர் தலைவன் மட்டும் ஏனோ அவைகளைப் பார்க்க விரும்புவதில்லை என்று அதிசயப்பட்டார்கள். அவனை அழைத்து விசாரித்தேன்.
`எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன!’ என்றான்.
நான் முகமலர்ச்சியுடன், `உனக்கு உன் தாயை ரொம்பப் பிடிக்குமோ?’ என்று கேட்டேன்.
ஒரு தாய் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால், எந்தப் பிள்ளையும் கெட்டுப்போகமாட்டான்.
கதை 5
மலேசியாவில், விவாகரத்து சம்பந்தமான புள்ளி விவரங்களைச் சேகரிக்கவென சம்பந்தப்பட்ட அரசாங்கத்துறைக்குச் சென்றிருந்தேன்.
அங்கு வேலை செய்த ஒரு மலாய்ப்பெண், `நானும்தான் வேலைக்குப் போகிறேன். ஆனால், வீட்டுக்கு வந்ததும், சமையல், துணி தோய்த்தல், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொடுத்தல் — இவை எல்லாவற்றையும் நானேதான் செய்யவேண்டும். என் கணவரோ, டி.வி பார்ப்பார். இல்லாவிட்டால், தினசரியில் மூழ்கிவிடுவார்,’ என்று என்னிடம் பொரிந்தாள். அப்படியும் மனம் ஆறாது, `அதுதான் என் கணவர்!’ என்றாள் அழுத்தமாக.
`எல்லாக் கணவன்மார்களும் அதே லட்சணம்தான்!’ என்றாள் பக்கத்திலிருந்தவள், நிராசையுடன் கூடிய பெருமூச்சுடன்.
இப்படிப்பட்ட மனக்கசப்புடன் இருக்கும் பெண்ணிடம் அவள் கணவன் எப்படி அன்பை எதிர்பார்க்க முடியும்?
இனி பேச என்ன இருக்கிறது!
பல இல்லங்களில் முப்பது, நாற்பது வருட இல்லற வாழ்க்கைக்குப்பின், கணவனோ, மனைவியோ, `நாங்க ரெண்டு பேரும் அதிகமா பேசிக்கிறதே கிடையாது!’ என்று சொல்லிக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது.
உடலுறவுக்கும், பிள்ளை பெறுவதற்கும்தானா திருமண பந்தம்?
பெண்களை மதிக்கக் கற்றவர்கள் மனைவியை உற்ற தோழியாக நடத்துவதால், வயதானபின்னரும் அவர்களால் கலந்து பேச முடிகிறது. மனைவியின் வேலைப்பளுவைப் புரிந்து அதைக் குறைக்க தம்மால் ஆனதைச் செய்கிறார்கள். வீட்டுவேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் விரும்பிப் பங்கெடுக்கிறார்கள்.
அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு விஷயங்களைப்பற்றிப் பேசினால்தானே உறவு பலப்படும்?
தொடருவோம்