கிரேசி மோகன்

சித்திரம் பேசுதுகே சவ்உன் கரங்களால்,
இத்திறன் வாய்த்தது எங்கனம், -முத்திரை
மோதிரம் போடவரார், யாதவர் யானையில்,
போதமர்மா தோடு பராக்’’….கிரேசி மோகன்….
போதமர் மாது-மலரில் அமரும் அலர்மேல் மஹாலக்ஷ்மி
–சு.கோதண்டராமன்.
தஸ்யுக்கள் என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின் அவர்கள் யார்? இந்திரன் முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது. தஸ்யுக்கள் ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்?
தஸ்யுக்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில் விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர் குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர். இந்திரன் விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக் கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக் கொன்று ஒளியை மீட்டார்.
ஒளியை யார் திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
சாயணர் அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
விருத்திரன் என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும் காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர். கறுத்த மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பொழிகிறது. வானம் வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது. இந்திரனை மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
பசுக்கள் என்பதற்கு ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர். இதுவும் பொருத்தமே. ஏனெனில் வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.
ஆனால் சாயணரின் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை (சூரிய கிரணங்களை) மேகம் மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள் பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?
உருவகம் -2 நிலச்சரிவு
இதோ மற்றொரு ஊகம். இது சாயணர் கூறாதது.
மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி விடும். 2008 மே 12இல் சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின் கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும் மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பி, அந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து நதியை முன்பு போல ஓடச் செய்தது.
இந்திரன் செய்ததும் இது போலத்தான் இருக்க வேண்டும். விருத்திரன் என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன், தன் படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும். வ்ருத்ரன் என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத் தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.
அதே போல, வலன் என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின் உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால் அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். மண் அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.
இந்த ஊகம் ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும் அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது (1.117.21, 7.5.6) இந்த உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு ஒளியை எப்படித் தடுக்க முடியும்?
கோத்ரம்
மூன்றாவது உருவகத்தைப் பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் (1.126.3).
மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர் எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.
வேதத்தில், பசு மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர். பிற்காலத்தில் இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள் ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.
உருவகம் 3 – பொது உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
நீரையும், ஒளியையும் போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.
கிராமத்துக்குப் பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம சமுதாயம்.
பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை. தட்டுப்பாடு ஏற்படும்போது, வலிமையுள்ள சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு. பொதுச் சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று அழைக்கிறோம்.
வலன் என்ற பணி பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான் கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார். பொதுச் சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன் உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால் அவர் பணியாக(சமூக விரோதியாக)க் கருதப்படுவார். அதனால் அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று கூறுகிறது.
அக்ரது (செயல் அற்றவர்கள்), அராதி (தானம் செய்யாதவர்கள்), அச்ரத்தா (சிரத்தை இல்லாதவர்கள்), அவ்ருதா (நல்ல காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.
விருத்திரன் சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான். வலன் பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச் சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர் உதவியுடன், தடைகளைச் சமாளித்து இவர்களைத் தோற்கடித்ததுதான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும், விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது. இதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.
அவர்கள் செல்வம் மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள், இனிமையான பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.
தஸ்யுக்களை அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள் தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக வாழத் தொடங்கினர். அந்த அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான் 100 தாஸர்களைப் பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம் (8.56.37).
அந்த தாஸர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன் என்பதிலிருந்து தெரிகிறது (7.86.75 ).
சமூக விரோதிகளைத் தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய தாஸர்கள் கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன பல்பூதன், தருக்ஷன் பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.
ஆர்யர்களாக இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர். அவர்கள் பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். எங்கள் எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும், ஆரியர்களானாலும் என்ற வேண்டுதல் காணப்படுகிறது (10.38.3).
பொது உடைமைப் பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க முடியும் என்பதை விளக்கவில்லை.
இது வரையில் மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல். இந்த மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும் இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக் கொள்ளலாம்.
