-பேரா.வி.நாகலெட்சுமி

பண்டைய தமிழர் ஆட்சிமுறை குடியாட்சி தழுவிய முடியாட்சி. நாடு நல்லமைதி பெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசுமுறை சிறந்து விளங்க வேண்டும். ஆட்சியே ஒரு நாட்டை வழிநடத்துகிறது. ஆட்சி சரியில்லாது போனால் அறமோங்காது.  உலகம் மழையை நோக்கி வாழ்வது போல் நாடு அரசனின் செங்கோண்மையை நோக்கி வாழ்கின்றது. ஒளவையாரின் நீதிநூல்கள் வழி ஆட்சிமுறைக் கருத்துக்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஆட்சிமுறை

நாட்டின் அரசாட்சியை நடத்துபவன் அரசன். அவன் அறநெறி பிழையாது குடிமக்கள் நன்மை பேணி ஆட்சி செய்யக் கடமைப்பட்டவன். மக்களுக்காக ஆட்சி செய்யும் அரசனின் ஆணையின்படி மக்கள் நடக்க வேண்டும். ஆட்சியில் வல்லவன் என்று பெரியோர்கள் போற்றும்படி அரசன் நடந்து கொள்ளவேண்டும்.

 ‘சக்கர நெறி நில் (ஆத்திசூடி.43)

தக்கோனெனத்திரி (ஆத்திசூடி.54)

தூக்கி வினைசெய்’(ஆத்திசூடி.59)

எந்தவொரு காரியத்தையும் முடிப்பதற்குரிய வழியை ஆராய்ந்து செய்யவேண்டும்.

வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்” (குறள்.471)

என்று திருக்குறள் கூறுகிறது.

அரசனது கடமை

ஆட்சி செய்பவன் தன்னுடைய நலம் மட்டுமல்லாது உடல் நலத்தையும் எண்ணி எந்தச் செயலையும் செய்யவேண்டும். சுயநலமற்ற சேவையை நாட்டில் உள்ள பலரும் மதித்துப் போற்றுவர். அரசு இருக்கையில் அமர்ந்திருப்பவன் அறிந்து கொள்ள வேண்டியது மக்கள் துன்புற்ற இடத்திற்குச் சென்று அவர்களுக்கு உதவி புரிவதே ஆகும்.

மலையவும் கடலவும் பண்ணியம்
ஆறுமுட் டுறாஅ  தறம்புரிந் தொழுகும்
நாடல் சான்ற  துப்பிற் பணைத்தோட்
பாடுசா  னன்கலந் தரூஉம்
நாடுபுறந்  தருத  னினக்குமார் கடனே(பதிற்றுப்பத்து.59:15-19)

என்று மக்களை ஆளும் மன்னனின் கடமையைப் பதிற்றுப்பத்துக் கூறுகிறது.

எனவே, ஒளவையாரும் ஆட்சி செய்பவர் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை மனதிற் கொண்டு,

தானமது விரும்பு’ (ஆத்திசூடி.55)

நாடொப்பன செய்’ (ஆத்திசூடி.56)

கொற்ற வனறிதலுற்றிடத் துதவி’ (கொன்றை வேந்தன்.23)

என்று கூறியுள்ளார்.

போர்முறை

மன்னன் மிகுதியாய்ச் சினம் கொண்டால் இவர் நமக்குத் தொன்று தொட்டுப் பழகி வருபவர் என்பதையும் நிலைநிறுத்தார். இவர் நமக்கு நட்பினர் என்பதையும் பார்க்கமாட்டார். அவையன்றி இவர் நமக்கு உரியவர் என்பதையும் சிறிதும் நினைக்கமாட்டார்.

  “பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
   கிழமை பிறிதொன்றும் கொள்ளார்…..
       …………………………..
  ஆர்வலரும் இல்லை அவர்க்கு (நீதிநெறிவிளக்கம்.47)

ஒளவையும் இதனையே தோல்வியடையக்கூடிய சண்டையாகிய தொழிலைச் செய்யாதே; போர்முனையில் நின்று  கொண்டிருக்காதே; மூர்க்க குணமுள்ளவர்களோடு சேர்ந்து பழகாதே என்றும், தணியாத கோபமானது சண்டையாக முடியும் என்றும்  கூறுகிறார்.

