ஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி அவர்களைக் கவிஞர் புதுகை மா.உதயகுமாரும் நானும் 27.12.2013 அன்று, தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். மூ.புகழேந்தி அவர்கள், 14 நூல்களை இயற்றியுள்ளார். கவிஞர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல் எழுதியுள்ளார். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
இவருடன் உரையாடியபோது, தமிழை வளர்க்க, ஒரு யோசனை கூறினார். பள்ளி நிலையில் தமிழை ஒரு பாடமாக வைத்துள்ளது போல், கல்லூரி அளவிலும், அதிலும் கலை – அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர கல்லூரிகளிலும் இளங்கலை மட்டுமல்லாது முதுகலை மாணவர்களுக்கும் தமிழை ஒரு பாடமாக வைக்க வேண்டும். அப்போது தமிழ் தானாக வளரும் என்றார்.
நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம்.
எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.
அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான்.
அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் தொகுத்து ஒரு கவிதையாகப் புனைந்திருக்கிறார். என்னைத் தொட்ட அந்தக் கவிதையை இசையில் அமைத்து இங்கு இட்டிருக்கிறேன்.