படம் உதவிக்கு நன்றி:
How Many People did Indra Kill?
http://tamilandvedas.com/2014/07/17/how-many-people-did-indra-kill/
-செண்பக ஜெகதீசன்
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார். (திருக்குறள்:650 – சொல்வன்மை)
புதுக் கவிதையில்…
விரிந்த இதழ்களுடன்
விதவித அழகாய் இருந்தாலும், 
மலருக்கு மகிமை
மணம்தான்…
கற்றவர், கற்றதை
மற்றவர் அறிய
எடுத்துரைக்க இயலாதபோது
அவரும்
மணமில்லா மலர்போலத்தான்…!
குறும்பாவில்…
கற்றிருந்தும் பிறரறிய
எடுத்துரைக்க இயலாதவனும்,
மணமிலா மலர்தான்…!
மரபுக் கவிதையில்…
ஆர்வமாய்ப் பலநூல் கற்றேதான்
அறிவை அதிகம் பெற்றிடினும்,
தேர்வுகள் பலவும் வென்றிடினும்,
திறம்படப் பிறர்க்கே உரையாதார்
பேர்தான் கற்றவர் என்போரும்,
பற்பல வடிவில் பலநிறத்தில்
பார்க்க விரிந்த போதினிலும்
பழுதாம் மணமிலா மலரொப்பரே…!
லிமரைக்கூ…
கற்றவற்றை எடுத்துரைத்து அறியவேண்டும் பலர்,
விரித்துரைக்காதவர் ஆவார்
விரிந்திருந்தும் பயனில்லாத மணமில்லா மலர்…!
கிராமிய பாணியில்…
பூவுபூவு காட்டுப்பூவு
பெருசுசெறுசா பாக்கும்பூவு,
எதுக்கொமொதவா காட்டுப்பூவு
வாசமில்லா வெத்துப்பூவு…
பூவுண்ணா மணமிருக்கணும்
பக்கமெல்லாம் மணம்பரப்பணும்…
படிப்பு கதயும் இதுதானே,
தெரிஞ்சிருக்கணும் தெரிஞ்சிருக்கணும்
படிச்சதெல்லாந் தெரிஞ்சிருக்கணும்,
படிச்சிக்குடுக்கத் தெரிஞ்சிருக்கணும்
எடுத்துச்சொல்லத் தெரிஞ்சிருக்கணும்..
தெரியலண்ணா காட்டுப்பூவு
அவுனுமொரு காட்டுப்பூவு
தேவயில்லா காட்டுப்பூவு
வாசமில்லா காட்டுப்பூவு…
பூவுபூவு காட்டுப்பூவு
எதுக்கொமொதவா காட்டுப்பூவு…!
-அமீர்
என்னுரிமை
உன்னுரிமை ஒன்றாக
நாமென்ன சகோதரர்களா?
என்னுயிரும்
உன்னுயிரும்
சமமாக நாமென்ன தோழர்களா?
இல்லை என்பதை உணர்கிறேன்
அதனால் தானே விரட்டப்படுகிறேன்…
பிறந்த மண்ணை
உரிமை கோரல் தவறா?
ஒடுக்கிய பின்பும்
ஒழிக்க நினைப்பது சரியா?
ஏகாதிபத்யமே…
உங்களுகே சொந்தம் என்பது
இந்தப் பரந்த உலகம் மட்டுமா?
அண்ட வெளிக் கிரகங்களும்
அதில் அடக்கமா?
அச்சுறுத்தலும்
தட்டிப்பறித்தலும்
உங்களின் அன்பா?
கொலைமிரட்டலும்
விரட்டி அடித்தலும்
உங்களின் பண்பா?
உயிர்பயத்தில்
கால்கள் கடுக்க ஓடும்போது
தெரியாதவலி
இந்த உலகம்
மவுனமாய்ப் பார்க்கும் போது தெரிகிறது…
ஆளப்படுபவர் அனுமதியின்றி
ஆளப்படுவது
சர்வாதிகாரத்தின் இலக்கணமோ?
ஆட்சியும் மாட்சியும்
துணைவருவதால்
சேரும்ஆணவமோ?
உடலைவிட்டு
உதிரம் பிரிந்தால்
உயிருக்கு இல்லை உத்திரவாதம்
நாங்கள்
உடல் ஓரிடம்
உதிரம் ஓரிடம்
உயிர் ஓரிடமென வாழும்
மண் தேடும் புழு…
நாங்கள்
கருவரையிலிருந்து
கழிவாக வெளியேற்றப்படாமல்
உங்களைப் போன்றே
ஈன்றப்பட்ட பிறவிகளல்லவா!
