கற்றல் ஒரு ஆற்றல் -56
க. பாலசுப்பிரமணியன்
கற்றலும் வீட்டுச்சூழ்நிலைகளும் (4)
“அப்பா” என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி .. பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கு தாஜ்மகாலைப் பற்றிய ஒரு செயல்பாடு கொடுக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் அதன் வடிவத்தை தயார் செய்து கொண்டுவரும்படி கூறப்படுகின்றனர். அதன்படி பல மாணவர்களுடைய வீடுகளில் பெற்றோர்கள் அருகில் உள்ள ஒரு கடையில் தயாரிக்கப்பட்ட ஒரு வடிவத்தை விலைகொடுத்து வாங்கி அதை மாணவர்களே தயாரித்ததாக பொய்ப்படுத்தி பள்ளிக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் ஒரு தந்தை மட்டும் தனது மகனுக்குத் துணையாக அமர்ந்து அவனையே அதைத் தயாரிக்கச் செய்து எடுத்துச் செல்ல உதவுகின்றார். இந்த வடிவம் கடையில் வாங்கிய வடிவத்திற்கு இணையாக இல்லாததாலும் மேலும் அது நிலையாக இல்லாததாலும் நிராகரிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்கள் அதைக் கொச்சைப்படுத்தி அந்த மாணவனின் மனம் புண்படச் செய்கின்றனர் திரையில் கதை தொடர்கின்றது..
ஆனால் இது இன்று பல இடங்களில் நடக்கின்ற உண்மையான நிகழ்ச்சி. பள்ளியிலே கொடுக்கப்படும் பல செயல்கள் தாய் தந்தையாராலோ அல்லது உறவினர்களாலோ செய்யப்பட்டும் அல்லது அருகிலுள்ள கடைகளில் விலைக்கு வாங்கப்பட்டும் இருக்கும் நிலையில் அது மாணவர்களின் கற்றலுக்குச் சான்றாக அமைகின்றது. நர்சரி வகுப்பு முதல் கல்லூரிகளில் ஆராய்ச்சி வரைக்கும் பதிவுகளும், வடிவமைப்புக்களும், கோப்புக்களும் தயாரான நிலையில் விற்கப்படும் வேதனை நிதர்சனமான உண்மை. கல்வியை விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டதற்கு மறக்கமுடியாத சாட்சி.
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் சிந்தனைக்குரிய கேள்விகளும், ப்ராஜெக்ட்டுகளும் அவர்களால் செய்யக்கூடியதாகவும் திறமைக்கும் சூழ்நிலைக்கும் உகந்ததாகவும் இருத்தல் மிக்க அவசியம். இந்த வடிவமைப்புக்கள் அவர்களால் சொந்தத் திறனுக்கும் சமூகப் பொருளாதாரத் சூழ்நிலைகளுக்கு ஏற்புடையதாகவும் இருத்தல் அவசியம். இவைகளின் நோக்கம் எந்த குடும்பத்தைச் சார்ந்தவரால் தன் குழந்தைக்கு அதிகமாகச் செலவழிக்க முடியும் என்பதற்கு விளக்கமாக இல்லாமல் எவ்வாறு ஒரு குழந்தையின் ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதை யோசித்துக் கொடுப்பது நல்லது.
வீடுகளில் பெற்றோர்கள் இந்தமாதிரியான நுணுக்கமான செயல்களுக்கு தங்கள் குழந்தைச் செல்வங்களுடன் கூட அமர்ந்து அதன் செயல்பாடுகளுக்குத் துணையாக இருத்தல் அவசியமாகிறது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகள் அந்த ப்ராஜெக்ட்டுகளின் தரங்களையோ அல்லது மாணவர்களின் சாதிப்புக்களை பாராட்டுவதாக மட்டுமின்றி அவர்களின் முயற்சிகளை பாராட்டுவதை நோக்கமாகக் கொள்ளவேண்டும்.
பெற்றோர்கள் இந்தத் தருணங்களில் தங்களுக்கு ஏதாவது கருத்துக்களோ அல்லது மனக்குறைகளோ இருந்தால் அவற்றை பள்ளி நிர்வாகத்தோடு பேசுதல் வேண்டும். “அப்பா” படத்தில் காட்டியது போல் பள்ளிகள் செவிமடுக்க மறுத்தால் அதைத் திருத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவதில் தவறு ஏதுமில்லை.
தங்களுடைய குழந்தைகள் இளம் வயதிலேயே பாராட்டுக்களுக்கு பாத்திரம் ஆகவேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய புகைப்படங்கள் பத்திரிகைகளில் வரவேண்டுமென்றோ எதிர்பார்த்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தவறு. பல நேரங்களில் தங்கள் குழந்தைகளை தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரங்களாக்க பெற்றோர்கள் நேரத்தையும் பொழுதையும் செலவழித்து அதில் அவர்கள் வெற்றிபெற முடியாது போனால் அவர்களுடைய முயற்சியையும் தன்னம்பிக்கையையும் தாழ்மைப்படுத்தும் செயல்களும் காணப்படுகிறது. இந்தக் காரணங்களினால் சில நேரங்களில் குழந்தைகள் மன அழுத்தங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். சில நேரங்களில் குழந்தைகளுக்குத் திறனோ அல்லது விருப்பமோ இல்லாத பட்சத்திலும் அவர்களைத் தங்கள் தற்பெருமைக்காகவும் கனவுகளின் வெற்றிக்காகவும் ஈடுபடுத்துவதும் வெளிப்படியாகத் தெரிகின்றது. இந்தப் போக்கினைத் தவிர்த்தல் குழந்தைகளின் மன நலனுக்கும் கற்றலின் மேம்பாட்டிற்கும் அவசியமானது.
எந்த ஒரு செயலிலும் குழந்தைகள் ஈடுபடும்பொழுது அதில் உள்ள தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவதை விட அந்தத் தவறுகளுக்கு என்ன காரணம் என்பதைச் சொல்லி அதை எவ்வாறு திருத்திக்கொள்ளவேண்டும் என்று கருத்துச் சொல்லுவது மேன்மையானது. ஒருவேளை, அந்தத் தவறுகளுக்கு காரணங்கள் நமக்குத் தெரியாவிட்டால் அதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் பேசி அவர்களுடைய கருத்துக்களை ஏற்று முறைப்படுத்துவதும் ஒரு நல்ல வழியாகும். ஒரு குழந்தையின் மன மற்றும் அறிவு வளர்ச்சிக்கும் நலத்திற்கும் வீட்டுச் சூழ்நிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே இந்தச் சூழ்நிலை அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏதுவாக அமைதல் மிக அவசியம்.
(தொடரும்)
எந்த ஒரு செயலிலும் குழந்தைகள் ஈடுபடும்பொழுது அதில் உள்ள தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவதை விட அந்தத் தவறுகளுக்கு என்ன காரணம் என்பதைச் சொல்லி அதை எவ்வாறு திருத்திக்கொள்ளவேண்டும் என்று கருத்துச் சொல்லுவது மேன்மையானது. நண்பர் திரு.க பாலசுப்ரமணியம் அற்புத படைப்புக்கு பாராட்டுக்கள். நன்றி வணக்கம்
..நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்
தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு உளமார்ந்த நன்றி
க. பாலசுப்ரமணியன்