ராமஸ்வாமி ஸம்பத்
சபரி கூறியதுபோல் ரிச்யமுகத்தில் நல்மனம் படைத்த வானர வீரன் அனுமன் ராமன் வருகைக்காகக் காத்திருந்தான். அனுமன் வாயு புத்திரன். பதினொரு ருத்திரர்களில் ஒருவன். ராமாவதாரம் எடுக்கும் முன் திருமால் எல்லா தேவர்களையும் தன் காரியத்திற்கு உதவும் பொருட்டு பூமியில் பிறக்குமாறு பணித்தார். இதைக்கேட்ட பரமேஸ்வரன் வைகுண்டத்திற்கு ஏகி நாரணனிடம் “நானும் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் பரமாத்மா” என்றார். பரமபதநாதன் மலர்ந்த முகத்தோடு, “பரம்பொருளே! உங்கள் ஆசி ஒன்றே போதும்” என்றார்.
“இல்லை இல்லை. நான் கட்டாயம் உங்களுக்கு உதவுவதற்கு பதினோராவது ருத்திரனாக அவதரிக்கப் போகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டார். அப்பரமனே அனுமனாக. வானர குலத்தைச் சேர்ந்த அஞ்சனாதேவிக்கு வாயு புத்திரனாக உதித்தார். பிறந்தவுடனே சூரியனை ஒரு பழமாகக் கருதி அதனை விழுங்கும் பொருட்டு அனுமன் வான்நோக்கித் தாவினான். சூரியனுக்கு ஆபத்தென இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கினான். நிலைகுலைந்து கீழே வீழ்ந்த அனுமனைக்கண்டு வாயு சினம் மேலோங்க மூவுலகிலும் காற்று இல்லாமல் செய்தான். இதனால் ஏற்பட்ட சீரழிவை நீக்க, பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் வாயுவை நாடினர். “என் மகனுக்கு உங்கள் சக்தியை அளித்தால்தான் என் கோபம் தணியும்” என்று வாயுதேவன் கூற அனைவரும் அவ்வாறே செய்ய அனுமன் மிக்க பலசாலியும் அறிவாளியுமானான். அவனுக்கு சூரியன் ஆசானாகி வேதநெறிகளையும், ஏனைய சாஸ்திரங்களையும், நவவியாகரணங்களையும் கற்பித்தான். குருதக்ஷிணை அளிக்க முற்பட்ட அனுமனை நோக்கி, “நீ என் மகன் கிஷ்கிந்தை இளவரசன் சுக்ரீவனுக்கு அமைச்சனாகி சேவை புரி. பின்னர் ஸ்ரீமந்நாராயணனின் அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவருக்கு துணையாகப் பணியாற்று” என்று ஆதவன் ஆணையிட்டான். அப்போதிலிருந்து ராமன் வருகையை எதிர்நோக்கியவாறே சுக்ரீவனின் அந்தரங்க அமைச்சனாகக் திகழ்ந்தான் அனுமன்.
ரிச்யமுகத்தின் எல்லையை நெருங்கிய ராம லக்ஷ்மணர்களை வானர இளவரசன் சுக்ரீவன் சாரணர்கள் மூலம் அறிந்து, ‘அவர்கள் வாலியின் கையாட்களாக இருப்பார்களோ’ என பயந்து அனுமனை அழைத்து, ”யாரோ வில்லேந்திய இருவர் நமது மலை நோக்கி வருகிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல் எனக்கு வேண்டும். ஒருவேளை அவர்கள் வாலியின் ஆட்களாக இருந்தால் அவர்களை இங்கு வராமல் தடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டான்.