தாயும்
தாரமும்
பிள்ளைகளும்
இரவில் மட்டும்
எங்கள் மார்சாய்கிறார்கள்
புகைப்பட உதவியோடு!
வெயிலும்
குளிரும்
மழையும் மட்டுமே
நாங்கள் அறிந்த உலக இயற்கை!
ஐ.நா.வும்
செஞ்சிலுவையும்
அனுப்பும் ஆடைகள்
அணியும் தினமே
நாங்கள் அறிந்த திருநாட்கள்!
பாலும் பழமும்
பல்சுவை விருந்தும்
பசிக்குக் கிடைக்கும்
பழைய கஞ்சியில் காண்கிறோம்!
நாடுபிடிப்போரின்
நலியாத ஆசையால்
நாங்கள்
ஈழனென்றும்
பாலஸ்தீனனென்றும்
சூடானி என்றும்
திபெத்தியனென்றும்
பரந்து கிடக்கிறோம்
பாவப்பட்ட உலகில்…
இனி
பரந்து கிடந்தோமென்று
வரலாறு சொல்ல…
பாலைவனம் ஒன்று போதும்
எங்கள் சொந்த மண் என்று துள்ள…
கால்நடையாகவே பயணிக்கிறோம்
அது கிடைக்கும்
நன்னாளை எதிர்நோக்கி!
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர்(சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி…) இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல்…
v ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
v கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)
v திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
v கணினி மற்றும் இணையவழி தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல்.
v தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்…
v தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….
v தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில்1-2 பக்கங்களில் 25.12.2014 தேதிக்குள் cpc2015@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பின்னர் 1.02.2015ஆம் தேதிக்குள் முழுக் கட்டுரையையும் அனுப்பிவைக்க வேண்டும்.
கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு(டேஸ்) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கத்தினை ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.
மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு 1.03.2015 ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.
முழுக் கட்டுரையை 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்கவேண்டும்.
மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும் உலகக் கணினிமொழியியல் ஆய்விதழிலும் வெளியிடப்படும்.
முக்கியமான நாட்கள்
கட்டுரைச் சுருக்கம் அனுப்ப இறுதி நாள் : 25.12.2014
முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : 01.02.2015
தேர்வுசெய்யப்பெற்ற கட்டுரை பற்றிய அறிவிப்பு : 01.03.2015
மாநாடு நடைபெறும் நாட்கள் : 30.05.2015, 31.5.2015
& 01.06.2015
தமிழ் இணைய மாநாடு 2015இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2015@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
முனைவர் இர. ஸ்ரீராம்
தலைவர், மாநாட்டு ஆய்வரங்கக் குழு, தமிழ் இணையம் 2015.
பவள சங்கரி
பாசிபிடித்த மண்டபத்தினுள்
பாசியே உணவானாலும்
பாசபந்தங்கள் பரந்திருந்தாலும்
சுற்றிச் சுற்றி சுழன்றாலும்
உள்ளிருந்தே உழன்றாலும்
சுற்றிவரும் வாளைகளின்
சுவடுகளனைத்தும் சூரியானாலும்
சுவனமின்றி உணவுமின்றி
சுழன்றுவரும் தங்கவிழியும்
கருஞ்சுனைகளும் பச்சிலைகளும்
பசுமை நினைவுச்சுமைகளாயினும்
பாசிபிடித்த மண்டபமே அரண்மனையாக
பசுமை நிறைந்த நினைவுகளே
வயிற்றின் உணவாக நாளும்
வாழும் பாசிதின்னும் கயல்களின்
பாசமிகு பரிதவிப்பு பாழடைந்த
பாசிபிடித்த மண்டபத்தினுள்ளேயே
பதுங்கித்தான் போகும்.
கிரேசி மோகன்
”ராகம்(ராகத்வேஷம்) கடந்த ரமணன்போல் கண்ணனும்
தேகம் மறந்தூதும் தெய்வீக, -ராகம்
புலன்கடந்த ஆன்மக் கலனேற்றி ஆன்றோர்
குலம்சேர்க்கும் ஆதிவரா கம்’’….கிரேசி மோகன்….
—முனைவர் மு.பழனியப்பன்.
திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத்தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப்பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.
முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுபதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்தொண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.
தேனூர் வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.
சேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார், செந்தில் வாழ் அந்தணர், திருத்தணியிற்பிறந்தார், தொண்டரடித்தொண்டர், பாடாது விடுபட்டோர், புராணிகர்கள், முருகன் திருவருளைச் சிந்திப்போர், முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர்.
