நிர்மலா ராகவன்

கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவியது — வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர் படர்ந்தாற்போல்.

அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த முக்காலிமேல் சுடுநீர் போத்தல், கோப்பை, `டிஷ்யூ’ பேப்பர். கீழே குப்பைக்கூடை. அந்தச் சிறிய அறை மலிவானதொரு ஆஸ்பத்திரியை நினைவுபடுத்தியது.

அவளது கட்டிலின் மேல் அமர்ந்துகொண்ட முகுந்தன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான்.
“பிள்ளை போனாப் போகட்டும்! ஒனக்கு ஏதாவது ஆகியிருந்தா! ஐயோ!”
தன்மேல்தான் கணவருக்கு எவ்வளவு அன்பு! வேணிக்குப் பெருமிதமாக இருந்தது.

`புருஷன் வீட்டிலே எல்லாரையும் அனுசரிச்சுக்கிட்டுப் போகணும், வேணி. வீட்டில நடக்கிறது எதுவும் நாலு சுவத்துக்குள்ளதான் இருக்கணும். எல்லாத்தையும், எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்காதே!’ திருமணம் ஆவதற்குமுன் அம்மா அளித்த அந்த உபதேசம் அனாவசியம் என்று தோன்றியது.

கணவரைப்பற்றி தப்பாகச் சொல்ல என்ன இருக்கிறதாம்!

எங்கிருந்தோ வந்த பெண், ஒருநாள் கூத்தில் தன்னை வாழ்நாள் முழுவதும் அவனுடன் இணைத்துக்கொண்டு, அதற்காகவே இப்பிறவி எடுத்ததுபோல் நடந்துகொண்டது முகுந்தன் தன்னைப்பற்றிக் கொண்டிருந்த மதிப்பை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியது.

`ஆண் என்பவன்தான் எவ்வளவு மேலான பிறவி!’ என்று தோன்றிப் போயிற்று. தன் மனைவி, இதிகாச புராசங்களில் வரும் ரிஷிபத்தினிகள் மாதிரி தன் தேவைகளை எப்படி குறிப்பாலேயே நிறைவேற்றுகிறாள், எப்படித் தன் வாக்கையே வேதமாக எடுத்துக் கொள்கிறாள் என்று நண்பர்களிடம் பெருமை அடித்துக்கொண்டான்.

அவர்களும், `ஒனக்கென்னப்பா! நீ கிழிச்ச கோட்டைத் தாண்டாத மனைவி! இப்படி அமைய புண்ணியம் பண்ணியிருக்கணும்,’ என்று மேலும் உசுப்பேற்றினார்கள்.

அதிகாரமே அது ஒரு போதையாக, மனைவிக்கும் ஒரு மனம் இருக்கும், உணர்ச்சிகள் இருக்கும் என்பதெல்லாம் அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. வேணியும் கணவன் எப்படி ஆட்டுவித்தாலும், அதை பெரிதுபடுத்தாது அமைதியாக ஏற்றுக்கொண்டாள்.

அவளுக்குக் குறைப்பிரசவம் ஆனது தன்னால்தான்; அவளது உடல்நிலையைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காது, தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் வளைந்து கொடுத்ததுதான் என்ற குற்ற உணர்வு அலைக்கழைக்க, அவளிடம் அன்பைப் பொழிவதுபோல் நடந்துகொண்டான் முகுந்தன்.
உடல் தேறி, வேணி மறுபடியும் நடமாட ஆரம்பித்ததும், பழைய நிலை திரும்பியது. அவள் செய்தது எல்லாமே குற்றமாகப் பட்டது. ஓயாமல் அவளை விரட்ட ஆரம்பித்தான்.

திடீரென கிடைத்த கணவரின் அன்பும், பரிவும் மாறியது ஏன் என்று வேணிக்குப் புரியவில்லை. அடிக்கடி ஆரோக்கியம் கெட்டது. அப்போதாவது கணவனின் அன்பு திரும்பாது?

முகுந்தனுக்கோ, ஆத்திரம்தான் எழுந்தது. “அப்பவே எல்லாரும் தலைபாடா அடிச்சுக்கிட்டாங்க, ஒனக்கு இந்தப் பொண்ணு ஏத்ததே இல்லடான்னு. அதைக் கேட்டிருந்தா, இப்படி ஓயாம பொண்டாட்டிக்கு நர்சா ஆகவேண்டி இருக்குமா? வெளியழகைப் பாத்து மயங்கினதுக்கு எனக்கு நல்லா வேணும்!’ என்று அவன் தலையில் அடித்துக்கொண்டபோது, வேணிக்கு அவமானமாக இருந்தது.