சுக்ரீவனை வணங்கி அனுமன் ஒரு அந்தணவேடம் பூண்டு ராம லக்ஷ்மணர் அருகே சென்றான். அவர்களது ஆக்ருதி அவனை வெகுவாகக் கவர்ந்தது. ‘இவர்களைப் பார்த்தால் வாலியின் ஆட்களாகத் தென்படவில்லை. இவர்கள் யாராக இருக்கும்?’ என சிந்தித்தவாறு, அவர்களை நோக்கித் தன் இனிய குரலில் “கவ்வை இன்றாக நுங்கள் வரவு!” என்று முகமன் கூறி, மேலும் பேசலுற்றான்: ”வில்லேந்திய நீங்கள் ஒரு அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் உங்கள் சடைமுடிகளைப் பார்த்தால் துறவிகளோ என்றும் தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் ராஜரிஷிகளா … இல்லை தேவரிஷிகளா…? உங்கள் கனிவான பார்வையும் பொலிவு பொங்கும் முகங்களும் என்னைக் கிறங்க வைக்கின்றன. என்னைப் போலவே இந்த மலையில் உலாவும் விலங்குகளும் பறவைகளும் உங்களை வரவேற்பது போல ஆர்ப்பரிக்கின்றன. இப்பர்வதப் பொழில்களும் திடீரெனப் பூத்துக் குலுங்குகின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது துயர் இழையோடும் உங்கள் வதனங்கள் என் மனத்தைக் கலக்குகின்றன. நீங்கள் யார்? இக்குறிஞ்சிப் பகுதியில் எதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்?
“மகாபலம் பொருந்திய கிஷ்கிந்தை வானர அரசன் வாலி தன் இளவலான சுக்ரிவனைத் தவறாகப் புரிந்துகொண்டு நாடு கடத்தியதோடல்லாமல் அவன் மனைவி ருமையையும் தன்வயமாக்கிக் கொண்டுவிட்டான். அச்சம் கொண்டு சுக்ரீவன் இங்கு தஞ்சம் புகுந்துள்ளான். ஏனெனில் மதங்க முனிவரின் சாபத்தால் வாலி இப்பகுதிக்கு வரமுடியாது; வந்தால் உயிர் இழப்பான். நான் வாயு பகவானின் புத்திரன். என் பெயர் அனுமன். சுக்ரீவனின் அமைச்சன். நீங்கள் யாரென்று இப்போது தெரிந்துகொள்ளலாமா?.”
இவ்வாறு தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அனுமன் தன் உரையை முடித்தான்.
உள்ளத்தை அள்ளும் இவ்வினிய சொற்களைக் கேட்ட ராமன் தன் இளவலிடம் “தம்பி, நாம் யார் உதவியைக் கேட்க விழைகிறோமோ, இறை அருளால் அவன் அமைச்சனே நம் முன் வந்திருக்கிறான். இப்படிப்பட்ட அமைச்சனைப் பெறுவதற்கு சுக்ரீவன் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இவன் சாதாரணமானவன் அல்லன். ரிக், யஜுர், ஸாம வேதங்களையும் மற்றும் பிற சாஸ்திரங்களையும் கசடறக் கற்றவனாகத் திகழும் இந்த சொல்லின் செல்வன் ஒரு நவவியாகரண பண்டிதனாகவும் இருக்கவேண்டும். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளை அளந்து நம் நிலையை இவனுக்கு உணர்த்தி நாம் சுக்ரீவனின் நட்பை நாடி வந்திருக்கிறோம் என்று சொல்” என்றான்.
லக்ஷ்மணனும் தாங்கள் அயோத்தியை விட்டு நீங்கியது, நீண்ட வனவாசத்தில் ஸீதையைப் பறிகொடுத்தது, கபந்தன் மற்றும் சபரியின் அறிவுரைப்படி சுக்ரீவன் நட்பைக்கோரி வந்திருப்பது பற்றி விவரித்து, “இதோ இவர் தான் ராஜ்ய பட்டத்தைத் துறந்த ராமன். நான் அவர் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறினான்.
’ராமன்’ என்ற சொல்லை கேட்ட அனுமன் புளகாங்கிதம் அடைந்து, ‘தான் யாருக்காகக் இத்தனைக் காலம் காத்திருந்தோமோ அந்த தெய்வம் எதிர்பட்டுவிட்டது’ என மகிழ்ந்து, தன் அந்தண உருவை நீத்து சுயரூபத்தை அடைந்தான்.
பின்னர் ராமன் அடிபணிந்து, “ஐயன்மீர், இம்முட்புதர் அடர்ந்த மலையில் தாங்கள் பயணிப்பது கடினம். ஆகவே, நீவிர் என் புஜங்களில் அமருங்கள். நான் உங்களை எம்மன்னன் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறேன்” என்றான் அனுமன்.
(தொடரும்)

Leave a Reply