இப்புராணத்துள் ஒளவையார், மீனாட்சி அம்மையார், முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார், அருணகிரிநாதர், குமரகுருபரர், நக்கீரர், அகத்தியர், கச்சியப்ப சிவாச்சாரியார், பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.
செந்தில்வாழ் அந்தணர் சருக்கம், கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம், வென்றி மலைச் சருக்கம், அரஹாரச் சருக்கம், காவடிச் சருக்கம், குகனேரிச் சருக்கம், கல்லாடச் சருக்கம், தென்பழநிச் சருக்கம், நின்றசீர்ச் சருக்கம், நாரதச் சருக்கம், வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது. அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது. இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.
அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.
இதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்
றதல சேடனார் என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்
மதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்
சதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே (1181)
என்று பாடுகின்றார்.
கந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை
ஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்
பரவசமாய் வீழ்ந்தெழுந்து
போற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்
இனியென்று காண்பதென்று
சாற்றினார் ஆன்ற பெரியார்க்குத் தீங்கு சாற்றிய தீமதி
படைத்த சம்பந்தாண்டன்
தோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று
ஆர்த்தவையோர் தொழுதுபோற்றி (1182)
என்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.
பாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடையூற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது, முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்
அவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில்) அதிபன் பரிவோடு அம்
புவிபேண்பரிகாரம் பலபுரிந்தும் பயனிலாதலால்
இவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இல்லையென்னலும் இம்மா
தவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்
பந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்
சிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்
வந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்
சந்தித்தது என்பொன்றித்து புண்தழும்பறிய திதைத்தம் (2582)
என்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.
குமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.
முருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய் அதுகண்டுஏங்கினோம்
இருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து இனிதுபேசுமா
அருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை அளித்திடும்
கருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை காண் (1324)
என்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று, அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.
இவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை, அவர்களின் வாழ்வை, தொண்டை, சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.
முனைவர் மு.பழனியப்பன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
படம் உதவிக்கு நன்றி: indianknowledgesystemacademy.blogspot.com
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்காவில் 2014-க்குரிய இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற மேலவையில் சில இடங்களில் தோற்றுப் பெரும்பான்மை இழந்திருக்கிறது; கீழவையில் தேர்தலுக்கு முன்பே சிறுபான்மையாக இருந்தது; இப்போது இன்னும் சில இடங்களை இழந்து இன்னும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. 2008-இல் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா என்னென்னவோ சாதிக்கப் போவதாக அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அமெரிக்கா செல்லும் பாதையைத் திசைதிருப்பி உலக அரங்கில் அதன் படிமத்தை உயர்த்த வேண்டும், அமெரிக்காவின் ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய கஷ்டங்களை நீக்குவதற்குக் குறைந்தபட்ச ஊதியம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர வேண்டும், அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டார். இந்தக் கனவுகளை முறியடிக்கும் விதமாக 2010-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் கீழவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை போயிற்று. 2012-இல் ஜனாதிபதித் தேர்தலோடு நடந்த இடைத்தேர்தல்களில் எப்படியோ மேலவையில் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சித் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் 2014-இல் நடந்த தேர்தலில் மேலவையிலும் பெரும்பான்மை போயிற்று. இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்து நிற்பதால் ஒபாமா என்ன திட்டங்கள் கொண்டுவந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடக் குடியரசு உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஜனநாயகக் கட்சி இரண்டு அவைகளிலும் நிறைய இடங்களை இழந்ததற்கு இந்தத் தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் குறைந்தது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். கடந்த எழுபது வருடங்களில் – அதாவது 1942 தேர்தல்களுக்குப் பிறகு – இப்போதுதான் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 36.