 ‘போர்த்தொழில் புரியேல்’ (ஆத்திசூடி.86)

 ‘முனைமுகத்து நில்லேல்’ (ஆத்திசூடி.91)

மூர்க்கரோடு இணங்கேல்’ (ஆத்திசூடி.92)

பகைவனுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், வீரனுடைய கேண்மை கூர்மையான அம்பாகும் என்றும், அரசன் ஒருவனைக் கோபிப்பானேயானால் அவனுக்கு அப்பொழுதே துணையாக வந்து உதவுபவர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதனையும்,

மாற்றானுக்கு இடங்கொடேல்’ (ஆத்திசூடி.88)

வீரன் கேண்மை கூரம்பாகும்’ (கொன்றை வேந்தன்.84)

வேந்தன் சீறின் ஆந்துணையில்லை’ (கொன்றை வேந்தன்.88)

என்று போர்முறைப் பற்றிச்சொல்லிவிட்டுப் போர்புரியேல் என்றும் கூறியுள்ளார் ஒளவையார்.

அரசர்க்காகாதன

பிறருடன் சூதாடுதல் தவறான செயலாகும். எனவே, சூதாடுதலை ஒருபொழுதும் விரும்பக்கூடாது.பொருளை அபகரிக்க ஆசை கொள்ளக்கூடாது. அது ஆபத்தாய் முடிந்துவிடும்.

கொள்ளை விரும்பேல்’ (ஆத்திசூடி.41)

சூது விரும்பேல்’ (ஆத்திசூடி.48)

என்கிறார் ஒளவையார்.

நாட்டை ஆளும் அரசர்க்கு அமையக்கூடாத குணங்களையும் செயல்களையும்,

போகம் பொருள்கேடு மான்வேட்டம் பொல்லாக்கண்
 சோகம் படுஞ்சூதே சொல்வன்மைசோகக்
 கடுங்கதத்துத் தண்ட மடங்காமை காப்பி
 அடுங்கதமி லேனை யரசு”  (ஏலாதி.18)

என்று ஏலாதி கூறுகிறது. 

கல்லா அரசனும் காலனு நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்
நல்லாரைக் காலன் நணுகநில்லானே

என்று நாலடியார் எடுத்துக்காட்டுகிறது.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையார் மன்னற்கு
தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்ற விடமெல்லாம் சிறப்பு”  (மூதுரை.26)

என்று அரசனுக்குக் கல்வி இன்றியமையாததொன்றாகும் என்கிறார் ஒளவையார்.

கொடைத்தன்மை மாறாதவர்

அரசர்கள் தத்தம் செல்வத்திற் குறைந்தவராயினும் அவ்வறுமையினால் மன ஊக்கத்திலும் கொடைத்தன்மையிலும் குன்றமாட்டார்கள்.

“…………………..


தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கேட்டால்
மனஞ்சிறிய
ராவரோ மற்று” (மூதுரை.28:3-4)

நாட்டாட்சி மக்கள் நன்மைக்காக இயங்க வேண்டுமெனின், புலவர்களே நாட்டையாள வேண்டும்; அல்லது மன்னர்கள் புலவர்களாதல் வேண்டும் என்றார் மேனாட்டறிஞர் ஒருவர். புலவர்கள் அரசாளும் வாய்ப்பைப் பெற்றிலர். ஆனால், மன்னர்கள் புலவர்களாக இருந்தார்கள். ஆதலின் அறநெறியிற் சென்ற அவர்கள் ஆட்சி எவரும் போற்றும் நிலையில் இருந்தது. அரசன் தன் கடமையில் தவறாது போர்முறையில் வழுவாது கொடைத்தன்மை குன்றாது அக்காலச் சூழ்நிலைகட்கு ஏற்பச் செய்து மக்களைப் புரந்து மாண்புற்றனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.