“என்னமோ, இப்பத்தான் இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணா வருது. கல்யாணத்துக்கு முந்தி நல்..லா இருந்தேன்!’ என்று ஈனஸ்வரத்தில் அவள் பதிலளித்தது அவனுடைய ஆத்திரத்தை அதிகரித்தது. “ஒன்னை என்ன, இங்க பட்டினி போட்டுக் கொல்றாங்களா?” என்று கத்திவிட்டு, “என்னை மாதிரி ஒரு நல்ல புருஷன் கிடைக்க நீ குடுத்து வெச்சிருக்கணும், தெரிஞ்சுக்க!” என்றபடி நகர்ந்தவனையே பார்த்தபடி இருந்தாள் வேணி. பணிவுக்குப் பதில் இப்போது அவனிடம் பயம் வந்தது.

பாட்டியும், அத்தையும் அடிக்கடி அவளது நினைவில் வந்து போனார்கள்.

`ஒங்க தாத்தாவுக்கு ஊரறிய நானும், இன்னொருத்தியும். அதைத் தவிர, பேட்டைக்கு ஒருத்தி. இதையெல்லாம் நான் பெரிசு பண்ணியிருந்தா, ஆறு பிள்ளைங்களை என் ஒருத்தியால எப்படி வளர்த்திருக்க முடியும்! பிச்சை எடுக்கத்தான் போயிருக்கணும்!’ என்று, தினம் ஒரு முறையாவது பாட்டி தன் பத்தினித்தனத்தை நிலைநாட்டிக் கொள்வாள்.

இந்தமாதிரி நீதி போதனைகளைக் கேட்டு வளர்ந்திருந்த அத்தையோ, கட்டியவரின் சூதாட்டத்துக்கும், பெண் பித்துக்கும் கேட்டபோதெல்லாம் தயங்காது நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, அதற்குப் பரிசாக காம நோயைப் பெற்றுக்கொண்டவள். கணவர் அவளை அதிகம் சோதிக்காமல், அல்பாயுசில் போனபிறகு, அண்ணன் வீட்டுக்கே நிரந்தரமாக வந்துவிட்டிருந்தாள். தான் வாழ்ந்த விதம்தான் பெண்களுக்குப் பெருமை தேடித் தரும் என்பதுபோல், பிறருக்கும் உபதேசிக்க ஆரம்பித்தாள்.

சிறு வயது முதலே அப்பெண்கள் இருவரும் ஓயாது பேசியதைக் கேட்டு வளர்ந்திருந்த வேணிக்கு, முதன்முறையாகச் சந்தேகம் வந்தது.

கணவரைப் பிற பெண்களுடன் பங்கு போட்டுக்கொள்ள நேரிட்டதுபற்றி பாட்டிக்குக் கொஞ்சமேனும் வருத்தமோ, கோபமோ இருந்திருக்காதா?

அத்தை மட்டுமென்ன! `நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்போது, மற்றவர்கள் மட்டும் ஏன் நன்றாக இருக்கவேண்டும்?’ என்ற வயிற்றெரிச்சலில்தான் தன்னை தியாகத்தின் சின்னமாகக் காட்டிக்கொண்டாளோ?

படுத்தபடி ஓயாது யோசித்ததில், வேணிக்கு ஒன்று மட்டும் புரிந்தாற்போலிருந்தது. தங்கள் வாழ்க்கை மகிழ்வானதாக இல்லை என்று எவருமே ஏற்க விரும்புவதில்லை. அது தமது தோல்வியை ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே!

பிற பெண்களும் இன்னல் அனுபவிப்பதை உணர்கையில், பாட்டி, அத்தை போன்ற பெண்களுக்கு தங்கள் கட்சி பலம் அடைந்துவிட்டதைப்போல ஒரு அல்ப சந்தோஷம். `பெண்ணாகப் பிறந்தாலே இப்படித்தான்!’ என்று நியாயம் கற்பிக்க முடியுமல்லவா!

முகுந்தன் வேலை முடிந்து, வீடு திரும்பும் வேளை.

`இன்று எதற்காக என்னிடம் ஆத்திரப்படப்போகிறாரோ!’ இருந்தாற்போலிருந்து, வேணிக்குப் படபடப்பாக இருந்தது. மூச்சு இளைத்தது.

அந்த நிலையிலும் ஒரு தெளிவு: மனத்தின் இறுக்கத்திற்குக் காரணம் புரிந்தது.

`கட்டினவன் சொன்னதுக்காக, நெருப்பிலகூட குதிச்சதாலதானே ராமாயணக் காலத்திலேருந்து இப்போவரைக்கும் சீதாவைக் கொண்டாடறாங்க!’ அசரீரிபோல் பாட்டியின் குரல் ஒலித்தது.

அலட்சியமாக உதடுகளைச் சுழித்தாள் வேணி. ஸ்ரீராமச்சந்திரமூர்த்திமாதிரி கணவன் அமைந்தால் அப்படி நடக்கலாம்!

மருந்து போத்தல்களைத் திரட்டி வீசினாள். பக்கத்திலேயே இருந்த குப்பைக்கூடையில் அவை ஐக்கியமாயின. சில உடைந்து, பல்வேறு நிறங்களில் திரவப்பொருட்கள் ஒழுகின.
வேணி சிரிக்க ஆரம்பித்தாள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.