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பெரும் பணக்காரர்கள் அளித்த ஆதரவோடு குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் செய்த பொய்ப் பிரச்சாரங்களும் இதற்குக் காரணம் என்கிறார்கள். புஷ் காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை ஒபாமா எழுந்து நடக்கவைத்தார். ஆனாலும் புதிதாக வந்த வளத்தின் நன்மைகள் சிறுபான்மையினரான பணக்கார வர்க்கத்தினருக்கே போய்ச் சேர்ந்தது. மத்தியதர வர்க்கத்தினரும் தொழிலாளி வர்க்கத்தினரும் தங்கள் வருமானத்தில் அதிக வித்தியாசத்தைக் காணவில்லை. இதனால் பொதுமக்களிடையே அதிருப்தி நிலவியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒபாமாவின் கடந்த ஆறு ஆண்டு சாதனைகளை மறக்கும்படிச் செய்தனர். அவற்றைக் குறைத்து மதிப்பிட்டுச் செய்த பிரச்சாரங்களே வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச் சாவடிகளுக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். கருப்பர்களை வாக்களிப்பதிலிருந்து தடுத்து நிறுத்த சிலர் சில முயற்சிகளை மேற்கொண்டார்கள். கருப்பர்கள் அதிகமாக வாழும் சிகாகோவின் தென்பகுதியில் வாக்குப்பதிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று சிலர் புரளி கிளப்பியதாகச் செய்தி வந்தது. ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் இல்லினாய் மாநிலத்திலேயே ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்ட ஜனநாயக் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜெயித்திருக்கிறார். எது லோக்சபா தேர்தல், எது அசெம்பிளி தேர்தல் என்று தெரியாத பல அப்பாவி இந்திய மக்கள் இருப்பதுபோல் ஒபாமா போட்டியிடாததால் தாங்கள் ஓட்டுப் போடத் தெவையில்லை என்று நினைத்த அமெரிக்கர்களும் இருக்கலாம்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அவை உறுப்பினர்களும் ஒபாமாவின் முக்கியத் திட்டங்களை முறியடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு தயாராக இருக்கிறார்கள். முதலாவது பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்திருந்து அமெரிக்காவின் குடியுரிமை பெறத் துடிப்பவர்கள் பற்றியது. இவர்களுக்குச் சட்டபூர்வ குடியுரிமை வழங்க ஒபாமா எவ்வளவோ முயன்றார். அவை எல்லாவற்றையும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் முறியடித்துவிட்டனர். இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்திருப்பதால் தன்னுடைய ஜனாதிபதிக்குரிய நிர்வாக அதிகாரத்தை உபயோகித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கப் போவதாக ஒபாமா அறிவித்திருக்கிறார். இதற்குக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவைத் தலைவர் மிகுந்த எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ‘ஒபாமா நெருப்போடு விளையாடுகிறார். நெருப்போடு விளையாடுபவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்வார்கள்’ ஒபாமாவும் தன்னுடைய விஷேச அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் தன்னைத் தானே அழித்துக்கொள்வார்’ என்று பயமுறுத்துகிறார். இது ஒரு புறம் இருக்க, ஒபாமா இந்தச் சட்டத்தைத் தன் அதிகாரத்தின் மூலம் கொண்டுவந்தாலும் 2016 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதிக்குரிய இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை நீக்கிவிடலாம்.
இரண்டாவதாக ஒபாமா மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுவந்த மருத்துவக் காப்பிட்டுத் திட்டம். இதைச் சட்டமாக்குவதற்கு குடியரசுக் கட்சியினர் என்னென்னவோ தடைகள் கொண்டுவந்தனர். ஆனாலும் ஒபாமா எப்படியோ அவர்களின் முயற்சிகளை முறியடித்து அதைச் சட்டமாக்கினார். இப்போது அதை எப்படியும் நீக்கிவிடுவது என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்படப் போகிறார்கள். இதனால் பல ஏழை அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதி இல்லாமல் போகும். 65 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு குறைந்த பிரீமியத்தில் வழங்கும் மெடிக்கேர் என்னும் மருத்துவத் திட்டத்தையும் குடியரசு உறுப்பினர்கள் தனியார்மயமாக்க முயற்சிக்கலாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சிரமம் ஏற்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஒபாமா மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். கனடாவிலிருந்து கச்சா எண்ணெயை சுத்தீகரிப்பதற்கு டெக்ஸாஸிற்குக் கொண்டுவர ஒரு எண்ணெய்க் கம்பெனி முயன்று வருகிறது. கச்சா எண்ணெயைக் கொண்டுவருவதற்குக் கட்டப்படும் கால்வாயினால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால் ஒபாமா இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்தக் கால்வாய் கட்டப்பட்டால் பலருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம். சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற அப்பெக் (APEC) மாநாட்டில் ஒபாமாவும் சீன அதிபரும் சேர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் கரியமில வாயுவைக் குறைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஒபாமாவின் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறைவேற்றுமா என்று தெரியவில்லை.
தங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பல திட்டங்களைக் கொண்டுவந்த ஒபாமாவின் கைகளைப் பலப்படுத்த அவருடைய கட்சிக்கு அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்க வேண்டும். மாறாக ஏழைகளின் (இவர்களில் கருப்பர்கள் அதிகம்) நலன்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் `கார்ப்பரேட்டுகளின் நன்மைகளையே முதன்மையாகக் கொண்டு இயங்கப் போகும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை அமெரிக்கர்களின் அறியாமை என்பதா? பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் பலம் என்பதா?
எம்.ஜெயராமசர்மா
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியால் வியந்து பார்க்கப் பட்டது தமிழ்மொழியாகும். பாரதி இக்காலக்கவிஞன். அவன் பல மொழிகளை அறிந்தவன். அந்த மொழி அறிவின் துணையோடுதான் இவ்வாறு கூறும் துணிவு அவனுக்கு வந்திருக்கிறது. அவனது கூற்றை மறுத்துக் கூற எவரும் முன்வரவில்லை. எனவே தமிழ் மொழி மற்றைய மொழிகளை விட இனிமையானது என்பதை எண்ணி நாம் பூரிப்படைதல் வேண்டுமல்லவா? இப்படியான எமது இன்பத் தமிழை – பல மேலை நாட்டறிஞர் விருப்புடன் கற்றார்கள் என்பதை அறிகின்றோம். எமது மொழியின் பால் ஆராக் காதல் கொண்டு கற்றதோடு நின்றுவிடாமல் – கற்றுத்தேர்ந்த கன்னித்தமிழுக்கு நன்றிக்கடனாகப் பலவற்றைச் செய்து தமது காணிக்கை ஆக்கினார்கள்.அவர்களது இந்தத் தமிழ்த் தொண்டானது யாவராலும் ஏற்றிப் போற்றப் படுகின்றது.இந்த ரீதியில் மேலை நாடான இத்தாலியும் எமது தமிழ் வளர்ச்சிப்பாதையில் தன்னை இணைத்து கொண்டதை நாம் காணமுடிகிறது.
கிறீஸ்த்தவ மதப்பணியினை முன்னிட்டு 1710ல் தமிழ் நாட்டுக்கு வந்தவர்தான் பாதிரியார் பெஸ்க்கி அவர்கள். இவர் முப்பது வயதில் தமிழ் நாட்டுக்கு வந்து ஏறக்குறைய முப்பத்து ஏழு வருடங்கள் மதப்பணியில் ஈடுபட்டார். இவர் தமிழை விருப்புடன் கற்றார். இதனால் இவருக்குத் தமிழில் ஆழ்ந்த புலமை ஏற்பட்டது. இத்தாலி, கிரேக்கம், எபிரேயம், ஆகிய மொழிகளிலும் இவர் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். இவரது பன்மொழி ஆற்றல், தமிழ் மொழியில் இவரால் பல படைப்புகளைப் படைப்பதற்கு உறுதுணையாக இருந்தது எனலாம். தமிழ் மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகைகளில் இவரது தொண்டுகள் அமைந்து காணப்படுகின்றன.
தமிழ் எழுத்துக்களைப் பண்டைக்காலத்தில் எழுதும் பொழுது அவற்றில் ஓசை குறைவாக வரும் இடங்களுக்கு அந்த எழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. ” க ” என்னும் எழுத்துக்கு மாத்திரை ஒன்று.அதே எழுத்தின்மேல் புள்ளியை வைத்துவிட்டால் அந்த எழுத்து ” க் ” என மாறிவிடும். அதே வேளை உச்சரிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுவிடும். அது மட்டுமல்ல; ஒரு மாத்திரையாக இருந்தது புள்ளி வைத்த காரணத்தால் அரை மாத்திரை ஆனதோடு, ஒலியளவிலும் குறுகி ஒலிக்கும் நிலைக்கும் வந்துவிட்டதைக் காணமுடிகிறதல்லவா?
இந்த வகையில்” எ”, ” ஒ” என்னும் இரண்டும் – புள்ளி பெற்றால் அவை குறிலாகவும் புள்ளி பெறாத நிலையில் அவை நெடிலாகவுமே உச்சரிக்கும் வழக்கம் காணப்பட்டது. நாளடைவில் அவற்றுக்குப் புள்ளியிட்டு எழுதும் வழக்கம் மறந்துபோன நிலையில் இவற்றினது குறில் – நெடில் வித்தியாசங்களை அடையாளம் காண்பது சிக்கலாகி விட்டது. இந்தச் சிக்கலுக்குத் தக்க பரிகாரம் காட்டினார் இத்தாலியப் பாதிரியார் பெஸ்க்கி அவர்கள். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டதே இன்று நாம் கைக்கொள்ளும் “ஏ” நாவும் “ஓ” வன்னாவும் ஆகும். அவரால்த்தான் “எ” கீழ் பகுதியில் ஒரு கோடும், “ஒ” வில் ஒரு சுழியும் வந்தது என்பதை எம்மில் பலர் அறியாமலும் இருக்கலாம்தானே! அதுமட்டுமல்ல, கெ, கொ, என்ற எழுத்துக்களில் காணப்படுகின்ற ஒற்றைக் கொம்புகளை மேலே சுழித்து இரட்டைக்கொம்புகளாக்கி கே, கோ, என்ற உச்சரிப்பு வரத்தக்கதாக — இன்றுவரை அந்த அமைப்பிலேயே நாங்கள் பின்பற்றக் கூடியதாக எழுத்துமுறையில் சீர்திருத்தம் செய்தவரும் இத்தாலிப் பாதிரியார் பெஸ்க்கியேதான் என்பதையும் மனதில் கொள்ளுதல் வேண்டும். இவரால் கொண்டுவரப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழும் ஏற்றுக்கொண்டது. தமிழரும் ஏற்றுக்கொண்டனர். நல்லதை ஏற்பது தமிழின் பண்பாடு அல்லவா!
தமிழ் எழுத்தில் திருத்தம் செய்த இப்பெரியார், தமிழ் இலக்கிய வரலாற்றில் – அதாவது காப்பிய இலக்கியத்திலும் தனது ஆற்றலைக் காட்ட விழைந்தார். இதன் பயனாக 3615 விருத்தப்பாக்களைக் கொண்ட “தேம்பாவணி” என்னும் காப்பியம் எழுந்தது. இது மூன்று காண்டங்களையும் முப்பத்தாறு படலங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. திருக்குறளின் தெள்ளிய நயம், சிந்தாமணியின் செழுஞ்சுவை, கம்பராமாயாணத்தின் கவியின்பம், யாவும் இந்தத் “தேம்பாவணியில்” தேங்கிக் கிடக்கக் கூடியதாய் இந்த இத்தாலியப் பாதிரியார் படைத்தளித்தார். இந்தச் செழுமிய நூல் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. அவ்வேளை இவரது தமிழ் ஆற்றலை மெச்சிய புலவர்கள் இவருக்கு “வீரமாமுனிவர்” என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள் என்று அறியமுடிகிறது. அது தொடக்கம் இவரை யாவரும் “வீரமாமுனிவர்” என்று அழைத்து வரலாயினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதைவிட 101 பாக்களால் ஆன “திருக்காவலூர் கலம்பகம்” “கித்தேரி அம்மானை” “அடைக்கல நாயகி வெண்கலிப்பா’ போன்றவற்றையும் ஆக்கி அளித்தார். தேவாரப் பதிகம் இத்தாலியம் பெருமகனைக் கொள்ளை கொண்டது. அதன் காரணத்தால் “கரணாம்பரப் பதிகம்” உருவானது. மேலும் இவரால் பல பாடல்கள் இலக்கிய நயம் கனியப் பாடப்பட்டன. “தமிழ்ச் செய்யுள்தொகை” என்ற தொகுப்பின் மூலமாக தமிழில் உள்ள பல நயமான நீதி நூல்களைத் தெரிந்து தொகுத்துக் காட்டினார். இது ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைகிறது என்பது அறிஞரின் கருத்தாகும்.
செய்யுள் இயற்றிச் செந்தமிழுக்கு அணிசெய்த இவ்வறிஞர் உரைநடை இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. முதன் முதலாகப் பாமரரும் விளங்கக்கூடியதாக இலகுவான வசனநடையில் “அங்கத” இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமை இவரையே சாரும். “பரமார்த்த குருகதை” என்ற இந்த நூலைப் பண்டிதர்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இவரின் ஆற்றலை வியக்காமல் இருக்கமுடியுமா? தாம் சார்ந்த கிறீஸ்த்தவம் சம்பந்தமாகப் பல உரைநடை நூல்களையும், துண்டுப்பிரசுரங்களையும் பரமார்த்த்குரு கதையைத் தொடர்ந்து வெளியிட்டார். இந்த வகையில் வேதியர் ஒழுக்கம், வேதவிளக்கம், பேத மறுத்தல், லூத்தர் இனத்தியல்பு என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.
ஆக்க இலக்கியம் படைத்தை இப்பெருமகன் – மொழிபெயர்ப்புத் துறையிலும் முன்னின்று உழைத்தார். அந்தத் துறையில் அவரின் மொழி பெயர்ப்புக்கு இலக்காக அமைந்தது வள்ளுவரின் வான்மறையாகும். மேலை நாட்டவர் பலரும் வள்ளுவத்தின் பால் பெருவிருப்புக் கொண்டிருந்தனர் என்பது பொதுவான உண்மையாகும். குறளில் அமைந்திருந்த அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். இம்முயற்சியானது குறளின் அருமையையும், பெருமையையும், மேனாட்டாரும் அறிந்து கொள்ள உதவியது எனலாம்.
வீரமாமுனிவரின் பண்பட்ட உள்ளம் – தமிழ் அன்னைக்கு மேலும் ஏதாவது பயன் உள்ள பணியைச் செய்ய வேண்டுமென விளைந்தது. இதன் பயனாக தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் “தொன்னூல் விளக்கம்” என்னும் இலக்கண நூல் உருப்பெற்றது. இதனைத் தமிழறிஞர் “குட்டித் தொல்காப்பியம்” என ஏற்றுக் கொண்டாடினர். தமிழிலே உரையாடுவதும், எழுதுவதும், ஒரேமாதிரி இல்லாமல் இருப்பதை வீரமாமுனிவர் நன்கு கவனித்திருக்கின்றார். இதனால் இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து அவற்றுக்கு எனத் தனித்தனியே செந்தமிழிலக்கணமும், கொடுந்தமிழிலிலக்கணமும் எழுதினார்.
இலக்கணத்தில் ஆர்வம் கொண்டு உழைத்த இவர் – மொழித் தொடர்புக்கான ஊடகம் என்ற முறையில் அகராதி ஆக்கத்திலும் தனது நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டினார். இந்தவகையில் தமிழில் இவரால் படைக்கப்பட்டதே “சதுர் அகராதி” ஆகும். பின்னாளில் எழுந்த அகராதிகளுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் முதல்நூலாகவும் அமைந்தது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். இதைவிட “தமிழ் இலத்தீன் அகராதி” “தமிழ் போர்த்துக்கீசிய அகராதி” ஆகியனவும் இவரது படைப்பாக வெளிவந்தன. 4400 சொற்களைக் கொண்டதாக ‘தமிழ் போர்த்துக்கீசீய’ அகராதி விளங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் லத்தீன் அகராதியில் 900 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் எழுதப்பட்டது. இம்முயற்சி முதல் நடந்த முயற்சி ஆதலால் பலராலும் பாராட்டுக்கு உரியதாகி நிற்கின்றது எனலாம்.
எங்கிருந்தோ வந்த ஒருவர் – எமது அன்னை மொழியாம் தமிழின் அருமை பெருமைகளை உணர்ந்து, அதனைப் பற்றோடும் பாசத்தோடும் படித்திருக்கிறார். படித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. தனது ஆராக் காதலால் நாட்டு வேற்றுமையை, கலாசார வேற்றுமையை, மறந்தார். தான் ஒரு இத்தாலியனாக இருந்தும், பெயராலும், பண்பாட்டாலும், தன்னை இன்பத்தமிழனாகவே ஆக்கிக் கொண்டார். இதனால் இத்தாலியும் இன்பத்தமிழும் இணைந்தன. பெஸ்க்கி என்ற பாதிரியார் தைரியநாதராகி வீரமாமுனிவராகி வளர்ந்த வரலாறு தமிழோடு கலந்த வாழ்வாகும். இப்பெருமகனால் மேலை நாடான இத்தாலியும் கீழைநாடான தமிழ் நாடும் இணைந்து கொண்டதை மறக்க முடியுமா அல்லது மறைக்கத்தான் முடியுமா?
படத்திற்கு நன்றி: http://twicsy.com/i/Vf3EGb